செப்டம்பர் 14-ம் தேதி, வட இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது தலித் (முன்னர் “தீண்டத்தகாத”) பெண் ஒருவர் சித்திரவதை செய்யப்பட்டு நான்கு ஆதிக்க சாதி ஆண்களால் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரின் உடல் கடுமையாக தாக்கப்பட்டிருந்தது. நாக்கு அறுக்கப்பட்டும் கை – கால்களின் எலும்பு உடைக்கப்பட்டும், முதுகெலும்பு சேதமடைந்தும் இருந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின், பதினைந்து நாட்கள் கழித்து புதுதில்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அந்தப் பெண் மரணமடைந்தார்.

பாலியல் வன்கொலை செய்தவர்களின் மிருகத்தனத்தின் அதே அளவிற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்காத உத்தரப் பிரதேச போலீசின் செயல்பாடுகள் அதிர்ச்சியளிக்கிறது. பாதிக்கப்பட்ட அந்தப் பெண் பொய் சொன்னதாக போலிசார் குற்றம் சாட்டினர், பாலியல் வன்புணர்வுப் புகாரை பதிவு செய்ய மறுத்துவிட்டனர், பாதிக்கப்பட்ட அப்பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதை தாமதித்தனர்.   ஒரு போலீசு அதிகாரி, பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் விந்து காணப்படாததால் எந்த பாலியல் பலாத்காரமும் நடக்கவில்லை என்றும்கூட தெரிவித்திருக்கிறார். ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில், பாதிக்கப்பட்டவரின் உடல் இரவோடு இரவாக போலீசாரால் விரைவாக தகனம் செய்யப்பட்டது. அவரது உடலைப் பார்க்கவோ அல்லது தகனத்திற்கு வரவோ கூட குடும்ப உறுப்பினர்கள் அனுமதிக்கப்படவில்லை.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் இந்தியாவில் பரவலாக நடக்கிறது. சமீபத்தில் தேசிய குற்ற பதிவுகள் நிறுவனம்(என்.சி.ஆர்.பி) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்தியாவில் 2019-ம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் 88 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவாகியுள்ளன. வடமேற்கு மாநிலமான ராஜஸ்தானில் 2019-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 6,000 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவாகியுள்ளன; அதற்கு அடுத்தபடியாக உத்தரபிரதேசத்தில் 3,065 வழக்குகள் பதிவாகியுள்ளன

படிக்க :
♦ பொள்ளாச்சி : ஃபேஸ்புக் பயன்பாடுதான் பெண்களுக்கு பிரச்சினையா ?
♦ பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக தான் நம்பர் 1 !

இந்த எண்ணிக்கை வெளிவராத பல பாலியல் பலாத்கார வழக்குகளின் ஒரு சிறு பகுதியே. பாலியல் பலாத்காரம் செய்யப்படும் பெண்களில் குறைவான பகுதியினர் மட்டுமே புகார் அளிக்கின்றனர். பாலியல் பலாத்காரத்துடன் தொடர்புடைய சமூக களங்கம் (social stigma) காரணமாக பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் அமைதியாக இருக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். இப்படி பாதிக்கப்பட்டவர் மீது குற்றம் சாட்டப்படுவது அல்லது அவர்களை களங்கப்படுத்துதல் என்பது இயல்பானதாக மாற்றப்பட்டிருக்கிறது.

2012-ம் ஆண்டில் கொல்கத்தாவில் கணவனால் கைவிடப்பட்ட ஒரு தாய் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவர் பாலியல் தொழிலாளி என்று களங்கப்படுத்தப்பட்டார். டிசம்பர் 16, 2012 அன்று டெல்லியில் நகரும் பேருந்தில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பாலியல் வன்முறையாளர்கள், இரும்புக் கம்பியை நுழைத்து அவரது குடல்களை சிதைத்தனர். அப்பெண் அனுபவித்த கொடூரமான வன்முறை, “அவள் காதலனுடன் இரவில் ஏன் வெளியே வந்தாள்” என்று மக்கள் கேட்பதைத் தடுக்கவில்லை. அந்தப் பெண்ணா பாலியல் தாக்குதலை வரவழைத்தார் ?

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களில் கணிசமானவர்கள் தலித்துகள். 2019-ம் ஆண்டு பதிவான மொத்த 32,033 பாலியல் பலாத்கார வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களில் 11 சதவீதம் பேர் தலித் பெண்களே. உத்தரபிரதேசத்தில் பதிவாகியுள்ள அனைத்து பாலியல் பலாத்கார வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களில் 18 சதவீதம் பேர் தலித் என்று என்.சி.ஆர்.பி தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்திய சமூகம் ஓரு ஆணாதிக்க சமூகம். இங்கிருக்கும் பிரபல  கலாச்சாரம், “ஆண் தன்மையை” பாலியல் ஆதிக்கவெறிக்கு ஈடு செய்துகாட்டுகிறது. அது ஆண்களையும் சிறுவர்களையும் பெண்களை கொடுமைப்படுத்தவும் துன்புறுத்தவும், அவர்களை பாலியல் பலாத்காரம் செய்யவும் கூட ஊக்குவிக்கிறது. அவர்களை “அடக்க” மற்றும் அவர்களுக்கு ஒரு “பாடம்” கற்பிக்கவும் ஊக்குவிக்கிறது. அதிலும் தலித் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது இந்த கருத்தாக்கத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. ஒரு தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது பெண்ணை தண்டிப்பதற்கும் அவமானப்படுத்துவதற்கும் மட்டுமல்ல, அவரது குடும்பத்தையும் சமூகத்தையும் கூட தண்டிப்பதற்கும் அவமானப்படுத்துவதற்கும் தான்.  தங்கள்  சமூகத்தின்  பெண்களைப் பாதுகாப்பதற்கான தலித் ஆண்களின் சக்தியற்ற தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுவதை நோக்கமாகக் கொண்டு பாலியல் பலாத்காரங்கள் அரங்கேற்றப்படுகின்றன.

உறவினரின் “குற்றத்திற்கான” தண்டனையாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவங்களும் நடக்கின்றன. கடந்த ஆகஸ்ட் 2015-ம் ஆண்டு, உத்தரபிரதேசத்தில் பாக்பாத்தில் உள்ள ஆண்களால நிரப்பப்பட்ட சாதிய கவுன்சில் 23 வயதான தலித் பெண்ணையும் அவரது 15 வயது சகோதரியையும் பாலியல் பலாத்காரம் செய்து நிர்வாணமாக அணிவகுத்துச் செல்ல உத்தரவிட்டது. அந்த பெண்களின் சகோதரன் ஆதிக்க ஜாட் சமூகத்தைச் சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுடன் ஓடிப்போனதுதான் காரணம்.

பாலியல் பலாத்காரம் கூட சமூக இசைவைப் பெறுகிறது.

டிசம்பர் 2012 டெல்லியில் நடந்த கூட்டுப் பாலியல் வன்புணர்விற்குப் பிறகு பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் வன்முறை ஊடகங்களின் கவனத்திற்கு வந்தது. இது நாடு முழுவதும் பொதுமக்கள் சீற்றத்தையும் வெகுஜன ஆர்ப்பாட்டங்களையும் தூண்டியதுடன், வலுவான சட்டங்களை இயற்றுமாறு அரசாங்கத்தை கட்டாயப்படுத்தியது.

2013-ம் ஆண்டின் குற்றவியல் சட்டம் (திருத்தம்) பாலியல் பலாத்காரம் பற்றிய விரிவான வரையறையையும், மேலும் கடுமையான தண்டனையையும் வலியுறுத்துகிறது. இதில் பெரும்பாலான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் நீண்ட சிறைத் தண்டனை மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் இறந்தால் மீண்டும் அந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை என்று சட்டம் இயற்றப்பட்டது. இருந்தும், இது இந்தியாவில் பாலியல் பலாத்கார சம்பவங்களை குறைக்கவில்லை.

கடந்த 10 ஆண்டுகளில் பதிவான பாலியல் பலாத்கார வழக்குகளின் எண்ணிக்கை 31 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதே நிதர்சனமான உன்மை.

தண்டனையின் அளவு பாலியல் பலாத்காரங்களுக்குத் தடையாக இல்லை என்பது தெளிவாகிறது. நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்பதுதான் குற்றத்தைத் தடுக்கக்கூடியதாக அமைகிறது. இவ்விவகாரத்தில் இந்தியாவின் நிலை வருத்ததிற்குரியது, அதுவும் பாலியல் பலாத்கார வழக்குகளில், குறிப்பாக பாதிக்கப்பட்டவர் தலித் பெண் என்றால் நிலை மிகவும் மோசமானது.

இந்தியாவின் குற்றவியல் நீதித்துறை பெருமளவில் ஆணாதிக்க, பெண்வெறுப்புமிக்க மற்றும் ஆதிக்க சாதியத்தன்மை கொண்டதாகவே இருக்கிறது. இத்தகைய சூழலில் ஒரு தலித் பெண்ணிற்கு நீதி கிடைப்பது என்பது மிகவும் அரிது.

போலீசாரின் பார்வையும் அதிர்ச்சியூட்டக்கூடிய அளவிற்கு பெண்வெறுப்பு மிக்கதாகவே இருக்கிறது. கடந்த 2012-ம் ஆண்டு டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள போலீசாரிடம் நடத்தப்பட்ட மறைபுலனாய்வில் பேட்டி எடுக்கப்பட்டவர்களில், பெரும்பாலானோர் பாலியல் பலாத்காரத்திற்குப் பெண்களே காரணம் என்று உறுதியாக நம்புகின்றனர்.

காவல்துறையினரே புகார்களைப் பதிவு செய்ய தயங்குகிறார்கள், குறிப்பாக தாக்குதல் தொடுத்தவர் பணக்காரராகவோ, அரசியல் தொடர்புகள் கொண்டவராகவோ அல்லது ஆதிக்க சாதியைச் சேர்ந்தவராகவோ இருந்தால் அவர்கள் புகார்களை பதிவு செய்யத் தயங்குகிறார்கள். பாலியல் வன்புணர்வு வழக்குகளில் சிறு பகுதியே நீதிமன்றம் வரை செல்கிறது.

படிக்க :
♦ குஜராத் மாடல் அரதப் பழசு ! உ.பி. மாடல் தான் புத்தம் புதுசு !
♦ ஹதராஸ் பாலியல் வன்கொலை : நள்ளிரவில் எரிக்கப்பட்ட ‘நீதி’ !

பாதிக்கப்பட்டவரோ அல்லது அவரது குடும்பத்தினரோ நீதிமன்றங்கள் மூலம் நீதியைப் பெறத் துணிந்தால், அவர்களையும் சாட்சிகளையும்  “அமைதியாக்கும்” போக்கு இயல்பானதாக இருக்கிறது. கடந்த 2018-ம் ஆண்டில் உன்னாவோவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண், ஒரு வருடத்திற்குப் பிறகு நீதிமன்ற விசாரணைக்குச் சென்றபோது, அவரை பாலியல் வன்புணர்வு செய்தவர்கள் உட்பட 5 பேரால் உயிரோடு எரிக்கப்பட்டார்.

நீதிமன்றத்திற்குச் செல்லும் பெரும்பாலான வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுதந்திரமாக நடமாடுவதாகவே தீர்ப்பாகிறது. கடந்த 2019-ம் ஆண்டில் மட்டும் பாலியல் வன்புணர்வு வழக்குகளில் வெறும் 27 சதவீதம் மட்டுமே குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கக் கூடியதாக இருந்தது. இதன் விளைவாக, பல பெண்கள் அவமானத்தையும் பழிவாங்கும் வன்முறையையும் எதிர்கொள்வதை விட மௌனமாக துன்பத்துடன் உழல்வதையே தெரிவு செய்கிறார்கள்.

ஹத்ராஸ் பாலியல் வன்கொலை வழக்கு தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாதிக்கப்பட்டவரது குடும்பத்தினரின் நீதிக்கான தேடலை எதிர்க்கட்சிகள் ஆதரிக்கின்றன. வழக்கு நீதிமன்றம் செல்லும். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களது சக்திவாய்ந்த சாதிப் பிரமுகர்கள், போலீசு மற்றும் அரசியல்வாதிகள், குற்றத்தின் அளவை குறைப்பதற்கான வேலைகளில் இறங்குவதை எதிர்பார்க்கலாம்.

பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீதான வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ், ஒரு தலித்துக்கு எதிரான குற்றம் என்பது வெறும் குற்றம் மட்டுமல்ல – அது ஒரு வன்கொடுமை. அதன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க சட்டம் வழிவகை செய்கிறது. ஹத்ராஸில் பெண் மீது பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது POA சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட வேண்டும். குற்றவியல் நீதி அமைப்பில் உள்ள சாதிய கூறுகள், அந்தப் பெண் தலித் என்பதால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்தப் பெண்ணை குறிவைக்கவில்லை என்பதை நிரூபிக்க முற்படும். அவர் தலித் என்பது அவர்களுக்குத் தெரியாது என்று கூட அவர்கள் வாதிடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

ஹத்ராஸ் கும்பல் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர் மரணமடைந்த சில நாட்களுக்குப் பிறகு, உத்தரபிரதேச மாநில சட்டசபையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சுரேந்திர சிங், “இதுபோன்ற சம்பவங்கள் [பாலியல் பலாத்காரம் போன்றவை] கலாச்சாரத்தின் மூலம் மட்டுமே தடுத்து நிறுத்தப்பட முடியும்” என்று கூறினார். “தங்கள் மகள்களை  நல்ல பண்புகளை  புகட்டி  பண்பட்ட சூழலில் வளர்ப்பது  அனைத்து தாய்மார்களின் மற்றும் தந்தையின் கடமையாகும்” என்றும் கூறினார்.

இந்தியாவும் பாலியல் வன்முறை பேரதிகமாக உள்ள பல்வேறு சமூகங்களைக் கொண்ட மொத்த உலகமும் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராடுவதற்கு இந்த மனநிலைதான் அழிக்க வேண்டும்.

பாலியல் வன்முறையை பரவலாக பார்க்கப்படுகிறது.- பாலியல் வன்முறைக்கு எதிராக போராடி அழிக்க வேண்டும். பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கான பொறுப்பை பெண்கள் மீது சுமத்துவது அபத்தமானது மட்டுமல்ல ஆபத்தானது.

பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் தனியாக வெளியே செல்ல வேண்டாம் என்றோ அல்லது கலாச்சார ரீதியாக பொருத்தமான, ஆண்களைத் தவிர்க்கும் விதத்தில் உடை அணிந்து செல்வது குறித்து எச்சரிப்பதோ பாலியல் வன்முறையைத் தடுக்க முடியாது. மாறாக, பாலியல் அடாவடித்தனம் ஆண் தன்மை அல்ல, ஆணாதிக்கத் திமிர் இயல்பானது அல்ல என்பதை சிறுவர்களுக்கும் ஆண்களுக்கும் (அதே போல் பெண்களுக்கும்) நாம் அவசியம் விதைக்க வேண்டும். ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் உள்ள பெண்ணெதிர்ப்புக் கருத்து மனப்பான்மையைக் கையாள்வதன் மூலமும்,  ஆணாதிக்க கலாச்சாரங்களை  அகற்றுவதன் மூலமும் தான், சுரேந்திர சிங் போன்றவர்களின் பாலியல் வன்முறைகள் குறித்த கூற்றை எதிர்கொள்ளவும் தடுக்கவும் முடியும்.

கட்டுரையாளர் : சுதா ராமச்சந்திரன்
தமிழாக்கம் : சிந்துஜா
நன்றி : தி டிப்ளமாட்

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க