விவசாய விரோத வேளாண் சட்டத் திருத்தங்களை நடைமுறைப்படுத்தி ‘விவசாயிகள் இல்லாத விவசாயத்தை’ உருவாக்க நினைக்கும் பா.ஜ.க.வை, உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வி அடையச் செய்து ‘பா.ஜ.க இல்லாத பஞ்சாப்பை’ உருவாக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார்கள் பஞ்சாப் மக்கள்.

கடந்த பிப்வரரி 14-ம் தேதி நடந்து முடிந்த பஞ்சாப் மாநில உள்ளாட்சித் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடைந்திருக்கிறது. மொத்தமுள்ள எட்டு மாநகராட்சிகளில் ஏழில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதர உள்ளாட்சி அமைப்புகளிலும் பெரும்பான்மையாக காங்கிரசே வென்றிருக்கிறது. முதல்முறையாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மிக்கும், சுயேட்சைகளுக்கும் கிடைத்த அளவுக்குக் கூட பா.ஜ.க.வுக்கு வாக்குகள் கிடைக்கவில்லை என்பதுதான் சிறப்புச் செய்தி.

பஞ்சாப்பில் சுமார் 40 சதவீத அளவுக்கு இந்துக்கள் இருக்கிறார்கள். குறிப்பாக நகர்ப்புறங்களைச் சேர்ந்த வியாபாரிகள் பெரும்பாலும் பி.ஜே.பி. ஆதரவாளர்களாக இருந்துவந்தனர். ஆனாலும் கூட உள்ளாட்சித் தேர்தலில் பி.ஜே.பி.யால் அவர்களது வாக்குகளைப் பெற முடியவில்லை.

படிக்க :
♦ டெல்லி சலோ : பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியை வீழ்த்திய நிலமற்ற தலித் கூலி விவசாயிகள் !
♦ தொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு !

காரணம், கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக, பஞ்சாப் மாநிலம் முழுவதுமே, வேளாண் சட்டத் திருத்தங்களுக்கு எதிரான போராட்டங்களால் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. விவசாயிகள் நடத்தி வரும் இப்போராட்டங்களின் நியாயத்தை அனைவருமே உணர்ந்திருக்கிறார்கள் என்பதாலும், விவசாயிகளுக்கு ஆதரவான நிலை எடுத்தால்தான் அரசியல்ரீதியாக தாக்குப்பிடிக்க முடியும் என்பதாலும்தான் பஞ்சாப்பை ஆளும் காங்கிரஸ் அரசு, மாநில அளவில் விவசாயிகளுக்கு ஆதரவாக சட்டங்களை இயற்றியது.

விவசாயத்தில் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கம் அதிகரிப்பதும், உணவுப் பொருள் சந்தையை அவர்கள் கட்டுப்படுத்துவதும் விவசாயிகளை மட்டுமல்ல வியாபாரிகளையும் ஒழித்துக் கட்டிவிடும் என்ற உண்மையை வியாபாரிகள் உணரத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில்தான், விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக மோடி விசுவாசிகள், போராடிக் கொண்டிருப்பவர்கள் விவசாயிகளே அல்ல, அவர்கள் அனைவரும் கமிஷன் ஏஜெண்டுகள் – இடைத்தரகர்கள் என்ற பொய்ப்பிரச்சாரத்தை அவிழ்த்துவிட்டனர்.

இடைத்தரகர்களை ஒழிக்கிறோம் என்ற பெயரில் விவசாயிகளையும், வியாபாரிகளையும் ஒழித்துவிட்டு கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்துக்கு வழிவகுப்பதே ஆட்சியாளர்களின் திட்டம் என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதன் வெளிப்பாடு தான், பஞ்சாப்பில் பி.ஜே.பி வாங்கியிருக்கும் அடி.

மக்கள் எந்தளவுக்கு பிஜேபியை வெறுக்கிறார்கள் என்பதற்கு ஓர் உதாரணமாக பின்வரும் சம்பவத்தைச் சொல்ல முடியும். குர்தாஸ்பூர் நகராட்சியின் 12-வது வார்டில் பிஜேபி சார்பாக போட்டியிட்ட கிரண் கவுர் என்ற பெண்மணியின் குடும்பத்தினருக்கே 20 ஓட்டுக்கள் உள்ள நிலையில் 9 ஓட்டுகள் மட்டுமே அவருக்கு கிடைத்துள்ளன. அவரது குடும்ப உறுப்பினர்களே பிஜேபிக்கு ஓட்டு போட விரும்பவில்லை. ஆனால் அவரோ, காங்கிரஸ்காரர்கள் ஓட்டு மெசினைக் கைப்பற்றி ஏமாற்றி விட்டதாக புலம்பிக் கொண்டிருக்கிறார்.

இத்தனைக் காலமாக சிரோமணி அகாலிதளத்துடன் கூட்டு வைத்துக்கொண்டும், நகர்ப்புற மேட்டுக்குடி இந்துக்களின் வாக்குகளை வைத்துக் கொண்டும் பஞ்சாப்பில் ஆளும்கட்சி போல அலட்டிக் கொண்டிருந்த பிஜேபி, தனித்து நின்று தேர்தலை சந்தித்த பிறகு நோட்டாவிடம் தோற்றுப்போன தமிழக பிஜேபி போல ஆகியிருக்கிறது.

அரியானா – ஊருக்குள் நுழையத் தடை!

பஞ்சாப் இந்துக்கள்தான் பிஜேபியை வெறுக்கிறார்கள் என்றால், இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் அரியானாவின் நிலைமை இதைவிட மோசமாக இருக்கிறது. கடந்த முறை அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும், சட்டசபைத் தேர்தலிலும் பா.ஜ.க.தான் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தது. அரியானாவில் பெரும்பான்மையாக இருக்கும் ஜாட் சாதியினர் உள்ளிட்ட இந்துக்கள் மத்தியில் இசுலாமியர்களை எதிரிகளாகக் காட்டி, மதவாத அடிப்படையில் தன்வசம் திருப்பி வைத்திருந்த பா.ஜ.க.வுக்கு எதிராகவே இப்போது அவர்கள் திரும்பிவிட்டனர்.

ஜாட் சாதியைச் சேர்ந்தவர்கள் தமது சாதிப் பெருமையைக் காக்கவும், தமது வாக்கு யாருக்கு எனத் தீர்மானிக்கவும் இத்தனை ஆண்டுகளாக காப் அல்லது மகா பஞ்சாயத்துக்களைக் கூட்டுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். இந்துக்கள் என்று சொல்லிக்கொண்டு இவற்றைத் தனக்கு சாதகமாக பி.ஜே.பி பயன்படுத்தி வந்தது. ஆனால், இம்முறை ஜாட்டுகள் விழித்துக் கொண்டுவிட்டார்கள். தாங்கள் இந்துக்களாக இருப்பதை விடவும் விவசாயிகள் என்ற வகையில் மிக மோசமான பாதிப்புக்கு ஆளாகி வருவதையும், அந்தப் பாதிப்புகளுக்குக் காரணமே இப்போது பிஜேபி தான் என்பதையும் உணரத் தொடங்கி இருக்கிறார்கள்.

அதனால்தான், அடுத்தடுத்து பல்லாயிரம் பேர் பங்கேற்கும் மகா பஞ்சாயத்துக்களைக் கூட்டி “வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறு!” என மோடி அரசுக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறார்கள். நூற்றுக்கணக்கான கிராமங்களில் ஆளும்கூட்டணியில் உள்ள பிஜேபி-ஜேஜேபி கட்சிக்காரர்களை ஊருக்குள் நுழையக் கூடாது என்றும், இவர்களை திருமணம் உள்ளிட்ட எந்த நிகழ்வுக்கும் அழைக்கக் கூடாது என்றும் ஊர்க்கட்டுப்பாடு விதித்து பா.ஜ.க.வினர் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறார்கள் விவசாயிகள்.

விவசாயிகள் போராட்டத்தை எதிர்ப்பதாக இருந்தால் ஜேஜேபி கட்சியில் நீடிக்க முடியாது – ஊருக்குள் நடமாட முடியாது என்ற நிலைக்கு பல எம்.எல்.ஏக்கள் வந்திருக்கிறார்கள். இத்தனை நாட்களாக பிஜேபிக்கு ஆதரவாக இருந்த இரு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் தமது ஆதரவை விலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
மதம் – சாதி ஆகியவற்றைச் சொல்லி தம்மை ஏமாற்றி வந்த பி.ஜே.பி, கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே சேவை செய்கிறது – விவசாயிகளுக்கு எதிரானது என்ற உண்மையை மூன்று வேளாண் சட்டங்களும், அவற்றைத் திரும்பப் பெற மறுக்கும் மோடி அரசின் திமிரும் விவசாயிகளுக்கு முகத்தில் அறைந்தாற்போல உணர்த்தியிருக்கின்றன. மதம் – சாதி ஆகியவற்றுக்கு அப்பால் வர்க்கம் என்ற வகையில் விவசாயிகள் தமது பாதிப்புகளை உணரும் நிலையை பிஜேபி உருவாக்கியிருக்கிறது.

படிக்க :
♦ உலக வர்த்தகக் கழகத்தை அடித்து ஓட விடுவாரா சச்சின் ?
♦ அமெரிக்க வர்த்தகப் போரை சீனா எதிர் கொள்வது எப்படி ?

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றால் கார்ப்பரேட்டுகள் கடிந்து கொள்வார்கள் என்கிறது பி.ஜே.பி; இதன் மூலம் பெரும்பான்மை இந்துக்களான விவசாயிகள் பிஜேபியையே வெறுக்கும் நிலையை அது உருவாக்கிக் கொண்டிருக்கிறது. கொள்ளையடிப்பவன், பறிகொடுப்பவன் என இருதரப்புக்குமே ஒருவன் நல்லவனாக இருக்க முடியாது; அவ்வாறு இருப்பதாக நடித்தால் அந்த நாடகம் நீண்ட நாள் நடக்காது என்பதற்கு பிஜேபியே சாட்சி.

புதிய வேளாண் சட்டத்தில் காங்கிரசின் நிலைப்பாடு என்ன ?

கார்ப்பரேட்டுகளை ஆதரிப்பதில் பிஜேபிக்கும் காங்கிரசுக்கும் என்ன வித்தியாசம்? காங்கிரஸ் கொண்டுவரத் திட்டமிட்ட சட்டங்களைத்தானே பிஜேபி நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. எனில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் வித்தியாசம் இல்லையா ?

உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம் உள்ளிட்ட ஏகாதிபத்திய சார்பு நிதியாதிக்கக் குழுமங்களின் ஆணைக்கு இணங்க இந்தியா நடக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டின் கீழ்தான் நரசிம்மராவ் ஆட்சிக் காலம் துவங்கி வாஜ்பாய், மன்மோகன் சிங் மற்றும் தற்போதைய மோடி அரசு வரை ஆட்சி செய்து வருகிறது.

தற்போது மோடி அரசால் கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் சட்டங்கள் அனைத்தும் மேற்கூறிய ஏகாதிபத்திய நிதியாதிக்கக் குழுமங்களால் திணிக்கப்பட்டவையே. ஏகாதிபத்தியங்களின் இத்தகைய மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக மூன்றாம் உலக நாடுகளின் உள்நாட்டு தரகு முதலாளிகள் கிளர்ந்தெழாத வண்ணம், ஏகபோக பன்னாட்டு நிறுவனங்களோடு கூட்டுச் சேர்ந்த மக்களைச் சுரண்டத் தக்க வகையில் உள்நாட்டு தரகு முதலாளிகளுக்கும் வாய்ப்புகளை அள்ளி வழங்குகின்றன இந்தச் சட்டங்கள்.

கார்ப்பரேட்டுகளின் ஆதரவுக் கட்சிகளான பாஜக காங்கிரஸ் இரண்டுமே இந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்திவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. ஆனால் இரண்டு பேருக்கும் இருக்கும் ஒரு வித்தியாசம் தான் தற்போது காங்கிரஸ் பரவாயில்லை என்ற எண்ணத்தை பலருக்கும் ஏற்படுத்தியிருக்கிறது.
காங்கிரஸ் ஆட்சியில் இத்தகைய மக்கள் விரோத சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகையில் எழும் எதிர்ப்புகளை முடக்க காங்கிரஸ் அரசு முயற்சித்தாலும், இறுதியில் மக்களின் போராட்டங்களுக்கு அடிபணிந்தது. மக்களை கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து திசை திருப்புவதற்கான தேசிய வெறி அல்லது மதவெறியை மக்கள் மத்தியில் தூண்டும்படியான அமைப்புகள் காங்கிரஸ் கட்சியிடம் இல்லை.

ஆனால் பாஜக தேர்தல் அரசியலில் எடுக்கும் கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் வேலைகளைச் செய்வதற்கு ஏற்ற வகையில் ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்க பரிவாரக் கும்பல் மதவெறி மற்றும் தேசிய வெறியைத் தூண்டி மக்களை திசை திருப்புகின்றன.
இது பாஜகவை தான் எடுத்த நிலைப்பாடுகளில் உறுதியாக நிற்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. மேலும் காங்கிரஸ் ஆட்சியில் வெறுமனே சி.பி.ஐ மட்டும்தான் காங்கிரசின் கைப்பாவையாக இருந்தது. ஆனால் பாஜக ஆட்சியில் நீதித்துறை துவங்கி அரசின் அனைத்து உறுப்புகளிலும் ஊடுறுவி தனது அதிகாரத்தை நிலைநாட்டியிருக்கிறது சங்க பரிவாரக் கும்பல்.

இதுதான் தற்போது இந்தியா எதிர்கொண்டிருக்கும் அபாய நிலைமை. பாஜகவை வீழ்த்த விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்க வேண்டிய நிலைமை காங்கிரசுக்கு ஏற்பட்டிருக்கும் சூழலில் இந்த கார்ப்பரேட் ஆதரவு வேளாண் சட்டங்களை காங்கிரஸ் எதிர்க்கிறது. இதன் காரணமாகவே தாம் ஆளும் மாநிலங்களில் வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் இயற்றுகிறது. ஒருவேளை நாளை காங்கிரஸ் கட்சியே மத்தியில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினாலும் இந்தச் சட்டத்தை வேறு வழிகளில் நைச்சியமாக நடைமுறைப்படுத்த காங்கிரசும் எத்தனிக்கலாம். ஏனெனில் உலக வர்த்தகக் கழகம், உலக வங்கி ஆகியவற்றின் நிர்பந்தமும், உள்நாட்டில் அவர்களின் கட்சிக்கு படியளக்கும் கார்ப்பரேட்டுகளின் நிர்பந்தமும் தான்.

ஆகவே தற்போது பஞ்சாப் அரியானாவில் பாஜக தோல்வியுற்றது வேளாண் சட்ட மசோதாவின் ஒரு பகுதிதான். இந்த கண நேர மகிழ்ச்சியை கொண்டாடிவிட்டு அப்படியே விட்டுவிட முடியாது. தனியார்மய தாராளமய உலகமயக் கொள்கைகளை அமல்படுத்துவதில் காங்கிரஸ் கட்சியும் மாற்றுக் கருத்து கொண்ட கட்சியல்ல. ஆகவே, உழைக்கும் வர்க்கத்தினரின் – அதாவது தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், சிறு குறு உற்பத்தியாளர்கள், சிறு வணிகர்கள் உள்ளிட்ட பிரிவினரின் – வர்க்கரீதியான ஒற்றுமையும் ஒன்றுபட்ட போராட்டமும்தான் கார்ப்பரேட்டுகளின் அரசாட்சியை ஒழித்துக் கட்டி நமது உரிமைகளைப் பாதுகாக்கும் வல்லமை கொண்டது.


தமிழ்ச்சுடர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க