ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் 2023 | பதிவு 4
மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சுமார் 1.31 கோடி பெண்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என்று பா.ஜ.க. தனது தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளது. அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும் மானிய விலையில் பருப்பு, கடுகு, எண்ணெய் மற்றும் சர்க்கரை வழங்குவது, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 12,000 ரூபாய் பணம் வழங்குவது, பள்ளி மாணவர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு வழங்குவது, ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 12-ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி போன்ற வாக்குறுதிகளையும் அறிவித்துள்ளது.
12-ஆம் வகுப்பு பெண்களுக்கு இலவச ஸ்கூட்டி, மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1,500 ஓய்வூதியம், வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு உருளை விலையை 450 ரூபாயாகக் குறைத்தல், பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண் குழந்தைகளுக்கு மழலையர் கல்வி முதுகலை படிப்பு வரை இலவசக் கல்வி, காவல்துறையில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு போன்ற வாக்குறுதிகள் ராஜஸ்தானில் அறிவிக்கப்பட்டுள்ளன.
சத்தீஸ்கரில் நெல் கொள்முதலை குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 3,500 ஆக நிர்ணயிப்பது, வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு உருளை விலையை 500 ரூபாயாக குறைப்பது, மஹ்தாரி வந்தன் திட்டத்தின் கீழ் திருமணமான பெண்களுக்கு ஆண்டுக்கு 12,000 ரூபாயை நிதியுதவியாக வழங்குவது, தீன்தயாள் உபாத்யாய் கிரிஷி மஜ்தூர் யோஜனா திட்டத்தின் கீழ் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 10,000 ரூபாயை நிதியுதவியாக வழங்குவது, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் சத்தீஸ்கரில் கிட்டத்தட்ட 18 லட்சம் வீடுகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதிகளை தன்னுடைய தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது, பா.ஜ.க.
படிக்க: ஆன்லைன் தணிக்கையில் உலகிற்கே முன்மாதிரியாகத் திகழும் பாசிச மோடி அரசு
தெலுங்கானாவில் பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சிகிச்சைக்காக தகுதியான குடும்பத்திற்கு ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்குவது, கல்லூரி மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி போன்ற வாக்குறுதிகள் பா.ஜ.க.வால் அறிவிக்கப்பட்டுள்ளன.
இலவச கவர்ச்சிவாதத் திட்டங்களை எதிர்க்கட்சிகள் அறிவிக்கும் போது, இலவச திட்டங்களை “ரேவ்டி கலாச்சாரம்” என்றும், நாட்டின் பொருளாதாரத்தை இலவசத் திட்டங்கள் அழிக்கின்றன என்றும் ஊளையிடும் சங்கிக் கும்பல், மக்களின் வாக்குகளை கவர்வதற்காக அத்தகைய திட்டங்களை தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளில் அறிவிக்க தவறுவதில்லை. தற்போதைய ஐந்து மாநிலத் தேர்தல்களில் மட்டுமல்ல, இதற்கு முன்னர் நடந்த சட்டமன்றத் தேர்தல்களிலும் பா.ஜ.க இலவச கவர்ச்சிவாதத் திட்டங்களை அறிவித்து மக்களின் வாக்குகளை கவர்வதை ஒரு உத்தியாகத் தான் கையாண்டு வருகிறது.
தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சிகள் அறிவித்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்கொள்ள முடியாமல் தோல்வி முகத்தில் உள்ள பா.ஜ.க கும்பல், இந்துத்துவ பிரச்சாரத்தைவிட இலவச கவர்ச்சிவாத பிரச்சாரத்தையே வீச்சாக மேற்கொண்டது.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube