அரசு மருத்துவர்களின் உயிரைப் பறிக்கும் தனியார்மயம்!

நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே மாணவர்களுக்கு பாடம் நடத்தவேண்டும், அதற்காக தயார் செய்யவேண்டும், மாணவர்கள் திறன்களை மதிப்பீடு செய்ய வேண்டும். இந்த நெருக்கடியை சமாளிக்கவே அரசு மருத்துவமனைகள் முதுநிலை மருத்துவ மாணவர்களை பெரிதும் சார்ந்துள்ளது. இந்த முதுநிலை மருத்துவ மாணவர்கள் ஒரு வாரத்திற்கு 80 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.

ந்திய அளவில் மிகச் சிறந்த மருத்துவ கட்டமைப்பை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது” என்ற புகழுக்கு பின்னால் ஈவு இரக்கமற்ற முறையில் சுரண்டப்படும் மருத்துவப் பணியாளர்கள் வாழ்க்கை இருக்கிறது என்பதை யாரும் கண்டுகொள்வதில்லை. இந்த புகழை திரும்பத் திரும்ப பாடும் நபர்கள் அதிக பணிச்சுமை காரணமாக உடலளவிலும் மனதளவிலும் மோசமான விளைவுகளை அனுபவிக்கும் மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்களை பற்றி மறந்தும் பேசுவதில்லை.

கடந்த டிசம்பர் 10, 11 ஆகிய இரண்டு நாட்களில் சென்னையில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வந்த மருது பாண்டியன், சோலைச்சாமி ஆகிய இரண்டு மருத்துவர்கள் அதிக பணிச்சுமை காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளனர். அவர்கள் இருவரும் 24 மணிநேரத்திற்கும் அதிகமாக பணி செய்துள்ளனர். இதில், மருத்துவர். மருது பாண்டியன் 30 வயதான இளைஞர். அவரது மனைவி 3 மாத கர்ப்பிணி.

இந்த இளம் வயது மரணத்திற்கான காரணம் என்ன?

அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் மருத்துவர்களை பணியில் அமர்த்தாமல், 24 மணிநேர, 36 மணிநேர பணிச்சுமைக்கு மருத்துவர்களை உட்படுத்துவது தான் காரணம். ஆனால், இது இந்த இரண்டு மருத்துவர்கள் விஷயத்தில் மட்டுமே நடந்த தனிப்பட்ட சம்பவம் அல்ல. நாடு முழுவதும் இளம் மருத்துவர்களும் முதுநிலை மருத்துவ மாணவர்களும் அதிக வேலைச்சுமை காரணமாக மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். 2021-ஆம் ஆண்டு நிலவரப்படி, 10,000 நபர்களுக்கு வெறும் 9 மருத்துவர்கள்தான் இருக்கிறார்கள். இந்திய மருத்துவ கட்டமைப்பின் இயல்பே இந்த இளம் மருத்துவர்களையும் மருத்துவ மாணவர்களும் மிகையாக சுரண்டல் செய்வதன் மூலம் மருத்துவத்திற்கான நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பது தான்.

இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழ்நாடு மருத்துவ கட்டமைப்பில் சிறந்த மாநிலமாக இருக்கலாம். ஆனால் நாம் யதார்த்த உண்மையை ஒப்பீட்டு முறையில் காணமுடியாது. ஒரு பொருள் அதன் உள்ளார்ந்த இயல்பிலே என்னவாக இருக்கிறது என்று பார்ப்பதுதான் இயங்கியல் பூர்வமான பார்வையாகும். அதுதான் சரியான அணுகுமுறையும் கூட.


படிக்க: திருச்சி பெல் மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்களின் அவலநிலை!


நிதி ஆயோக் மற்றும் ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிடும் “குறிப்பிட்ட ஆண்டிற்கான சுகாதார குறியீட்டில்” கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

ஆனால், மாநிலத்தின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மாநகரத்தில் இருக்கும் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை  வரை அனைத்திலும் மருத்துவர்கள் பற்றாக்குறை என்பது பொதுவானதாக இருக்கிறது. பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3 மருத்துவர்கள் இருக்கவேண்டிய இடத்தில் ஒரு மருத்துவர் தான் இருக்கிறார். அவர் இடைவேளை ஏதுமில்லாமல் வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தால் மட்டுமே குறித்த நேரத்திற்குள் பணியை முடிக்க முடியும்.

மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 1,800 மருத்துவ காலிப்பணியிடங்கள் இருக்கின்றன. இது ஒட்டுமொத்த அரசு மருத்துவர்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 10 சதவீதமாகும். ஆனால் கொரோனா தொற்றுக்குப் பிறகு ஒவ்வொரு  ஆண்டும் அரசு மருத்துவமனைகளை நாடி வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து  இருக்கிறது.  அரசு மருத்துவ கல்லூரிகளில் 1000 பேராசிரியர், இணைப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இதற்கான பணி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டால் மட்டுமே கீழ்நிலை பணிகளையும் நிரப்ப முடியும். ஆனால் எந்த அரசும் இதற்கான தீர்வை நோக்கி நகர்வதில்லை.

சென்னை உயர்நீதிமன்றமும் பேராசிரியர், இணைப் பேராசிரியர் பணி உயர்வுக்கான கலந்தாய்வை இடைக்கால தடை உத்தரவால் நிறுத்திவைத்துள்ளது. நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே மாணவர்களுக்கு பாடம் நடத்தவேண்டும், அதற்காக தயார் செய்யவேண்டும், மாணவர்கள் திறன்களை மதிப்பீடு செய்ய வேண்டும். இந்த நெருக்கடியை சமாளிக்கவே அரசு மருத்துவமனைகள் முதுநிலை மருத்துவ மாணவர்களை பெரிதும் சார்ந்துள்ளது. இந்த முதுநிலை மருத்துவ மாணவர்கள் ஒரு வாரத்திற்கு 80 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.


படிக்க: பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்: பாராமுகம் காட்டும் ‘விடியல்’ அரசு!


இப்படி அதிகமான‌ பணிச்சுமைகளுக்கு இடையில் வேலைசெய்யும் மருத்துவர்களுக்கு போதுமான ஊதியமும் வழங்கப்படுவதில்லை. 2009 திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நான்காம் பட்டை ஊதிய உயர்வுக்கான அரசாணையை கடந்த 14 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளார்கள். இதனால் ஒவ்வொரு மருத்துவருக்கும் மாதம் 40,000 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இந்த அரசாணையை நடைமுறைக்கு கொண்டு வந்து மருத்துவர்களின் ஊதியத்தை உயர்த்த ஆண்டிற்கு 300 கோடி ரூபாய் தமிழக அரசிற்கு தேவைப்படும்.

இந்த மருத்துவர்களுக்கு பதவி உயர்வு அளிப்பது, ஊதியத்தை உயர்த்துவது,  செவிலியர்கள் போன்ற பிற மருத்துவ பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது போன்ற விஷயங்களை இன்றைக்கு உள்ள எந்த மாநில அரசாலும் செய்யமுடியாது. ஏனெனில் இப்படி சிறுகச் சிறுக மருத்துவ கட்டமைப்பை தரமிழக்கச் செய்துதான் மருத்துவத்தை தனியார்மயமாக்க முடியும். அப்படி தனியார்மயமாக்குவது தான் இந்தியாவில் உள்ள மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளின் கொள்கை முடிவு.

2025-ஆம் ஆண்டிற்குள் இந்திய மருத்துவ சந்தையின் மதிப்பு 50 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த சந்தையை குறிவைத்து தான் மருத்துவ வியாபார நிறுவனங்களும், காப்பீட்டு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த சந்தையை இந்த படிப்படியான தனியார்மயத்தின் மூலமாகத்தான் அடைய முடியும்.

பொது மருத்துவக் கட்டமைப்பு நசிந்து வருவதற்கு அரசின் தனியார்மய கொள்கை முடிவுதான் காரணம் என்பது தெளிவு. ஆனால் இந்த நசிந்து வரும் மருத்துவக் கட்டமைப்பால் பொது மக்கள் பாதிக்கப்படுவது போலவே அரசு மருத்துவ பணியாளர்களும் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு செவிலியர்களின் சமீபத்திய போராட்டங்களே சாட்சியாகும்.

ஆனால் அரசு மருத்துவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் போராட்டங்கள் குறித்து நேர்மறையான பார்வை மக்களிடம் இல்லை. “லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு இன்னும் எதற்காக போராடுகிறார்கள்” என்ற கேள்விதான் அரசு மருத்துவர்கள் ஆசிரியர்கள் ஆகியோரின் போராட்டங்கள் குறித்த மக்கள் கருத்தாக உள்ளது.

இதை ஏன் நாம் வலியுறுத்தி சொல்கிறோம்? வெகுமக்களிடம் இருந்து மருத்துவர்களின் போராட்டம் எவ்வளவு அந்நியப்பட்டுள்ளது என்பதைக் காட்டுவதற்காகத் தான். மருத்துவம் பொது சுகாதாரம் என்பது மக்களையும் மருத்துவப் பணியாளர்களையும் உள்ளடக்கிய ஒன்று. மருத்துவம் தனியாருக்கு தாரை வார்க்கப்படும் போது மக்கள் பாதிக்கப்படுவது போலவே மருத்துவப் பணியாளர்களும் பாதிக்கப்படுவார்கள்.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்வது ஒன்றுதான். மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது, மருத்துவர்கள் முதுநிலை மருத்துவ மாணவர்கள் அதிக பணிச்சுமைகளுக்கு இடையில் பணிபுரிவது, அதனால் ஏற்படும் உடல் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்சினைகள், மருத்துவத்துறையில் ஒப்பந்தமயம் புகுத்தப்படுதல் ஆகிய அனைத்தும் அரசின் தனியார்மய கொள்கை முடிவு என்னும் மூலத்தில் தான் வேர்கொண்டுள்ளது. அதனால் இதனை எதிர்த்துப் போராடும் மருத்துவ பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளின் நியாயத்தை மக்களிடம் கொண்டு செல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

செய்தி ஆதாரம்: தி நியூஸ் மினிட்


சீனிச்சாமி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க