புது தில்லியில் உள்ள ஜே.என்.யூ வளாகத்தில் மாணவர் மீதான தாக்குதலை கண்டித்து இந்தியா முழுதும் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் திங்கள்கிழமை (06.01.2020) மாலை அகமதாபாத்திலுள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்திற்கு (ஐ.ஐ.எம்.ஏ) வெளியே அமைதியான போராட்டத்தை நடத்தினர்.

ஐ.ஐ.எம்.ஏ (IIMA), சி.இ.பி.டி (CEPT) பல்கலைக்கழகம், அகமதாபாத் பல்கலைக்கழகம், தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனம், தேசிய வடிவமைப்பு நிறுவனம் மற்றும் குஜராத் வித்யாபித் உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.

மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து ஜே.என்.யூ. வாயிலில் மாணவர்கள் நடத்திய போராட்டம். (கோப்புப் படம்)

“மாணவர்களை கொடூரமாக நடத்துவதற்கு எதிரானவர்கள் நாங்கள். மக்கள் சுதந்திரமாக பேச அனுமதிக்கப்படுவதில்லை என்ற செய்தியை தெரிவிக்கவே நாங்கள் இன்று வாயில் துணியைக் கட்டியுள்ளோம். கேள்வி கேட்டாலே மாணவர்கள் முத்திரை குத்தப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட குடிமக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய ஒன்று கூடினார்கள்” என்று அகமதாபாத் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் சர்தாக் பாகி கூறினார்.

ஜே.என்.யூ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட வட்கம் சட்டமன்ற உறுப்பினரான ஜிக்னேஷ் மேவானி கோரினார்.

“குற்றவாளிகளுக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்பதை இந்த தாக்குதல் நிரூபித்துள்ளது. காவல்துறையும் அரசாங்கமும் தங்களுக்கு சொந்தமானது என்பது அவர்களுக்கு தெரியும். இந்த குற்றவாளிகளை உள்துறை அமைச்சர் அமித் ஷா அனுப்பியுள்ளார் என்று நான் நம்புகிறேன். ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஏபிவிபி தவிர வேறு யாராலும் இதுபோன்ற செயல்களைச் செய்ய முடியாது” என்று மேவானி கூறினார்.

“ஜே.என்.யூவில் இரத்தம் வழிகிறது”, “பார்ப்பனிய பயங்கரவாதத்தை நிறுத்து”, “ஜே.என்.யுவைக் காப்பாற்றுங்கள்”, “ஜே.என்.யூ-வுடன் நிற்கிறோம் – பாசிசத்தை எதிர்கிறோம்”, “வளாகங்களை போர் மண்டலங்களாக ஆக்குவதை நிறுத்து” மற்றும் “மாணவர்களைக் காப்பாற்று-ஜனநாயகத்தை காப்பாற்று” போன்ற முழக்கப் பதாகைகளை வைத்திருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை சுற்றி ஏராளமான காவல்துறையினர் இருந்தனர்.

மகாத்மா காந்தி நிறுவிய குஜராத் வித்யாபித்தின் சில மாணவர்கள் காதியில் நெய்த அசோக சக்கரத்தை எதிர்ப்பின் அடையாளமாக காட்டினார்கள். சமீபத்தில் கான்பூரிலுள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIT) சர்ச்சையின் மையமாக இருந்த ஃபைஸ் அகமது ஃபைஸின் புகழ்பெற்ற ‘ஹம் தேக்கேங்கே’ கவிதையை மற்ற ஆர்பாட்டக்காரார்கள் முழக்கமிட்டனர்.

“தற்போதைய அரசாங்கம் அதன் கொள்கைகளுடன் உடன்படாத மக்களை விரும்பவில்லை என்பதையே ஜே.என்.யூ மாணவர்கள் மீதான தாக்குதல் காட்டுகிறது. ஆனால், ஜே.என்.யூ மாணவர்களுக்கு ஆதரவு முழு நாடும் இருப்பதை சொல்ல நாங்கள் அனைவரும் விரும்புகிறோம். இது இந்த நாட்டின் ஆன்மா மீதான தாக்குதல். நாங்கள் இந்த நாட்டின் எதிர்காலம். நாங்கள் ஏன் எதிரிகளைப் போல நடத்தப்படுகிறோம்? ” என்று மாணவ போராட்டக்காரர்கள் கேட்டனர்.

படிக்க :
ஜே.என்.யூ மாணவர்களுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகர் தீபிகா படுகோன் !
♦ ஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு ! | பாகம் – 1

போராட்டம் நடைபெற்றபோது, ஏபிவிபியுடன் தொடர்புடைய சிலர் சாலையின் எதிர் பக்கத்தில் கூடி ஜே.என்.யூ தாக்குதல் ‘இடதுசாரி’மாணவர்களால் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டதாகக் கூறும் “இடதுசாரிகள் ஜே.என்.யூவை தாக்குகிறார்கள்” மற்றும் “ஜே.என்.யூவில் சிவப்பு பயங்கரவாதம்” போன்ற செய்திகளைக் கொண்ட பதாகைகளை காட்டினார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான்கு ஏபிவிபி உறுப்பினர்களை போலீசார் தடுத்து வைத்ததாக போலீஸ் கண்காணிப்பாளார் எச்.எம். வியாஸ் கூறினார்.

“இங்கு போராட்டம் நடத்த இவர்களிடம் அனுமதி இல்லை. ஒரு முன்னெச்சரிக்கைக்காகவே இவர்களை தடுத்து வைத்தோம்.” என்று வியாஸ் கூறினார்.

ஜே,என்.யூ. மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து சென்னைப் பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

ஞாயிற்றுக்கிழமை இரவில், கட்டைகள் மற்றும் கம்பிகளுடன் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று ஜே.என்.யூ வளாகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தாக்கி சொத்துக்களை சேதப்படுத்தியது. ஜே.என்.யூ மாணவர் சங்கத் தலைவர் ஆயி கோஷ் உட்பட 28 பேர் காயமடைந்தனர்.

டெல்லியில், செயின்ட் ஸ்டீபன் கல்லூரியின் (St Stephen’s College) மாணவர்களும் ஆசிரியர்களும் திங்களன்று ஜே.என்.யூ, ஜாமியா மில்லியா இஸ்லாமியா மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறைகளை குறித்து கவலை தெரிவித்தனர்.

குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு ஒரு “நீண்டகால” எதிர்ப்பிற்கு திட்டமிட அவர்கள் அங்கு கூடினார்கள்.

நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்து பதிவான வன்முறை சம்பவங்களை கண்டித்து, தற்போதைய பாஜக தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக மாணவர் இயக்கத்திற்கு இந்த கூட்டம் அழைப்பு விடுத்தது.

ஜே.என்.யூ-வில் நடந்த வன்முறைக்கு எதிராக தமிழகத்தின் சில பகுதிகளிலும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர் சங்கங்கள் திங்கள்கிழமை போராட்டங்களை நடத்தினர். சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு பகுதியினர் பாதாகைகளுடன், குடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவு ஆகியவற்றிற்கும் எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

படிக்க :
ஜே.என்.யூ தாக்குதலைக் கண்டிக்கும் உலகளாவிய அறிவுத்துறையினர் !
♦ காஷ்மீர் – பண்டிட் குடும்பத்தை காப்பாற்றிய சுபைதா பேஹம் !

மாணவர்களின் ஆர்பாட்டத்திற்கு திமுக எம்.பி. கனிமொழி ஆதரவை வழங்கியதுடன், “மாணவர்கள் மீதான தாக்குதல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் போன்றது. இது தொடரக்கூடாது” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

மாலை நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறையை எதிர்த்து வள்ளுவர் கோட்டம் அருகே மத்திய மாணவர் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர் சங்கத்தின் கூட்டமைப்புடன் பல மாணவர் நல அமைப்புகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சுமார் 200 பேர் இதில் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

“எழுத்தாணிகள் லத்திக்கள் அல்ல” மற்றும் “நாங்கள் ஜே.என்.யூவுடன் இருக்கிறோம்” என்று பலரும் பதாகைகளை வைத்திருந்தனர். ஏராளமான போலீசாரும் அங்கு நிறுத்தப்பட்டனர்.

ஏபிவிபி மற்றும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ இரண்டையும் தடை செய்ய கோரி தஞ்சாவூரில் உள்ள அரசு கல்லூரியின் மாணவர்களும் போராட்டம் நடத்தினார்கள்.


சுகுமார்
நன்றி : த வயர். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க