மேற்குவங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தா நகரில் உள்ளது ஆர்.ஜி. கார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (RG Kar Medical College and Hospital). இந்த மருத்துவமனையின் நான்காவது மாடியில், அதே மருத்துவமனையில் மருத்துவம் பயின்று வரும் இரண்டாம் ஆண்டு மாணவி ஆகஸ்ட் 8 அன்று சடலமாக மீட்கப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையில் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியது. ஆனால் உடற்கூராய்வு அறிக்கையில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பணிபுரியும் மருத்துவமனையிலேயே மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மருத்துவமனையின் இந்த விவகாரம் தொடர்பாக தன்னார்வ தொண்டராக அறியப்படும் சஞ்சோய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் மருத்துவர் மரணத்துக்கு நீதி கோரி மேற்கு வங்கம் முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியை புறக்கணித்து ஆகஸ்ட் 9 அன்று காலை முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனினும், நோயாளிகளின் நலன் கருதி அவசர சிகிச்சை சேவையில் மட்டும் மருத்துவர்கள் நேற்றுவரை (ஆகஸ்ட் 12) ஈடுபட்டுவந்தனர். ஆனால், இன்று (ஆகஸ்ட் 13) அவசர சிகிச்சை பிரிவையும் புறக்கணித்து போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் போராட்டத்தைக் கைவிடுமாறு மேற்கு வங்க அரசு, மருத்துவர்களிடம் கோரிவருகிறது.
இந்த போராட்டத்திற்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் ஆதரவு அளித்துள்ளது. மேற்கு வங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மருத்துவர்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தி வருகிறது.
படிக்க: அரசு மருத்துவர்களின் உயிரைப் பறிக்கும் தனியார்மயம்!
அனைத்து மருத்துவமனைகளிலும் சுகாதாரத்துறை பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒன்றிய அரசு விதிமுறைகளை விதித்து வெளியிட வேண்டும். ஒன்றிய சுகாதாரத்துறை பாதுகாப்புச் சட்டம் விரைந்து அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள மருத்துவர்களை உள்ளடக்கிய நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
போராட்டத்தில் பங்கெடுக்க பா.ஜ.க முயன்றபோது, மருத்துவ வளாகத்துக்குள் அரசியலை அனுமதிக்க மாட்டோம் என மாணவர்கள் மறுத்துவிட்டனர். மருத்துவ மாணவி கொலையை எதிர்த்து போராட்டம் நடத்துவதாக கூறி, அரசியல் ஆதாயத்திற்காக கொல்கத்தாவின் பெரும்பாலான இடங்களில் பா.ஜ.க குண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி, “பாஜகவினர் போராட்டம் நடத்துவதை விடுத்து, பாலியல் வன்கொடுமை கொலை தொடர்பாக குற்றவாளிகளுக்கு ஒரே வாரத்தில் தண்டனையுடன் நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்” என கூறியுள்ளார்.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது அடிக்கடி தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. தங்களின் பாதுகாப்பை அரசு உறுதிசெய்ய வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வரும் மருத்துவர்களுக்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் துணை நிற்க வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube