பிப்ஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் 2022 கத்தாரில் வருகின்ற நவம்பர் 20 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 18 வரை நடைபெற உள்ளது. மொத்தம் 64 போட்டிகள் நடக்க உள்ளன. உலகக் கோப்பையை நடத்தும் முதல் அரபு தேசம் என்று கத்தார் மார்தட்டிக் கொள்கிறது.
2022இல் பிப்ஃபா உலகக் கோப்பை தொடரை நடத்துவதற்கான உரிமையை கத்தார் டிசம்பர் 2, 2010 அன்று பெற்றது. அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைத் தோற்கடித்து கத்தார் இந்த உரிமையைப் பெற்றது. அன்றிலிருந்து போட்டிகளை நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. நூற்றுக்கணக்கான புதிய விடுதிகள் கட்டப்பட்டுள்ளன; ஒரு புதிய மெட்ரோ, விமான நிலையம், புதிய சாலைகள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியை நடத்துவதற்கென்றே ஒரு புதிய நகரத்தையே உருவாக்கியுள்ளனர்.
இதற்கான பணிகளில் 30,000-திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக தெற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் தான் அதிகமாக ஈடுபடுத்தப்படுகிறார்கள். புலம்பெயர் தொழிலாளர்களின் அவலநிலை குறித்து குறித்து தி கார்டியன் பிப்ரவரி 2021இல் ஒரு அறிக்கையை வெளியிட்டது. கத்தாருக்கு உரிமம் கிடைத்த 2010ஆம் ஆண்டு இறுதியிலிருந்து 2020ஆம் ஆண்டு இறுதி வரையிலான தரவுகளைக் கொண்ட அது, பல திடுக்கிடும் தகவல்களை வெளிப்படுத்தியது.
உலகக் கோப்பைக்கான பணிகள் கத்தாரில் தொடங்கப்பட்ட பிறகு மட்டும் 6,751-க்கு மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த 2,711 பேர் இறந்துள்ளனர்; நேபாளத்தில் இருந்து 1,641 பேரும், வங்கதேசத்தில் இருந்து 1,018 பேரும் மற்றும் இலங்கையைச் சேர்ந்த 557 பேரும் இறந்துள்ளனர். கத்தாரில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் தகவலின் படி பாகிஸ்தானைச் சேர்ந்த 824 பேர் பலியாகியுள்ளனர். 2020இன் இறுதி மாதங்களில் கிடைத்த தகவல்கள் இதில் சேர்க்கப்படவில்லை. பிலிப்பைன்ஸ் மற்றும் கென்யா ஆகிய நாடுகளிலிருந்து அதிக பேர் கத்தாருக்கு வேலைக்குச் செல்கின்றனர். அவர்களைப் பற்றிய தரவுகளும் இதில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
படிக்க: கால்பந்து சங்கமா, காசு புரட்டும் பன்னாட்டு நிறுவனமா?
ஆனால், இத்தொழிலாளர்களின் இறப்புக்கான காரணமானது வேலை நிலைமைகளால் ஏற்பட்ட மரணம் என்றோ பணியிடத்தில் ஏற்பட்ட மரணம் என்றோ பதிவு செய்யப்படுவதில்லை. மாறாக “இயற்கை மரணம்” என்றே பதிவு செய்யப்படுகிறது. இந்த பத்தாண்டு காலத்தில் இறந்தவர்களை எடுத்துக் கொண்டால், இந்தியாவைச் சேர்ந்தவர்களில் 80 சதவிகிதத்தினரும் நேபாளத்தைச் சேர்ந்தவர்களில் 48 சதவிகிதத்தினரும் இயற்கையான காரணங்களால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
கடுமையான வெப்பத்தில் (40 டிகிரி செல்சியஸ் என்பது அங்கு சர்வ சாதாரணமானது) தொடர்ந்து 12 மணி நேரம் வேலை செய்வது, நீண்ட நேரம் தொங்கியவாரே கட்டிட வேலை செய்வது போன்ற கடுமையான வேலை நிலைமைகள் தான், அத்தொழிலாளர்கள் இளம் வயதிலேயே இதயம் செயலிழந்து மரணிக்கக் காரணமாக உள்ளது. கத்தார் இஸ்லாமிய நாடு என்பதால் அங்கு பிரேத பரிசோதனை முறையாக நடத்தும் வழக்கமும் இல்லை. இயற்கை மரணம் அல்லது மாரடைப்பு என்று கூறி முடித்து விடுகின்றனர்.
சான்றாக, உலகக் கோப்பைக்கான மைதானங்களைக் கட்டுவதில் பணியாற்றியவர்களை மட்டும் எடுத்துக் கொள்வோம். அதில் மரணித்துள்ள 37 பேரில், 34 பேரின் மரணம் “பணிக்குத் தொடர்பற்றது” என்று அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறார்கள். இதில் பலர், பணி புரியும் இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வேலை நிலைமைகள்தான் மரணங்களுக்கான முதன்மைக் காரணம் என்பதை கத்தார் அரசு ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.
கத்தாரில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் இப்படித்தான் கசக்கிப் பிழியப்பட்டு சுரண்டப்படுகிறார்கள். அதிலும்கூட, ஐரோப்பா மற்றும் பிற அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஓரளவு நல்ல ஊதியம் அளிக்கும் வேலைகளிலும், ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவைச் சேர்ந்தவர்கள் குறைந்த கூலிக்கும் பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள். குறிப்பாக வீட்டு வேலையில் பணிபுரியும் பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். 1,17,000-த்திற்கும் மேற்பட்ட பெண்கள் அங்கு வீட்டு வேலைகளில் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
படிக்க: கத்தாரில் கால்பந்து மைதானத்திற்காக 4,000 தொழிலாளிகள் பலி
கத்தாரிலும் மற்ற அரபு நாடுகளிலும் நவீன கொத்தடிமை முறையான “கஃபாலா முறை” (kafala system) வழக்கில் இருக்கிறது. இந்த முறையின்படி ஒரு புலம்பெயர் தொழிலாளி தனது முதலாளியின் தயவில்லாமல் தனது தொழிலை மாற்றிக் கொள்ள முடியாது. கடவுச்சீட்டும் (passport) முதலாளியின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். 2020ஆம் ஆண்டு செப்டம்பர் இறுதியில் தான் இந்தக் கொத்தடிமை முறையை ஒழிக்க கத்தார் நாட்டில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த முறையை ஒழித்துக் கட்டிய முதல் அரபு நாடு தாங்கள்தான் என்று கத்தார் பெருமை பீற்றிக்கொண்டது. ஆனால் எதார்த்தத்தில் இந்த சீர்திருத்தத்தால் பெரிய விளைவு ஏதும் ஏற்படவில்லை.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு முறையாக அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படுவதில்லை. ஒரு சிறிய அறையில் பலரை அடைத்து வைப்பது, சுத்தமான குடிநீர் வழங்காதது போன்ற சுகாதாரமற்ற நிலைமைகளில் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
பல சமயங்களில் அவர்களுக்கு வழங்கப்படும் குறைந்த அளவிலான ஊதியத்தைக் கூட முறையாக வழங்குவதில்லை. கடந்த ஆகஸ்ட் மாதத்தில், ஏழு மாதங்கள் வரை ஊதியம் அளிக்கப்படாமல் இருந்ததை எதிர்த்துப் போராட்டம் நடத்திய 60க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த அளவிற்குத்தான் அங்குள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாத இறுதியில் கத்தாரின் தலைநகரான டோஹாவில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதற்கு மிக குறுகிய கால அவகாசமே வழங்கப்பட்டது. தொழிலாளர்கள் சிலருக்கு வீடுகளை காலி செய்ய வெறும் இரண்டு மணி நேர அவகாசம் மட்டுமே வழங்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. உலகக் கோப்பையைக் காண வரும் ரசிகர்கள் தங்குவதற்கு ஏற்ப அந்த இடத்தைத் தயார் செய்ய வேண்டுமாம்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் இந்த அநீதிகளை எதிர்த்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர்களும் ரசிகர்களும் குரல் கொடுத்துள்ளனர். குறிப்பாக டென்மார்க் அணி வீரர்கள் கருப்பு நிற உடையணிந்து விளையாடப் போவதாக அறிவித்துள்ளனர்.
கத்தாரில் எதேச்சாதிகார அமீர் (Emir) மற்றும் அவரது குடும்பத்தினரின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவர்கள் செழித்து வாழ்வதற்காக புலம்பெயர் தொழிலாளர்களின் ரத்தத்தை உறிஞ்சி வருகின்றனர். இந்த பிப்ஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் கூட, அந்நாட்டு அமீரின் செல்வாக்கை சுற்றியிருக்கும் அரபு நாடுகளுக்கும் ஏனைய உலக நாடுகளுக்கும் அறிவிப்பதற்காகவே நடத்தப்படுகிறது.
பொம்மி