தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்திற்கு உட்பட்ட உடன்குடி பகுதியில் செயல்பட்டு வரும் சல்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றிவரும் காமக்கொடூரனான பொன்சிங், மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி, தூத்துக்குடியில் நடைபெற்ற மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக ஐந்து மாணவிகளை பொன்சிங் அழைத்துக்கொண்டு சென்றுள்ளான். திட்டமிட்டபடி விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் அன்று நிறைவுறாததால் மீதமுள்ள போட்டிகள் மறுநாள் நடைபெறும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள வாடகை விடுதியில் பொன்சிங்கும் ஐந்து மாணவிகளும் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். இச்சூழலை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட பொன்சிங், மாணவிகள் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான். குளிர்பானத்தில் மதுவைக் கலந்து மாணவிகளைக் குடிக்கச்சொல்லி வற்புறுத்தியதுடன் இரட்டை அர்த்தங்களில் பேசி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளான். மேலும், இங்கே நடந்ததைப் பற்றி வெளியே சொன்னால் உங்களைக் கொன்று விடுவேன் என்றும் மாணவிகளை மிரட்டியுள்ளான்.
ஆனால், மாணவிகள் பொன்சிங்கால் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகளைப் பற்றி தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். அம்மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் திரண்டு நவம்பர் 11 ஆம் தேதியன்று பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர். பள்ளி முற்றுகையிடப்பட்டதை அறிந்தவுடன் பள்ளிக்கு வந்த போலீசு மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி நிர்வாகத்துக்கும் மாணவிகளின் பெற்றோர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி போராட்டத்தைக் கைவிட வைத்தனர்.
படிக்க: கிருஷ்ணகிரி பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை – தொடரும் பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள்!
மேலும், போலீசு கோவையில் தலைமறைவாக இருந்த பொன்சிங்கை கைது செய்தது. மாணவிகளுக்கு நடந்த கொடூரத்தைப் பற்றி போலீசில் புகார் அளிக்காமல் மறைக்கும் வகையில் செயல்பட்ட பள்ளியின் முதல்வர் சார்லஸ் ஸ்வீட்டி, செயலாளர் சையத் அகமது ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தது.
பெற்றோர்களின் போராட்டத்தால் தங்களின் பள்ளியின் பெயர் கெட்டுப்போய் விட்டால் பள்ளியின் மூலம் கொள்ளையடிக்கும் பணத்தின் அளவு குறைந்துவிடும் என பள்ளி நிர்வாகமும் அஞ்சியது. அதனால் பொன்சிங்கை பள்ளியை விட்டு நீக்கிவிட்டதாகக் கூறி, அவன் மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதற்கும் தங்கள் பள்ளியின் நிர்வாகத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று நாடகமாடியது.
இவ்வாறு தங்களது பொறுப்பைத் தட்டிக் கழிப்பதும் குற்றவாளியைக் காப்பாற்ற நினைப்பதும் குற்றத்திற்குத் துணைபோவதாகும்.
எனவே, தங்களின் இலாப நோக்கத்திற்காக பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் தனியார்ப் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். அரசு மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சங்கங்கள் செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும். அச்சங்கங்கள் ஆசிரியர்களுடனும் பெற்றோர்களுடனும் இணைந்து மாணவர் பிரச்சினைகளுக்காகப் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். அப்போராட்டங்கள் மூலமே பள்ளிகளில் மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்த முடியும்.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram