எட்டு மணி நேர வேலை கிடையாது! குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் கிடையாது! நிரந்தர வேலை, பணிப்பாதுகாப்பு கிடையாது! தொழிற்சங்க உரிமைகள் கிடையாது!

தொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது
புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு!

டைமுறையில் இருந்து வரும் 44 தொழிலாளர் நலச் சட்டங்களை நீக்கிவிட்டு, அவற்றுக்குப் பதிலாகத் தொழிலாளர் நலம் குறித்த 4 வழிகாட்டுதல் தொகுப்புகளை  ஊதியம் குறித்த தொகுப்பு, தொழிற்துறை உறவுகள் குறித்த தொகுப்பு, பணியிடப் பாதுகாப்பு, உடல் நலம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த தொகுப்பு, சமூகப் பாதுகாப்பு குறித்த தொகுப்பு  இயற்றி, அவற்றைச் சட்டமாக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது, மோடி அரசு.  இவற்றுள் ஊதியம் குறித்த தொகுப்பு இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, அரசுத் தலைவரின் அனுமதியுடன் சட்டமாக்கப்பட்டுவிட்டது. மற்ற மூன்று தொகுப்புகளும் மக்களவையில் நிலுவையில் உள்ளன.

மேற்குறிப்பிடப்பட்ட 44 தொழிலாளர் நலச் சட்டங்களும் தொழில் நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளை மட்டும் வரையறுக்கவில்லை. தொழில் நிறுவனங்கள் அவற்றைக் கடைப்பிடிக்கத் தவறும்பட்சத்தில், ஆலை நிர்வாகம் மீது விதிக்கப்பட வேண்டிய தண்டனைகள், அபராதங்கள் குறித்தும் அவற்றில் கூறப்பட்டிருக்கிறது. இதனுடன் இச்சட்டங்களின் அமலாக்கம் குறித்துக்  கண்காணிக்கவும், தொழிலாளி தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக முறையிடும்போது அதனை விசாரிப்பதற்கு முறையாக இயங்கக்கூடிய கண்காணிப்பு மற்றும் விசாரணை அமைப்புகளையும் அவற்றின் அதிகாரங்களையும் வரையறுத்திருக்கிறது.

இவற்றையெல்லாம் நீக்கி விட்டு, அதனிடத்தில் தொழிலாளி வர்க்கத்திற்கு அநீதி இழைக்கக்கூடிய அம்சங்களை, வழிகாட்டுதல்கள் என்ற பெயரில் கொண்டு வந்திருக்கிறது மோடி அரசு. இந்த வழிகாட்டுதல்களை முதலாளிகள் மீறும்போது அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து எந்தவொரு விளக்கமும் இத்தொகுப்பில் சொல்லப்படவில்லை. முந்தைய சட்டத்தில் கூறப்பட்டுள்ள கண்காணிப்பு மற்றும் விசாரணை அமைப்புகளைக் கலைக்கச் சொல்லும் இத்தொகுப்புகள், அவற்றுக்கு மாற்று குறித்துப் பேசாமல், தொழிலாளி வர்க்கத்தைக் கைவிடுகின்றன.

உழைப்புச் சுரண்டலைத் தீவிரப்படுத்தும் ஊதியத் தொகுப்பு

தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்ய குறைந்தபட்ச ஊதியச் சட்டம், 1948; ஊதிய வழங்கல் சட்டம், 1936; சம ஊதியச் சட்டம், 1976 மற்றும் போனஸ் பட்டுவாடா சட்டம் 1965 என நான்கு சட்டங்கள் இருந்துவரும் இடத்தில், அவற்றுக்குப் பதிலாக ஊதியம் குறித்த தொகுப்பு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஊதியம் குறித்தும், தொழிலாளர் நல அதிகாரிகள் குறித்தும் பல்வேறு சட்டங்களில் காணப்படும் குழப்பமான வரையறைகளை எளிமைப்படுத்துவதன் மூலம் ஊதியம் வழங்குவதில் தற்போது உள்ள நெருக்கடிகளைப் புதிய ஊதிய தொகுப்பு நிவர்த்தி செய்யும்” என்று மைய அரசு புதிய ஊதியத் தொகுப்பை வியந்தோதுகிறது.

ஆனால், இப்புதிய ஊதியத் தொகுப்பு ஊதியம் குறித்த வரையரைகளைத் தெளிவாகக் கூறாமல்,  நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் தமது விருப்பத்திற்கு ஏற்ப அவற்றை வியாக்கியானம் செய்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்கு ஏற்கெனவே இருக்கும் நிறுவனங்களையும், அதிகாரிகளையும் நீக்கியிருக்கும் இத்தொகுப்பு, அதனிடத்தில் புதிதாக எந்தவொரு அமைப்பையும் உருவாக்காமல் சூன்யமாக விட்டிருக்கிறது.

குறைந்தபட்ச ஊதியத்தை எதன் அடிப்படையில், எவ்வாறு நிர்ணயம் செய்வது என்ற கேள்விக்கு, தொழிலாளர்களின் திறன், வேலையின் தன்மை ஆகியவற்றை மட்டும் கணக்கில் கொண்டு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வழிகாட்டுகிறது இத்தொகுப்பு.

படிக்க :
சிறப்புப் பொருளாதார மண்டலம் – குப்பையாக ஒதுக்கப்படும் தொழிலாளர்கள்…
♦ கடலூர் : தூய்மைப் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுத்த மக்கள் அதிகாரம் !

ஒரு தொழிலாளி எவ்வளவு திறமையானவர் என்பதை வைத்து அவருக்குக் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கக் கூறும் இவ்வழிகாட்டுதலைப் பயன்படுத்திக் கொண்டு, ஒரு தொழிலாளியைத் திறமையற்றவர் என்று முத்திரை குத்தி, அவரது ஊதியத்தை வெட்டிவிடுவது ஆலை நிர்வாகத்திற்கு இனி எளிமையாகிவிடும்.

1957 நடைபெற்ற இந்தியத் தொழிலாளர் மாநாடு சம்பள விகிதத்தைக் கணக்கிடுவதற்குப் பல்வேறு அளவுகோல்களை வகுத்துத் தந்தது. அவற்றின்படி, போதுமான அளவு ஊட்டச்சத்து, துணிகள், எரிபொருள், மின்சார வசதி, கல்வி, சுகாதாரம், முதியோர் நலன் ஆகியவற்றோடு திருமணங்கள், திருவிழாக்கள் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட சமூகச் செலவுகள் ஆகிய அனைத்தையும் மூன்று பேருக்கு வழங்கும் விதத்தில் ஊதியம் கணக்கிடப்பட வேண்டும் என வரையறுக்கப்பட்டிருந்தது.

மேற்சொன்ன கணக்கீட்டு முறையின் அடிப்படையில்தான் ஏழாவது சம்பளக் கமிசன் மைய அரசு ஊழியர்களுக்கு மாதத்திற்கு 18,000 ரூபாய், அதாவது நாள் ஒன்றுக்கு 600 ரூபாயைக் குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயம் செய்திருக்கிறது. ஆனால், மைய அரசோ தேசியக் குறைந்தபட்ச ஊதியம் நாள் ஒன்றுக்கு 178 ரூபாய் என அடிமாட்டுக் கூலியை நிர்ணயம் செய்திருக்கிறது. கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால், இந்த தேசியக் குறைந்தபட்ச ஊதியம் இரண்டு ரூபாய் மட்டுமே அதிகரித்திருப்பது குரூர நகைச்சுவையாகும்.

ஒவ்வொரு தொழில்துறைக்கும் குறைந்தபட்ச ஊதியம் மாறுபட்டு இருக்கும் என்றும் மைய அரசு கூறியிருப்பதால், இந்த தேசியக் குறைந்தபட்ச ஊதியமும் நாடெங்கும் ஒரே சீராக அமல்படுத்தப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. மேலும், இவ்வூதியத்தை யார், எந்த அளவுகோலின்படி நிர்ணயம் செய்வார்கள் என்பதையும் தெளிவாகக் கூறாமல், அதனை நிர்ணயம் செய்வதை நடைமுறைப்படுத்தும் அதிகாரியின் முடிவுக்கு விட்டுவிட்டது.

இதற்கு முன்பு இருந்த ஊதியச் சட்டங்களின்படித் தொழிலாளர் நல ஆய்வாளர்கள் ஊதியம் வழங்கப்படுவது குறித்து தங்களுக்குப் புகார் வந்தால், சம்பந்தபட்ட நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்யும் அதிகாரத்தைப் பெற்றிருந்தார்கள். ஆனால், தற்போது தொழிலாளர் நல ஆய்வாளர் என்ற பதவியே நீக்கப்பட்டு, அந்த இடத்தில் ஒருங்கிணைப்பாளர்” என்ற பொம்மை பதவி உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஒருங்கிணைப்பாளர் ஊதியம் குறித்து முதலாளிக்கும், தொழிலாளிக்கும் வகுப்பெடுத்துப் புரிய வைப்பாராம். நிறுவன முதலாளி ஊதியம் குறித்த நடைமுறைகளைத் தான் முறையாகப் பின்பற்றுவதாகத் தனக்குத்தானே சான்றளித்து, அந்த ஆவணத்தை இணையத்தில் பதிவேற்றினால், அதற்கு ஒப்புதல் அளிக்கும் வேலையைச் செய்வாராம். நேரடி ஆய்வு என்பதெல்லாம் இனிமேல் கிடையாதாம். எனில், ஒரு ரப்பர் ஸ்டாம்பிற்கும் ஒருங்கிணைப்பாளர் என்ற இந்த அலங்காரப் பதவிக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்?

இதற்கு முன்பு ஒரு முதலாளி தனது தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவாக சம்பளம் வழங்கினால், அவருக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை மட்டுமன்றி, கொத்தடிமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் முடியும். புதிய ஊதியத் தொகுப்பில் அத்தண்டனை சட்டப்பிரிவு எவ்வித மாற்றும் இன்றி நீக்கப்பட்டுள்ளது.

இது போன்று ஊதியம் குறித்த பிரச்சினைகள், சர்ச்சைகளுக்காகத் தொழிலாளர்கள் இனி நீதிமன்றத்தை நாட முடியாது. அதற்கென இருந்த சட்டப்பிரிவுகளும் தற்போது நீக்கப்பட்டுள்ளன. அதற்கு பதில் தொழிலாளர்கள் தங்களது தாவாக்களை இதற்கென அமைக்கப்படும் அதிகாரம் ஏதுமற்ற அமைப்புகளில் சென்று பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் ஒப்பந்த நிறுவனம் அத்தொழிலாளர்களுக்குச் சம்பளம் வழங்காமல் ஏமாற்றினால், அதனை அந்தத் தொழிலாளி வேலை செய்யும் ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும் என வரையறுத்திருந்த முந்தைய ஊதிய பாதுகாப்புச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காண்டிராக்ட் தொழிலாளர்களைப் பயன்படுத்தி வரும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பொறுப்பும் கடமையும் தட்டிக் கழிக்கப்பட்டுவிட்டது.

படிக்க :
கொரோனா “ரெட்அலர்ட்” பகுதியில் பணி செய்த அனுபவம் !
♦ பொது சுகாதாரம் : பிகாரைவிட மோசமான நிலையில் குஜராத் !

தகவல் தொழில்நுட்பத் துறையில் இயங்கும் அனைத்து நிறுவனங்களும் தங்களது தொழிலாளார்களது சம்பளத்தில் ஒரு பகுதியைச் செயல்திறன் என்ற அடிப்படையில் பிடித்துவைத்து வருகின்றன. இச்சட்டவிரோத நடைமுறையைப் புதிய ஊதிய தொகுப்பு சட்டபூர்வமாக மாற்றியிருப்பதோடு, பிற தொழில் பிரிவுகளுக்கும் இச்சுரண்டலை நீட்டித்திருக்கிறது.

நவீன கொத்தடிமை ஆகிறது தொழிலாளி வர்க்கம்

சங்கமாக அணி திரளும் உரிமை, 8 மணி நேர வேலை உரிமை, சட்டவிரோதக் கதவடைப்பு மற்றும் வேலை நீக்கம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடும் உரிமை உள்ளிட்ட பல அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க மூன்று முக்கிய தொழிற்சங்கச் சட்டங்கள் உள்ளன. அவை, தொழிற்தகராறு சட்டம் 1947, தொழிற்சங்கச் சட்டம் 1926, தொழிற்சாலை வேலைவாய்ப்பு (நிலையாணைகள்) சட்டம், 1946 ஆகியன. இந்தச் சட்டங்கள் மூன்றும் நீக்கப்பட்டு, அவற்றுக்குப் பதிலாகத் தொழிற்துறை உறவுகள் குறித்த தொகுப்பு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

தொழிலாளர்களது சங்கம் சேரும் உரிமையை ரத்து செய்வது, நினைத்த மாத்திரத்தில் தொழிலாளியை வேலையை விட்டு நீக்குவது அல்லது நிறுவனத்தைத் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ மூடுவதற்கு அனுமதி அளிப்பது, வேலை நேர வரம்புகளை உயர்த்தவது என முதலாளிகளுக்குச் சாதகமாக என்னவெல்லாம் செய்ய முடியுமோ எல்லாவற்றையும் இந்த நடைமுறைத் தொகுப்பு செய்து கொடுக்கிறது.

முதலில் தொழிற்சாலை மற்றும் தொழிலாளர் குறித்த  வரையறைகள் இத்தொகுப்பில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சேவைத் துறைகளைத் தொழிற்சாலை என்ற வரையறைக்குள் வராமல் விலக்கி வைக்கும்படி தொழிற்சாலைக்கான வரையறை உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும், எந்தவொரு தொழில்துறையையும் சேவைத் துறை என வரையறுக்கும் அதிகாரத்தை மைய அரசிற்கு இச்சட்டத் தொகுப்பு வழங்குகிறது.

ஒரு நிறுவனத்தில் 15,000 ரூபாய்க்கும் குறைவாக ஊதியம் பெறுபவரையே தொழிலாளி என வரையறுக்கிறது இத்தொகுப்பு. அதற்கும் அதிகமாக ஊதியம் பெறுபவர் கண்காணிப்பாளர் அல்லது மேலாளர் என வரையறுக்கப்படுவதால், அவருக்குத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் எதுவும் கிடைக்காமல் தடுக்கப்படுகிறது. அத்துடன் இந்த 15,000 ரூபாய் ஊதியம் என்ற வரையறையைக் கூட்டவோ குறைக்கவோ மைய அரசிற்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு 15,000 ரூபாய்க்கு அதிகமாக ஊதியம் வாங்கும் அனைவரும் தொழிலாளர்களே அல்ல என்று வரையறை செய்வதன் மூலம், ஏற்கெனவே சங்கமாக அணிதிரண்டுள்ள தொழிலாளர்களைத் தொழிலாளர்களே அல்ல என்று தகுதி நீக்கம் செய்கிறது, இத்தொகுப்பு. இதன் வழியாகத் தொழிற்சங்கங்கள் அனைத்தையும் காலி செய்து முடக்குகிறது.

பதிவாளர் என்ற அதிகாரியின் கருணை, தயவைப் பெற்றால்தான் தொழிற்சங்கத்தைச் சட்டப்படி பதிவு செய்ய முடியும் என்றவாறு காலனிய காலத்தில்கூட இல்லாத எதேச்சதிகாரத்தை இச்சட்டத் தொகுப்பு உருவாக்கியிருக்கிறது. அதாவது, எந்தவொரு நியாயமான காரணமும் இன்றித் தன் விருப்பப்படி ஒரு தொழிற்சங்கத்தைப் பதிவு செய்யாது பதிவாளர் மறுக்கலாம் எனக் கட்டைப் பஞ்சாயத்து அதிகாரத்தைப் பதிவாளருக்கு வழங்குகிறது, இத்தொகுப்பு. இதனால் நிர்வாகங்களுக்கு எதிரான தொழிற்சங்கங்களைச் சட்டபூர்வமாகப் பதிவு செய்வது இனி குதிரைக் கொம்புதான்.

மேலும், புதிதாகத் தொழிற்சங்கம் தொடங்க குறைந்தபட்சம் 100 தொழிலாளர்கள் சங்கத்தில் இருக்க வேண்டும் என்றும், ஏற்கெனவே இருக்கும் தொழிற்சங்கங்களில் 100 தொழிலாளர்கள் இல்லையென்றால், அவர்களது பதிவு ரத்து செய்யப்படும் என்றும் தொழிற்சங்க உரிமையைப் பறிக்கும் வகையில் இத்தொகுப்பில் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தொழிற்சாலைகளை முன்னறிவிப்பின்றி மூடுவதற்கான நிபந்தனைகள் இத்தொகுப்பில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, 100 தொழிலாளர்களுக்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட தொழிற்சாலைகள் மட்டுமே முன்னறிவிப்பின்றி மூடமுடியும் என்பதை மாற்றி, அந்த எண்ணிக்கையை அந்தந்த மாநில அரசுகள் அவ்வப்போது முடிவு செய்யலாம் எனச் சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பிட்ட கால வேலைவாய்ப்பு” (fixed term employment) என்பது கார்ப்பரேட் நிறுவனங்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதன்படி, மிகுஉற்பத்தி தேவைப்படும் காலத்தில் அதிகத் தொழிலாளர்களை பணிக்கமர்த்தி, அத்தேவை முடிந்த பிறகு அவர்களை எந்தச் சட்டச் சிக்கலும் இன்றி வேலையை விட்டு நீக்கிவிட முடியும். இவ்வேலைவாய்ப்பு முறை மூலம் நிரந்தரத் தொழிலாளர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க விரும்பும் கார்ப்பரேட்டுகளின் கனவை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறது, இத்தொகுப்பு.

ஏற்கெனவே நீம் திட்டம் மூலம் (தேசிய வேலைவாய்ப்பு மேம்பாட்டுத் திட்டம்) கல்லூரியிலிருந்து வெளிவரும் இளம் பட்டதாரிகளை, பட்டயப் பொறியாளர்களைத் தொழிற்பழகுனர்களாக (Apperentice, Trainee) உபயோகித்து கொண்டு மொத்த ஆலையையும் இயக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.

இச்சட்டத் தொகுப்போ இனி யாரும் நிரந்தரத் தொழிலாளி இல்லை, யாருக்கும் பணிப் பாதுகாப்பு இல்லை என்ற நவீனக் கொத்தடிமை நிலையை ஏற்படுத்துகிறது.

இவையெல்லாம் போதாதென்று 8 மணி நேரம் என்று இருந்த வேலை நேரத்தை நாள் ஒன்றுக்கு 9 மணி நேரம் எனக் கூட்டுவதற்கும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் ஒரு மணி நேர கூடுதல் உழைப்பு சக்தியை, திறனை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இலவசமாக வாரிக் கொடுக்கும் அயோக்கியத்தனத்தைச் சட்டமாக்கிவிட முயலுகின்றனர்.

***

பொருளாதார மந்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு வர்க்கத் தட்டும் இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வரப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றன. விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு இலாபம் தரத்தக்க விலையை நிர்ணயம் செய்யவும் கடன் தள்ளுபடியும் கோருகின்றனர். தொழிலாளர்கள் பணிப் பாதுகாப்பு வழங்கவும், குறைந்தபட்ச ஊதியத்தைக் கூட்டித் தரவும் கோருகின்றனர். சிறு முதலாளிகள் ஜி.எஸ்.டி.யை நீக்கவும், குறைந்த வட்டியில் கடன் வழங்கவும் கோருகின்றனர்.

கார்ப்பரேட் முதலாளி வர்க்கமும் இப்பொருளாதார மந்தத்திலிருந்து மீள தொழிலாளர் சட்டச் சீர்திருத்தம், நிலச் சீர்திருத்தம், வங்கித் துறை சீர்திருத்தம், வரி சீர்திருத்தம்  உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட உழைக்கும் வர்க்கங்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காத மோடி அரசு, முதலாளித்துவ வர்க்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்குத் தீயாய் வேலை செய்வதை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டிருக்கும் தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு அம்பலப்படுத்துகிறது.

அழகு

(புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழில் வெளியான கட்டுரை)


பிப்ரவரி மாதம் வெளியான புதிய ஜனநாயகம் இதழில் வெளியான இக்கட்டுரையை மிகவும் தாமதமாக ஏப்ரல் மாதத்தில் வெளியிட வேண்டிய சூழல் ஏற்பட்டமைக்காக மிகவும் வருந்துகிறோம். இவ்விதழில் வெளியான கட்டுரைகள் காலம் கடந்தவையாக இருப்பினும், அவற்றின் அரசியல் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டே வெளியிடுகிறோம்.

– வினவு


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க