ந்திய சாதியடுக்கின் ஆகக்கடைசியான மக்களிலிருந்து ஐந்து துப்புரவு தொழிலாளிகள் கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் இந்தியாவின் பிரதமரைக் காண்பதற்காக அன்று காத்திருந்தனர்.

வட இந்தியாவின் மிகப்பெரிய மதரீதியான மக்கள்திரளான அர்த்த கும்பமேளாவில் கழிவறையை தூய்மை செய்ய வந்த அத்தொழிலாளிகளின் காலடிகளை புகைப்பட கருவிகள் மினுமினுக்க தண்ணீராலும் தன்னுடைய கைகளாலும் மோடி தூய்மை செய்த வரலாற்று சிறப்புமிக்க சம்பவம் நிகழ்ந்தேறியது. இது துப்புரவுத் தொழிலாளிகளுக்கு செலுத்தும் மரியாதையாக விதந்தோதப்பட்டது.

ஆனால் ஒவ்வொரு ஆண்டும் பாதாள சாக்கடைகளை தூய்மை செய்யும் போது வெளியேறும் விச வாயுக்களால் ஏராளமான துப்புரவுத்தொழிலாளிகள் போதும் போதும் எனும் அளவிற்கு மரணிக்கிறார்கள் என்கிறார் சஃபாய் ஊழியர்கள் இயக்கத்தின் (Safai Karmachari Andolan) தலைவர் பெஜவாடா வில்சன்.

வரும் வியாழக்கிழமை (11-04-2019) முதல் பாராளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் மனிதக் கழிவை மனிதரகற்றும் இழிவுக்கு முடிவு கட்டுவதாக மோடி கூறிய வாக்குறுதி என்னவானது என்று துப்புரவுத் தொழிலாளர்கள் கேட்கின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த இழிநிலையை அகற்றுவதற்கு மோடி எதுவும் செய்யவில்லை என்பதை வில்சன் குறிப்பிடுகிறார்.

படிக்க:
♦ துப்புரவுப் பணியாளர்கள் : நாடகமாடும் மோடி ! NSA-வைக் காட்டி மிரட்டும் போலீசு !
♦ மோடியின் தூய்மை இந்தியாவில் துப்புரவுப் பணியாளர்கள் கொல்லப்பட்டதற்கே கணக்கில்லை !

இந்தியாவில் மனிதக்கழிவை அகற்ற ஆட்களை பணிக்கு எடுப்பது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான சான்றாதாரங்களை பெற்று நடைமுறைப்படுத்துவதில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களுக்கு உள்ள அக்கறையின்மையால் அதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வெறுங்கைகளால் மனிதக்கழிவை அகற்றுவது என்பது இந்திய இரயில் நிலையங்களில் இன்றும் கண்கூடாக பார்க்க முடிகின்ற ஒரு இழிநிலை நிலவுகிறது.

மனிதக்கழிவை அகற்றுபவர்களின் எண்ணிக்கை 14,000 முதல் 31,0000 ஆக இருக்கலாம் என்கிறது இந்திய அரசின் புள்ளிவிவரம். ஆனால் இதன் எண்ணிக்கை 7,70,000 என்கிறது சஃபாய் தொழிலாளர்கள் இயக்கம். கடந்த பத்தாண்டுகளில் கிட்டத்தட்ட 1,800 துப்புரவுத் தொழிலாளர்கள் சாக்கடையைத் தூய்மைப்படுத்தும்போது தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர் என்று கூறுகிறது இவ்வியக்கம்.

துப்புரவுப் பணியாளர்களுக்கு மரணமே சம்பளமாகத் தரப்படுகிறது..

மோடியின் ஐந்தாண்டு கால ஆட்சி மீதுள்ள கடுமையான விமர்சனங்களையும் தாண்டி இத்தேர்தலில் முன்னணி சக்தியாக அவர் இருக்கும் நிலையில் (இந்திய மக்களாட்சி அமைப்பில்) தங்களது கோரிக்கைகளை வெல்லக்கூடிய ஒரு அரசியல் சக்தியாக துப்புரவுத் தொழிலாளர்களது சமூகம் இல்லை.

துப்புரவுத் தொழிலாளிகளின் கால்களை துடைத்து விட்டார் மோடி. ஆனால் உண்மையில் அவர்களது இழிநிலையை துடைப்பதாகக் கூறிய வாக்குறுதிகளை தான் அவர் கழுவி விட்டார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு.

எங்களை கொல்வதை நிறுத்து (#StopKillingUs) என்று ஹேஸ்டேக் ஒன்றை டிவிட்டரில் தொடங்கியிருக்கும் வில்சன், துப்புரவுத் தொழிலாளர்கள் கண்ணியமான வேலையைச் செய்வதற்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

சாதியத்தின் முட்டுச் சுவர்களால் பெரும்பான்மையான துப்புரவுத் தொழிலாளர்களுக்கு வேறு வேலைகள் கிடைப்பது எதார்த்தத்தில் நடப்பதில்லை. மேலும் வேலை ஒப்பந்தம் குறித்தோ எப்பொழுது தங்களது வேலை முடியும் என்பது குறித்தோ அவர்களுக்கு தெரிவதில்லை என்று அமெரிக்காவை சேர்ந்த ஆலோசனை நிறுவனமான ‘டல்பெர்க்’-ன் (Dalberg) ஆய்வொன்று கூறுகிறது.

எந்த தொழிலாளிகளின் கால்களை மோடி கழுவி விட்டாரோ அவர்கள் தாங்கள் செய்யும் தொழிலை விரும்பவில்லை என்றும் மனிதக்கழிவை மனிதரகற்றும் இழிநிலையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அத்தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.

படிக்க:
ஸ்டெயின்ஸ் பாதிரியார் படுகொலை : சங் பரிவாரை ரட்சிக்கும் திரைப்படம் !
கந்தனுக்கு அரோகரா.. எலெக்சனுக்கு அரோகரா.. | துரை. சண்முகம் கவிதை

அதில் ஒருவர் அந்த மரியாதை மகிழ்ச்சியளித்ததாக கூறினார். மேலும் “மோடி ஒரு உயர்ந்த மனிதர் ஆனால் நாங்கள் முன்பும் இதே வேலையைத்தான் செய்து கொண்டிருந்தோம். இனியும் அதை தான் செய்வாம்” என்று தங்களது இயலாமையை தெரிவித்தார்.

இந்தியாவில் மனிதக் கழிவை அகற்றுவதில் 90 விழுக்காட்டிற்கு மேலானவர்கள் பெண்கள்தான். இந்த இழிநிலையில் தவிப்பவர்கள் அனைவரும் இந்திய சாதியமைப்பின் கடைக்கோடி தலித் மக்களாகவே இருக்கின்றனர்.

சாக்கடை சுத்தம் செய்யும்பொது மரணித்த துப்புரவுத் தொழிலாளி

ஒருவகையில் துப்புரவுத் தொழிலாளர்களை இந்த இழிநிலையிலேயே வைத்திருக்கும் தத்துவ தரிசனத்தை மோடிக்கு முன்பே நம்முடைய நடிகர்கள் சினிமாவில் காட்டியிருக்கிறார்கள்.

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்தில் ‘மய்யம்’ கமல்ஹாசன், புண்ணியகோடி எனும் துப்புரவுப் பணியாளரைப் பார்த்து, பேரிலேயே ‘புண்ணியம்’ இருக்கே ஏன்யா கோபப்படுற ? நீ செய்வதுதான் உண்மையான சேவை. இதைதான் காந்தியும் நாட்டிற்கு செய்தார்” என்று ‘தட்டிக் கொடுத்து’  துப்புரவுப் பணியை வாங்குவார்.

கட்டியணைத்த கமல்ஹாசன் முதல் பாதம் கழுவி விட்ட மோடி வரை, யாரும் துப்புரவுத் தொழிலாளர்களின் மோசமான வாழ்நிலையைப் போக்க இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. நம்முடைய கவனத்திற்கு உரியதெல்லாம் சொல்லிக்கொள்ளப்படும் விடுதலையைப் பெற்று 70 ஆண்டுகள் கழிந்தும் மனிதக்கழிவை மனிதரகற்றும் இந்த இழிநிலை இங்கே துடைக்கப்படவில்லை எனில் அறிவார்ந்த சமூகம் என்று நம்மை சொல்லிக்கொள்ள அருகதை ஏதும் இருக்கிறதா?


சுகுமார்
நன்றி : என்.டி.டீ.வி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க