20.07.2023

மணிப்பூரில் பழங்குடியினப் பெண்களை
நிர்வாணப்படுத்தி ஊர்வலம் –  கூட்டுப் பாலியல் வன்கொடுமை – கொலை!

இனியும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வை விட்டு வைக்கலாமா?

கண்டன அறிக்கை

ணிப்பூரின் பழங்குடியின பெண்கள் மெய்தி இன வெறியர்களால் நிர்வாணமாக ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். இளம் பெண்ணும் அவரது தந்தையும் சகோதரனும்  கொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த வீடியோ நேற்றைய தினம் வெளியாகி ஒவ்வொரு மனிதரையும் உலுக்கி எடுத்து இருக்கிறது. நமது கண்ணில் பெருகி வரும் கண்ணீர் இதற்குக் காரணமான பா.ஜ.க –  ஆர்.எஸ்.எஸ் பாசிச கும்பலை சுட்டெரிக்க வேண்டும்.

இதுதான் மோடி உருவாக்கிய புதிய இந்தியாவா என்று காரி உமிழ்கிறார்கள் மக்கள். அந்த வீடியோவில் சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்,  தங்களை அந்தக் கொடூர கும்பலிடம் கொண்டு போய் சேர்த்தது மணிப்பூர் போலீஸ்தான் என்கிறார். பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், போலீஸ், அரசு நிர்வாகமே சேர்ந்து பழங்குடியின மக்களை கொன்று குவித்தும் சித்தரவதை செய்தும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியும் இருக்கிறது என்றால் இனியும் இந்த பாசிச நடவடிக்கைகளை நாம் எப்படி அனுமதிக்க முடியும்?


படிக்க: எரிகிறது மணிப்பூர்: பற்றவைத்தது காவி!


மணிப்பூரின் பழங்குடியின பெண்களுக்கு நேர்ந்த கொடுமை தங்களுக்கே நேர்ந்ததாக இந்த நாடே கவலையுறுகிறது. இதைப் போன்ற நூற்றுக்கணக்கான வீடியோக்கள் இனியும் வரலாம். பெண்கள், ஆண்கள் குழந்தைகள் என எத்தனை பேர் கொலை செய்யப்பட்டார்களோ? எத்தனை பேர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்களோ? இதுவரை விவரம் ஏதுமில்லை. ஆனால் பழங்குடியின மக்கள் மீது திட்டமிட்டு இந்தக் கலவரத்தை ஏற்படுத்திய பாசிச ஆர்.எஸ்.எஸ் – பாஜக  கும்பலை இனியும் இந்த நாட்டில் விட்டு வைத்திருப்பது இந்த நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய அவமானம்.

இந்தக் கொடூர சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகும்  இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கலவரத்தை முன் நின்று நடத்திய அந்த மாநில அரசு இதுவரை கலைக்கப்படவில்லை. ஆனால் மோடி முதலைக்கண்ணீர் வடிக்கிறார். இந்த வீடியோவை வெளியிட்ட ஊடக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது ஒன்றிய அரசு.

மனித குலத்துக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலுக்கு எதிரான பழங்குடியின மக்களின் போராட்டத்திற்கு தோள் கொடுப்பதே நம்முடைய கடமையாக இருக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் மருது,
செய்தித் தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு  – புதுவை
9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க