ஜே.என்.யூ மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது கடந்த ஜனவரி 5, 2020 அன்று காவிக் கும்பலால்  நிகழ்த்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து உலகம் முழுவதும் உள்ள அறிஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்டு 8747 பேர் ஒன்றிணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை !

.பி.வி.பி. -யைச் சேர்ந்தவர்களாகச் சொல்லப்படும், முகமூடி அணிந்த குண்டர்களால் ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தாக்கப்பட்டதை – இந்தியா மற்றும் வெளிநாட்டில் வாழும் ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் அக்கறையுள்ள தனிநபர்களாக – நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். பெரும் கற்கள் மற்றும் இரும்புத்தடிகளைக் கொண்டு போலீசு முன்னிலையிலேயே கடந்த ஜனவரி 5, 2020 அன்று இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்ட காலவரிசையும் உள்நோக்கமும் :

சமூகரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட பிரிவினருக்கு பல்கலைக்கழகப் படிப்பை எட்டாக்கனியாக்க கூடிய கடுமையான கட்டண உயர்வுக்கு எதிராக ஜே.என்.யூ மாணவர்கள் போராடிவருகின்றனர். இப்போராட்டம் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது.

இப்போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கத்தோடு ஜே.என்.யூ நிர்வாகத்தின் பாதுகாப்பு அலுவலர்களால் போராடும் மாணவர்கள் மீது கடந்த ஜனவரி 4-ம் தேதி அன்று வன்முறை ஏவப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு பாதுகாப்பு காமெராவில் பதிவான காணொளியின் அடிப்படையில் இத்தாக்குதலில் ஈடுபட்ட ஏ.பி.வி.பி. செயல்பாட்டாளர்கள் பிடிபட்டனர்.

இந்த வன்முறைக்கு எதிராக ஜே.என்.யூ ஆசிரியர்கள் அமைப்பினர் ஜனவரி 5-ம் தேதி பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஒரு அமைதி கூட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருந்தனர். ஜனவரி 5 அன்று கூட்டம் வளாகத்திற்குள் நடந்து கொண்டிருக்கையில், வளாகத்திற்கு வெளியே இருந்து உள்ளே நுழைந்த முகமூடி அணிந்த கும்பல் ஒன்று அங்கு அமைதியாக திரண்டிருந்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் தடிகளாலும், கற்களாலும் தாக்கத் தொடங்கியது. என்.டி.டீ.வியால் நேர்காணல் செய்யப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில் பார்க்கும் போது மாலை 6:30 மணியளவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய குண்டர்கள் வளாகத்திற்கு உள்ளே நுழைந்து தாக்குதலைத் தொடுத்திருக்கின்றனர்.

வளாக பாதுகாப்பில் ஏற்பட்ட உடைசல் :

ஜனவரி 5 அன்று ஜே.என்.யூ வளாகத்தின் பாதுகாப்பு முழுமையாக தகர்க்கப்பட்டிருந்தது. முகமூடி அணிந்த குண்டர்கள் வளாகம் முழுவதும் சரளமாகச் சென்றுவர அனுமதிக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக விடுதி கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஒரு விடுதியிலிருந்து மற்றொரு விடுதிக்குச் சென்று தேடி தாக்குதல் தொடுத்துள்ளனர். குறிப்பான விடுதிகளில் கிடைத்த காணொளிகளில் உடைந்த ஜன்னல்களும், சுற்றி இறைந்து கிடந்த பெரிய கற்களும், குண்டர்களால் நொறுக்கப்பட்ட கார்களும் தென்படுகின்றன. பெண்கள் விடுதிக்குள் அந்தக் குண்டர் படை நுழையும்போதும் கூட அங்கிருந்த வளாக பாதுகாவலர்கள் அமைதியாக நின்றுகொண்டிருந்தனர்.

ஜே.என்.யூ மாணவர் சங்கத் தலைவர் ஐய்ஷே கோஷ் ரத்தம் வழிய கடுமையாக காயம்பட்டிருக்கும் படங்களை செய்தி ஊடகங்கள் காட்டுகின்றன. தற்போதுவரை, 30 மாணவர்களும், 12 ஆசிரியர்களும் காயமடைந்திருக்கின்றனர். அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருகிறார்கள். அவர்களில் ஐய்ஷே கோஷ் உட்பட 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. பேராசிரியர் சுச்சாரிதா சென் தாக்கப்பட்டு தலையில் காயம்பட்ட படத்தையும் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

படிக்க :
ஜே.என்.யூ மாணவர்களுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் !
♦ ஜே.என்.யூ : ஒரு ஏபிவிபி ரவுடி கூட இன்னும் கைது செய்யப்படவில்லை !

வளாகம் முடக்கப்பட்டது பல்கலை நிர்வாகிகளின் ஆமைவேக செயல்பாடு :

இந்த அதிர்ச்சியூட்டக்கூடிய ஒட்டுமொத்த தாக்குதலின் போதும், மாணவர்கள் தொடர்ச்சியாக வன்முறை குறித்து புகாரளித்த போதும் ஜே.என்.யூ. நிர்வாகம் அமைதி காத்தது. இந்தத் தாக்குதல் நடத்தப்பட்ட போது வெகு சில போலீசு மட்டுமே அங்கிருந்ததை வீடியோக்கள் காட்டுகின்றன. பல்கலையின் பதிவாளர், இரவு 9 மணிக்கு மட்டுமே – அதாவது தாக்குதல் நடத்தப்பட்டு 2 மணிநேரத்துக்குப் பிறகே – அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தக் கடிதத்தை எழுதும் நேரம் வரையில் ஜே.என்.யூ துணைவேந்தர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன் குறித்து ஒப்புக்குக் கூட விசாரிக்கவில்லை.

ஏன் இத்தகைய வன்முறை ? தற்போது ஏன் இது நடத்தப்பட்டிருக்கிறது ?

அனைத்தையும் உள்ளடக்கிய சேர்க்கைக் கொள்கை மற்றும் கேள்வி கேட்கும் வகையிலான கல்வி கலாச்சாரத்துக்கான நீண்ட வரலாறு கொண்ட ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம்தான் ஜே.என்.யூ. இந்திய அரசாங்கத்தின் பாரபட்சமான கொள்கைகளுக்கு (CAA) எதிராக அமைதியான வகையில் போராடிய ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம், அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகம் மற்றும் காட்டன் கல்லூரி ஆகியவற்றின் மாணவர்கள் மீது போலீசு வன்முறை நிகழ்த்தப்பட்டு சரியாக 23 நாட்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்கப்பட்ட மாணவர் சங்கத்தின் தலைவர் ஐஷ்சே கோஷ் !

பல்கலைக்கழக வளாகத்திற்குள் பயமுறுத்தும் கலாச்சாரத்தை உருவாக்குவதற்காகவே இந்தமுறை போலீசுக்கு பதிலாக முகமூடி அணிந்த குண்டர்கள் தாக்குதல் தொடுத்துள்ளனர். என்.டி.டீ.வி செய்தியாளர் தவிர வேறு எந்த ஊடகமும் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய முடியவில்லை. ஸ்வராஜ் கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. ஊடகங்களிடம் பேசியபோது அவர் தாக்கப்பட்டார். பல்கலைக்கழகத்தின் வடக்கு நுழைவாயிலில் உள்ள தெருவிளக்குகள் அணைக்கப்பட்டன. எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் போலீசு வேடிக்கை பார்த்தது –  வன்முறையாளர்களுக்கு தடையின்றி முன்னேற வாய்ப்பளித்தது.

பல்கலைக்கழக வளாகம், பல்வேறு வேறுபட்ட பகுதிகள் – வர்க்கப் பிண்ணனிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல், விவாதம் மற்றும் கலந்துரையாடலுக்கான தளத்தை அளிக்கிறது. இதுதான் ஜனநாயகத்தின் வாழ்வூக்கமாக திகழ்கிறது. இந்திய அரசியல் சாசனத்தையும், சுதந்திரம் – சமத்துவத்துக்கான கொள்கைகளையும், பேச்சு சுதந்திரத்துக்கான உரிமையையும் காப்பாற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, ஜே.என்.யூ ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீது நடத்தப்பட்டிருக்கும் இத்தகைய தாக்குதல்கள் ஏற்றுக் கொள்ளமுடியாதவை.

பல்கலைக் கழக நிர்வாகமும், போலீசும் இந்தத் தாக்குதலுக்கு வசதி செய்து கொடுத்து உடந்தையாக இருந்தன என்ற முடிவுக்கு வரவேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கிறோம்.

படிக்க :
ஆர்.எஸ்.எஸ்-க்கு வலுசேர்க்கும் இசுலாமிய அமைப்புகளின் கவனத்திற்கு !
♦ ஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு ! | பாகம் – 1

  1. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதில் தாங்கள் தோல்வியடைந்ததற்கு பல்கலைக்கழக பதிவாளர் ப்ரமோத் குமாரும் துணை வேந்தர் மமிதாலா ஜெகதீஷ்குமாரும் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என்று கோருகிறோம். வளாக பாதுகாப்பில் ஏற்பட்டிருக்கும் இத்தகைய தோல்வி ஏற்றுக்கொள்ள முடியாதது.
  2. காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி அளிக்க வேண்டும் எனக் கோருகிறோம்.
  3. ஜனவரி 5 அன்று நடந்த நிகழ்வுகள் குறித்து நேர்மையான நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று கோருகிறோம். இந்தத் தாக்குதலைத் தூண்டிவிட்டவர்கள் தண்டிக்கப்படும் வகையில் இந்த விசாரணை நடத்தப்படவேண்டும்.

நாங்கள் ஜே.என்.யூ-வில் இருக்கும் எங்கள் சக ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் உறுதுணையாக நிற்கிறோம்.


தமிழாக்கம் :
நந்தன்
நன்றி : தி இந்து

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க