பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்: பாராமுகம் காட்டும் ‘விடியல்’ அரசு!

தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அனைவரையும் பணி நிரந்தரம் செய்வோம் என செவிலியர்களுக்கு வாக்குறுதியளித்து ஓட்டு வாங்கிய ’விடியல்’ அரசோ, செவிலியர்கள் போராடிக்கொண்டிருப்பதை வேடிக்கை பார்க்கிறது! மேலும், செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய உயர்நீதிமன்றமே ஆணையிட்ட போதும் அதை அமல்படுத்த மாட்டோம் என்பதில் தீர்மானகரமாக உள்ளது.

டந்த செப்டம்பர் மாதம் 25-ஆம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி 27-ஆம் தேதி (புதன் கிழமை) வரை மூன்று நாட்களுக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில், உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி தங்களைப் பணி நிரந்தரம் செய்யக்கோரி எம்.ஆர்.பி (MEDICAL SERVICES RECRUITMENT BOARD EXAM) செவிலியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கடந்த 2019-ஆம் ஆண்டு கோவிட்-19,பெருந்தொற்றுக் காலகட்டத்தில் சுகாதாரத் துறையில் ஏற்பட்ட ஆள் பற்றாக்குறை காரணமாக, அரசாணை 230-ஐ பயன்படுத்தி ஆறு மாத கால அடிப்படையில் எம்.ஆர்.பி முடித்த செவிலியர்களைத் தற்காலிகப் பணிக்கு அமர்த்தியது, அன்றைய அ.தி.மு.க. அரசு.

மேலும், கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் சுமார் 13,000 செவிலியர்கள் வரை அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஒப்பந்தத்தின்படி, இரண்டு வருடங்கள் (தொகுப்பூதியம் அடிப்படையில்) பணி நிறைவடைந்தவுடன், செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். ஆனால், 6,000 செவிலியர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டிய நிலையில் வெறும் 2,300 பேருக்கு மட்டும் பணி நீட்டிப்பை வழங்கி மீதமுள்ள 3,700 பேரை பணிநீக்கம் செய்தது அ.தி.மு.க. இதனால், தற்போது செவிலியர்கள் அவர்களுடைய பணி முதிர்வு அடிப்படையில் (Seniority basics) இருந்து நீக்கப்பட்டு மீண்டும் பணிக்காக விண்ணப்பித்துத் தொடர வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

3,700 செவிலியர்களும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் தங்களது உயிரைத் துச்சமென நினைத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றியவர்கள். கொரோனா பெருந்தொற்று காலத்தில் 75 நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் என்ற விகிதத்தில் இச்செவிலியர்கள் பணியாற்றினர். சில இடங்களில் 200 நோயாளிகளுக்கு இரண்டே இரண்டு செவிலியர்கள் என்ற நிலையும் இருந்தது. காலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை இவர்கள் வேலை செய்தனர். பல நேரங்களில் அங்குள்ள நோயாளிகளுக்கு தடுப்பூசி போடுவது மட்டுமே வேலையாக இருந்துள்ளது.


படிக்க: பணி நிரந்தரம் கோரி தற்காலிக செவிலியர்கள் போராட்டம்!


வேலை செய்யும் 14, 15 மணி நேரமும் உடல் முழுவதும் சானிடைசிங் செய்து கொண்டு அதன் மீது கவச உடையை அணிந்துகொண்டு செவிலியர்கள் வேலை செய்தனர். இதனால் அரை மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து பேச முடியாத அளவிற்கு செவிலியர்கள் சுவாச கோளாருக்கு உள்ளாகியுள்ளனர். அதற்கு மேல் பேசினால் மூச்சு வாங்குவது, சைனஸ் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர், செவிலியர்கள்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில், செவிலியர்களின் சேவைக்காக மக்களும் எதிர்க்கட்சிகளும் ஆளும் கட்சிகளும் இதர எண்ணற்ற அமைப்புகளும், “வெள்ளை நிற தேவதைகள்” என செவிலியர்களுக்குப் புகழாரம் சூட்டினர். அமைச்சர்கள் செவிலியர்களின் கால்களில் விழுந்த சம்பவங்களும் கூட நடந்தேறியது. ஆனால், இரண்டு வருடங்கள் கழித்து இப்போது அவர்களின் நிலை என்னவாக உள்ளது என்பதை இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆணித்தரமாக எடுத்துக்காட்டுகிறது.

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 850-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் வள்ளுவர் கோட்டத்தில் முகாமிட்டு கலந்து கொண்டனர். குறிப்பாக, போராடுபவர்களில் நூற்றுக்கு 95 சதவிகிதத்தினர் பெண்கள் தான். கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், திருமணம் ஆகாத இளம் பெண்கள் என பலதரப்பட்ட பெண் செவிலியர்கள் இப்போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர்.

ஆனால், தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அனைவரையும் பணி நிரந்தரம் செய்வோம் என செவிலியர்களுக்கு வாக்குறுதியளித்து ஓட்டு வாங்கிய ’விடியல்’ அரசோ, செவிலியர்கள் போராடிக்கொண்டிருப்பதை வேடிக்கை பார்க்கிறது! மேலும், செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய உயர்நீதிமன்றமே ஆணையிட்ட போதும் அதை அமல்படுத்த மாட்டோம் என்பதில் தீர்மானகரமாக உள்ளது.

இதனைக் கண்டும் காணாததுமாக இருக்கும் இந்த அரசின் ‘உன்னதமான’ நோக்கம் ஒன்று தான். அது தி.மு.க-வின் கார்ப்பரேட் சேவை. செவிலியர்களை நிரந்தரமாக பணியமர்த்தினால், அரசு மருத்துவமனைகளை நோக்கி மக்கள் இன்னும் வெகுவாக செல்வார்கள். அரசு மருத்துவமனைகளை ஒழித்துக்கட்டுவதில் தான் தனியார் மருத்துவமனைகளின் லாபம் உள்ளது என்பதால், அரசு மருத்துவமனைகளை நோக்கி மக்கள் செல்வதைத் தடுக்கும் நோக்கிலேயே செவிலியர்களின் கோரிக்கைக்கு செவிமடுக்காமல் இருக்கின்றது, திமுக அரசு. இதன் மூலம் இக்கட்டமைப்புக்குள் கார்ப்பரேட் சேவையில் தி.மு.க, அதிமுக, பாஜக என அனைத்து தேர்தல் கட்சிகளுமே ஒன்று தான் என்பாதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.


படிக்க: பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டம்!


பெண்ணுரிமை, சமத்துவம், கல்வி, மருத்துவம் எனப் பலவகையில் தமிழ்நாடு முன்னேறிய நிலைமையில் உள்ளது என மார்தட்டிக்கொள்ளும் திராவிட மாடல் அரசு, தனியார்மய-தாராளமய-உலகமய பொருளாதார கொள்கையின் அடிப்படையில் முழுக்க முழுக்க தனியாருக்கு சேவை செய்யும் கார்ப்பரேட்டுகளுக்கு கை பாவையாக செயல்படும் ஒரு நிறுவனமே என்பது வெட்ட வெளிச்சம் ஆகிறது.

செவிலியர்களைப் போல ஆசிரியர்கள், கௌரவ விரிவுரையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் தமிழ்நாட்டில் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கின்றனர். இவர்களின் கோரிக்கை வெவ்வேறாகக் காட்சியளித்தாலும் அவை அனைத்தும் தனியார்மயத்திற்கு எதிரான போராட்டமாகவே உள்ளது. எனவே, போராடும் அனைத்து பிரிவினரையும் தனியார்மயத்திற்கு எதிரான போராட்டத்தில் அணிதிரட்டுவதே தீர்வாக அமையும்.


தென்றல்



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க