கடந்த எட்டாம் தேதி கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
இதற்கு எதிராக அந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில், மருத்துவக் கல்லூரிகளில் படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி வேண்டும் என்ற முழக்கங்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
ஆகஸ்ட் 9-ஆம் தேதி அதிகாலை கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துக்கல்லூரி மருத்துவமனையின் செமினார் அறையில் முதுகலை பயிற்சி மருத்துவராக பணியாற்றிவந்த பெண் மருத்துவரின் உடல் அரைநிர்வாண கோலத்தில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. பிரேத பரிசோதனையில் உயிரிந்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டும், கழுத்து, கால்கள் 90 டிகிரி வரை முறிக்கப்பட்டும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்..
இந்தக் குற்றம் தொடர்பாக சஞ்சய் ராய் எனும் நபர் கைது செய்யப்பட்டார். யார் இந்த சஞ்சய் ராய்?
தமிழ்நாட்டில் போலீசுக்கு ஆதரவாக, உதவியாக இருக்கக்கூடிய ஊர்காவல் படையை போன்ற மேற்கு வங்க போலீசுக்கு உறுதுணையான அமைப்பில் வேலை செய்பவர். அவர் மேற்கு வங்க போலீசுத்துறை மூலம் ஊதியம் பெற்றுக் கொண்டிருப்பவர். அவருக்கு நான்கு மனைவிகள் இருக்கின்றனர். அவர்கள் சஞ்சய் ராய் மீது பல்வேறு புகார்களை அளித்திருக்கிறார்கள். மேலும் இந்த சஞ்சராய் மீது பாலியல் புகார்களும் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட நபர் தான் போலீசுக்கு உதவியாக இருந்து போலீசு மூலம் ஊதியம் பெற்றுக் கொண்டு மருத்துவமனையை பாதுகாக்கும் வேளையில் ஈடுபட்டு இந்தக் குற்றத்தையும் செய்திருக்கிறார். இவ்வளவு புகார்கள் உள்ள ஒரு நபர் அரசு ஊதியம் பெற முடியும் என்றால், யார் குற்றவாளி என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும்?
சஞ்சய் ராயை கைது செய்தவுடன் குற்றவாளி கைது செய்யப்பட்டுவிட்டார் என்ற செய்தி பரப்பப்பட்டது.
படிக்க: மேற்குவங்கம்: மருத்துவ மாணவி பாலியல் வன்கொலையை எதிர்த்து மருத்துவர்கள் போராட்டம்
அதைவிட மிக அதிகமாக அந்த மருத்துவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற கருத்தும் பரப்பப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் மிகவும் தீவிரமான போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அந்தப் பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற கருத்தை பரப்பியது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு மூத்த தலைவரும் பிஜேபியை சேர்ந்த ஒருவரும் என்கின்றன ஊடகங்கள்.
பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற கருத்து தோல்வி அடைந்த பின்னர், பாலியல் வன்முறை செய்தவர் ஒருவர் தான் அவரும் கைது செய்யப்பட்டு விட்டார் என்ற கருத்து ஊடகங்கள் வாயிலாக திட்டமிட்டு பரப்பப்பட்டது.
ஆனால், உயிரிழந்த பெண் மருத்துவரின் உடலை பிரேத பரிசோதனை செய்த சுபர்னா கோஸ்வாமி, `பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் பிறப்புறுப்பில் 150 மி.லி அளவுக்கு விந்து இருக்கிறது. ஒருவர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருந்தால் இந்த அளவுக்கு விந்து இருப்பதற்கு சாத்தியமில்லை. நிச்சயம் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்க வேண்டும்!” எனக்கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட முதுநிலை பயிற்சி மருத்துவ மாணவி, 36 மணி நேரம் தொடர்ந்து பணியில் கட்டாயமாக இருக்க வைக்கப்பட்டிருக்கிறார்.
ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் சட்டவிரோத செயல்பாடுகள் மற்றும் போதை புழக்கத்திற்கு எதிராக தன் மகள் போராடியதாலே திட்டமிட்டு அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று படுகொலை செய்யப்பட்ட மருத்துவரின் தந்தை கூறி இருப்பதை ஒருபோதும் புறம் தள்ளி விட முடியாது.
ஏனென்றால் பல ஆண்டுகளுக்கு முன்னரே மருத்துவத்துறை கிரிமினல்மயமாகி போய்விட்டது. பயிற்சி மருத்துவர்கள் மற்றும் முதுநிலை பயிற்சி மருத்துவர்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறை, பாலியல் வன்முறைகள் அனைத்துமே மருத்துவத் துறையே முன்னின்று நடத்துகிறது என்பது தான் உண்மை.
பயிற்சி மருத்துவர்கள் 36 மணி நேரத்திற்கு மேல் கூட தொடர்ந்து பணியில் இருக்க வைக்கப்பட்டு இருப்பதும், தங்களுக்கு ஒத்து வராத பயிற்சி மருத்துவர்கள் பழிவாங்குவதற்காகவே அவர்களுக்கு விடுப்பு இன்றி ஓய்வின்றி மருத்துவப் பணிகளை வழங்குகின்ற வேலையையும் மருத்துவ அதிகாரிகளும் மருத்துவர்களும் செய்து வருவதும் உண்மை.
முதுநிலை மருத்துவப் படிப்பு என்பதே பல கோடி ரூபாய் புழங்குகின்ற ஒரு படிப்பு. ஒரு மாணவர் அந்த படிப்பை விட்டு வெளியேறினாலோ அல்லது இறந்து போனாலோ அந்த இடத்திற்கு வேறு ஒருவரை கொண்டு வருவதற்கு மருத்துவக் கிரிமினல் மாஃபியாக்கள் செய்கின்ற தகடுதத்தங்கள் ஏராளம். இவை அரசு மருத்துவக் கல்லூரி முதல் தனியார் மருத்துவக் கல்லூரி வரை அனைத்து இடங்களிலும் நீக்குமற நிறைந்திருக்கும் கசப்பான உண்மைகள் தான்.
கொல்கத்தா பெண் மருத்துவர் இறந்த விவகாரத்தில் மேற்குவங்க அரசின் செயல்பாடு என்ன? ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் செயல்பாடு என்ன?
தன் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிற ஒரு மருத்துவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அந்த மாணவியின் பெற்றோருக்கு போன் செய்த நிர்வாகத்தினர், முதலில் அந்த மாணவிக்கு உடல்நிலை சரியில்லை அதனால் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறோம் என்றும், இரண்டாவது முறை தொடர்பு கொண்டு அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறியுள்ளனர். இதையும் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டார் என்று பரப்பப்பட்ட வதந்திகளையும் நாம் ஒருங்கிணைத்து பார்க்கும் போது தான் மருத்துவமனை நிர்வாகம், அரசு அனைத்தும் எப்படி ஒருங்கிணைந்து கிரிமினல்தனமாக செயல்பட்டு இருக்கின்றன என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
அந்த மருத்துவர் இறந்து நான்கு மணி நேரம் கழித்து தான், போராட்டங்களுக்குப் பிறகு தான் பெற்றோரைப் பார்க்க அனுமதித்து இருக்கிறது அந்த மருத்துவமனை நிர்வாகம். மருத்துவரின் பெற்றோருக்கு எவ்விதமான உதவியும் செய்யாமல் இன்று வரை இடையூறு செய்து கொண்டு எவ்வித தகவல்களையும் கொடுக்காத அந்த மருத்துவமனையின் நிர்வாகம் கிரிமினல்மயமானதா இல்லையா?
ஆர்.ஜி.கர் மருத்துவமனை முதல்வர் சந்திப்கோஷ் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத மம்தா அரசு, சந்திப் கோஷை வேறு ஒரு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் ஆக்கியது. இதனை கண்டித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் சந்தீப் கோஷை நீண்டகால விடுப்பில் செல்ல அறிவுறுத்தியுள்ளது.
படிக்க: மேற்குவங்க மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை: வலுக்கும் போராட்டங்கள் | புகைப்படங்கள்
தன் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒரு மருத்துவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றால் அதில் முழு பொறுப்பும் அந்த மருத்துவமனை முதல்வரைத் தான் சாரும். இவருக்குத் தெரியாமல் அல்லது அறியாமல் நான்கு மணி நேரம் இறந்து போன தன்னுடைய மகளை பார்த்து விடாமல் பெற்றோரை யார் தடுத்து இருக்க முடியும்? மாவட்ட போலீசு கண்காணிப்பாளருக்குத் தெரியாமல் தடயங்கள் அழிக்கப்பட்டு இருக்குமா? பெற்றோர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு இருப்பார்களா என்ன?
மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட பாலியல் வன்கொடுமை – படுகொலையை ஓர் அரசு எவ்வாறு கையாண்டது என்பதிலிருந்து தான் அந்த அரசு குற்றவாளியா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும். மேற்கு வங்கத்தின் மம்தா அரசு இந்த படுகொலையை மூடி மறைக்க முயற்சி செய்ததுடன், மருத்துவமனை நிர்வாகத்தினரையும் காப்பாற்றி இருக்கிறது என்பதே உண்மை.
அதைவிட கேவலம் என்னவென்றால், மருத்துவர் பாலியல் வன்கொடுமை – படுகொலையில் மேற்குவங்க மம்தா அரசு தோல்வி அடைந்ததை மூடி மறைக்க மம்தா பானர்ஜி தலைமையில் நடத்தப்பட்ட பேரணி தான்.
மேற்கு வங்க அரசின் உயர் அதிகாரிகள், மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, மருத்துவமனை தலைவராக இருந்த சந்திப் கோஸ் உள்ளிட்டவர்கள் மட்டுமல்ல இந்த அரசு கட்டமைப்புமே குற்றம் செய்திருக்கிறது.
கொல்கத்தாவில் போராடிக் கொண்டிருக்கும் பயிற்சி மருத்துவர்களும் மருத்துவ மாணவர்களும் சி.பி.ஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் கூட ஏன் தங்கள் போராட்டத்தை தொடர்கிறார்கள்? இத்தனை நாட்கள் ஆன பின்னரும் கூட ஒரு நபருக்கு மேல் வேறு யாரையும் இதுவரை சி.பி.ஐ கைது செய்யவில்லை.
ஆக பிரச்சனை குற்றவாளிகள் என்போர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்ல; மருத்துவத்துறையும் சேர்த்துத்தான்.
பணிப் பாதுகாப்பு, பணி ஓய்வு, மருத்துவ நல உரிமைகள் ஆகியவற்றை முன்னிறுத்தி அவர்கள் போராடுகிறார்கள். மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களின் போராட்டம் என்பதும் கிரிமினல் மருத்துவத்துறை மற்றும் கிரிமினல் அரசு கட்டமைப்புக்கும் எதிராகவும் தான்.
அதனால்தான் இதை முடிவுக்கு கொண்டு வர முடியாமல் மாநில – மத்திய அரசுகள், உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்கள் தவித்துக் கொண்டிருக்கின்றன. ஏதாவது செய்து அரசு மற்றும் மருத்துவத்துறையை காப்பாற்றியே ஆகவேண்டுமென்று எத்தனிக்கிறார்கள். இவர்களை நம்புவதற்கு மாணவர்களும் மருத்துவர்களும் தயாராக இல்லை.
கொல்கத்தாவில் 144 தடை உத்தரவு போட்ட பிறகும் கூட போராட்டங்கள் தொடர்கின்றன. மாநில அரசு, ஒன்றிய அரசு ,உயர்நீதிமன்றம், சி.பி.ஐ என யார் எடுத்த நடவடிக்கையும் ஏற்புடையதாக இல்லை. நீதி கேட்டு தீப்பபந்தமேந்தி நிற்கிறார்கள்.
***
கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை – படுகொலையில் மட்டும் தான் இந்த மருத்துவத் துறையும் அரசும் நீதித்துறையும் கிரிமினல்தனமாக செயல்பட்டு இருக்கிறதா?
ஹத்ராஸ், கதுவா, உண்ணாவ் தொடங்கி நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு பாலியல் வன்கொடுமை படுகொலைகளில் இந்த அரசு கட்டமைப்பு கிரிமினலாக தான் செயல்பட்டு இருக்கிறது.
காசுமீரத்தில் சிறுமியை கோயில் கருவறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தார்கள்; படுகொலை செய்தார்கள். அவர்களுக்கு ஆதரவாக இந்து மதவெறி பாசிஸ்டுகள் மூவர்ணக் கொடியை ஏந்தி பேரணி நடத்தினார்கள். அரசு அந்தக் கிரிமினல்களோடு ஒன்றாக சேர்ந்து கொண்டு அவர்களைக் காப்பாற்றியது.
உன்னாவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார்கள். முதுகெலும்பை உடைத்து உடல் முழுவதும் எலும்புகளையும் நொறுக்கினார்கள். கிரிமினல் மருத்துவத்துறையின் போலீஸ் மற்றும் அரசின் உதவியோடு குற்றவாளிகள் தப்பித்தார்கள்.
படிக்க: கொல்கத்தா பாலியல் வன்கொலை: நாடுமுழுவதும் மருத்துவ மாணவர்கள் கண்டன போராட்டம்! | படக் கட்டுரை
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த பிரிஜ் பூஷன் இப்போது வரை அதே கௌரவத்தோடு இருக்கிறான். அவனுடைய மகன் எம்பி ஆகிவிட்டான். அவனுடைய அடியாள்தான் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர். பாலியல் குற்றவாளிகளுக்கு, இந்து மதவெறி பாசிஸ்டுகளுக்கு காவலாக இந்த அரசு கட்டமைப்பு இருக்கும்போது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை எப்படி தடுத்து நிறுத்த முடியும்?
சட்டங்களை கடுமையாக்க வேண்டும், என்கவுண்டர் செய்ய வேண்டும், தூக்கிலிட வேண்டும் என்கிறார்கள் பலர். எதை வைத்து யாரை வைத்து இவற்றையெல்லாம் நிறைவேற்றுவது? குற்றவாளியே இந்த அரசு கட்டமைப்பாக இருக்கும் பொழுது சட்டங்கள் கடுமையாக்கப்படுவதனால் ஏதாவது பயனுள்ளதா என்ன?
அரசு துறையைச் சேர்ந்த யாராவது ஒருவர் தவறு செய்கிறார்கள் என்றால் அந்தத் துறையோ அல்லது மற்ற அரசுத்துறைகளோ என்ன செய்கின்றன?
அரசுத் துறையின் நற்பெயருக்கு ஊறு விளைவித்து விட்டார். அதனால் அவரை நீக்கிவிட்டு அல்லது தண்டனை கொடுத்து விட்டு அரசு துறையின் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்று ஏதாவது ஒரு துறையாவது செயல்படுகிறதா?
இல்லை. மாறாக, குற்றம் செய்த நபரை எப்படி காப்பாற்றுவது என்று ஒட்டுமொத்த அரசு துறைகளும் செயல்படுகின்றன. ஏன் அரசுத் துறையில் குற்றம் செய்த நபரை விலக்கவோ தூக்கி எறிவதோ இல்லை?
மக்களை ஒடுக்குவதற்காக இருக்கும் அரசு, தனியார்மய – தாராளமய – உலகமய நடவடிக்கைகளின் காரணமாக கட்டற்ற சுரண்டல், இயற்கை வளங்கள் அழிப்பு ஆகியவற்றின் காரணமாக திரண்டெழும் மக்கள் போராட்டங்களால் இனியும் ஜனநாயகம் என்ற பெயரில் யாருக்கும் எவ்வித உரிமையும் கொடுக்க முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டது.
இனியும் பெயருக்கு ஜனநாயகம் என்ற பெயரில் உழைக்கும் மக்களுக்கு எவ்விதமான உரிமையும் கொடுக்க முடியாது. ஒடுக்குவது மட்டுமே, மக்களை கொள்ளை அடிப்பது மட்டுமே அரசின் தலையாயப் பணியாக மாறுகிறது.
அப்படிப்பட்ட அரசின் கீழ் உள்ள துறைகள், அவற்றில் வேலை செய்யும் ஊழியர்கள் அவர்களின் கிரிமினல்தனங்களை பாதுகாக்கின்ற எந்திரமாகவும் மாறிப் போய் விடுகின்றது. அதனால்தான் எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல், இலஞ்சம் வாங்குவது முதல் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை காப்பாற்றுவது வரை அனைத்து வகையான இழி செயல்களையும் பெருமையாக மேற்கொள்கிறது அரசு கட்டமைப்பு.
எத்தனை கடுமையான சட்டங்களை கொண்டு வந்தாலும், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர்களை எத்தனை முறை என்கவுண்டர் நடத்தினாலும் கிரிமினல்மயமாக மாறியுள்ள இந்த அரசு கட்டமைப்பை ஒழித்துக் கட்டாத வரை குற்றங்களை தடுக்கவும் முடியாது. குற்றங்களுக்கு ஆதரவாக அரசு செயல்படுவதை நிறுத்தவும் முடியாது.
சில நாட்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை பாப்பாநாட்டில் ஒரு பெண்ணை, ஒருவன் பாலியல் வன்புணர்ச்சி செய்து தன்னுடைய நண்பர்களையும் வன்புணர்வு செய்ய வைக்கிறான். சிறுமி மருத்துவமனைக்கு செல்கிறார். அந்த சிறுமிக்கு மருத்துவம் பார்க்க முடியாது என்கிறார். மருத்துவர். அந்த சிறுமி போலீசு நிலையம் செல்கிறார். அவர் புகாரை வாங்க மறுக்கிறார் பணியில் இருந்த பெண் எஸ்.ஐ.
இப்படி எத்தனையோ நிகழ்வுகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
***
தற்போது போராடிவரும் மருத்துவ மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்கள். அதில் ஒன்று மருத்துவமனைகளை விமான நிலையம் போன்று பாதுகாப்பு வசதி உருவாக்க வேண்டும் என்பது.
வழக்கறிஞர்களாகட்டும் மருத்துவர்கள் ஆகட்டும் தங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக தனிச் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்கிறார்கள். நீதிமன்றங்களில் போலீஸ் பாதுகாப்பு, CISF பாதுகாப்பு ஆகியவை மக்களையும் வழக்குரைஞர்களையும் பிரித்து விட்டது. வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு நீதிமன்றங்கள் எப்போதும் ஆதரவளிப்பதில்லை, பொதுமக்கள் தான் ஆதரவளிக்கிறார்கள். போராடுகின்ற பிரிவினரும் மக்களும் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்பது தான் அரசின் நோக்கமாகவும் இருக்கிறது.
மருத்துவர்களின் இப்போராட்டம் கூட நாடு முழுவதும் நடைபெறுவதற்கு முக்கியமான காரணம் பொதுமக்களின் ஆதரவு தான். கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் முன்பு கூடிய பல்லாயிரக்கணக்கான பேரும் மாணவர்களும் மருத்துவர்களும் மட்டுமல்ல; பொதுமக்களும் கூடத்தான். மக்களிடமிருந்து பிரிந்து ஒருபோதும் மருத்துவர்கள் போராடி வெல்ல முடியாது. பெண் மருத்துவர் மீதான பாலியல் வன்முறை படுகொலையிலும் கூட போலீசும் மருத்துவமனை நிர்வாகமும் அரசும் தான் குற்றவாளிகள்.
மருத்துவர்கள் ஆகட்டும், மாணவர்கள் ஆகட்டும் நம்முடைய ஒரே எதிரி இந்த அரசு மட்டும்தான் என்ற நிலையிலிருந்து போராடத் துவங்குவோம்.
மருது
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube