ல ஆயிரம் கோடி மதிப்புள்ள, 265 ஏக்கரில் விரிந்து பரந்துள்ளது மெப்ஸ், சென்னையில் பெரும் வர்த்தக மதிப்பு கொண்ட பகுதி குரோம்பேட்டை. அங்கு ஜி.எஸ்.டி சாலையை ஒட்டி இருக்கிறது மெப்ஸ். சென்னை விமான நிலையம் இங்கிருந்து தொட்டு விடும் தூரம்தான். இதனுள் பல நூறு நிறுவனங்கள், ஆயத்த ஆடை, நறுமணப் பொருட்கள், இயந்திர உதிரி பாகங்கள், மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு நுகர்வுப் பொருட்களின் கிடங்குகள், கணினி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவன கிளைகள், இப்படி பெயர் பலகைகளோடும், எந்த ஒரு பெயர்ப்பலகையும் இல்லாமல், மர்ம மாளிகைகள்.

கண்ணைப் பறிக்கும் பசுமையான இயற்கைச் சூழலுக்குள் அமைந்திருக்கும் இந்த இடத்தில், கேட்பாரற்று மர நிழலில் துப்புரவுத் தொழிலாளர்கள் ஒதுங்கியிருந்தனர். நாம் அவர்களிடம் பொங்கல் வந்துவிட்டதா, பண்டிகைக்குப் புதுத்துணி எடுத்துவிட்டீர்களா என்றோம், அவர்கள் நமட்டுச் சிரிப்புடன் நம்மைப் பார்த்துவிட்டு, “ஆமாம் பண்டிகை தான் இப்ப வாழுது…” என்றனர் கடுப்போடு.

“ உங்களுக்கு என்ன, இவ்வளவு பெரிய இடத்தில் வேலை செய்கிறீர்கள், பெரிய பெரிய கம்பெனிகள்-லாம் இருக்குது, முதலாளிகள் கப்பல் போன்ற கார்களில் இறங்குகிறார்கள், அவர்களிடம் வேலை செய்கிறீர்கள், நீங்கள் என்ன குப்பத்தையும், குடிசையையுமா பெருக்கிக் கொண்டிருக்கிறீர்கள்..” என்றோம்.

துப்புரவுப் பணியாளர் பாப்பாத்தி.

அதற்கு பாப்பாத்தி என்பவர்; “ஆமாம், பெரிய பெரிய முதலாளிங்க இருந்து எங்களுக்கு என்ன பிரயோசனம், காலைல 8.45 மணிக்கு உள்ள நுழஞ்சோம், இன்னும் வேலை ஓயல… பகல் 12 ஆகப்போகுது. குடிக்கிற தண்ணிய கூட நாங்க வீட்டுலேருந்துதான் எடுத்துட்டு வரனும், ஒன்னுக்குப் போகனுன்னா கூட இங்க இடமில்ல. அவசரம்னா ஆளு இல்லாத எடத்துல தான் மறைவா ஒதுங்கனும் என்றார்.

படிக்க:
♦ ஓமான் ச‌ர்வாதிகாரி க‌பூஸுக்காக கண்ணீர் வடிக்கும் மேற்குலகம் !
♦ அஸ்திவாரம் இழந்த செங்கல் தொழிலாளர்கள் ! – படக்கட்டுரை

பக்கத்திலிருந்த செல்வி, “அந்த அநியாயத்த கேக்காதீங்க, பெருக்கும்போது ஒருவாட்டி என் புடவைக்குள்ள ஒரே நமச்சல், எரிச்சலா இருந்துச்சு, பதறிப்போயி பக்கத்துல இருந்த கம்பெனி பாத்ரூமுக்குள்ள போயி புடவைய உதறிக்கட்ட அனுமதி கேட்டேன், வெளியாலுங்க உள்ள நுழையக்கூடாதுன்னு என்னய உள்ள விடல, அழுதுக்குனே வெளிய வந்து மரத்து மறைப்புல புடவைய அவுத்துக் கட்டுனேன். உள்ள ஏதோ பெரிய பூச்சி ஒன்னு கடிச்சிருச்சு, உடம்பெல்லாம் தடிச்சி போயி ஊசி போட்டேன்…” என்றார் அந்தப் பதட்டம் மாறாமல்.

“குப்பை அள்ளுற எங்க கதைய கேக்காதீங்க அது மணக்காது, நாத்தமடிக்கும் என்றார் துப்புரவாளர் சுசிலா. ஊறுபட்ட கம்பெனிங்க இங்க இருக்குது, அதுல பல பத்தாயிரம் பேரு வேல செய்யுறாங்க, ஒரு நாளக்கி பத்து லாரி குப்பங்கள வெளில கொண்டு போயி கொட்டனும், 60 துப்புரவு ஊழியர்கள் தான் இத செய்யனும்…” என்று பெருமூச்சு விட்டார்.

தனது பணிச்சூழலையும், துயரத்தையும் விவரிக்கையில் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைக்கும் சுசீலா.

“குப்பைகள் என்றால் காய்ந்த செடி, கொடி, இலைகளல்ல, அவை தனி, அவை இங்கேயே உரமாக்க பள்ளத்தில் கொட்டி மூடிவிடுவோம், வெளியில் போவதேல்லாம் தொழிற்சாலை வேஸ்டுகள், சாப்பாடு கேண்டீன்–களில் விழும் எச்சில் உணவுகள் பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளர்கள், ஒவ்வொரு கம்பெனியின் வாசலிலும் பெரிய டிரம் வைத்து அதில் கொட்டிவிடுவார்கள், அதை நாங்கள் ஒரு நாள் எடுக்கவில்லையென்றாலும் நாத்தம் குடலைப் புரட்டும்.

டிரம்மை காலி செய்து திரும்பவும் சுத்தமாக வைப்பது பெரிய கொடுமை, பாதி உடம்பை வளைத்தால்தான் டிரம்மின் அடியிலிருக்கும் எச்சிலைகள் கைக்கு வரும், இப்படி பல நேரங்களில், எங்கள் முகம், துணியெல்லாம் எச்சில் நாற்றமடிக்கும், அதைக் கழுவக்கூட கம்பெனிக்குள் எங்களை அனுமதிக்க மாட்டார்கள், எனவே காகிதத்தில் துடைத்துப் போடுவோம். எங்கள் தலைவிதியை நாங்கள் யாரிடத்தில் சொல்வது” என்றார்.

துப்புரவுத் தொழிலாளி ஏழுமலை.

துப்புரவாளர்களில் வயது முதிர்ந்த ஏழுமலை. நாங்க மொத்தமுள்ள 60 பேரும் ரெண்டு தனியார் கம்பெனிக்கு காண்டிராக்டாக தினக்கூலி வேலை செய்கிறோம். ஒருத்தருக்கு நாளொன்றுக்கு 250 ரூவா சம்பளம். காலை 8.40-க்கு உள்ளே வந்து பெயர் கொடுக்க வேண்டும். மாலை 4.30 மணிக்கு வெளியே அனுப்புவார்கள். 4, 5 சூப்பர்வைசர்கள் தலைமையில் எங்களை குழுக்குழுவாகப் பல வேலைகளுக்குப் பிரித்துவிடுவார்கள்.

இந்த நடைபாதை 2 கிலோமீட்டர் முழுசா ஒரு இலையில்லாமல் சுத்தமாகப் பெருக்கவேண்டும். ஒன்னு விட்டு ஒரு நாள் நடைபாதை முழுக்க தண்ணீர் பிடித்துக் கழுவ வேண்டும். அதே மாதிரி மொத்த சாலையையும் தினமும் பெருக்கவேண்டும். சாலையோர செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது வெட்டி அழகுபடுத்துவது, தனித்தனி கம்பெனிகளின் சுற்றுவட்டாரத்தை சுத்தம் செய்வது, வாரிய குப்பையனைத்தையும் பத்தடி உயரத்துக்கு லாரியில் லோடு ஏத்துவோம். இந்த வேலைகளெல்லாம் அழுக்கும் அசிங்கமும் மட்டுமல்ல, கால் முட்டியும் நெஞ்செலும்பும் பிளந்து போகும், பத்து நிமிடம் கிடைத்தாலும் அப்பாடா என்று உட்காரத்தோனும்.

படிக்க:
♦ துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதங்களைக் கழுவி விட்டுவிட்டு கொடுத்த வாக்கை கை கழுவிய மோடி !
♦ பசுமை படர்ந்த தேயிலைத் தோட்டங்களில் புதைந்து கிடக்கும் தொழிலாளர்கள் !

அந்நேரம் சூப்பர்வைசர் பார்த்தால் ஏன் சோம்பேறி மாதிரி உக்காந்திருக்கிறாய் என்று 4 பேருக்கு முன்னால் முறைப்பார்கள். துடைப்பத்தை எந்த நேரமும் அழுத்திப்பிடிப்பதால் கை எரியும், நாளடைவில் விரல்கள் மரத்துப்போய் துடைப்பம் பிடிக்கமுடியாது, துடைப்பம் தானாகக் கீழே விழும். இந்த வேலையால் எங்களுக்கு எவ்வளவோ கொடும… படிப்பறிவில்லாத நாங்கள் வேற வேலையில்லாததால இப்படி சாகுறோம்.

படிச்சவுங்க எல்லாம் காரிலும் பைக்கிலும், வெள்ளையும் சொள்ளையுமாக எங்கள் எதிரில் போகும்போது நான் மட்டும் என்ன பாவம் செஞ்சோமுன்னு தோனும், நம் பிள்ளைகளாவது இப்படி போகமாட்டார்களா என்று மனம் ஏங்கும். நாங்களெலெல்லாம் கிராமத்தில் பெரிய சாதிக்காரர்கள் என்று பெயரெடுத்தவர்கள், கவுண்டர், நாயக்கர் என்ற பட்டமெல்லாம் இப்ப எங்களுக்கு சோறு போடல. இந்த தொடப்பம் தான் இப்ப எங்களுக்கு சோறு போடுது. கால் வயிறு கஞ்சியாவது ஊத்துது” என்றார் விரக்தியாக.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க