ந்தவொரு விசயத்திலும் தட்டையான விமர்சனங்களை நான் வெளிப்படுத்தியது கிடையாது. தடித்த விமர்சனங்களை அதிகம் விரும்பியதும் இல்லை. ஆனால் முஸ்லிம் ஜமாத்துகளின் போராட்டங்கள், சிலவற்றைப் பேச வைக்கிறது என்பதால் இந்தப் பதிவை மிகமிகச் சுருக்கமாக எழுதுகிறேன். மிகப்பெரும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள காலத்தில் இதையெல்லாம் எழுதவேண்டுமா என்று சிலர் நினைக்கலாம். ஆனால் முஸ்லிம்களின் போராட்ட அணுகுமுறைகள் அபாயத்தை மேலும் மேலும் அதிகரிக்கவே உதவும் என்பதால், இந்த விமர்சனப் பதிவைத் தவிர்க்க முடியாத ஒன்றாகவே கருதுகிறேன்.

பொதுவாக ஆர்.எஸ்.எஸ். எதை விரும்புகிறதோ, அதை அவர்களைவிடவும் வெகுசிறப்பாகச் செய்து தருவதில் முஸ்லிம்கள் அவ்வளவு முனைப்பு காட்டுகிறார்கள். பொதுசிவில் சட்டத்தில் முஸ்லிம் வெறுப்பு அரசியலின் சாரம் நிறைந்து இருக்கிறது என்றாலும், அது முஸ்லிம்களை மட்டுமே சீண்டிப் பார்க்கிற ஒன்றல்ல. ஆனால் முஸ்லிம் இயக்கங்களும், ஜமாத்துகளும் அதை “எல்லாத் தரப்பினருக்குமான” பிரச்சனை என்கிற வடிவத்திற்குள் செல்லவிடாமல், அவர்களின் தனியுடைமையாக தகவமைத்துக்கொண்டார்கள். அதே கதைதான் #CAA #NRC எதிர்ப்பிலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

சென்னையில் இசுலாமிய அமைப்புகள் நடத்திய CAA எதிர்ப்புப் பேரணி. (கோப்புப் படம்)

“இன்குலாப்” முழக்கத்தைப் பொதுச்சமூகம் ஓங்கி ஒலிக்க, முஸ்லிம்களோ “நாரே தக்பீர், அல்லாஹு அக்பர்” என்கிற கூக்குரல்களை எழுப்புகின்றனர். மதச்சார்பற்ற தலைவர்களை மேடைகளில் வைத்துக்கொண்டு, கிராத் ஓதி (குரான் வசனங்கள்) போராட்டத்தைத் தொடங்குகிற போக்கு நிலவுகிறது. “பிர்அவ்னையே பார்த்த கூட்டம்; பத்ருப் போரைக் கண்ட சமூகம்; 800 ஆண்டுகாலம் இந்தியாவை ஆண்ட மக்கள்” என்கிற உணர்ச்சி பிழம்புகள் முஸ்லிம் ஜமாத்துகள் ஒருங்கிணைக்கும் கூட்டங்களில் கொடி கட்டிப் பறக்கின்றன. இதுபோன்ற மூடத்தனங்களை அல்லது மடத்தனங்களை வெளிப்படையாகக் கண்டிக்காமல் கடந்து செல்ல முடியவில்லை.

“இந்து மதத்தை விமர்சிக்கிற நீங்கள் இஸ்லாத்தையும் கிறிஸ்துவத்தையும் ஏன் விமர்சிப்பதில்லை?” என்கிற கேள்விகளை எழுப்பி, முற்போக்கு ஜனநாயக சக்திகளை இந்துக்களுக்கு எதிரானவர்களாக நிறுத்தும் சங்கிகளின் பிரச்சாரங்களை எல்லோருமே நன்கு அறிவோம். இதன்விளைவாக ஜனநாயகத் தலைவர்கள் களத்தில் நிறையவே இடர்களையும், பின்னடைவுகளையும் எதிர்கொள்கிறார்கள். போதாக்குறைக்கு அவர்களை மேடையில் வைத்துக்கொண்டு “நாரே தக்பீர்” என்று முஸ்லிம்கள் முழங்குவதானது, மதச்சார்பற்றத் தலைவர்களை எவ்வளவு சங்கடப்படுத்தும் என்றோ, சங்கிகளின் பிரச்சாரத்திற்கு அது எவ்வளவு வலுசேர்க்கும் என்றோ கொஞ்சம்கூட சிந்திக்க மட்டீர்களா?

இவை ஒருபுறமிருக்கட்டும்…

பொது இடத்தில் நடத்துகிற பொதுவான போராட்டத்தில், மதம் சார்ந்த கோசத்தை முன்வைப்பது சரியான வழிமுறையா? “ஓம் காளி; ஜெய் காளி” என சங்கிகள் கத்துவதற்கும், உங்களின் செயலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. மேலும் பிர்அவ்ன் வரலாற்றைக்கூறி, “இந்த மோடி அமித்ஷாவுக்கா அஞ்சப் போகிறோம்” என்கிற வீராவேசக் கேள்விகளினால், எதை சாதிக்கப்போகிறீர்கள் தலைவர்களே?

படிக்க :
மோகன் பகவத்தின் இந்தியாவில் எல்லோருமே இந்து தான் : காஞ்சா அய்லய்யா
♦ CAA ஆதரவு – பாஜக ட்ரோல் படையின் தரம் தாழ்ந்த ‘மிஸ்டுகால் புரட்சி’ !

அறிவுப்பூர்வமான தளங்களில் சமூகத்தை வழிநடத்த வேண்டிய காலத்தில், வெற்று உணர்ச்சிகளைப் பேசிக் கைத்தட்டு வாங்குவது ஒன்றே என்.ஆர்.சி.யைத் தடைசெய்துவிடுமா என்ன? இதில் “இந்த ஆலிமின் வீரத்தைப் பாருங்கள், மாஷா அல்லாஹ்” ரகங்களில் பரவுகிற வீடியோக்களெல்லாம் எரிச்சலைத்தான் தருகின்றன. இவற்றை மற்ற சமூக மக்கள் சகித்துக்கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா? இந்துமயப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் வேள்விக்கு நீங்கள்தான் நெய் ஊற்றுகிறீர்கள்.

போராட்டத்தின் ஒரு பக்கம் இப்படியாக நீண்டுகொண்டிருக்க, மற்றொருபுறம் காறித்துப்புகிற விசயமொன்றை நேற்றுத் திருப்பூரில் கண்டேன். குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டம் ஒன்று அங்கு நடப்பதை அறிந்து, அதைக் காண்பதற்காகச் சென்றேன். அதிலும் ஸோ கால்டு ‘ஆண்ட பரம்பரை’ வசனங்கள் வழிந்து ஓடின. சரி இவர்கள் இப்படித்தானே என உச்சுக்கொட்டிவிட்டு வந்துவிட்டேன். வெளியே வந்த பிறகுதான் மேடையில் பிரதான முஸ்லிம் இயக்கங்கள் சில தவிர்க்கப்பட்டதைக் கேள்விப்பட்டேன். என்ன விசயமென்று கேட்டபோது, “இது ஷாபி ஜமாத் நடத்துகிற போராட்டம்” என்று சொன்னார்கள். அதைக்கேட்டதும் அவ்வளவு ஆத்திரம் பெருக்கெடுத்தது.

முதலில் இந்தப் போராட்டங்களை ஜமாத்துகள் நடத்துவதே அறிவற்ற போக்குதான். இதில் “அந்த ஜமாத், இந்த ஜமாத்” என்கிற பாகுபாட்டோடு நடத்துவதையெல்லாம், எந்த ரகத்தில் சேர்ப்பது? ஜனநாயகச் சக்திகளையும் சங்கடத்திற்குள்ளாக்கி, வெகுமக்களை வெறுப்பேற்றி, போதாக்குறைக்கு ஜமாத் பிரிவுகளை முதன்மைப்படுத்தி நடத்துகிற உங்களின் போராட்டங்களை “மயிரென்று” சொன்னாலும், அது மயிருக்குத்தான் இழுக்கு.

ஒன்றை நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள், நீங்கள் நடத்துகிற இந்த வகைப் போராட்டங்களை ஆர்.எஸ்.எஸ். மத்திய அரசு ஒரு பொருட்டாகவே கருதப்போவதில்லை. ஏன் எடப்பாடி அரசுகூட நமட்டுச் சிரிப்பைக் கொட்டும்படிதான் உள்ளது உங்களின் போராட்ட லட்சணங்கள்!

நன்றி : பழனி ஷஹான்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க