கொரோனோ பிரச்சனை காரணமாக ஊரடங்கு. மக்கள் பலரும் வீட்டில் இருக்க அவர்களைப் பாதுகாக்க மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் சுகாதாரப் பணியாளர்கள் காவலர்கள் என அனைவரும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் .
மற்ற அனைவரையும் விட சுகாதாரப் பணியாளர்கள் வேலை என்பது கடினமானது மட்டுமல்ல போராட்டமானதும்கூட.

அவர்களோடு இணைந்து வேலை செய்யும் போது அவர்களுடைய வாழ்க்கை நிலை எப்படி இருக்கும் என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது. ஊரடங்கு காரணமாக ஊரே தாமதமாக எழுவதை வழக்கமாக கொண்டிருக்கும்போது,
கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக நகராட்சி துப்புரவு பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் காலை ஐந்தரை மணிக்கு எல்லாம் அலுவலகம் வர வேண்டும். அப்படி வரவேண்டும் என்றால் அவர்கள் எத்தனை மணிக்கு எழுந்திரிக்க வேண்டும்?

அதிகாலையே கண்விழிக்க வேண்டும். அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் சுமார் மூன்று கிலோ மீட்டர் முதல் 15 கிலோ மீட்டர் தூரம் வரை இருக்கிறது. காலை 5.45 மணிக்குள் அனைவரும் கையெழுத்திட வேண்டும். ஆறு மணிக்கு தங்களுக்கான பாதுகாப்பு (அதன் தகுதியை பற்றி பின்னர் பேசலாம்) கவசங்களை மாட்டிக்கொண்டு மண்மவெட்டி, கடப்பாரை சாக்கடையை சுத்தம் செய்வதற்கு தேவையான இழுப்பான், பிளிச்சிங் பவுடர் மூட்டை அதை தெளிக்கும் பாண்டு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அதிகாரிகள் சொல்லும் வார்டுகளுக்கு செல்ல வேண்டும். சுமார் 6.30 மணியிலிருந்து 7.30க்குள் வேலைகளைத் தொடங்க வேண்டும்.
அப்படி அவர்களோடு நாம் பல இடங்களில் வேலை செய்தோம் அவர்களோடு ஒரு சிறிய நேர்காணல்….

தொற்றுநோய் பரவ காலத்திலே வேலை செய்றீங்களே! உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையா?

பிளிச்சிங் பவுடர் தெளிக்கும்போது வியர்வை வரும். சுண்ணாம்பும் வியர்வையும் சேர்வதால் கை எல்லாம் ஏரிய ஆரம்பிச்சிடும். கொளுத்தற வெயில்ல வேர்வையும் சேர்ந்துக்கும். கண்களும் எரியும் பிளிச்சிங் பவுடர் அலர்ஜியால கையிலேர்ந்து இருந்து அரிப்பு ஏற்பட்டு ரத்தம் கசியும். அதிலே வேர்வையும் உப்பும் சேர்ந்து எரிச்சலும் அரிப்பும் சேர்ந்தா சொல்லவா வேணும் வேலை செய்யவே முடியாது.
காலையிலேயே சீக்கிரம் எந்திரிக்கறதால பசி வந்து அதிகமாயிடும். ஆனால் உடனே சாப்பிட முடியாது .

வேலை செஞ்சுட்டு அலுவலகத்திற்கு போய்தான் சாப்பிட வேண்டும். அதுக்கே மணி பத்தரை ஆயிடும். வேற வழியில்ல மூக்கு, வாய் எல்லலாம் எரியும். வேலைகள் முடியலன்னா மேஸ்திரி சத்தம் போடுவார். இன்ஸ்பெக்டர் மிரட்டுவார். அதிகாரி பேனாவை எடுப்பார். வேலைக்கு சிக்கலாக்கும், சொல்றத செஞ்சுதான் ஆகணும்.

சரி எல்லாம் எங்கே தங்கி இருக்கீங்க? எல்லா வசதிகளும் சரியா செய்து இருக்கா ?

சரியான தூக்கம் இல்ல. அந்த குப்பை வண்டியிலே வச்சி கூட்டிக்கிட்டு போவாங்க.
சத்தான உணவு சாப்பிட்டால் தான் நோய் வராதுன்னு சொன்னாங்க. மருந்தடிக்கும் எங்களுக்கு எப்படி சோறு போடுறாங்க தெரியுமா? தயிர் சோறு போடுறாங்க அது கஞ்சி சோத்தை விட மோசமா இருக்கு ஊறுகா கூட கிடையாது .

நோய் எதிர்ப்பு ஊசி எங்களுக்கு போடணும்னு சொல்றாங்க அதுவும் கிடையாது. மருந்து அடிக்கறதால கையெல்லாம் புண்ணாகிவிடும். குடிக்க டீ தர மாட்டேங்குறாங்க; சுத்தமான தண்ணி கொடுக்க மாட்டேங்கிறாங்க ஆனால் வேலை செய்யாமலா இருக்கிறோம்? சாக்கடைய, குப்பையை வராமலா இருக்கோம்… ப்ளீச்சிங் பவுடர் போடாம இருக்கோமா?

படிக்க:
♦ கொரோனா “ரெட்அலர்ட்” பகுதியில் பணி செய்த அனுபவம் !
♦ தன்னார்வலர்களுக்கான தடையை உடனே நீக்கு ! தமிழக தலைமை செயலாளருக்கு PRPC யின் மனு !

ஒவ்வொரு வீட்டுக்கும் காலையில் மருந்து அடிச்சு முடிக்கிறதுக்கு காலைல பத்தரை மணி ஆயிடும். அப்புறம் சாப்பாடு சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்டு. அதுக்கு அப்புறம் கவர்மெண்ட் ஆபீஸ் எல்லாம் போய் மருந்து அடிக்கணும். அப்புறம் ஆஸ்பத்திரிக்கு போகணும்.

அப்புறம் கார்பரேஷன் ஆபீஸிர்ங்க வீட்டுக்கு போகணும். கலெக்டர் வீட்டுக்கு போகணும். நீதிபதி வீட்டுக்கு போகணும். போலீஸ் வீட்டுக்கு போகணும் எஸ்.பி. வீட்டுக்கு போகணும்.

இதெல்லாம் முடிச்சிட்டு தான் மதிய சாப்பாடு. அதான் சொன்னேனே தயிர் சோறு போடுவான் கஞ்சி மாதிரி இருக்கும். ஒரு ஊருகா இருக்காது. அப்புறம் கொஞ்ச நேரம் ரெஸ்ட்.

இரண்டு மணிக்கு வேலைக்கு கிளம்ப வேண்டும். மீண்டும் அதே மாதிரி வேலை. ஐந்து ஆறு மணிக்கு தான் கடைவீதியில குப்பையை அள்ளணும். சாக்கடை அள்ளணும். அங்கே கடையில நிக்கறவங்களுக்கு எல்லாம் வட்டம் போடணும். இந்த வேலை செஞ்சு முடிக்கிறதுக்கு ஏழு எட்டு மணி ஆயிடும். அப்புறம் வீட்டுக்கு போயி
படுத்தால் உடனே தூக்கம் வருமா கைகால் அசதியா இருக்கும். லேட்டா தூக்கம் வரும் காலை நாலு மணிக்கு போகணும் .

பாதுகாப்பு கவசம் எல்லாம் கரெக்டா கொடுத்து இருக்காங்களா?

அதெல்லாம் குடுத்தாங்க… அடுத்த நாளே கிழிஞ்சு போச்சு. இருபது ரூவா கொடுத்து ஓரம் அடிக்க மாட்டியான்னு திருப்பி நம்மலே கேக்குறாங்க. கை உறையெல்லாம் கிழிஞ்சு போச்சு இப்போதைக்கு இது தேவலாம். என்ன பண்ண முடியும்?

டெய்லி வீட்டுக்கு போய்ட்டு வந்துருவீங்களா ?

இந்தப் பில்லுகடை சந்து இருக்குல்ல. அங்கதான் அரங்கம் எடுத்து கொடுத்திருக்காங்க. அங்க தான் பகல்ல போய் 40 பேர் தங்கி இருக்கோம்.

அங்க தண்ணி போக மாட்டேங்குது கக்கூஸ் சரி கிடையாது எங்க ஆபீஸ்ல பிளம்பர் எல்லாரும் இருக்காங்க. அவங்கள வச்சு எந்த வேலையும் செய்யறதுல்ல.
அத விடுங்க இதுவரைக்கும் டாக்டர் கூட வந்து காய்ச்சல் அடிக்குதா ? தலைவலிக்குதான்னு எங்களை செக்கப் செஞ்சதே கிடையாது. கேட்டா நீ ஒழுங்கா வேலைசெய்யுறீயான்னு கேக்குறாங்க.

பேர்தான் தூய்மைப் பணியாளர், நல்ல கக்கூசு உண்டா? தண்ணித்தொட்டி உண்டா ?
நாங்க அம்பது பேரு பகல்ல அந்த இடத்தில் தான் தங்கி இருக்கோமே. அந்த இடத்துக்கு வந்து பாருங்க கக்கூஸ வந்து பாருங்க. தண்ணீ டேங்க்க வந்து பாருங்க. நாங்களாவது ஆம்பளைங்க பரவாயில்லைங்க. 33 பொம்பளைங்க இருக்காங்க எப்படிங்க ஒன்னுக்கு ரெண்டுக்கு போவாங்க. நீங்களாவது பார்த்து ஏதாவது செய்யுங்க

இப்படி தொற்றுநோய் பரவ காலத்தில் நீங்க வரிங்களே உங்களுக்கு பிரச்சனை இல்லியா வீட்டில் ஒன்னும் சொல்ல மாட்டாங்களா ?

வேற என்ன பண்றது வேலை செஞ்சுதான் ஆகணும். ஒரு சில பேர் இந்த வேலைக்கு புதுசா வந்து இருக்காங்க. அவங்க இதுக்கு முன்னாடி பல இடங்களில சாக்கடை அடைப்பு எடுக்குறவங்க தான், இங்க அதேபோல வேலைகளத்தான் செய்றாங்க. பெர்மணண்ட் ஆக்குவாங்கன்னு ஒரே ஆசைதான் வேற என்ன இருக்கு.

சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி சொல்கிறோமென்று கை தட்டுவதும் சங்கு ஊதுவதும் மணியடிப்பதும் பயனளிப்பதில்லை. பஞ்சாபின் சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக மலர் தூவினார்களாம். அதைப்பற்றி நான் ஒருவரிடம் கேட்ட போது, அவர் சொன்னார் “அந்த குப்பையையும் நாங்க தான் அள்ளணும்”

சுகாதாரப் பணியாளர்கள் சாதாரண காலங்களில் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் போது திமிர் புடிச்சவங்க ஒழுங்கா வேலைய பார்க்குறாங்களா பாரு என்று ஏளனமாகவும் கேவலமாகவும் பேசும் சமூகம் தான் இன்றைக்கு அவர்களை வாழ்த்துகிறது என்றால் அது நம்பவா முடிகிறது ? அப்படி அவர்களுடைய சேவைக்காக அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்றால் அவர்கள் பணி நிரந்தரமாகவும் அவரது உரிமைகளுக்காக தோள் கொடுப்பதும் தான் ஒரே வழி.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நேர்காணல் : தோழர் பாலு, மண்டல ஒருங்கிணைப்பாளர், கடலூர்.

***

க்கள் அதிகாரத்தின் சார்பில் கடலூர் நகராட்சி தொழிலாளர்களுடைய வேலை மற்றும் வாழ்விடங்கள் அனைத்தையும் ஆய்வு செய்த வகையில் நகராட்சி அதிகாரிகள் முன் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

அவற்றில் கடுமையாக வேலை செய்யும் இந்த நகராட்சி தோழர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை, என்ற அடிப்படையில் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும், அனைவருக்கும் முகக் கவசம், கையுறை கொடுக்க வேண்டும்.

மருத்துவ காப்பீடு செய்ய வேண்டும், மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் நல்ல முறையில் உணவு கொடுக்க வேண்டும். பெண்கள் தங்குகின்ற டிவிஷன் 3 மஞ்சக்குப்பம் பில்லு கடை சந்தில் உள்ள கலைஞர் மண்டம் பழுதடைந்துள்ளது. இங்கு அனைத்தும் இருக்கிறது எதுவும் இயங்கவில்லை. கழிவறை உள்ளது அவை பயன்படுத்த இயாலாத வகையில் உள்ளது. தண்ணீர் வருகிறது அதை முறையாக பயன்படுத்த முடியாது, பெரிய அளவில் மண்டபம் இருக்கிறது அங்கு மின்விசிறி இல்லை. குறிப்பாக கழிவறை இல்லாமல் பெண்கள், சொல்ல முடியாத துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக நாம் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் அதிகாரிகளை தொடர்பு கொண்ட பேசியதன் அடிப்படையில் தற்போது அப்பகுதியில் உள்ள அனைத்து நகராட்சி ஊழியர்களுக்கும் தடுப்பூசி போட்டுள்ளார்கள். மேலும் முககவசம் மற்றும் கையுறைகளை கொடுத்துள்ளார்கள்.

This slideshow requires JavaScript.

இவை மட்டுமின்றி அதிகாலையில் “ஒரு டீ கிடைக்குமா தம்பி…” என்று நம்மிடம் உரிமையாக கோரிக்கை வைத்தார்கள் தூய்மைப் பணியாலார்கள், இதனை மஞ்சக்குப்பம் பகுதியிலுள்ள இஸ்லாமிய நண்பர்கள் மத்தியில் கோரிக்கை வைத்தோம் திரு நஸ்ருதீன், திரு ஷேர் அலி, திரு மாலிக் ஆகியோர் கடந்த ஐந்து நாட்களாக அவர்களுக்கு காலையில் தேனீர் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளனர். அந்த நண்பர்களுக்கு மக்கள் அதிகாரத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .

அதேபோல தற்காலிக பணியாளர்கள் ஏற்கனவே தினக் கூலிகளாக வேலை செய்து வந்தவர்கள், எனவே அவர்களுக்கான ஊதியத்தை வாரத்தில் ஒரு நாள் என்று கொடுக்க வேண்டும் என்பதையும் ஏற்று அதயும் கொடுத்துள்ளார்கள். மேலும் தூய்மைப் பணியாலர்களின் பல்வேறு நியாயமான கோரிக்கைகளையும் மெல்ல மெல்ல அமல் படுத்துவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள நகராட்சி தொழிலாளர்கள் மற்றும் மேஸ்திரிகள் அனைவரும் மக்கள் அதிகாரம் தோழரிடம் வாழ்த்துக்களையும் நன்றியும் தெரிவித்தனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கடலூர். தொடர்புக்கு : 81108 15963

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க