நா. வானமாமலை

இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் | நா. வானமாமலை – பாகம் – 06

முதல் பாகம்

நாத்திகம் பற்றி மார்க்சீயவாதிகளின் விமர்சனம்

ண்டைய இந்திய நாத்திகம், பண்டைய கிரேக்க நாத்திகம், தற்கால ஐரோப்பிய நாத்திகம் ஆகியவற்றின் தத்துவக் குறைபாடுகளை மார்க்சீயம்தான் போக்கி முழுமையாக்குகிறது.

“பண்டைக் கால நாத்திகத்தின் முக்கியமான பலவீனம் என்ன?” என்ற கேள்வியிலிருந்து நமது வாதத்தைத் தொடங்குவோம். நமது தத்துவவாதிகள் மிகத் திறமையான தர்க்கவாதங்களை கடவுள் ஒரு மாயை, மன விகாரம் என்று நிரூபிக்க உருவாக்கியுள்ளார்கள். இவ்வாறு கடவுளைப் படைக்கப் பிழையாக தருக்க முறைகளைக் கடவுள் நம்பிக்கையுடைய தத்துவவாதிகள் பயன்படுத்தியுள்ளார்கள். இந்திய நாத்திகவாதிகளது தருக்கத் தாக்குதல்களின் பின்னும் கடவுள் பிழைத்திருக்கிறாரே! மேலும் மேலும் பக்தர்கள் கடவுளை நம்புகிறார்களே! இது ஏன் என்று இந்திய நாத்திகர்கள் சிந்திக்கவில்லை. ஒரு மாயத் தோற்றம், மக்கள் மனத்தை இவ்வளவு வலுவாகக் கவர்ந்து கொண்டது ஏன்?

ஃபயர்பாக்.

கடவுள் என்ற கருத்தின் ஊற்றுக்கண் வேறோரிடத்தில் இருக்கிறது. இவ்வூற்றுக் கண்ணை நமது பண்டைய நாத்திகர்கள் அறிந்து கொள்ளவில்லை. மார்க்ஸ் தான் கடவுள் என்ற கருத்தும், வேறு எல்லாக் கருத்துக்களும் எவ்வாறு தோன்றின என்று விளக்கினார்.

ஃபயர்பாக் என்ற தத்துவவாதியின் பொருள்முதல் வாதம், ஹெகல் என்ற ஆன்மீகவாதியின் கொள்கைகளுக்கு எதிர்ப்பொலியாக ஒலித்தது. ஃபயர்பாக்கின் பொருள்முதல் வாத உள்ளடக்கத்தை மார்க்ஸ் பெரிதும் போற்றினார். ஆனால் பிரபஞ்சத்தின் வளர்ச்சியை பொருள்முதல்வாத அடிப்படையில் அவர் விளக்கவில்லை. பொருள் முதல்வாத அடிப்படையில் ஃபயர்பாக் உலக இருப்பையும், மனித மனத்தின் உள்ளடக்கத்தையும் ஆராய்ந்தார்.

மார்க்ஸ் ஃபயர்பாக்கை பின்வருமாறு விமர்சிக்கிறார்:

“ஃபயர்பாக் மதத்தினால் அந்நியவயமாகி இவ்வுலகு இரண்டாக; பொய்யான மத உலகாகவும், உண்மையானப் புற உலகாகவும் பிரிகிறது. அவருடைய தத்துவ முயற்சியெல்லாம் இப்பொய்யுலகை, உண்மையான உலகிற்குக் கொண்டு வருவதாகவே இருந்தது. இப்படிச் செய்யும் பொழுது மிக முக்கியமான தத்துவ முயற்சியை அவர் ஒதுக்கி விட்டார். உண்மை உலகின் முரண்பாடுகள் தீர்வு காணப்படாத பொழுது, அவை விண்ணில் ஒரு தனி உலகை அமைத்துக் கொள்கின்றன. உலகிலுள்ள முரண்பாடுகள் – தீர்வு பெறாதவரை, அவற்றில் இருந்து தோன்றி விண்ணில் இருப்பதாகக் கருதப்படும் மாயத் தோற்றங்கள் கலையாது. உலகக் குடும்பமே தெய்வக் குடும்பத்தின் அடிப்படை என்பதைக் கண்டு கொண்டால் இவ்வுலக வாழ்க்கை முரண்பாடுகளை ஆராய்ந்து நடைமுறையால் புரட்சிகரமாக மாற்ற முடியும்.”

ஃபயர்பாக் பற்றிய விமர்சன எழுத்துக்களில் மார்க்ஸ் கூறிய கருத்தை, எங்கல்சோடு சேர்ந்து மேலும் விளக்கினார்:

ஹெகல்.

“மனிதர்களுடைய செயலூக்கமான நடைமுறைச் செயல்களோடு, அவர்களுடைய எண்ணங்கள், சிந்தனைப் படைப்புகள், உணர்வு என்ற மூளையின் படைப்புகள் தொடர்பு கொண்டவையாக இருக்கின்றன. இவை நடைமுறைச் செயல்களால் தொடர்பு கொள்ளுகிற மனிதர்களின் உறவுகளின் விளைவேயாகும். உண்மையான வாழ்க்கையின் நிஜமான அல்லது வக்கிரமான பிரதிபலிப்புக்களே எல்லாச்சிந்தனைகளும் என்று நாம் அறிதல் வேண்டும். இவை பொருளுற்பத்தி என்ற மனிதர் செயல்களில் இருந்துதான் தோன்றுகின்றன. மனிதனது உற்பத்தி சக்திகள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் எந்த அளவு வளர்ச்சியடைந்திருக்கின்றனவோ, அதற்கேற்ப சமூக உற்பத்தி உறவுகளின் பிரதிபலிப்புகளாகச் சிந்தனைகள் தோன்றுகின்றன. மூளையில் தோன்றுகிற தெளிவற்ற எண்ணங்கள் கூட, வாழ்க்கையில் இருந்து பிரிந்து சுதந்திரமாக இருப்புக் கொள்ளவில்லை. இவைகூட சமூக இருப்பின் அடிப்படையில் தோன்றிய மேற்கோப்புகள் தாம். இவ்வடிப்படை புலனறிவுக்குப் புலப்படுபவையே. இவ்வாறாக ஒழுக்கம், மதம், அப்பாலைத் தத்துவங்கள் முதலிய கருத்துக் கட்டமைப்புகளாகிய (Idealogy) உணர்வுருவங்கள் (Forms of Consciousness) சுதந்திரமானவையல்ல. அவை பொருளுற்பத்தி என்னும் மனிதர் செயலான அடிப்படையின் மீது எழுப்பப்பட்டவையே. பொருளுற்பத்தி வரலாற்றில் இருந்து பிரித்து உணர்வுருவங்களின் சரித்திரத்தை அறிய முடியாது. மனிதர்கள் உற்பத்திச் சக்திகளை வளர்த்துக் கொண்டு, உற்பத்தி அமைப்புகளையும், சமூக அமைப்புகளையும் மாற்றுகிறபோது அவ்வடிப்படையின்மீது எழுப்பப்பட்டிருக்கும் மேற்கோப்பு உருவங்களும் மாறுகின்றன.” “உணர்வு வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை; வாழ்க்கைதான் உணர்வைத் தீர்மானிக்கிறது” என்பது மார்க்ஸின் புகழ்பெற்ற வாசகம்.

இவ்வுலக நோக்குத்தான் மார்க்ஸிய வரலாற்றுப் பார்வையின் அடிப்படை. ஒவ்வொரு சமுதாய அமைப்பின் உற்பத்தி முறைதான் நமது வரலாற்று ஆராய்ச்சியின் துவக்கப்புள்ளி. ஒவ்வொரு உற்பத்தி முறையிலும் மனிதர்கள் எவ்வித உறவு கொள்ளுகிறார்கள் என்பது உற்பத்திமுறை அமைப்பைப் பொறுத்தது. உற்பத்தி முறையின் தொடர்ச்சியான மாறுதல்கள், இவற்றால் மாறுகிற மனிதர் உறவுகள், அவற்றின் தொடர்ச்சியான போக்குகள் இவற்றை வரலாறு விளக்கவேண்டும். இவற்றில் மனப்படைப்புகள், பொருளாதார அடிப்படையிலிருந்து விலகிச் செல்வதை அறிகிற விமர்சனம் செய்வது போதாது. விமர்சனம் மட்டுமல்ல, உற்பத்தி சக்திகள் வளரும் வகையில் உற்பத்தி உறவுகள் மாற்றப்பட வேண்டும். அடிப்படையானதும், மிகவும் முக்கியமானதுமான சமூக மாறுதல் புரட்சியாகும். உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியும், அவ்வளர்ச்சிக்கேற்ப, சமூக அமைப்பு மாற்றப்படுவதுவே வரலாற்றின் இயக்கு சக்தியாகும். உற்பத்திச் சக்திகளின் பெருக்கத்தை விளக்கும் வரலாறே, தத்துவம், மதம் முதலிய எண்ணக் கட்டமைப்புகளின் வரலாற்றுக்கும் அடிப்படையாகும்.

கார்ல் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ்

மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகிய இருவரும் மேற்கூறிய கருத்துக்களை 1845-46 இல் உருவாக்கினர். அதன் பின்னர் நூறாண்டுகளில் தொல்பொருள் ஆய்வும், மானிட ஆய்வும் பெரிதும் வளர்ச்சி பெற்றுள்ளன. இவையாவும், இக்கருத்துக்களை செழுமைப்படுத்துகின்றன.

மார்க்ஸ் மதத்தைச் சிந்தனையில் இருந்து அகற்றத் தர்க்கத்தைக் கையாளவில்லை. சிந்தனை நிலையில் மதக் கருத்துக்களை நமது பண்டைய நாத்திகர்கள் எதிர்த்தது போல், மார்க்ஸ் செய்யவில்லை. மார்க்ஸ், ’மனிதன் மதத்தைப் படைத்தான்’ என்று போதித்தார். மனிதனது உட்கிடையான தன்மை, தெய்வீகமானது என்ற கருத்தை அவர் எதிர்த்தார். கடவுள் நம்பிக்கை, அதைத் தோற்றுவித்த சமூக அடிப்படை மாறும்போது மறையும் என்று கூறினார். வரலாற்றுப் படிமுறை வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தனது புறவய வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவே மனிதன் மதத்தைப் படைத்தான், தனது ஆற்றலால் விளைச்சலை அதிகப்படுத்த முடியவில்லை. மழை பெய்யச் செய்ய முடியவில்லை, வேட்டை விலங்குகளைக் கொல்லமுடியவில்லை, போரில் வெற்றி பெற முடியவில்லை என்று உணர்ந்த மனிதன், மந்திர தந்திரங்களையும், கடவுள்களையும் தனது ஆற்றலை மிகுவித்துக் கொள்ளப் படைத்தான், இக்கருத்துக்கள் மனித வரலாற்றில், மனிதன் தனது புறவய வாழ்க்கையில் தனது ஆற்றல் குறைவை உணரும் போது, இயலாமையை உணரும்போது, தன்னைவிட அதிகமான சக்தி படைத்த தெய்வங்களைத் தனது கற்பனையால் படைத்து அவற்றிடம் தனது தேவைகளைப் பூர்த்தி செய்து வைக்க கோரிக்கை விடுத்தான்.

இவ்வாறு மனிதன் மதத்தைப் படைத்தான். மனிதன் உலகத்திற்கு வெளியே வாழும் விலங்கு அல்ல. தற்காலப் பரிணாமவாதம் மனிதனது தோற்ற மூலத்தை விளக்குகிறது. மிகவும் சிக்கலான இயற்கை மாற்றங்களுக்குப் பின்னர், இம்மாற்றங்களின் விளைவாக மனிதன் தோன்றினான். பிற விலங்குகளைப் போல அவனும் இயற்கையின் ஒரு பகுதிதான். மனிதன் தோன்றிய பின் விலங்குகளுக்கும் இயற்கைக்கும் இடையே உள்ள உறவு தன்மை மாற்றம் அடைந்தது. விலங்குகள் இயற்கையோடு இசைந்து போகின்றன. இயற்கையின் வலிமைக்கு இணங்கித் தங்களது உறுப்புக்களை மாற்றிக் கொள்ளுகின்றன. இயற்கையோடு அவற்றின் உறவு, செயலூக்கமற்றது (Passive) தான். இயற்கையளிக்கும் காய்கனிகளை அவை உண்கின்றன. உணவைத் தேடிப் பெற்றுக் கொள்பவையாக (food gatherers) அவை இருக்கின்றன. செயலூக்கத்தோடு உணவை உற்பத்தி செய்வதில்லை. குளிர்தாங்க உரோமத்தை இயற்கை சில விலங்குகளுக்கு அளித்துள்ளது. இயற்கையை அவை தங்கள் வாழ்க்கையால் மாற்றிய போதிலும், அம்மாற்றங்கள் அவற்றின் உணர்வில் பதிவதில்லை. அவை பற்றி அவை சிந்திப்பதில்லை. மனிதனது தோற்றம் ஒரு விலங்குதான் என்றாலும், பிற பிராணிகளைப் போல இயற்கையோடு அவன் கொண்டுள்ள தொடர்பு செயலூக்கமற்றதல்ல. தனது உயிரியல் உறுப்புகள் (கை, கால், வாய், பல் முதலியன) இயற்கையில் ஏற்படுத்தும் மாறுதல்களை அவன் உணருகிறான். தனக்குத் தேவையான மாறுதல்களை இயற்கையில் ஏற்படுத்துவதோடு அவற்றை நெறிப்படுத்தவும் மனிதனால் முடியும். இப்பொழுதுதான் அறிபவன், அறியப்படுவது (Subject, Object) என்ற கருத்துக்களுக்குப் பொருளான உண்மைகள் தோன்றுகின்றன.

இந்த மாற்றத்திற்குக் காரணம் என்ன? மனிதன் தனது, உயிரியல் கருவிகளைப் (Biological equipment) பயன்படுத்துகிறான். முக்கியமான உறுப்புகளின் மூளை, கைகள், பேச்சுறுப்புகள் இவற்றைச் செயல்படுத்துகிறான். இவற்றைச் செயல்படுத்தும் போது விளையும் ஆற்றல் தான் உழைப்பு. இந்தச் செயல்பாட்டில் இயற்கையும் மனிதனும் பங்கு, பற்றுகின்றனர். ஆனால் மனிதன் உழைப்பு என்னும் ஆற்றலால் இயற்கை மீது தனது செயலைத் துவக்கி, இயற்கையை கட்டுப்படுத்தி, தனக்கும் இயற்கைக்கும் உள்ள உறவை உணர்வுப் பூர்வமாக நெறிப்படுத்துகிறான்.

மின்னல் மின்னும் போதும், மழை பெய்யும் பொழுதும், சில ரசாயன மாற்றங்கள் நிகழ்கின்றன. இவை இயற்கை நிகழ்ச்சிகள். விலங்குகளும், மனிதனும் அஞ்சியோடுகின்றன. ஆனால் மனிதன் இந்நிகழ்ச்சிகள் நடைபெறும் போது என்ன மாற்றங்கள் உண்டாகின்றன என்று சிந்திக்கிறான். அவன் இயற்கையோடு தொடர்பு கொண்டதால் அவன் மூளையில் படைத்துக் கொண்ட ரசாயன அறிவைப் பயன்படுத்துகிறான். காற்றில் ஆக்ஸிஜன், நைட்ரஜன் என்ற வாயுக்கள் உள்ளன. மின்னல் வெளிப்படும் பொழுது மின்னாற்றல் பாய்ச்சல் (discharge) வாயுக்களின் ஊடே செல்லுகிறது. இதனால் இவ்விரண்டு வாயுக்களும் கூடுகின்றன. மழைத் தண்ணீரில் இக்கூட்டுப் பொருள் (நைட்ரிக் ஆக்ஸைடு) கரைந்து ஒரு அமிலம் ஆகிறது. இது பூமியினுட் செல்லுகிறது. பூமியினுள் உலோகத் தாதுப் பொருள்கள் உள்ளன. அவற்றோடு இவ்வமிலம் எதிர்வினை செய்து உரப்பொருள்கள் இயற்கையில் கிடைக்கின்றன.

படிக்க :
ஜே.என்.யூ தாக்குதல் : குஜராத் முதல் தமிழ்நாடு வரை போராட்டங்கள் !
CAA ஆதரவு – பாஜக ட்ரோல் படையின் தரம் தாழ்ந்த ‘மிஸ்டுகால் புரட்சி’ !

இயற்கை நிகழ்ச்சிகளைக் கவனித்த மனிதன், முன் இயற்கையில் தலையிட்டுக் கிடைத்த அனுபவம், அனுபவத்தில் இருந்து முன் கிடைத்திருக்கும் கொள்கையறிவு இவற்றைப் பயன்படுத்தி இயற்கைப் போக்கில் தலையிடுகிறான்; காற்றிலுள்ள வாயுக்களைச் சேரவைக்கும் அளவு வெப்பத்தை மின் ஆற்றலால் உண்டாக்குகிறான். ‘மின் ஆற்றல் ஆர்க்’ என்ற ‘மின் வெப்பக் கருவியின் கரித்துண்டுகள் ஜூவாலிக்கும் போது காற்றை உட்செலுத்துகிறான். வாயுக்கள் கூடி நைட்ரிக் ஆக்ஸைடு உண்டாகிறது. இதனை நீரில் கரைக்கிறான். இந்த அமிலத்தை அம்மோனியா வாயுவோடு சேர்க்கிறான். இது கூட ‘ஹைட்ரஜன், நைட்ரஜன்’ ஆகிய இரு வாயுக்கள் கூடிக் கிடைத்த கூட்டுப் பொருளே. இது கூட இயற்கையில் தலையிட்டுக் கட்டுப்படுத்தித் தனக்குத் தேவையான பொருளாக மனிதன் செய்து கொண்டதே.

மேற்கூறிய, “இயற்கைமீது தனது செயலைத் துவக்கி, இயற்கையைக் கட்டுப்படுத்தி, தனக்கும் இயற்கைக்கும் உள்ள உறவை உணர்வுப் பூர்வமாக நெறிப்படுத்துகிறான்” என்ற எங்கல்ஸின் வாசகத்துக்கு இது மிக நல்ல உதாரணம்.

இவ்வாறு இயற்கையை மாற்றும் பொழுது மனிதனும் மாறுகிறான். பொருள்களின் யாந்திரிக, ரசாயன, பௌதீக இயல்புகளை அறிந்து அவற்றைத் தனது தேவைக்கேற்ற பண்புகளாக மனிதன் மாற்றிக் கொள்கிறான். இவ்வாறு மனிதனது அறிவு அவனது கை, கால், மூளைபோல அவனது உறுப்புகளில் ஒன்றாக ஆகிவிடுகிறது. இதனால் முன்னிலும் அதிகமான ஆற்றல் பெற்றவனாக மனிதன் ஆகிறான்.

இது குறித்து கார்டன் சைல்டு என்ற தொல்பொருள் பேராய்வாளர் கீழ்வருமாறு கூறுகிறார். “இயற்கையையும், இயற்கையோடு போராட மனிதன் புனைந்து கொண்ட கருவித் தொகுதிகளையும், மனிதனது உடல்புற உறுப்புக்கள் (Extra Corporeal Organs)” என்று அவர் அழைக்கிறார். இவை ஆரம்பத்தில் மிக எளிய கருவிகளாக இருந்தன. ஒரு முறிந்த மரக்கிளை, கூர்மையாக்கப்பட்ட கல் இவை போன்றவை தாம் மனிதன் பயன்படுத்திய “பண்டைக் கருவி.” கருவிகளைச் செய்யும் ஆற்றல் மூளையின் திறத்தால் மனிதனிடம் வளர்ச்சியடைந்தன. இச்சிறு கருவியைச் செய்த மனிதன், தனது உழைப்பால், இன்று விண்கலங்களை கோடிக்கணக்கான மைல்களுக்கு அப்பால் அனுப்புகிறான். அவை கோடிக் கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள விண்கோளங்களை படம் பிடித்து உடனே சில ஒளிக்கதிர்கள் மூலம் உலகிற்கு அனுப்புகின்றன. இவ்வளவு தூரத்தில் உள்ள கோளங்களின் படங்கள், மனிதன் அவற்றைக் கண்ட மறுநாளே தினசரிகளில் வெளியாகின்றன. இன்று மனிதன் தனது உடலுழைப்பாலும், மூளை உழைப்பாலும், இயற்கையாற்றல்களில் பல கூறுகளை தனது தேவைகளுக்காக வென்றுள்ளான்.

இவ்வாறு இயற்கையோடு போராட கருவிகளைச் செய்து உற்பத்திச்சக்திகளை முன்னேற்றிய மனிதன், விஞ்ஞானத்தை வளர்த்தான். பொருள் உற்பத்தியில் முன்னேறிய மனிதன் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத போது பல நம்பிக்கைகளையும் படைத்தான். அவனது உற்பத்தி அமைப்பு முறையின் வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் சில நம்பிக்கைகள் தோன்றின..

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

இந்திய நாத்திகமும்
மார்க்சீயத் தத்துவமும்

நா. வானமாமலை
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்