நா. வானமாமலை

இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் | நா. வானமாமலை – பாகம் – 07

பொருள் உற்பத்தி அமைப்பை (சமூக அமைப்பு) மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். வர்க்கங்கள் தோன்றுவதற்கு முற்காலம் (இனக் குழுக்காலம்), வர்க்கப் பிரிவினையுள்ள காலம் (வர்க்க சமுதாய காலம்), வர்க்கங்கள் இல்லாத காலம் (வர்க்க பேதங்கள் அகன்ற காலம்) என்று இச்சமூக வளர்ச்சிக் கட்டங்களைப் பகுக்கலாம்.

வர்க்க முற்காலத்தின் உற்பத்திச் சக்திகள் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்தன. இந்தக் காலகட்டத்தில் ஒரு மனிதன் உழைப்பை வேறோர் மனிதன் சுரண்ட இயலாது. ஏனெனில் உழைப்பினால் விளையும் பொருள் உற்பத்தி சமூகத்தின் வாழ்க்கையை நடத்துவதற்கே போதாது. எனவே பட்டினியையும் பற்றாக் குறையையும் தான் சமூக உறுப்பினர்கள் பங்கு போட்டுக் கொண்டார்கள். எல்லோரும் ஏழைகளாக வாழ்ந்ததால் எல்லோருடைய உழைப்பின் மீதும் சமூக இருப்பு ஆதாரப்பட்டிருந்தது.

மனிதன் தனது உழைப்பால் பண்டைக் கருவிகளை அபிவிருத்தி செய்து கொண்டான். புதிய கருவிகளைப் புனைந்தான். இவற்றால் மேலும் திறமையாகத் தன் உழைப்பை வழிப்படுத்தினான். உற்பத்தி அதிகமாயிற்று. சமூக வாழ்க்கைக்குத் தேவையானது போக பொருள்கள் மிஞ்சின. இதனை மார்க்சீயவாதிகள் உபரிப்பொருள் (Surplus product) என்று அழைக்கிறார்கள். முந்திய இனக்குழு சமூகத்தில் எல்லோரும், எல்லா வகையான உழைப்பிலும் ஈடுபட்டிருந்தார்கள். ஒருவனே வேட்டையாடி விலங்குகளைக் கொன்று குழுவிற்கு உணவு கொணர்ந்தான். அவற்றின் தோலை உரித்துப் பதனிட்டு உடைகள் தைத்தான். சிறு குடிசைகள் கட்டினான். பண்டைய விவசாயம் செய்தான். தெய்வங்களை நினைத்து வாழ்க்கையில் செழிப்பை வேண்டிக் கொண்டு ஆடிப் பாடினான். எல்லோரும், எல்லாத் தொழில்களையும் செய்தார்கள். ஆட்டம், பாட்டு முதலிய கலைகளில் எல்லோருமே கலைஞர்களாகவும், ரசிகர்களாகவும் பங்கு கொண்டனர்.

மாறிய நிலைமையில், தொழில் பிரிவுகள் தோன்றின. கைத்தொழில் வல்லவர்கள் செய்யும் தொழிலால், தொழிற் பிரிவுகளாகப் பிரிந்தனர். விவசாயம், கைத்தொழில்கள் வளர்ந்தன. கைத்தொழில்கள் மிகப் பல தோன்றின. இவர்களையே ‘வினைவலார்’ என்று பண்டைய தமிழ் நூல்கள் அழைக்கின்றன. தொழிற் பிரிவு, உற்பத்திச் சக்திகளை வளர்க்கக் காரணமாயிற்று.

இந்நிலைமை குறித்து எங்கல்ஸ், “குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்னும் நூலில் எழுதினார்: “தொழில் பிரிவுகள், தொழிற் திறமையையும், உற்பத்தித் திறமையையும் வளர்த்தன. தொழில் நுணுக்கம் முன்னேற்றம் கண்டது. இதனால் சமூகத்தில் ‘உற்பத்தி செய்பவர்கள்’, ‘உற்பத்தியை அமைப்பவர்கள்’ (Producers and Organisers of production) என்ற உழைக்கும் பிரிவினரும், தாம் உழைக்காமல், உழைப்பைத் திட்டமிட்டு அமைப்பவர்களும் என்ற பிரிவுகள் தோன்றின. உழைப்பை அமைப்பவர்கள் உழைப்பின் கடுமையில் இருந்து விடுதலை பெற்றனர். இவர்கள்தான் ‘சிந்தனையாளர்களாக’, ‘மதகுருமார்களாக’, ‘மந்திர தந்திரங்களை’ நடத்துபவர்களாக, பொருளுற்பத்தி உழைப்பில் இருந்து விலகிச் செயல்பட்டனர். இவர்களில் சிலர் மதக் கொள்கைகளையும், வேறு விஞ்ஞானச் சிந்தனைகளையும் உருவாக்கினர், வானவியல், கணிதம், பௌதீகம், ரசவாதம் போன்ற பல விஞ்ஞானங்களை இவர்கள் வளர்த்தார்கள். இவர்கள் உழைப்பை மிகவும் இழிவாகக் கருதினர்.

படிக்க :
போலீசு வில்சன் கொலை : பாஜக-வின் கிறிஸ்தவ பாசம் ! உஷார்
சொந்த நாட்டு மக்களை ஒடுக்குவது மட்டுமே இராணுவத்தின் பணி !

உதாரணமாக இந்தியாவில் ஆரிய சமூகத்தில் பிராமணனும், க்ஷத்திரியனும் ஏரைத் தொடக்கூடாது என்று தர்ம சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. பிராமணன் ஏழையாகிவிட்டால் அடுத்த வருணமான க்ஷத்திரியன் தொழிலைச் செய்யலாம். இதற்கு ஆபத்து தர்மம் என்று பெயர். அது போன்றே க்ஷத்திரியன் வைசியன் தர்மத்தைக் கடைப் பிடிக்கலாம். ஆனால் மேலிரண்டு வருணத்தாரும் சூத்திரனைப் போல் உடல் உழைப்பை ஒரு போதும் மேற்கொள்ளக் கூடாது. இது போன்றே பௌத்தத் துறவிகள் ஏரைத் தொடக் கூடாது. பொருள் வருவாயுள்ள எந்த உழைப்பையும் மேற்கொள்ளல் ஆகாது. இவ்வாறாக உழைக்க ஆனால் உழைப்பை அமைக்கும் சமூகப் பிரிவாக ஆளும் வர்க்கமும், உழைப்பையே வாழ்க்கைச் சாதனமாகக் கொண்ட உழைக்கும் வர்க்கமுமாகப் பண்டையச் சமுதாயம் பிரிந்தது. இப்பிரிவினரையே மேலோர், கீழோர் என்று பண்டைத் தமிழர்கள் குறிப்பிட்டனர்.

இம்மாறுதல் எவ்வாறு நடந்தன என்று மார்க்சீய சமூக மானிடவியலார் ஆராய்ந்து வருகிறார்கள். இப்போது, பண்டைக்காலச் சமுதாய வளர்ச்சிபற்றி நாம் அறிந்துள்ள மார்க்சீய சிந்தனையை மிகவும் சுருக்கமாக நான் மேலே குறிப்பிட்டுள்ளேன்.

எங்கல்ஸ்.

மேற்கூறியவாறு சமுதாய வரலாற்றில் தோன்றிய ஆளும் வர்க்கமும், தனது ஆதிக்கத்தை நிறுவிக் கொள்ள வன்முறைக் கருவியொன்றைப் படைத்துக் கொண்டது. உழைக்கும் மக்களும், தங்களது தொழில்களை அமைதியாகச் செய்யத் தேவையானது அரசு என்று நம்பினார்கள். முதன் முதலில் சமூகத்தின் எல்லா உறுப்பினர்களின் சம்மதத்தோடு அரசு தோன்றியது. இதனை மகா சம்மதம் என்று நீதி நூலோர் அழைப்பர். பின்னர் அது ஆளும் வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்கும் வன்முறைக் கருவியாக மாறிற்று, எங்கல்ஸ் கூறுகிறார்:

“சமூகத்திற்கு வெளியில் இருந்து அதன் மீது திணிக்கப் பட்டதன்று, அரசு. சமூக வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி கட்டத்தில் சமூகத்தால் படைக்கப்பட்டது தான் அது. பல பொருளாதார முரண்பாடுகள் சமூகத்தில் தோன்றிவிட்டன. இவற்றிற்குத் தீர்வு காண முடியவில்லை என்ற உண்மையின் ஒப்புதல் வாக்கு மூலமே அரசு. இந்த முரண்பாடுகளும், பகைமையும் சமூகத்தையே அழித்து விடாமல் இருக்க, சமூகத்திற்கு மேலே இருப்புக் கொண்டது போலத் தோற்றமளிக்கும் ஒரு அமைப்பை சமூகம் ஏற்றுக் கொண்டது, இதுவே அரசு. இது சமூகத்தில் இருந்து பிறந்து, சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிற நிறுவனமாக அதற்கு மேலே இருப்பது போலத் தோன்றுகிறது. சமூகத்தை ஒழுங்காக நெறிப்படுத்தத் தோன்றிய அரசு, அதனின்றும் அந்நியவயமாயிற்று. மேற்குறிப்பிட்ட வர்க்கப் போராட்டங்களைக் கட்டுப்படுத்தி வைக்க, அது வலிமை மிக்க நிறுவனமாகத் தன்னைத்தானே வளர்த்துக் கொண்டது. பொருளாதார ஆதிக்கம் உள்ள ஆளும் வர்க்கம் தங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள, உழைக்கும் வர்க்கத்தை வன்முறையால் ஒடுக்க அரசு கருவியாகத் தோற்றம் கொண்டது.”

”அரசு, மக்களைக் கட்டாயப்படுத்தும் கருவி” (Coercive apparalisis) என்று மார்க்ஸ் கூறுகிறார். சட்டங்கள், நீதிமன்றங்கள், போலீஸ், ராணுவம் முதலியன அரசின் வன்முறைக் கருவிகள். ஆளும் வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்க, மக்களை அடக்க இவை பயன்படுத்தப்பட்டன. இந்த அரசுதான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மக்கள் மனத்தையும் செயலற்ற நிலையில் வைத்திருக்க வேண்டியிருந்தது. இதற்காக அவர்களுக்கு மதம் என்ற அபினியைக் கொடுத்தது. மார்க்ஸ் கூறுகிறார்:

“இவ்வரசும், இச்சமூகமும் தலைகீழான உலகம் பற்றிய உணர்வைப் படைக்கின்றன. அதுதான் மதம். மதம், இந்நிலையில் உலகம் பற்றிய பொதுக்கொள்கை. சர்வாம்சமான அறிவுத் தொகுப்பாக அது தோன்றுகிறது. ஜனரஞ்சகமான தருக்கமாகவும், சமூகத்தின் ஆன்மீக கௌரவமாகவும் அது மதிக்கப்படுகிறது, ஒழுக்க விதிகளைக் கட்டுப்படுத்துகிறது. மன ஆறுதலுக்குப் பொதுவான சாதனமாகவும் தோன்றுகிறது. மனிதனது ஆத்மாவின் மாயையான பூர்த்தியாக அது இருக்கிறது. இப்பூர்த்தி உண்மையான தன்று. மதத்தை எதிர்க்கும் போராட்டம், அதன் வெளிப்பாடான வேறோர் கற்பனை உலகத்தை எதிர்க்கும் போராட்டமாகவும் இருத்தல் வேண்டும். இவ்வுலகின் ஆன்மீக வாசனைதான் மதம். உண்மையான சோகத்தின் வெளிப்பாடாகத்தான் மதத்தின் சோக உணர்ச்சி இருக்கிறது. உண்மையான சோகத்தை எதிர்க்கும் உணர்ச்சி மத உணர்ச்சியில் உள்ளது. ஒடுக்கப்பட்ட ஜீவன்களின் பெருமூச்சாக மதம் உள்ளது. இதயமற்ற உலகின் இதயமாக அது தோற்றம் அளிக்கிறது. ஆன்மாவற்ற நிலையில் ஆன்மா போன்று அது காணப்படுகிறது. உண்மையில் மக்களை (மயக்கும்) அபினி போன்றது மதம்.”

“மாயையான மதத்தை ஒழிப்பது மாயையான மத மகிழ்ச்சியை அகற்றுவதற்கும் உண்மையான மகிழ்ச்சிக்காக மனிதன் போராடுவதற்கும் அவசியம். மதம் பற்றிய விமர்சனம், மாயையான பந்தங்களிலிருந்து மனித மனத்தை விடுவிக்கிறது. விடுதலை பெற்ற மனம் புற உலக வாழ்க்கையில் மனிதனது இடம் பற்றிச் சிந்திக்கிறது. மதம் மனிதனைச் சுற்றிச் சுழலுவதாகத் தோன்றும் மாயைத் தோற்றமான சூரியன். மனிதன் தன்னைத்தான் சுற்றிச் சுழலும்போது இத்தோற்றம் அகன்று விடுகிறது.”

மார்க்ஸ் உண்மைக்கப்பால் உள்ள உலகம் மறைந்து விட்ட பிறகு, புற உலகின் உண்மையைக் காண்பதே வரலாற்றின் கடமையாகும். வரலாற்றின் பணிக்கு உதவும் தத்துவம், மனிதன் அந்நியப்படுதலால் விளையும் ‘புனிதமான உருவங்களை’ (மதக்கருத்துக்கள்) பொய்யெனக் காட்டுவதால் புனிதமற்ற உருவங்களின் (புற உலகின் உண்மையை) யதார்த்த நிலையை, அதன் முரண்பாடுகளை சுட்டிக் காட்டுவதும் ஆகும். இதனால், சுவர்க்கத்தைப் பற்றிய விமர்சனம், உலகம் பற்றிய விமர்சனமாக மாறுகிறது. மதம் பற்றிய விமர்சனம், நியாயம் பற்றிய விமர்சனம், கடவுளியல் பற்றிய விமர்சனங்களெல்லாம் அரசியல் பற்றிய விமர்சன மாற்றம் அடைகிறது.

முதல் பாகம்

 

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………… அடுத்த பாகம் »

இந்திய நாத்திகமும்
மார்க்சீயத் தத்துவமும்

நா. வானமாமலை
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

1 மறுமொழி

 1. சரி மதங்களை பற்றி பிறகு பார்ப்போம் கம்யூனிசம் எப்படி பட்டது என்பதை சொல்லுங்களேன்.

  மக்கள் மக்கள் என்று ஊரை ஏமாற்றி கொண்டு வன்முறையையும் வெறுப்பையும் வளர்ப்பதை தவிர கம்யூனிசம் என்ன செய்து இருக்கிறது ?

  சீனாவில் ஜனநாயக உரிமை கேட்டு போராடிய மாணவர்கள் மீது தியனன்மென் சதுக்கத்தில் பீரங்கி ஏற்றி மாணவர்களை கொன்று போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர்கள் தானே கம்யூனிஸ்ட்கள்.

  கம்யூனிஸ்ட்கள் ஆட்சி செய்த ஒரு நாட்டிலாவுது ஜனநாயகம் இருந்து இருக்கிறதா ?

  ஒவ்வொரு நாட்டிலும் சாதாரண மக்களின் உரிமைகளை பறித்து அவர்களை அடிமைகளாக தானே கம்யூனிசம் இன்று வரையில் நடத்தி வருகிறது.

  இந்தியாவை பொறுத்தவரையில் கம்யூனிசம் மிக மோசமான பாசிச வன்முறையாளர்களாகவும் தேச விரோதிகளாகவும் மக்கள் விரோதிகளாகவும் இருக்கிறார்கள்.

  மறுக்க முடியாத உண்மை இது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க