19 வயதான கல்லூரி மாணவி அனுஷ்கா தற்கொலை செய்துகொண்டார். அனுஷ்காவின் படம் ஆபாசமாக மார்பிங்க் செய்யப்பட்டு அவரது ஆண் நண்பன் ஒருவனால் இணையத்தளத்தில் பதிவிடப்பட்டது. அப்படம் கல்லூரி வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்பட்டதால் அவமானம் தாங்காமல் அனுஷ்கா தற்கொலை செய்துகொண்டார். இணையவழியில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட, எண்ணற்ற இளம்பெண்களில் ஒருவர்தான் அனுஷ்கா.
இணையவழியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அரங்கேறுவது குறித்து நிபுணரும் சைபர் துறையில் நிகழும் துன்புறுத்துதல்கள் குறித்து ஆராயும் ஆய்வாளருமான அஞ்சலி ரங்கசுவாமி, 111 இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் 400 மாணவர்களிடம் ஆய்வினை நடத்தியிருக்கிறார்.
அந்த ஆய்வில் இணையவழியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என தெரியவந்திருக்கிறது. 60 சதவிகித பெண்களும் 8 சதவிகித ஆண்களும் இத்தகைய இணையவழி அச்சுறுத்தல்களால் தினசரி பாதிப்புக்கு ஆளாகுகிறார்கள்.
படிக்க : தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சும் அமேசான் நிறுவனம்!
பெண்களது படங்களை ஆபாசமாக, நிர்வாணமாக மார்ஃபிங் செய்வது, பாலியல் ரீதியாக மிரட்டுவது, வெளிப்படையாக பாலியல் ரீதியாக குறுஞ்செய்திகளை அனுப்பி தொந்தரவு செய்வது என இணையவழி தாக்குதல்கள் பல வடிவங்களில் அரங்கேறுகிறது. குறிப்பாக, நமது அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகிவிட்ட வாட்ஸ் அப், முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைத்தள பக்கங்கள்தான் பெண்களுக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தல்களில் முதன்மை பங்கு வகிக்கின்றன.
இணையவழியில் அதிகமாக பாதிக்கப்படும் பெண்களில் சமூக செயற்பாட்டாளர்களாக உள்ள பெண்களே அதிகம். பெண்களை ‘அடக்கி ஆள’ ஒரு மோசமான ஆயுதமாக அவர்களது படங்களை மார்ஃபிங் செய்வதையும், கொச்சை, ஆபாச வார்த்தைகள் கொண்டு திட்டுவதையுமே ‘கெத்தாக’ பார்க்கிறது பார்ப்பன – ஆணாதிக்க மனோபாவம்.
இத்தகைய நபர்களால் இணையத்தில் பதிவிடப்படும் ஆபாச படங்கள் பலருக்கும் பரப்பப்பட்டு உலகின் மூலைமுடுக்கில் இருப்பவர் வரை சென்று சேருகிறது. இதனால் பாதிப்படையும் பெண்கள் மனரீதியான பிரச்சினைகளுக்குள்ளாகுகிறார்கள். மனப் பிரச்சினையால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை முடிவுக்கும் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பெண்கள் பலரும் தாங்கள் மேற்கொண்டிருந்த கல்வியையும், பணியையும் விட்டு விலகும் நிலையும் ஏற்படுகிறது.
படிக்க : இனியும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வை விட்டு வைக்கலாமா?
இந்திய உயர்கல்வி நிறுவனங்கள்தான் இணையவழி பாலியல் துன்புறுத்தல்கள் அதிகம் நிகழும் இடமாக இருக்கிறது என ஆய்வாளர் அஞ்சலி நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
ஆயிரமாயிரங் காலமாக அடிமைகளாக சுரண்டப்பட்டு வந்த பெண்கள், தொழில்நுட்பங்கள் வளர வளர நவீன முறையில் பாலியல் சுரண்டல்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகின்றனர். நிலவுகின்ற பார்ப்பன – ஆணாதிக்க சமூகத்தை தூக்கியெறியும் போராட்டத்தில் பெண்கள் களத்தில் நிற்க வேண்டும். புதிய சமுதாய பிறப்பில்தான் பெண்கள் விடுதலையும் பிறக்கும்!
ஆதிலா