ருபதாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை மாயைகளும், கற்பனைகளும் மட்டுமே இந்தியாவில் நிறைந்துள்ளன என ஐரோப்பிய அறிவுஜீவிகள் சிலர் கதையளந்து கொண்டிருந்தனர். இக்கதையையே தேசியப் பெருமிதம் எனத் தலை மேல் வைத்துக் கொண்டாடினர் இந்தியர் பலர். இத்தகைய சூழலில்தான் உருவெடுக்கிறார் மெய்யியல் பேரறிஞர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா. அவர் குவியல் குவியலாக எழுதியவர்; எழுதி எழுதிக் குவித்தவர். பண்டைய இந்தியப் பொருள் முதல்வாத முறையான உலகாயதத்தை அகழ்ந்து அவர் எழுதிய புகழ்வாய்ந்த நூல் ‘உலகாயதம்’. பிறகு, இந்தியத் தத்துவம் – ஓர் அறிமுகம்’ என்னும் சிறிய நூல் ஒன்றை, அதன் தலைப்புக்கேற்ப அறிமுக வடிவில் எழுதினார். எவ்வேளையும் மெய்யியல் ஆய்வு வேலையிலேயே மூழ்கியிருந்த தேவிபிரசாத் சட்டோபாத்யாயா 1981-ஆம் ஆண்டு ஆற்றிய சொற்பொழிவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நூல் “மதமும் சமூகமும்’ (Religion and Society). இதன் தமிழாக்கம் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதைப் பற்றியதே இச்சிறு எடுத்துரைப்பு.

‘மதம் தோன்றுவதற்கு முன்பு’ என்னும் முதல் இயலில் உலக வரலாற்றில் கடவுளை நம்புவது’ – அதாவது, மனிதனுள் இறைவனின் ஆவி என்ற அடிப்படை நம்பிக்கையானது அனைத்து மதங்களுக்கும் இன்றியமையாத முன் நிபந்தனை என்று கூறி, கடவுளற்ற மதம் எனக் குறிப்பிடப்படும் புத்தமதம்கூட இவ்வினத்தைச் சேர்ந்ததே என்று இயம்புகிறார் சட்டோபாத்யாயா. பொருள்முதல்வாத அடிப்படையில், ஒரு சமூகவியல் பார்வையுடன் தோன்றிய புத்த மதம் பிற்காலத்தில் ஒரு பெரும் கடவுள் பல சிறு கடவுள்களால் சூழப்பட்டுள்ளதாக உருமாறி அமைப்பு ரீதியான மதமாக ‘மகாயானம்’ என்னும் பெயரைச் சூட்டிக் கொண்டது என்றும், இந்த நிலை நாகார்ஜுனரின் சூன்யவாதக் கொள்கைக்கு அவசியப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டுகிறார். வரலாற்று நோக்கிலிருந்து பார்க்கையில் ‘மனிதனுள் கடவுள் ஆவி’ என்பது தவிர்க்கவியலாத உண்மையாகிவிட்டது. அந்த உண்மையின் சமூகப் பின்புலத்தை அறிவதற்குத் தொல்லியலுடன் இணைந்த இனவரைவியல் ஆய்வின் மூலம் தெரிய வந்த சான்றுகளை எடுத்துக் கூறுகிறார். மனிதனிடம் கடவுள் நம்பிக்கையும் ஆவியும் இல்லாத காலம் ஒன்று இருந்தது என்ற மெய்ந்நிலையைப் புரிந்துகொள்ள வைக்கிறார்.

உபரி உற்பத்தி தோன்றி வளர்ந்து மிகுந்து சிறுபான்மையினரின் கைகளில் செல்வம் குவிந்து, அதன் விளைவாக ஏற்பட்ட நாகரிகக் காலத்து வரலாற்றுச் சாதனைகளின் விளைவே கடவுளும் மதமும். இவ்விடயங்களில் இயங்கியல் நோக்கைக் கையாள வேண்டும் என்கிறார். மாயவித்தை, பழங்காலத்தில் தோன்றியிருந்த புராணப் பழக்க வழக்கங்கள் இந்த இருபதாம் நூற்றாண்டைய நவீன காலத்திலும் கிராமியப் பண்பாடாக வெளிப்படுகின்றன என்று கூறும் சட்டோபாத்யாயா ‘அன்றைய ‘மாயவித்தை’ வேறு, இன்றைய ‘மதம்’ என்பது வேறு’ என்று விளக்கிக் காட்டுகிறார். (நூலிலிருந்து பக்.5-6) 

படிக்க :
மக்களை மயக்கும் அபினி போன்றது மதம் !
ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை கொண்ட பிராமணமதம் !

கிராமங்களில் உற்பத்தி செய்யப்பட்ட சமூக உபரி, நகரங்களில் சேமித்து வைக்கப்பட்டபோது அந்தச் சேமிப்பைப் பாதுகாப்பதற்கென்று புதிய பணிப்பிரிவினரை ஏற்படுத்துதல், அந்தப் பிரிவினருக்குப் பொருளாதாரப் பாதுகாப்பு ஏற்படுத்துதல், அந்தப் பாதுகாப்புச் செலவுக்குப் பொருளாதாரத்தைக் கைக்கொள்ளுதல் என்ற போக்கில் சென்று, அந்தக் கைக்கொள்ளுதலை, எந்தச் சிக்கலுமின்றி நிறைவேற்ற ‘மதம்’ என்னும் நிறுவனத்தை / அமைப்பை உருவாக்குகின்றனர்’ என்று விளக்குகிறார் ஆசிரியர். அப்போது இடர்ப் பாதுகாப்பிற்காக விவசாயிகள் தங்கள் உற்பத்தியின் ஒரு பகுதியைத் தாய்த் தெய்வங்களுக்கு, அதாவது, அவர்களின் பிரதிநிதிகளான மதகுருமார்கள் அல்லது மதநிறுவனங்களுக்கு வழங்கினர். இங்கே மாயவித்தை மதமாக உருவெடுக்கிறது. மதம், கடவுள் என அச்சுறுத்தி, பொருளைப் பறிக்கும் நிலையை மாற்றுவதற்கு, அதே வகையில் வாழ்விற்கு சுயேச்சையான, நிலையான பாதுகாப்பை ஏற்படுத்தினால், கடவுள், மதம் என்னும் கருத்து நிலைகள் காணாமல் போய்விடும் என்று கூறுவதே மார்க்சியம். மாறாக, தடாலடியாக, மதத்தை அப்புறப்படுத்த முடியாது’ என்று கூறும் ஆசிரியர் அதற்கு வரலாற்றிலிருந்து ஓர் எடுத்துக்காட்டைக் குறிப்பிடுகிறார்.

தேவி பிரசாத் சட்டோபாத்யாயா.

கி.மு.1372 முதல் 1354 வரை எகிப்தில் ஆட்சி புரிந்துவந்த நான்காம் ஆமென்ஹோடெப் என்னும் மன்னன் குடிமக்களிடம் பல கடவுள் வழிபாட்டை ஒழித்து, எளிய சூரிய வழிபாட்டைப் பறைசாற்றி, நாட்டிலுள்ள மரபுவழிக் கோயில்களுக்கெல்லாம் பூட்டுப் போட்டான். உடனே, மக்கள் ஆற்றாமையில் ஆழ்ந்தனர். காரணம், அந்த வரலாற்றுக்கட்டத்தில் அவர்களது துன்ப உணர்வுகளின் வடிகாலாக மதம் வேரூன்றி இருந்தது. இந்த நிகழ்வை எடுத்துரைக்கும் நூலாசிரியர் சமூகப் பொருளாதார நிலைமைகள் மாறாமல் இருக்கும் பொழுது, வெறும் சட்டத்தினால் மட்டும் மதத்தை ஒழிக்க முடியாது என்று தெளிவுறுத்தி அதைச் செயல்படுத்துவதற்கான வாய்ப்பு – அதாவது, அன்றைய எகிப்தியர்களுக்கு இல்லாத வாய்ப்பு – நமக்கு இன்று மிகவும் அருகிலேயே இருக்கிறது என்று முத்தாய்ப்பாக முடிக்கிறார். (நூலிலிருந்து பக்.7)

… புராதன மாயவித்தையிலிருந்து தேர்ந்த திறத்துடன் திட்ட மிட்டு உருவாக்கப்பட்ட மதம் மந்திரம், சடங்கு ஆகியவற்றால் வளர்த்தெடுக்கப்பட்டது. அந்த மந்திரம், சடங்கு ஆகியவையும் மதத்தால் வளர்க்கப்பட்டு வருவதை அறிவோம். மதம் என்னும் ‘கூறு கெட்ட’ கூறு கடவுள், மறுபிறவி என்கிற அருவத்துக்கு உருவம் கொடுத்து, அதன் மூலம் அடித்தள மக்களை மூட நம்பிக்கையில் ஆழ்த்தி, அவர்களின் பண்பாட்டையும், பொருளாதாரத்தையும் கையகப்படுத்தி ஆதிக்கச் சமூக மக்களுக்கு ஆண்டாண்டு காலமாகத் தாலாட்டுப் பாடி வருகின்றது.

தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா உள்ளிட்ட மார்க்சிய அறிஞர் பெருமக்களின் தடத்தைப் பின்பற்றி, தமிழகத்தில் அடித்தள மக்களின் பண்பாட்டை ஆய்ந்து, அது ஒற்றை மதம் என்னும் பெயரால் மத ஆதிக்கத்துக்கு ஆளாவதை எதிர்த்துக் களம் கண்டவர்களில் முன்னோடியானவர் அறிஞர் நா.வானமாமலை. நாட்டார் வழிபாட்டு மரபை, பண்பாட்டைப் பேணும் பலாது முயற்சியில் ஆ.சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட அவரது மாணவர்கள் விடாது தொழிற்பட்டு வருகின்றனர். அத்தொழிற்பாடுகளில் ஒன்றாக, ‘பொத்தன் தெய்யம்’ என்னும் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. ஆ. சிவசுப்பிரமணியனின் ஆற்றுப்படுத்தலின் கீழ், நா. இராமச்சந்திரன் பதிப்பித்திருக்கும் இந்நூலை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பேராசிரியர் நா. வானமாமலை

இந்நூலில் இடம்பெற்றுள்ள சங்கர் சென்குப்தா ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை நா.வானமாமலை தமிழில் மொழிபெயர்த்து, ‘ஆராய்ச்சி’ இதழில் வெளியிட்டதாகும். அதற்கு நா.வானமாமலை எழுதிய ஒரே பத்தியளவுள்ள சிறப்புமிகு அறிமுகத்துடன் ‘கணேசர் குடும்பம்’ என்னும் இக்கட்டுரை தொடங்குகிறது. கணேசரின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலையைப் பற்றிய விவரங்களைக் கொண்டது இக்கட்டுரை. பழங்காலத்தைச் சேர்ந்த யானைமுகச் சிற்பங்களும், யானைமுகமூடிகளும் இருந்தனவென்று அகழ்வாராய்ச்சிகள் சான்று பகர்வதால் பண்டைய நாகரிகங்கள் தழைத்திருந்த ஆசியாவிலும் மெஸபடோ மியாவிலும் மனித விலங்கு வணக்கம் பரவியிருந்ததை அனுமானிப்பது எளிது. இந்தக் கருத்தோட்டத்துடன் பார்த்து, வங்காளத்தில் கணேசர் துர்க்கையின் குடும்ப உறுப்பினராக நம்பப்படுகிறார் என்று குறிப்பிடுகிறார் கட்டுரையாளர் சங்கர் சென்குப்தா. (நூலிலிருந்து பக்.16-17)

நூல் : இந்திய சமூகத்தில் மதம்
ஆசிரியர் : சா.ஜெயராஜ்.

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை – 600 098.
தொலைபேசி எண் : 044 – 2624 1288 | 2625 1968 | 2625 8410
மின்னஞ்சல் : info@ncbh.in

பக்கங்கள்: 24
விலை: ரூ 15.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : ncbhpublisher | marinabooks

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க