Monday, June 14, 2021
முகப்பு உலகம் அமெரிக்கா சவுதி பயங்கரவாதத்தை எதிர்த்து ஏமன் மக்கள் பேரெழுச்சி

சவுதி பயங்கரவாதத்தை எதிர்த்து ஏமன் மக்கள் பேரெழுச்சி

-

வுதி அரேபியாவின் தலைமையிலான இராணுவ ஆக்கிரமிப்பின் இரண்டாவது ஆண்டு நினைவு நாளில் ஏமன் தலைநகர் சானாவில் பல பத்தாயிரக்கணக்கான ஏமன் மக்கள் பெருந்திரளாக அணிதிரண்டனர். 2017, ஜனவரியில் ஏமனைச் சேர்ந்த மூவாயிரத்திற்கும் அதிகமான பெண்கள் சவுதியின் இராணுவத் தலையீட்டை எதிர்த்தும் நாட்டின் அமைதியை மீட்டெடுக்கவும் ஏமன் மக்களுக்கு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.

2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் துனீசியாவில் மல்லிகைப் புரட்சியாகத் துளிர்த்த அரபு வசந்தம் ஆள அருகதையற்ற ஏகாதிபத்தியங்களுடன் கள்ளக்கூட்டணி வைத்திருந்த சர்வாதிகார ஆட்சிகளை எதிர்த்து ஜனநாயகத்தின் தேவைக்காக வட ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் எங்கிலும் வெடித்துக் கிளம்பியது. ஆயினும் இப்போராட்டங்களின் விளைச்சலை இசுலாமிய மத அடிப்படைவாதிகளும் மறைமுகமாக ஏகாதிபத்திய நாடுகளும் அறுவடை செய்து கொண்ட கேலிக்கூத்துகளுடன் வசந்தம் முடிவுக்கு வந்தது. அரபு வசந்தத்தால் ஏமனில் 2012 ஆம் ஆண்டு தூக்கியெறியப்பட்ட அலி அப்துல்லா சலே (Ali Abdullah Saleh) மீண்டும் தலைவராக போராட்டக்காரர்களால் அழைக்கப்பட்டிருப்பது அந்த கேலிக்கூத்துகளில் ஒன்று.

அரபு வசந்தத்தை அறுவடை செய்து ஆட்சியைப் பிடித்த சவுதி சார்பு அப்த் – ரப்பு மன்சூர் ஹதியின் (Abd-Rabbu Mansour Hadi ) ஆட்சியை அந்நாட்டு மக்கள் ஹூத்திகளுடன் (Houthis) சேர்ந்து 2015 ஆண்டில் தூக்கி எறிந்தனர். மீண்டும் அவரை அரியணையில் அமர்த்த சவுதி கூட்டுப்படை சதி வேலையிலும் குண்டு வீச்சிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. அதனை எதிர்த்து ஏமன் மக்களும் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிரவாதிகளுக்கு எதிரான போர் என்று கூறி கொண்டு எண்ணெய் வளங்களுக்காகவும் ஆசிய ஆப்ரிக்க நாடுகளில் தன்னுடைய அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காகவும் முசுலீம் மக்களுக்கு எதிராக குண்டுவீச்சுத் தாக்குதல்களை அமெரிக்கா நடத்தி வருகிறது. முசுலீம் பயங்கரவாதத்திற்கு கருத்தும் காசும் கொடுத்து புரவலராக இருக்கும் சவுதி ஷேக்குகளிடம் மட்டும் அவர்களிடம் இருக்கும் பெட்ரோலுக்காகவும் ஷேக்குகளின் டாலர் மோகத்தினாலும் அமெரிக்கா கூடிக் குலாவுகிறது. அமெரிக்காவும் ஷேக்குகளுக்கு நவீன ஆயுதங்களை அனுப்பிச் சவுதியை மத்திய கிழக்கின் நம்பிக்கைக்குரிய அடியாளாக வைத்துள்ளது.

வளைகுடாப் போரில் அமெரிக்க-சவுதிக் கூட்டணியை ஏமன் ஆதரிக்க மறுத்த ஒரே காரணத்திற்காகப் பத்து இலட்சம் ஏமன் தொழிலாளிகளின் விசாக்களை இரத்து செய்தது  சவுதி அரேபிய அரசு.

சவுதிப் கூட்டணிப் படைகளின் குண்டு வீச்சுகளாலும் கொலைவெறித் தாக்குதல்களாலும் ஏமன் இன்று நிலைகுலைந்து இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பத்தாயிரத்திற்கும் அதிகமான ஏமன் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல இலட்சக்கணக்கான மக்கள் பஞ்சம் பட்டினியில் வாடி வருகின்றனர். சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

நாதியற்ற இந்த ஏமனின் முசுலீம் அகதிகளை உலகின் ஒரே அக்மார்க் இசுலாமிய அரசான சவுதி ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது என்பதுதான் ஆளும் வர்க்கங்களுக்கு பயன்படும் இசுலாத்தின் சர்வதேசத்திற்கு ஒரு எடுப்பான சான்று. குர்  ஆனிலும், ஹதீசுகளிலும் மத்தின் பெருமையை தோண்டி எடுத்துப் பேசும் முசுலீம் மதவாதிகள் யாரும் சமகாலத்தில் சவுதி அரேபிய செய்து வரும் கொடுமைகளை கண்டிப்பதில்லை.

ஆயினும் ஏமன் மக்களது போராட்ட உணர்வுகளை அரசியல்படுத்தி ஏகாதிபத்திய மற்றும் இசுலாமிய அடிப்படைவாத சக்திகளிடம் இருந்து அதிகாரத்தை பறிக்கும் வரை அவர்களுக்கு விடிவுகாலம் இல்லை.

சவுதிக் கூட்டுப்படைகளின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நடந்த போராட்டங்களில் கலந்து கொண்டேன். இந்தப் போரை நிறுத்துவதற்கு உலகின் காதுகளுக்கு ஒருவேளை எங்களது கூக்குரல் கேட்கக்கூடும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் கூறினார்.

அதிகாரப்பூர்வமான எண்ணிக்கை இல்லையென்றாலும் குறைந்தது ஒரு இலட்சம் மக்கள் மத்திய சபீன் சதுக்கத்தில் (central Sabeen square) நிரம்பியிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். சவுதியின் இராணுவத் தலையீட்டிற்குப பிந்தைய இரண்டு ஆண்டுகளில் பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்ட மிகப்பெரிய அரசியல் கூட்டம் இது.

2012 ஆம் ஆண்டு வலுக்கட்டாயமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட ஏமனின் முன்னாள் ஜனாதிபதி அலி அப்துல்லா சலேவை மீண்டும் பதவியேற்க போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். சலே, அந்தப் பேரணியில் சற்றுநேரம் கலந்து கொண்டார்.

2015 க்குப் பிறகு ஏமனில் நடந்து வரும் மோதலில் கொல்லப்பட்ட 16,000 பேர்களில் பொதுமக்களின் எண்ணிக்கை மட்டும் பத்தாயிரத்தைத் தாண்டும்.

30 இலட்சம் ஏமன் மக்கள் நாட்டை விட்டுத் துரத்தப்பட்டிருப்பதுடன் 70 இலட்சத்திற்கும் அதிகமானோர் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா மன்றம் கூறுகிறது.

சவுதி மற்றும் அதன் சன்னி இசுலாமியக் கூட்டணியினால் 2017, ஜனவரி மாதம் ஏமனில் பலப்பத்து முறை வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவற்றில் பெரும்பாலானவை போர் குற்றங்களாக இருக்கலாம் என்று மனித உரிமை அமைப்புக்கள் கூறுகின்றன.

நன்றி: RT Mass protests mark 2nd anniversary of Saudi-led intervention in Yemen
செய்தி மற்றும் தமிழாக்கம்: சுந்தரம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க