‘இயற்கை வாழ்வியல்’ எனும் கோமாளித்தனத்தால் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால்  ரத்தப் போக்கு ஏற்பட்டு திருப்பூரைச் சேர்ந்த இளம்பெண் கிருத்திகா கடந்த ஜூலை (2018) இறுதியில் உயிரிழந்தார்.

இந்த மூடத்தனம் குறித்து மருத்துவர்கள் உள்ளிட்டு பலரும் எச்சரித்து வந்த நிலையில், கோவை மாவட்டம் கோவைப்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் நிஷ்டை என்ற கோஷ்டியினர் வீட்டிலேயே சுகப்பிரசவம் நிகழ்வதற்கு பயிற்சியளிக்கும் நிகழ்ச்சி ஒன்றை ஆகஸ்ட் 26 -ம் தேதி நடத்த உள்ளதாக அறிவித்து விளம்பரங்கள் செய்திருந்தது.

healer bashkar
கிருத்திகா உயிரிழந்த பிறகும் ஹீலர் பாஸ்கரால் இப்படி ஒரு விளம்பரம் தைரியமாக கொடுக்க முடிகிறது என்றால்?

மேற்படி அமைப்பு ஹீலர் பாஸ்கரால் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ‘வீட்டிலேயே பிரசவம்’ விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் இதைப் பற்றி அவரது கருத்தை அறிந்து கொள்ள ஊடகங்கள் முயன்ற போது பேட்டியளிக்க மறுத்துள்ளார் பாஸ்கர்.

எனினும், இது பற்றி தமிழக டி.ஜி.பி, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் தன்னிடம் நேரில் வந்து விளக்கம் கேட்டால் மட்டுமே உரிய விளக்கம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாஸ்கரின் மோசடி விளம்பரம் குறித்து ஜான்சன் என்பவர் கோவை குனியமுத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அரசின் சுகாதாரத்துறையும் விளம்பரம் குறித்த தகவல் அறிந்து விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

நிஷ்டை கோஷ்டி குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் இந்த விளம்பரம் குறித்து ஆய்வு செய்து இருப்பதாகவும், அவர்கள் குறித்து முழு தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் கோவை மண்டல சுகாதாரத்துறை இணை இயக்குர் பானுமதி அறிவித்தார்.

விசாரணையின் போது இலவசமாக பிரசவம் பார்க்கப் பயிற்சி தருவதாக கூறி ஒவ்வொரு நபரிடமும் தலா 5 ஆயிரம் ரூபாய் நன்கொடை வசூலித்துள்ளதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து ஹீலர் பாஸ்கர்(42) மீதும் அவரது அலுவலக மேலாளர் சீனிவாசன்(32) என்பவரின் மீதும் சட்டப்பிரிவு 420 மற்றும் 511 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணைக்காக கைது செய்துள்ளனர் போலீசார்.

தொடர்புடைய கட்டுரைகள்:

திருப்பூர் கிருத்திகா மரணம் : ஹீலர் பாஸ்கரையும் பாரி சாலனையும் கைது செய் !

பிரசவகால மரணங்கள் : இலுமினாட்டி பைத்தியங்களுக்கு பதில் !

பாட்டி வைத்தியத்திற்கும் பாதுகாப்பான மகப்பேற்றிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை !

கைது செய்யப்பட்டிருப்பதாலேயே பாஸ்கரோ பாரி சாலனோ திருந்தி விடப்போவதில்லை; தங்கள் சதிக் கோட்பாடுகளைப் பிரச்சாரம் செய்யாமல் இருக்கப் போவதுமில்லை. இந்தக் கைதை தங்களது செய்ல்பாடுகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாக கம்பெனியின் சந்தையை விரிவு படுத்தவும் வாய்ப்பு உள்ளது.

இப்போதே பாஸ்கர் – பாரி ஆதரவு வாட்சப் குழுமங்களில் இவர்களின் கைதுகளுக்குப் பின் உள்ள சர்வதேச இலுமினாட்டி வலைப்பின்னலின் தொடர்பு குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருவதை கவனிக்க முடிகிறது.

மேலும், அறிவியலுக்குப் புறம்பான மூடத்தனங்களும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளுக்குமான அடிப்படை எங்கே இருக்கிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதே கோவையில் சிங்காநல்லூர் பகுதியில் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் நோயுற்ற வயதான பெண்மணி ஒருவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காமல் ‘இயேசு வந்து காப்பாற்றுவார்’ என நம்பி வீட்டைப் பூட்டிக் கொண்டு ஜெபித்துள்ளனர் பெந்தேகோஸ்தே சபையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர். பின்னர் அந்தப் பெண்மணி இறந்த பின்னும் மேலும் சில வாரங்களுக்கு வீட்டைத் திறக்காமல், சாப்பிடாமல் தொடர்ந்து ஜெபித்து வந்துள்ளனர்.

பின்னர் அக்கம் பக்கத்தவர்கள் துர்நாற்றம் வருவதை அறிந்து காவல்துறைக்கு தகவல் அளித்து கதவை உடைத்துத் திறந்த பார்த்தால் குழந்தைகள் உட்பட அக்குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் எலும்பும் தோலுமாக உயிருக்குப் போராடிய நிலையில் அழுகிய பிணத்தோடு வழிபாடு செய்து வந்தது தெரிய வந்தது .

அப்போது காவல் துறையினரிடம் ‘தங்களது ஜெபத்தால் இயேசு இறங்கி வந்து மரித்துப் போன தங்கள் தாயை உயிர்ப்பித்து தந்து விடுவார்’ என நம்பியே தொடர்ந்து ஜெபித்ததாக அக்குடும்பத்தினர் தெரிவித்தனர். இச்செய்தி அப்போதே பத்திரிகைகளில் வெளியானது.

superstitions in religionசமீபத்தில் தில்லியில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்த 11 பேர் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட செய்தி பத்திரிகைகளில் வெளியானது. இன்னும் அந்த தற்கொலைகளுக்கு என்ன காரணம் என்பதை போலீசார் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருவதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும், அக்குடும்பத்தினர் ஏதோவொரு இந்து மதப் பிரிவையோ சாமியாரையோ பின்பற்றி வந்தனர் என்பதும், குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட விதத்தில் தற்கொலை செய்து கொண்டால் மோட்சம் கிடைக்கும் என அங்கிருந்த டைரிகளில் எழுதி வைக்கப்பட்டிருப்பதும் விசாரணையில் வெளியானது.

காசியில் செத்தால் மோட்சம் என்பதற்காக அங்கே சாவதற்காகவே செல்வோர் எத்தனை பேர்? அனாதைப் பிணங்களைச் சுமந்து கங்கை நதி மாசடைந்திருப்பது குறித்து எத்தனை ஆய்வுகள் வெளியாகியுள்ளன? இன்னும் பாரசீகத்தில் ஐ.எஸ் எனும் காட்டுமிராண்டிக் கூட்டம் இசுலாத்தின் பெயரில் எண்ணிறந்த கொடூரங்களை நிகழ்த்தி வருகிறது.

தொடர்புடைய கட்டுரை:

ஆன்மீகத்தால் அச்சுறுத்துகிறார்  செந்தமிழன்!

ஆக, மூடத்தனங்களுக்கு ஹீலர் பாஸ்கர், பாரி சாலன் போன்ற ஒரு சில தனிநபர்கள் மட்டும் காரணமல்ல.

அறிவியலுக்குப் புறம்பான பிற்போக்குத்தனமான சிந்தனை முறையும் அந்த சிந்தனை முறை நீடித்து நிற்பதற்கான சமூகச் சூழலும் தான் ஹீலர் பாஸ்கர் பாரி சாலன் போன்றோரை உற்பத்தி செய்கின்றது.

இவர்கள் மூடத்தனங்களுக்கு பலியாகும் அளவுக்கு பலவீனமாய் உள்ள மக்களைப் பயன்படுத்திக் கொள்ளும் குற்றவாளிகள் எனும் வகையில் இவர்கள் தண்டனைக்குரியவர்கள் ஆகிறார்கள். இந்தியாவில் மதம், சடங்கு பெயரில் ஏற்கனவே இருக்கும் மூடநம்பிக்கைகள் உலகமய – இணைய காலத்தில் வேறு அவதாரங்கள் எடுக்கின்றன. இவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுப்பது, இவர்களது பயிற்சி முகாம்களை அம்பலப்படுத்துவது, மக்களிடம் பிரச்சாரம் செய்வது அனைத்தும் இடையறாமல் செய்ய வேண்டியிருக்கிறது.

அறிவியலுக்குப் புறம்பான மூடத்தனங்களை எள்ளி நகையாடும் நிலைக்கு சமூகம் வளரும் போது இவர்கள் வெறும் காமெடியன்களாக புறக்கணிக்கப்பட்டும் சிறுமைப்பட்டும் போவார்கள். அவ்வாறான ஒரு சமூக சூழலை உண்டாக்கப் போராடுவதும், அதற்காகப் பிரச்சாரம் செய்வதும் நம் அனைவரின் கடமையும் ஆகிறது.

  • சாக்கியன்

தொடர்புடைய செய்திகள் :