புதிய ஜனநாயகத்தின் பார்வையில், பா.ஜ.க, ஆம் ஆத்மி-இன் தேர்தல் வெற்றிகள்!
உ.பி, உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு நடைபெற்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 10-ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. ஐந்து மாநிலங்களில் பஞ்சாப் நீங்கலான மற்ற நான்கு மாநிலங்களிலும் பா.ஜ.க. மிகப் பெரிய வெற்றியைபெற்றுள்ளது. பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது.
403 தொகுதிகளைக் கொண்ட மிகப்பெரிய மாநிலம் உத்தரப் பிரதேசம். இங்கு வெற்றி பெறுவதானது, 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவதை தீர்மானிக்கும் முக்கிய காரணி. எனவே, அம்மாநிலத் தேர்தல் முடிவுகள் அனைவராலும் கவனிக்கப்பட்டன.
உ.பி.யை பொறுத்தவரை, தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளும் சரி, பிந்தையதும் சரி சீட்டுகளைக் கூடக் குறையப் பெற்றாலும் பா.ஜ.க.வே ஆட்சியமைக்கும் என்று அறுதியிட்டன. அதே நேரம், தொடர்ந்து வந்த கருத்துக்கணிப்புகளில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகள் அதிகரித்துச் சொல்லபட்டன.
எனவே, பா.ஜ.க.விற்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் கடுமையான போட்டி இருக்குமென்று விவாதிக்கபட்டது. ஒருபடி மேலே போய், “இந்த முறை பா.ஜ.க. படுதோல்வியைச் சந்தித்து சமாஜ்வாதி கட்சியே ஆட்சியைப் பிடிக்கும்” என்ற அளவிற்கு பா.ஜ.க. எதிர்ப்பாளர்கள், ஜனநாயக சக்திகளில் ஒரு பிரிவினர் பேசிவந்தனர்.
ஆனால், உ.பி. தேர்தல் பிரச்சாரங்கள் தொடங்கி நடைபெற்று வந்தபோதே, கடந்த டிசம்பர் மாதம் வெளிவந்த இதழில், “உத்தரப் பிரதேசம்: இந்துராஷ்டிரத்திற்குள் ‘சாத்தியமான மாற்று’ இல்லை” என்ற கட்டுரையில், இத்தேர்தலின் போக்கு பற்றி, பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ்.க்கு “மாற்று கட்சி” என்று சொல்லிக் கொள்ளும்படி யாரும் இல்லை என்று விளக்கி எழுதியிருந்தோம். நாம் கணித்தவாறே தேர்தல் முடிவுகளும் வந்துள்ளன.
உத்தரப் பிரதேசம்: பா.ஜ.க.வை மீண்டும் வெல்ல வைத்தது எது?
“தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு எதிராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் கட்சிகளைப் போலல்லாமல் உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க.விற்கு எதிராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் காங்கிரஸ் உள்ளிட்ட ஓட்டுக் கட்சிகள் எதுவும் அதன் காவிக் கொள்கையை எதிர்த்து மூச்சுகூட விடுவதில்லை.
இவர்கள் காவி அரசியலை எதிர்ப்பவர்களில்லை என்பது பழையநிலை; பா.ஜ.க.வை எதிர்ப்பதாகச் சொல்லி களம் காண்பவர்களே, அதன் ‘இந்து அரசியலை’ தன்வயப்படுத்திக் கொள்கிறார்கள் என்பது தற்போது முதிர்ச்சிபெற்று வரும் புதிய எதார்த்தம். ஆம், அடுத்த ஆண்டுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துக் கொண்டிருக்கின்றன – “உத்தரப் பிரதேசம்: இந்துராஷ்டிரத்திற்குள் ‘சாத்தியமான மாற்று’ இல்லை”.
உத்தரப் பிரதேசத்தில், பா.ஜ.க. எதிர்ப்பு தேர்தல் களம் இப்படித்தான் இருந்தது. இதுகுறித்து விரிவாக அக்கட்டுரையில் விளக்கியிருக்கிறோம்.
“உண்மையான இந்துக்கள் நாங்கள்தான்” என்று பறைசாற்றிக்கொண்ட காங்கிரஸ் துடைத்தொழிக்கப்பட்டிருக்கிறது. “கிருஷ்ணரே என்னுடைய கனவில் வந்து, உன்னுடைய தலைமையில்தான் இராமராஜ்ஜியம் அமைக்கப்படும் என்று சொன்னார்” என்று பிரச்சாரம் செய்த அகிலேஷ் யாதவையும் உ.பி. மக்கள் வெல்லவைக்கவில்லை.
“முஸ்லீம்களுக்கு ஆதரவான கட்சி, பயங்கரவாத கட்சி” என்று சமாஜ்வாதி கட்சியை தாக்குதல் நிலையில் விமர்சித்து ஒதுக்கியது பா.ஜ.க. “இது 80 சதவிகிதத்தினருக்கும் 20 சதவிகிதத்தினருக்கும் இடையிலான போட்டி” என்று வெளிப்படையாக இந்து-முஸ்லீம் மோதலைத் தூண்டும் வகையில் பேசிய யோகியின் பிரச்சாரம் எடுபட்டிருக்கிறது.
எமது மேற்கூறிய கட்டுரையில் கூறியுள்ளதைப் போல, “பா.ஜ.க.வை எதிர்த்து காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் போட்டியிடுகின்றன. பிரச்சாரங்களின் உள்ளடக்கமோ பா.ஜ.க.வின் ‘இந்து’ அரசியல் VS பா.ஜ.க. எதிர்ப்பு ‘இந்து’ அரசியல் என்பதாக உள்ளது. ‘சாத்தியமான மாற்று’ என்று எவையும் நம் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை புலப்படவில்லை” என்று எழுதியிருந்தோம்.
உண்மையான ‘இந்து அரசியலிடம்’, ‘போலியான இந்து அரசியல்’ தோற்றுப் போயிருக்கிறது. நமது மதத்தை, தேசத்தை பாதுகாக்கும் ‘ஒரிஜினல்’ பாதுகாவலர்கள் பா.ஜ.க.தான் எனக் கருதியதால், அக்கட்சியை வெற்றிபெற வைத்திருக்கிறார்கள் உ.பி மக்கள். தேர்தல் பிரச்சாரமே ‘இந்து அரசியல்’ என்று போன பின்னர், பா.ஜ.க.வைத் தவிர வேறு யாரையும் ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்று அவர்களிடம் கேட்க முடியுமா?
30 ஆண்டுகால வரலாற்றில், உத்தரப் பிரதேசத்தில் இரண்டாவது முறையாக ஒரு கட்சி மீண்டும் ஆட்சியில் அமர்ந்ததில்லை என்ற நிலையை உடைத்திருக்கிறார்கள் காவி பாசிஸ்டுகள். 255 தொகுதிகளில் வென்றதோடு, சென்ற முறை பெற்ற 39.67 சதவிகிதம் வாக்குகளைவிட அதிகமாக, தற்போது 41.33 சதவிகிதம் வாக்கு பெற்றுள்ளார்கள்.
ஆம் ஆத்மி கட்சி வெற்றியை எப்படி பார்ப்பது?
இன்னொரு பக்கம், ஐந்து மாநிலத் தேர்தல்களிலும் தனக்கு ஏற்கெனவே இருந்த பலத்தையும் இழந்து, ஒரு “தேசியக் கட்சி” என்று சொல்வதற்கான தகுதியே கேள்விக்குறியாகியிருக்கிறது காங்கிரஸ் கட்சி. இதுவும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. எதிர்ப்பாளர்கள் இடையே ஒரு நம்பிக்கையின்மையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
பஞ்சாபில் கூட மக்கள் பா.ஜ.க.விற்கு எதிராக காங்கிரசைப் பார்க்கவில்லை. ஆம் ஆத்மி கட்சியை பெரும்பான்மையாக வெற்றி பெறவைத்துள்ளார்கள். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஆம் ஆத்மியின் வெற்றியை அறுதியிட்டுச் சொன்னாலும் பலருக்கும் இது ஆச்சரியமாகவே இருந்தது.
இவ்வெற்றியை ஒரு ‘புரட்சி’ என்று சொல்கிறார் கெஜ்ரிவால், விரைவில் இது நாடு முழுக்க பரவும் என்றும் சொல்கிறார்.
குறுகிய காலத்தில் ஒரு கட்சி, ஒரு மாநிலத்தைத் தாண்டி இன்னொரு மாநிலத்தில் எப்படி பெரும்பான்மை அடிப்படையில் ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது. தேசிய அளவில் தன்னை ஒரு அடையாளமாக காட்சிப்படுத்திக்கொள்ள முடிகிறது என்பது பலருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது.
இதுபற்றி எமது மேற்கூறிய கட்டுரையிலேயே, “ஆம் ஆத்மி: ஆளும் வர்க்கங்களுக்கு வாய்த்த ஸ்டெப்னி; ஆர்.எஸ்.எஸ்.க்கு வாய்த்த மற்றொரு அரசியல் கருவி!” என்ற உட்தலைப்பில் விளக்கியுள்ளோம்.
“…. … தொகுப்பாக பார்க்கும்போது, மற்ற கட்சிகளைவிட ஆம் ஆத்மி பேசும் இந்துத்துவ அரசியல் நேரடியாக காவி பாசிசத்துடன் நெருக்கமுடையது.
… .. ஆம் ஆத்மியின் இந்தப் போக்கை விமர்சிக்கும் லிபரல்கள், அக்கட்சியை ‘பா.ஜ.க.வின் பி டீம்’ என்கின்றனர். ஆம் ஆத்மி பா.ஜ.க.வின் பி டீம் என்று சொல்வதைவிட ஆளும் வர்க்கங்களின் பி டீம் என்று சொல்வதுதான் பொருத்தமானது. மோடி அரசின் பொருளாதாரத் தாக்குதல்களால் கிளர்ந்தெழும் உழைக்கும் மக்கள் நாளுக்குநாள் பா.ஜ.க.வின் மீது அதிருப்தியையும் ஆத்திரத்தையும் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் அதன் சித்தாந்தமான இந்துத்துவத்தின் மீதோ, தேசவெறியின் மீதோ அல்ல. இச்சூழலில் பா.ஜ.க.வின் செல்வாக்கு சரிந்தால் அதே ‘இந்துத்துவம் – தேசவெறியைப்’ பேசி வெகுமக்களைக் கவரக்கூடிய ஒரு கட்சியாக உருமாற வாய்ப்புள்ள ஆம் ஆத்மியை ஆளும் வர்க்கங்கள் தத்தெடுத்துக் கொள்ளும். சுருக்கமாகச் சொன்னால், பா.ஜ.க. என்ற டயர் பஞ்சரானால் வேறொன்றை மாற்றிக் கொள்வதற்கான ஸ்டெப்னியாக (Stepney) ஆளும் வர்க்கங்களுக்கு வாய்த்திருக்கிறது ஆம் ஆத்மி.
மேலும் ஆர்.எஸ்.எஸ். என்ற பாசிசப் படை, பா.ஜ.க. என்ற கட்சியை மட்டும் பயன்படுத்தித்தான் இந்துராஷ்டிரத்தை அடையவேண்டுமென்பதில்லை. ஆர்.எஸ்.எஸ்.க்கு பா.ஜ.க. ஒரு கருவி மட்டுமே. பா.ஜ.க. அல்லாத வேறொரு கட்சியையும் கூட ஆர்.எஸ்.எஸ். தங்கள் அரசியல் கருவியாக பயன்படுத்திக் கொள்ளமுடியும்” என்று எழுதியிருந்தோம்.
எனவே, ஆளும் வர்க்கங்களும் ஆர்.எஸ்.எஸ்-ம் தங்களுக்கான ஒரு மாற்றுக் கட்சியாக வைத்துள்ளதுதான் ஆம் ஆத்மி. பஞ்சாப் தேர்தலில் வெற்றி பெற்ற பின், “தேசிய அளவில் காங்கிரசுக்கு எதிரான இயல்பான மாற்றாக ஆம் ஆத்மி வளரும்” என்று அக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரான ராகவ் சதா பேசியிருக்கிறார்.
ஆம் ஆத்மி கட்சியின் ‘பிறவிப் பயன்’ என்ன என்று ராகவ் சதா விளக்கியதிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம்.
எனவே, தொகுப்பாக ஐந்து மாநிலத் தேர்தல் முடிவைப் பொறுத்தவரை நான்கு மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றிபெற்றிருக்கிறது. ஆனால் ஐந்து மாநிலங்களிலும் (பஞ்சாபில் ஆம் ஆத்மியையும் சேர்த்து) ஆர்.எஸ்.எஸ். வெற்றி பெற்றிருக்கிறது என்றுதான் பார்க்க வேண்டியிருக்கிறது.
000
கொரோனா காலத்தில் ஏற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் துயரம், அரசு மருத்துவ மனையிலேயே ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் இறந்த குழந்தைகள், கங்கை கரையில் செத்து மிதந்த பிணங்கள், பெண்களுக்கு எதிரான வல்லுறவு குற்றங்கள், தலித்துகள்-முஸ்லீம்கள் மீதான தாக்குதல்கள், காரை ஏற்றி விவசாயிகளை படுகொலை செய்தது – என இவ்வளவு அநீதிகளுக்கு பிறகும் பா.ஜ.க.வை தேர்ந்தெடுத்திருக்கிறார்களே என்று உ.பி. மக்களை நம்மவர்கள் கடிந்து பேசலாம்.
தங்களின் இழிநிலையையே சிந்தித்து பார்க்க முடியாத அளவிற்கு, உ.பி மக்களுக்கு மதவெறி போதை தலைக்கு ஏற்றப்பட்டிருக்கிறது என்பது உண்மைதான். எனினும் இத்தனை கொடுமைகளுக்கும் எதிராக, “இவைகளுக்கெல்லாம் காரணம் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. தலைமையிலான காவி – கார்ப்பரேட் பாசிசம்தான். இதை வீழ்த்தாவிட்டால் வாழ்வில்லை” என அம்மக்களை அணிதிரட்டி, பாசிசத்திற்கு எதிராக வர்க்க உணர்வூட்ட யார்/எந்த கட்சி இருக்கிறது அங்கே? “நானும் இந்துதான். நாங்கள் அமைக்கப் போவதும் இராமராஜ்ஜியம்தான்” என்று பாசிசத்திற்கு பலியாகிப் போன ஓட்டுக் கட்சிகளைத் தாண்டி அங்கு யாருமில்லை.
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வை எதிர்த்து நிற்பது என்பது பாசிச எதிர்ப்பு அரசியல் பேசுவதுதான்; அதற்கெதிராக களப்போராட்டங்களை முன்னெடுப்பதுதான்; இந்துராஷ்டிரத்திற்கு எதிரான அணிசேர்க்கையே ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.விற்கு எதிரான “சாத்தியமான மாற்று”.
“மேலும் ஆர்.எஸ்.எஸ். என்ற பாசிசப் படை, பா.ஜ.க. என்ற கட்சியை மட்டும் பயன்படுத்தித்தான் இந்துராஷ்டிரத்தை அடையவேண்டுமென்பதில்லை. ஆர்.எஸ்.எஸ்.க்கு பா.ஜ.க. ஒரு கருவி மட்டுமே. பா.ஜ.க. அல்லாத வேறொரு கட்சியையும் கூட ஆர்.எஸ்.எஸ். தங்கள் அரசியல் கருவியாக பயன்படுத்திக் கொள்ளமுடியும்” என்று எழுதியிருந்தோம்.”
இது உங்களின் சொந்த கருத்து போல எழுதியிருக்கிறீர்கள். ஆனால் இதை கூறியது தோழர் .பி.ஜே.ஜேம்ஸ் அவர்கள். அதை உங்களது முந்தைய கட்டுரையிலும் நீங்களே கூறியுள்ளபோது..தற்போது இந்த கட்டுரையில் உங்களது சொந்த மூளையில் உதித்து எழுதியிருப்பது போல எழுதியுள்ளீர்களே.இது சரிதானா ?
அந்தக் கருத்தே முதலில் சரியானதுதானா..? அதுவே விவாதத்திற்குரியது. இந்நிலையில் அதை நீங்கள் கண்டுபிடித்த சொந்தக் கருத்துபோல குறிப்பிட்டுள்ளீர்கள்.
ஆம்! இந்தக் கூற்று, தோழர் பி.ஜே.ஜேம்ஸ் உடையதுதான். “சொந்த மூளையில் உதித்தது போல” எழுதவில்லை; தாங்களே கூறியுள்ளதை போல, இதை எமது மூலக் கட்டுரையிலும் (உத்தரப் பிரதேசம்: இந்துராஷ்டிரத்தில் சாத்தியமான மாற்று இல்லை) குறிப்பிட்டுள்ளோம்.
முழுமையாக படிக்க, இக்கட்டுரையின் தொடக்கத்திலேயே மூலக் கட்டுரையின் இணைப்பு உள்ளது. பயன்படுத்திக் கொள்ளவும்.
“மேலும் ஆர்.எஸ்.எஸ். என்ற பாசிசப் படை, பா.ஜ.க. என்ற கட்சியை மட்டும் பயன்படுத்தித்தான் இந்துராஷ்டிரத்தை அடையவேண்டுமென்பதில்லை. ஆர்.எஸ்.எஸ்.க்கு பா.ஜ.க. ஒரு கருவி மட்டுமே. பா.ஜ.க. அல்லாத வேறொரு கட்சியையும் கூட ஆர்.எஸ்.எஸ். தங்கள் அரசியல் கருவியாக பயன்படுத்திக் கொள்ளமுடியும்” என்று எழுதியிருந்தோம்.”
இது உங்களின் சொந்த கருத்து போல எழுதியிருக்கிறீர்கள். ஆனால் இதை கூறியது தோழர் .பி.ஜே.ஜேம்ஸ் அவர்கள். அதை உங்களது முந்தைய கட்டுரையிலும் நீங்களே கூறியுள்ளபோது..தற்போது இந்த கட்டுரையில் உங்களது சொந்த மூளையில் உதித்து எழுதியிருப்பது போல எழுதியுள்ளீர்களே.இது சரிதானா ?
அந்தக் கருத்தே முதலில் சரியானதுதானா..? அதுவே விவாதத்திற்குரியது. இந்நிலையில் அதை நீங்கள் கண்டுபிடித்த சொந்தக் கருத்துபோல குறிப்பிட்டுள்ளீர்கள்.
ஆம்! இந்தக் கூற்று, தோழர் பி.ஜே.ஜேம்ஸ் உடையதுதான். “சொந்த மூளையில் உதித்தது போல” எழுதவில்லை; தாங்களே கூறியுள்ளதை போல, இதை எமது மூலக் கட்டுரையிலும் (உத்தரப் பிரதேசம்: இந்துராஷ்டிரத்தில் சாத்தியமான மாற்று இல்லை) குறிப்பிட்டுள்ளோம்.
முழுமையாக படிக்க, இக்கட்டுரையின் தொடக்கத்திலேயே மூலக் கட்டுரையின் இணைப்பு உள்ளது. பயன்படுத்திக் கொள்ளவும்.
புதிய ஜனநாயகம்
ஆசிரியர் குழு.