ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறுத்துவ சமயப் பரப்பாளர் கிரகாம் ஸ்டெயின்ஸ் அவரது இரண்டு மகன்களுடன் 1999 ஆண்டில் பஜ்ரங் தள் எனும் இந்து பயங்கரவாத அமைப்பினால் காரில் எரித்து கொல்லப்பட்டது நினைவிருக்கின்றதா?
அதை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஆங்கில திரைப்படம் (The Least of These) வெளியாகியுள்ளது. சிறுபான்மையினருக்கெதிராக தாக்குதல்கள் முன்னெப்போதுமில்லா அளவிற்கு கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்ற தேர்தலில் இப்படம் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும்?
அதுவும் மோடியின் வாழ்க்கையைப் பற்றிய திரைப்படம் ஒன்று வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே இந்தத் திரைப்படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இச்சூழலில் இது போன்ற படங்கள் வெளிவருவது சாத்தியமா?
ஆம் சாத்தியம்தான் என்கிறது இதன் திரைக்கதை. ஒரிசாவில் கிராமமொன்றில் காரில் தூங்கிக்கொண்டிருந்த ஸ்டெயின்ஸ்-சையும் அவரது ஆறு மற்றும் பத்து வயதான இரண்டு குழந்தைகளையும் எரித்து படுகொலை செய்த இந்துத்துவ பயங்கரவாத அமைப்பைப் பற்றி சிறு குறிப்பு கூட இப்படத்தில் இல்லை.
இது நடந்தது 1999-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ம் தேதி. அனீஸ் டேனியலின் திரைப்படத்தில் அக்குற்றவாளிகளின் அரசியல் பின்னணி குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும் கிஞ்சித்தும் காட்டப்படவில்லை.
இப்பயங்கரமான செயலை செய்த பஜ்ரங் தள் அமைப்பின் தாரா சிங் தற்போது ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார். யாரையும் காயப்படுத்தவில்லை என்கின்ற அளவிற்கு கொலைகளுக்கான காரணங்களை இத்திரைப்படம் நீர்த்துப்போக செய்துள்ளது. ஆம், 1990-ல் நடத்தப்பட்ட அந்த படுகொலைக்கும் இன்று நாடு முழுதும் சிறுபான்மையினருக்கெதிரான தாக்குதல்களுக்கும் இருக்கும் தொடர்பை ஒருவேளை காட்டுவார்களோ என்று நம்பியவர்களை மட்டுமே இது காயப்படுத்தியிருக்கிறது.
படிக்க:
♦ ஸ்டெயின்ஸ் பாதிரியார் கொலை வழக்குத் தீர்ப்பு : நீதிமன்றமா? காவிமன்றமா?
♦ தேர்தல் – 2019 : அரசுக் கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு | மக்கள் அதிகாரம்
இந்த ஆங்கில திரைப்படத்தின் திரைக்கதை ஒரு நிருபரை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. பழங்குடி மக்களை மூளைச்சலவை செய்து மத மாற்றம் செய்ய ஸ்டெயின்ஸ் சமூக சேவையை ஒரு கருவியாக பயன்படுத்தி வருகிறார் என்பதை இப்பாத்திரத்தின் மூலம் நிரூபிக்க அவர் முயல்கிறார். நிருபர் மனவ் பானர்ஜீயாக சர்மான் ஜோஷி நடித்துள்ளார். தன்னுடைய கர்ப்பிணி மனைவியுடன் ஒரிசாவின் நகரமொன்றிற்கு செல்லும் மானவ் பழங்குடிகள் கிறுத்துவ மதத்திற்கு மாறுவது அதிகரிப்பதன் பின்னணியை தான் கண்டறிவதாக உறுதி கூறி உள்ளூர் செய்தி ஊடகம் ஒன்றில் சேர்கிறார்.
அந்த உள்ளூர் செய்தி ஊடகத்தின் ஆசிரியரான கேதார் மிஸ்ரா மத மாற்றத்தை ஒரு ஏகாதிபத்திய நடவடிக்கையாக நம்புகிறார். தன்னுடைய மனைவியான கிளாடிசுடன் சேர்ந்து தொழு நோயாளிகளுக்கு சில பத்தாண்டுகளாக கிரகாம் ஸ்டெயின்ஸ் செய்யும் தன்னலமற்ற சேவையில் ஏதோ ஒரு உள்நோக்கம் இருப்பதாகவே அவர் நம்புகிறார்.
மானவும் இந்த பிரச்சாரத்திற்கு முதலில் பலியாகி விடுகிறார். ஆனால் பின்னர் ஸ்டெயின்ஸ் பற்றிய உண்மையை அறிந்து தன்னுடைய அறியாமையை எதிர்கொள்கிறார்.
கேதாரின் வெறுப்புணர்ச்சியை அறுவடை செய்யும் வெறும் கருவியாக வந்து சில்லிட வைக்கும் ஒரு திருப்பத்தை தருவதோடு முடிந்து போகிறது தாரா சிங்காக நடித்த மகேந்திராவின் (மனோஜ் மிஸ்ரா) காதாபாத்திரம். அதாவது சமயப்பரப்பாளர்களின் மீதான அவருக்குள்ள வெறுப்புணர்ச்சியை தவிர வேறு எதுவும் (அத்தகைய தத்துவ தரிசனத்தை அவருக்களித்த பின்னணி) இப்படத்தில் காட்டப்படவில்லை. மானவின் பாத்திரம் இங்கே தேவையில்லா இடங்களில் மூக்கை நுழைக்கிறது மேலும் பரபரப்பான தலைப்புகளுக்காக இரண்டு பக்கமும் கள்ள விளையாட்டு விளையாடுகிறது. ஒரு கட்டத்தில் “விசப்பாம்பின் தலையை இந்திய மக்கள் நறுக்க வேண்டும்” என்று மானவ் சூளுரைக்கிறார்.
மதச்சிறுபான்மையினரை நசுக்குவதற்காக திட்டமிட்ட பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அல்லாமல், மாறாக மானவின் திறமையின்மையே ஸ்டெயின்சின் படுகொலைக்கு காரணமாக இத்திரைப்படத்தில் காட்டப்படுகிறது.
ஒரு உறுதியான நெஞ்சம் கொண்ட நிருபரான மானவ் இளகிய மனிதனாக உருமாற்றம் கொள்வதாக ஆண்ட்ரூ எஃப் மாத்யூஸின் திரைக்கதை காட்டுகிறது. நம்பிக்கை அடிப்படையிலான இத்திரைப்படம் ஒரு கிறுத்துவரின் மதிப்புகளையும் ஸ்டெயின்ஸின் நற்பெயரையும் மீட்டுருவாக்கம் செய்ய முனைகிறது. தொழு நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்யும் ஒரு சமயப்பரப்பாளரின் வாழ்க்கையை காட்டியிருந்தாலும் அது வெறுமனே ஸ்டைன்ஸின் மரபிற்கு பயபக்தியுள்ள அஞ்சலியை செலுத்துவதாக மட்டுமே தன்னை சுருக்கி கொண்டுவிட்டது.
ஷர்மான் ஜோஷி திரைப்படத்தில் குறிப்பிடத்தக்க திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு பக்கபலமாக சுந்தர் என்ற காதாபாத்திரத்தில் பாஸ்கர் ஷெவால்கர் நடித்திருக்கிறார். அவரது தொழுநோய் ஸ்டெயின்ஸினால் தீர்க்கப்பட்டது. 115 நிமிடம் இழுத்துச்செல்லும் திரைப்படத்தில் ஜோஷியின் கதாபாத்திரம் மட்டுமே ஒளிமிக்க தருணமாக இருக்கிறது. ஆனால் திரைப்படம் முடியும் தருவாயில் அது குறைவாகவே பேசி முடித்துக் கொள்கிறது.
கட்டுரையாளர் : நந்தினி ராம்நாத்
தமிழாக்கம் : சுகுமார்
நன்றி: ஸ்க்ரால்