கிருஷ்ணகிரி பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை – தொடரும் பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள்!

சிவராமன் பாலியல் பொறுக்கி என்று தெரிந்தும் நாம் தமிழர் கட்சியில் சேர்க்கப்பட்டு நிர்வாகியாக ஆக்கப்பட்டுள்ளான். இதுதான் நாம் தமிழர் கட்சியின் யோக்கியதை.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கந்திகுப்பம் என்ற இடத்தில் உள்ளது கிங்ஸ்லி கார்டன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி. நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியான சிவராமன் என்பவன் தன்னை என்.சி.சி பயிற்சியாளர் என்று போலியாக அறிமுகப்படுத்திக் கொண்டு இப்பள்ளியில் செயல்பட்டு வந்துள்ளான்.

இப்பள்ளியில் கடந்த 5 ம் தேதி முதல் 9 ம் தேதி வரை தேசிய மாணவர் படை (NCC) முகாம் நடந்தது. அதில் இப்பள்ளியைச் சார்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட 8 ம் வகுப்பு படிக்கும் மாணவியை இவன் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் செய்திகளில் வெளிவந்த பின்பு, இவனால் மேலும் 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரமும் வெளியில் வந்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக பள்ளி முதல்வர் சதீஷ்குமார், பள்ளி தாளாளர் சாம்சன் வெஸ்லி, ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட குற்றத்திற்கு துணைநின்ற 11 பேரும், அதன் பின்னர் சிவராமனும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவராமன் கடந்த மூன்று ஆண்டுகளாக கிருஷ்ணகிரி மட்டுமல்லாமல், வேறு பல மாவட்டங்களிலும் பல பள்ளி, கல்லூரிகளில் போலியான ஆவணங்கள் தயாரித்து தன்னை என்.சி.சி பயிற்சியாளராக காட்டிக் கொண்டு வேலை செய்ததும், பல முகாம்கள் நடத்தியுள்ளான் என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. இந்த முகாம்களுக்கு ஏற்கெனவே இராணுவம், அதிவிரைவுப்படை, போலீஸ் துறைகளில் பணிபுரிந்தவர்களை கூட்டாளிகளாக சேர்த்துக் கொண்டு இயங்கி வந்துள்ளான் எனவும் தெரிகிறது. இவ்வாறு வேலை செய்த இடங்களில் மாணவிகளை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி வந்தது விசாரிக்கும்போது தெரிய வருகிறது.


படிக்க: கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொலை: கிரிமினல்மயமான மருத்துவத்துறையும் அரசுமே குற்றவாளிகள்!


குறும்படம் எடுக்கிறேன், அதில் நடிக்க வைத்து கதாநாயகி ஆக்குகிறேன் என்று ஏமாற்றி, மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் இவனைப் பற்றி சொல்கின்றனர்.

இவன் ஒரு தொடர் பாலியல் குற்றவாளியாக இருந்துள்ளான் என்பது மேற்கண்ட செய்திகளில்  இருந்து நமக்கு தெரிகிறது. ஆனால், இவன் பாலியல் பொறுக்கி என்று தெரிந்தும் நாம் தமிழர் கட்சியில் சேர்க்கப்பட்டு நிர்வாகியாக ஆக்கப்பட்டுள்ளான். இதுதான் நாம் தமிழர் கட்சியின் யோக்கியதை.

கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட செய்தி நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி, மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், கிருஷ்ணகிரியில் நடந்த இந்தக் கொடூரம் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த குற்றத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க ஐஜி பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, 15 நாளில் இவ்வழக்கை விசாரித்து முடிக்க உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என முதல்வர் ஸ்டாலின் ஒருபக்கம் கூறிக் கொண்டிருக்கும் வேளையில்தான், கிருஷ்ணகிரி, ஒரத்தநாடு, திருச்சி என ஒவ்வொரு நாளும் மாணவிகளும், இளம்பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் செய்திகள் நம்மை நிலைகுலைய வைத்துக் கொண்டிருக்கின்றன.

குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதேசமயம் கஞ்சா, டாஸ்மாக், பெண்களை பாலியல் பண்டமாக, நுகர்வுப் பொருளாக சித்தரிக்கும் ஆபாச இணையதளங்கள், ஆபாசத் திரைப்படங்கள், ஆபாசப் பத்திரிக்கைகள் இவற்றையெல்லாம் முற்றாக ஒழித்துக் கட்டாமல் பாலியல் வன்கொடுமைக் குற்றங்களுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியாது என்பதே உண்மை. ஆனால், இதைப்பற்றி அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இதையெல்லாம் அனுமதித்துக் கொண்டுதான் உள்ளது. குற்றங்கள் நடந்த பின்பு வேகமாக நடவடிக்கை எடுப்பது போல் காட்டிக் கொள்வது என்பதுதான் உள்ளது.

இன்னொரு பக்கம் சிவராமன் போன்ற பாலியல்வெறி பிடித்த கழிசடைகள் சமூகம் முழுக்கவும், அதிகார வர்க்கத்திலும் பரவிக் கிடக்கின்றனர். இவற்றையெல்லாம் கண்காணிக்கும் வகையிலான, சரியான விழுமியங்களை கொண்டு செல்லும் வகையிலான எந்த முன்னெடுப்புகளும், நிறுவன கட்டமைப்பும், எச்சரிக்கையும் அரசிடம் இல்லை. பள்ளி, கல்லூரிகளில், அரசுப் பதவிகளில் வேலை செய்பவர்கள் பாலின சமத்துவம் தொடர்பான புரிதல் கொண்டவர்களாக, கண்ணியமிக்கவர்களாக இருப்பது அவர்களது தகுதிக்கான முதன்மை நிபந்தனை ஆக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது. எல்லா சீரழிவுகளையும் சமூகத்தில் அனுமதித்துக் கொண்டு இருக்கும் அரசானது இதை தானாக செய்யாது என்பதுதான் உண்மை. அதற்கு மக்கள் போராட்டம் அவசியமாகும்.

அதேசமயம், பெண்களை சகமனிதர்களாக மதிக்கும் வகையிலான, அதை உணர்வுபூர்வமாக செயல்படுத்தும் மாற்று அரசுக்கட்டமைப்பை உருவாக்காமல் நமக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்காது என்பதே மேற்கண்ட சம்பவங்கள் நமக்கு உணர்த்தும் உண்மையாகும்.


அய்யனார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க