புலம்பெயர் தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சிப் படுகொலை செய்யும் சவுதி அரசு

சவூதி சட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் ஒவ்வொரு வாரமும் கூடுதல் நேரம் உட்பட அதிகபட்சம் 60 மணிநேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும். ஆனால், அங்கு பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் வாரத்திற்கு 84 மணிநேரத்திற்கும் கூடுதலாக பணியமர்த்தப்படுகின்றனர்.

0

க்டோபர் 27 அன்று “அம்பலமான முடியரசு: சவுதி அரேபியாவின் உள்ளே” (Kingdom Uncovered: Inside Saudi Arabia) என்ற ஆவணப்படத்தைப் பிரிட்டனைச் சேர்ந்த “ஐ டிவி” (ITV) வெளியிட்டுள்ளது. அந்த ஆவணப்படம் பல அதிர்ச்சிக்குரிய விஷயங்களை வெளிப்படுத்தியுள்ளது.

எண்ணெய் நாடான சவுதியை உலகளாவிய சுற்றுலா மையமாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அங்கம்தான் கடந்த 2016 ஆம் ஆண்டு சவுதி இளவரசர் முகமது பின் சல்மானால் தொடங்கப்பட்ட “சவுதி விஷன் 2030 திட்டம்” (Saudi Vision 2030 Project). இத்திட்டத்தின்கீழ் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உள்ளடக்கிய “நியோம்” (Neom) என்று பகுதி கட்டியமைக்கப்படவுள்ளது. நியோம் என்பது தபுக் மாகாணத்தில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டமாகும்.

இத்திட்டம் தொடங்கப்பட்ட எட்டு ஆண்டுகளில், கடுமையான பணிச்சூழல் காரணமாக இந்தியா, வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 21,000க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது உறுதிப்படுத்தப்பட்ட தகவலாகும். ஆனால், நியோம் கட்டுமானத்தின் போது 1,00,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

சவூதி அரேபியாவில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் இறந்தவர்களின் குடும்பத்தினர் சமீபத்திய ஆண்டுகளில் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளின் குறித்துப் பகிர்ந்து கொண்டுள்ளனர். அவர்கள் எதிர்கொண்ட ஆபத்தான நிலைமைகளைத்தான் ஐடிவி ஆவணப்படுத்தியுள்ளது.

தொழிலாளர்கள் தாங்கள் “அகப்பட்டுக்கொண்ட அடிமைகள்” போலவும் “பிச்சைக்காரர்கள்” போலவும் உணர்வதாக ஆதங்கத்துடன் கூறுகின்றனர். ஊதியத்தை வழங்காமல் இருப்பது, சட்டவிரோத வேலை நேரம் மற்றும் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் சந்திக்கும் அவலங்கள் குறித்தும் இந்த ஆவணப்படம் பதிவுசெய்துள்ளது.


படிக்க: கத்தார் : உலகக் கோப்பைக்காக உயிரை விடும் தொழிலாளிகள்


“நியோம்”-இன் ஒரு பகுதியாக வடமேற்கு சவூதி அரேபியாவில் 170 கி.மீ நீள நேர்கோட்டு நகரமாக “தி லைன்” (The Line) கட்டப்பட்டு வருகிறது. (500 மீட்டர் உயரமும் 200 மீட்டர் அகலமும் கொண்டு 170 கி.மீ நீளத்திற்கு ஒரு கோடு போலக் காட்சியளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுவரும் நகரம்தான் தி லைன்). அதற்கான பணியில் தொடர்ந்து 14 நாட்களாக 16 மணி நேர ஷிப்டுகளில் வேலை செய்வதாகத் தொழிலாளி ஒருவர் கூறுகிறார். நீண்ட ஷிப்டுகள் மட்டுமல்ல அவர்கள் பணிபுரியும் பாலைவனப் பகுதிக்குச் செல்ல ஊதியமில்லாத மூன்று மணி நேர பேருந்து பயணத்தையும் தொழிலாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.

சவூதி சட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் ஒவ்வொரு வாரமும் கூடுதல் நேரம் உட்பட அதிகபட்சம் 60 மணிநேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும். ஆனால், அங்கு பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் சட்டவிரோதமான முறையில் கசக்கிப் பிழியப்படுகிறார்கள். அவர்கள் வாரத்திற்கு 84 மணிநேரத்திற்கும் கூடுதலாக பணியமர்த்தப்படுகின்றனர்.

“நாங்கள் மிகவும் கடினமாக உழைக்கிறோம். ஓய்வெடுக்கும் நேரமும் குறைவு. நாங்கள் களைத்துப் போகிறோம். நாள் முழுவதும் பதற்றத்துடன் உள்ளோம்” என்று ஒரு தொழிலாளி கூறினார்.

பல தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்பதையும், சிலர் தங்கள் ஊதியத்திற்காக 10 மாதங்கள் வரை காத்திருப்பதையும் ஆவணப்படம் அம்பலப்படுத்துகிறது.

போதுமான உணவு கிடைக்கவில்லை என்றும், தங்கள் குடும்பங்களைப் பார்க்க சவுதி அரேபியாவை விட்டு வெளியேற முடியவில்லை என்றும் தொழிலாளர்கள் தெரிவித்தனர். சோர்வு காரணமாகப் பல விபத்துக்கள் ஏற்படுவதாகவும், ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட ஐந்து விபத்துகள் நடைபெறுவதாகவும் நியோம்-இல் பணிபுரியும் ஓட்டுநர் ஒருவர் கூறினார்.


படிக்க: புலம்பெயர் தொழிலாளர்களின் பிணத்தின்மேல் நடக்கும் பிப்ஃபா 2022!


ராஜு பிஸ்வகர்மா (Raju Bishwakarma) என்ற நேபாள தொழிலாளி இந்த கொடூரத்திலிருந்து தப்பி எப்படியாவது சொந்த ஊருக்குச் சென்றுவிட வேண்டும் என்று நினைத்துள்ளார். ஆனால், ஐந்து மாத சம்பளத்திற்கு நிகரான அபராதத்தைச் செலுத்திவிட்டு வெளியேறலாம் என்று அவரிடம் கூறப்பட்டுள்ளது. பின்னர் ஒரு நாள் அவர் தனது அறையில் இறந்து கிடந்துள்ளார்.

அவரது மரணத்திற்குப் பின்னர், தொழிலாளர்கள் அவரை தூக்கிச் செல்வது காணொளியில் பதிவாகியுள்ளது. நேபாள மனித உரிமைகள் வழக்கறிஞர் அனுராக் தேவ்கோட்டா (Anurag Devkota), “புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களுக்குச் சிறந்த எதிர்காலத்தை வழங்க வேண்டும் என்பதற்காக இங்கிருந்து அங்கு போகிறார்கள். ஆனால் அதற்குப் பதிலாக, நாங்கள் இறந்த உடல்களை மரப் பெட்டிகளில் பெறுகிறோம்” என்று கூறினார்.

சவுதி, கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு பணிக்குச் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் பாலைவன வெப்பத்தில் பாதுகாப்பற்ற பணிச்சூழலில் பணிபுரிவதும், அடிமைகளைப் போல் நடத்தப்படுவதும் மிகக் கொடூரமான முறையில் சுரண்டப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொழிலாளர்கள் எந்தவிதமான உரிமைகளும் அற்றவர்களாக நடத்தப்படுகின்றனர்.

ஆனால், தொழிலாளர்கள் சந்திக்கும் அவலங்கள் குறித்த செய்திகள் அவ்வப்போது மட்டுமே (தற்போது வெளியாகியுள்ள ஐடிவி ஆவணப்பத்டதைப் போல) வெளிவருகின்றன.

வளைகுடா நாடுகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் அவலங்களுக்கு எதிராகக் கடுமையான போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். அதன்மூலமே தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்ட முடியும்.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க