இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சத்னம் சிங் (31) இத்தாலியின் ரோம் நகருக்கு அருகிலுள்ள லாசியோவில் (Lazio) உள்ள போர்கோ சாண்டா மரியா (Borgo Santa Maria) எனும் இடத்தில் ஒரு பண்ணையில் விவசாயக் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். ஜூன் 17 அன்று பிளாஸ்டிக்கை சுற்றும் இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அந்த இயந்திரத்தில் சிக்கி அவரது ஒரு கை முற்றிலும் துண்டிக்கப்பட்டது; இரண்டு கால்களும் நசுக்கப்பட்டன. அவரது உடல் முழுக்க பல காயங்கள் ஏற்பட்டன.
சிங்கின் முதலாளியான அக்ரோ பொன்டினோ பண்ணையின் (Agro Pontino farm) உரிமையாளர் அலெஸாண்ட்ரோ லோவாடோ (Alessandro Lovato), விபத்து ஏற்பட்டவுடன் ஆம்புலன்ஸை அழைக்க மறுத்துவிட்டார். சிங்கின் மனைவி அலிஷா (Alisha) மண்டியிட்டுக் கெஞ்சி அழுதும் அவர் ஆம்புலன்ஸை அழைக்கவில்லை.
அதற்கு பதிலாக, ஒரு வேனில் சத்னம் சிங்கை ஏற்றிக்கொண்டு அவரின் வீட்டின் முன்பு குப்பையைப் போட்டு விட்டுச் செல்வது போல எறிந்துவிட்டுச் சென்று விட்டார். சிங்கின் துண்டிக்கப்பட்ட கையை ஒரு பழக்கூடையில் போட்டு அருகில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். அலிஷாவின் அழுகையைக் கண்ட அவரது பக்கத்து வீட்டினர் மீட்பு ஹெலிகாப்டர் மூலம் ரோமில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். இருப்பினும், அதிக அளவிலான இரத்தத்தை இழந்துவிட்டதால், சிகிச்சை பலனின்றி சத்னம் சிங் இரண்டு நாட்கள் கழித்து ஜூன் 19 அன்று இறந்துவிட்டார்.
இதனையடுத்து ஜூன் 25 அன்று பல்லாயிரக்கணக்கான இந்திய விவசாயத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். “சுரண்டலை நிறுத்து!” என்று முழக்கமிட்டபடி அவர்கள் லத்தீனா (Latina) நகரில் அணிவகுத்துச் சென்றனர். அவர்கள் சிங்கிற்கு நீதி வேண்டும் என்றும், அவருடைய மனைவிக்கு நிரந்தர வசிப்பிட உரிமை வேண்டும் என்றும், காயமடைந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் முறையான சுகாதாரப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரினர்.
“இந்த அடிமைத்தனத்தில் நாம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க நம் அனைவருக்கும் முறைப்படுத்தப்பட்ட தொழிலாளர் ஒப்பந்தங்கள் தேவை” என்று புலம்பெயர் தொழிலாளர்கள் கோரினர். முறைப்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள் இல்லாததால் காயமடைந்த புலம்பெயர் விவசாயத் தொழிலாளர்களை அவர்களது முதலாளிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மறுக்கின்றனர். இதனால், மருத்துவ உதவி பெறுவதற்கே மாதக் கணக்கில் போராட வேண்டிய அவல நிலை உள்ளது.
படிக்க: புலம்பெயர் தொழிலாளர்களின் பிணத்தின்மேல் நடக்கும் பிப்ஃபா 2022!
இத்தாலிய பண்ணைகளில் “கப்போரலாடோ” (Caporalato) என்ற ஒரு சட்டவிரோத முறைப்படி தொழிலாளர்களை பணியமர்த்துவது பரவலாக நடைபெறுகிறது. இது வளைகுடா நாடுகளில் நிலவும் “கஃபாலா” (Kafala) முறையை ஒத்ததொரு சுரண்டல் முறையாகும். இதில் “கேப்போரல்” (caporale) எனப்படும் இடைத்தரகர்கள் புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து அனைத்து ஆவணங்களையும் பெற்றுக்கொண்டு, அவர்களை பெரிய விவசாயிகளிடம் பணிக்கமர்த்துவார்கள்.
இத்தாலியில் சுமார் 2,30,000 தொழிலாளர்கள் முறையான ஒப்பந்தங்கள் இல்லாமல் பணியில் இருப்பதாக சி.ஜி.ஐ.எல் (CGIL) தொழிற்சங்கம் மதிப்பிடுகிறது. ஆப்பிரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஆவணங்கள் இல்லாமல் வயல்களிலும், ஜவுளித் தொழிலிலும், கட்டுமானத் தொழிலிலும் சொற்ப கூலிக்குப் பணியமர்த்தப்படுகின்றனர்.
“பழம் மற்றும் காய்கறி அறுவடை செய்யும் வேலைகளில் ஈடுபடுத்தப்படும் தொழிலாளர்களுக்கு எட்டு மணி நேர ஷிப்டுக்கு வெறும் 12 யூரோக்கள் (சுமார் 1,000 ரூபாய்) மட்டுமே வழங்கப்படுகிறது. மக்கள் கரப்பான் பூச்சிகளைப் போல நடத்தப்படுகிறார்கள். அவர்கள் குடிநீர், சுகாதார வசதிகள் இல்லாத நகரின் ஒதுக்குப்புற பகுதிகளில் வாழ்கின்றனர். அவர்களில் சுமார் 1,00,000 பேர் இத்தாலி முழுவதும் சிதறிக்கிடக்கின்றனர்” என்று பிரிட்டிஷ் மெடிக்கல் ஜேர்னல் என்ற இதழ் கூறுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் இத்தாலியில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே இருந்து பணிக்கு வந்த 1,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் போது இறந்ததாகக் கூறப்படுகிறது.
இத்தாலியில் விவசாயத் தொழிலாளர்களும் சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 9 யூரோக்கள் (800 ரூபாய்) வழங்கப்படுகிறது. ஆனால், புலம்பெயர் தொழிலாளி என்றால் நாள் ஒன்றுக்கே வெறும் 4 – 12 யூரோக்கள் என்ற சொற்பக் கூலி தான் வழங்கப்படுகிறது. எவ்வளவு கொடூரமான உழைப்புச் சுரண்டல் நடைபெறுகிறது என்பதைப் பாருங்கள்!
படிக்க: கத்தார் : உலகக் கோப்பைக்காக உயிரை விடும் தொழிலாளிகள்
சிங் இருந்த பெரிய பண்ணையின் உரிமையாளர்களான லோவாடோ குடும்பம், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு “சட்டவிரோத ஆட்சேர்ப்பு மற்றும் தொழிலாளர்களை சுரண்டியதற்காக” குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பண்ணையில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு மாதத்திற்கு 200 யூரோக்கள் (18,000 ரூபாய்) மட்டுமே வழங்கியது அம்பலமானது. சத்னம் மற்றும் அலிஷா சிங்கின் சக தொழிலாளர்கள் 14 மணி நேர வேலை நாளுக்கு வெறும் 4 யூரோக்கள் (360 ரூபாய்) மட்டுமே கூலி பெற்றுள்ளனர்.
சத்னம் சிங் மரணத்துக்கு இத்தாலி நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, சிங்கிற்கு நடந்த கொடூரத்தை “மனிதாபிமானமற்றது; காட்டுமிராண்டித்தனமானது” என்று கண்டித்தார். மேலும் “இதுபோன்ற செயல்கள் இத்தாலிய மக்களுக்கு உரித்தானது அல்ல. குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.
முசோலினியின் பாசிச மரபுகளை செரித்துக் கொண்டு உருவான ஜியோர்ஜியா மெலோனியின் பிரதர்ஸ் ஆப் இத்தாலி (Brothers of Italy) கட்சி, புலம்பெயர்வுக்கு எதிராக காட்டுமிராண்டித்தன சட்டங்கள் தேவை என்று பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்கள் முன்னிறுத்தும் புலம்பெயர்ந்தோர்-விரோத கொள்கைகள் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கும். எனவே, நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தி மெலோனி ஆடும் கபட நாடகம் உழைக்கும் மக்கள் மத்தியில் எடுபடாது.
இத்தாலியின் பண்ணைகளில் நவீன கொத்தடிமைகளாக உழைக்கும் விவசாயத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பயங்கரமான பணிச் சூழல்களை சத்னம் சிங்கின் மரணம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. எனவே, இத்தாலியில் கப்போரலாடோ முறையை ஒழித்துக்கட்டுவதற்கு அந்நாட்டின் உழைக்கும் மக்கள் மட்டுமல்லாமல், உலகில் உள்ள உழைக்கும் மக்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.
பொம்மி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube