மகளிர் தினக்கூட்டம் | மதுரை

எல்லோரும் “பெண்களை அழகாக இருக்கிறார்கள்” என்று சொல்லியே அடிமைப்படுத்தி வைத்திருப்பதை பற்றியும் பெண்கள் எந்த இடங்களிலும் சுயமாகவே தன்னை நிலை நிறுத்திக் கொள்ள  போராட வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்.

மகளிர் தினத்தை முன்னிட்டு மதுரையில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பாக கூட்டம் நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தை மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் உமா அவர்கள் தலைமையேற்று நடத்தினார். அவர் தன்னுடைய தலைமை உரையில் மகளிர் தினம் என்பது தற்போது எப்படி பார்க்கப்படுகிறது என்பதை விவரித்தார். குறிப்பாக கோலப்போட்டிகள், பாட்டு பாடுவது, தற்காப்புக் கலைகள் போன்றவைகள் எல்லாம் ஒரு நிகழ்ச்சியாக தொலைக்காட்சி சேனல்களில் காண்பித்து, இதுதான் பெண் விடுதலை என்பது போன்ற பிற்போக்குத்தனத்தை ஆளும் வர்க்கங்கள் திட்டமிட்டே சமூகத்தினுள் நமது பொது புத்தியில் புகுத்தியிருப்பதை அம்பலப்படுத்தி மகளிர் தினம் என்றால் என்ன என்பதையும் தொழிற்சாலைகளில் பெண்கள் மீது  நடக்கும் உழைப்பு சுரண்டலை கார்ப்பரேட் கம்பெனிகள் திட்டமிட்டே நடத்துவதையும்,  தண்ணீர் குடிக்க கூட நேரம் இல்லாமல் கழிவறைக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிப்பதையும் இதனால் பெண்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான உடல் ரீதியான வேதனைகளை விவரித்தார். பெண்விடுதலை என்பது போராட்டத்தின் வாயிலாகவே நாம் பெறமுடியும் என்பதையும் கூறி தன்னுடைய உரையை முடித்தார்.

அடுத்ததாக பேசிய மாணவி ஒருவர், பெரும்பாலான பெண்களுக்கு தன்னுடைய  உரிமைகள் என்ன என்பதே தெரியவில்லை. திருமண சட்டம், சம ஊதியம், வரதட்சணைக்கு எதிரான சட்டம் போன்ற சட்டபூர்வ உரிமைகளை  நாம் பயன்படுத்தவேண்டும். நமது உரிமைகளுக்கு எதிராக உள்ளதை கேள்வி கேட்டு எதிர்த்து போராடுவதன் மூலமே பெண்ணுரிமை சாத்தியம் எனக் கூறினார்.

அடுத்ததாக பேசிய பெண்வழக்கறிஞர், தற்போது பெண்களுக்கு கல்வியறிவும்  வேலை வாய்ப்பும் பெருகி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் குடும்பத்திலும் சமூகத்திலும் உளவியல் ரீதியான பிரச்சினைகள்  நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் தீர்ப்பதற்கு சட்டங்கள் இருந்தும் அது போதுமானதாக இல்லை. சமூக வலைதளங்களில் இணையதளங்களில்  பெண்களை ஆபாசமாக  காண்பிப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதை புகார் செய்யும் உரிமை இருந்தும்  இவை தீர்க்கப்படாமல் தொடர்கின்றன எனக் கூறினார்.

அடுத்ததாக ம.க.இ.க. சார்பாக பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக களத்தில் இறங்குவதை வலியுறுத்தி ஒரு பாடல் பாடப்பட்டது.


படிக்க: பெண்களுக்கு அச்சுறுத்தலாக மாறிவரும் இணையம்!


அடுத்ததாக பள்ளி மாணவர் பகத்சிங் விவசாயிகளின் போராட்டத்தை வாழ்த்தி “விவசாயிகளின் போராட்டம் வெல்லட்டும் பாசிஸ்டுகளின் சர்வாதிகாரம் ஒழியட்டும்” என்கிற தலைப்பில் கவிதை ஒன்றை வாசித்தார்.

அதற்கு அடுத்ததாக பேசிய மாணவி ஒருவர் பெண்களின் வாழ்நிலை பற்றி உரையாற்றினார். எல்லோரும் “பெண்களை அழகாக இருக்கிறார்கள்” என்று சொல்லியே அடிமைப்படுத்தி வைத்திருப்பதை பற்றியும் பெண்கள் எந்த இடங்களிலும் சுயமாகவே தன்னை நிலை நிறுத்திக் கொள்ள  போராட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பேசினார். அடுத்ததாக ம.க.இ.க வின் தோழர் சீலா அவர்கள் பெண் விடுதலையை பற்றி கவிதை ஒன்றை வாசித்தார்.

அடுத்ததாக பேசிய பள்ளி மாணவி தேன்மொழி, குழந்தைகளை கடத்தும் நபர்களிடமிருந்து நாம் எவ்வாறு பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் என்பதையும் எவ்வாறு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதையும் பற்றி பேசினார்.

அதன்பிறகு பேசிய தோழர் செல்வி அவர்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அம்பலப்படுத்தி நிறைய கலந்துரையாடல்கள் நடத்த வேண்டும் என்றும் பெண்களை வல்லுறவுக்கு உள்ளாக்குவதை பெண்கள்  மீதான பாலியல் தாக்குதல் என சொல்ல வேண்டும் என்றும், புதுச்சேரியில் தற்போது நடந்துள்ள குழந்தை ஆர்த்தி மீதான பாலியல் தாக்குதலையும் பொள்ளாச்சியில் நடந்த 200 பெண்கள் மீதான பாலியல் தாக்குதலையும் நாம் எவ்வாறு பார்ப்பது என்பதை பற்றியும், பெண்களை ஒழுக்கமாக இருங்கள் ஆடைகளை அணிவதில் கவனம் செலுத்துங்கள் என்று சொல்பவர்கள் எல்லாம் ஆணாதிக்க சிந்தனை உடையவர்களாகவே இருக்கின்றனர். பெண்களை ஒழுக்கமாக இருக்க சொல்லும் இவர்கள் ஏன் ஒழுக்கம் தவறி நடந்து கொள்கிறார்கள் அல்லது அவ்வாறு நடந்து கொள்பவர்களை பற்றி ஏன் பேசுவதில்லை. திரைப்படங்களிலே பெண்களை கவர்ச்சியாக காண்பிப்பதும் ஆண்களை ஹீரோயிசமாக காண்பிப்பதும் தானே தொடர்கிறது. பெண்களுக்கு போர்க்குணம் வேண்டும் போராட தெரிந்திருக்க வேண்டும் அநீதிகளை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும். ஆண் பெண் கூட்டு சேர்ந்து சமூகப் பிரச்சினைகளுக்கும் வீட்டு பிரச்சினைகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும். குறிப்பாக பாசிச பா.ஜ.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாமல் போகிறது. பெண்களுக்கு எதிரான ஆட்சி என்றால் அது பாசிச பா.ஜ.க. ஆட்சிதான். அதனால் தான் வேண்டாம் பி.ஜே.பி. என்று அனைவரும் சொல்கிறோம் என்பதோடு தனது உரையை முடித்துக் கொண்டார்.


படிக்க: அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள் யார் குற்றவாளி?


அடுத்ததாக பெண்கள் மீதான வன்முறையை தடுக்கும் சட்டங்கள் இருந்தும், அதற்கு என்று தனிப்பட்ட அரசு துறைகள், அதிகாரிகள் இருந்தும் குற்றங்கள் குறையாமல் இருப்பதற்கு என்ன காரணம், இதை எவ்வாறு சரி செய்ய போகிறோம் என்பதை பற்றி ஒரு விவாதம் நடந்தது. கூட்டத்தில்  கலந்து கொண்டவர்கள் அனைவரும் ஆர்வமாக விவாதத்தில் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தனர்.

அடுத்ததாக ம.க.இ.க. தோழர் சங்கர் விவசாயிகளின் போராட்டத்தை பற்றி விவரித்தார். குறிப்பாக விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகளான குறைந்தபட்ச ஆதார விலை, 60 வயதுக்கு மேற்பட்ட  விவசாயிகளுக்கு மாதம் 10,000 ஓய்வூதியம், உலக வர்த்தக கழகத்திலிருந்து இந்தியா வெளியேற வேண்டும், பழங்குடியின மக்களுக்கு நீர் நிலம் போன்றவற்றின் மீதான உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்து சென்றதை ஆதரித்தும்‌ வரவேற்றும் பேசினார். நமது நாட்டில் உழைக்கும் மக்கள் சந்திக்க கூடிய பிரச்சினைகளுக்கும், பாதிப்புகளுக்கும் என்ன தீர்வு, பிரச்சினையின் ஆணிவேர் எங்கு உள்ளது என்பதை பற்றிய  பரந்து விரிந்த சமூக பார்வை விவசாயிகளிடம் இருப்பதினால் தான் சிறப்பான கோரிக்கைகளை முன்வைக்க முடிகிறது. இதை நாம் அவர்களிடமிருந்து வரித்துக் கொள்ள வேண்டும். நம்முடைய அனைத்து பிரச்சினைகளுக்கும் டெல்லி விவசாயிகளின் வீரஞ்செறிந்த போராட்ட வழி முறையைமுறையை நாம் பயன்படுத்த வேண்டும் என்று கூறி முடித்தார்.

இறுதியாக ம.க.இ.க. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம் தனது நன்றியுரையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்ந்து இந்தியாவில் நடப்பதற்கு காரணமே பார்ப்பன வர்ணாசிரம கட்டமைப்பு தான் என்றும், இதனை தடுத்து நிறுத்துவதற்கான போராட்டங்களை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை பற்றியும் இதுபோன்ற விஷயங்களை தொடர்ந்து விவாதிப்பதன் மூலமாக தான் நாம் பெண்களுக்கு எதிரான பிரச்சினைகளை ஒரு முடிவுக்கு கொண்டு வர முடியும். மேலும் சோசலிச நாடுகளில் தான் பெண்களுக்கான முழுமையான உரிமை வழங்கி பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதையும், பெண்கள் வைக்கும் கோரிக்கையை முழுமையாக ஏற்றுக் கொண்டதும் அங்கேதான் என்பதை தெரிவித்து தனது நன்றி உரையை நிறைவு செய்தார். நன்றியுரையுடன் மகளிர் தினக்கூட்டம் நிறைவடைந்தது.

தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்
மதுரை.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க