சிசேரியன் எனும் உயிர்காக்கும் சிகிச்சை !

சிசேரியன் மூலம் பிரசவம், என்பதை பெரும் சதியாக சிலர் பேசுகின்றனர். ஆனால் உண்மை என்ன என்று விளக்குகிறது இக்கட்டுரை.

சிசேரியன் என்றால் என்ன ?

பெண்கள் கர்ப்பமுற்று, கர்ப்ப காலத்தில் அல்லது பிரசவிக்கும் நேரத்தில் ஏற்படும் இடர்களைக் களைந்து, அடி வயிற்றில் அறுவை செய்து கர்ப்பப்பையில் இருந்து குழந்தையை எடுக்கும் சிகிச்சை முறைக்கு பெயரே சிசேரியன் ஆகும்.

இதை மருத்துவ வழக்கில் LSCS என்போம். அதாவது lower segment caesarean section என்று விரிவாக்கம் செய்யப்படுகிறது.

மாதிரிப்படம்

இந்த சிகிச்சை முறை பன்னெடுங்காலமாக வழக்கில் இருந்து வந்துள்ளது. இந்தியாவில் கிபி 300-களில் மவுரிய அரசு ஆட்சியில் இருக்கும் போது
பிந்துசாரரின் தாயார் கர்ப்பமாக இருக்கையில், தவறாக விசத்தை உண்டு இறந்து விடுகிறார்.

சந்திரகுப்தரின் ஆசிரியரும் அரசின் ஆலோசகருமான சாணக்கியர் ராணியின் வயிற்றை கிழித்து மகவை வெளியே எடுத்ததாக வரலாறு கூறுகிறது. இதே முறை ரோமானிய அரசுகளிலும் புழக்கத்தில் இருந்துள்ளது

இந்த சிகிச்சை முறையினால் நாம் அடைந்த நன்மை என்ன?

சுமார் 40 – 50 வருடங்களுக்கு முன்பெல்லாம் இந்த சிசேரியன் நமது தமிழ்நாட்டில் அவ்வளவு பரிச்சயம் கிடையாது. கடந்த 30 வருடங்களாக இந்த சிகிச்சை நமது தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வருகிறது.

வீட்டில் பிரசவம் நடக்கையில் பிரசவத்தின் போது நிகழும் பல பிரச்சினைகளுக்கு நமக்கு வழி தெரியாமல் இருந்தது.

கர்ப்ப கால பரிசோதனைகள் மூலம் கண்டறியப்படும் பல பிரச்சனைகளை கருத்தில் கொண்டு குழந்தை மற்றும் தாயின் உயிரைக்காக்க முன்னெச்சரிக்கையாக சிசேரியன் செய்யப்படும்.

காரணங்கள் பல அவை என்னென்ன?

1. தாயின் இடுப்பெலும்பு குறுகிய தன்மை இதை cephalo pelvic disproportion என்றோம். குழந்தையின் தலை கீழே இறங்குவது தடைபடும் இதனால் பிரசவம் நிகழாமல் குழந்தை உள்ளே இறந்து அதன் விளைவாய் தாயும் இறப்பாள்.

cephalo pelvic disproportion பொதுவாக 140 – 145 CM அளவுக்கு கீழ் வளர்ச்சி உள்ள தாய்மார்களுக்கு இடுப்பெலும்பு குறுகலாக இருக்கும். இன்னும் வளர்ந்த தாய்மாரில் சிலருக்கும் கர்ப்ப காலத்திலும் இடுப்பெலும்பு அளவு குறுகலாக இருப்பது கண்டறியப்படுகிறது. சிலருக்கு குழந்தையின் தலை பெரிதாக இருப்பதால் இந்த நிலை ஏற்படும்

2. அசாதாரண குழந்தை இருப்பு நிலை ( abnormal presentation) குழந்தையின் தலை கீழ் இருப்பது சாதாரண நிலை 100-க்கு 95 சதவிகிதம் சாதாரண நிலையிலும் 5 சதவிகித குழந்தைகள் குதம் கீழாகவோ, பக்கவாட்டில் படுத்துக்கொண்டோ இருக்கும்.

இத்தகைய நிலைமைகள் ஸ்கேன் மூலம் கண்டறியப்பட்டு இறுதிவரை அவை தலைகீழ் நிலைக்கு வரவில்லையெனில் சிசேரியன் மூலம் எடுக்கப்படுகின்றன.

3. தாய்க்கு ரத்த கொதிப்பு மற்றும் அதை ஒட்டிய பிரசவத்தின் போது வரும் வலிப்பு நோய் ( இதை eclampsia) என்று கூறுவோம். இத்தகைய கர்ப்பிணிகளை தொடர் சோதனைகள் மூலமே கண்டறிகிறோம்.

இவர்கள் பிரதிமாதம் மருத்துவரை சந்தித்து ரத்த அழுத்தம் சோதிக்கப்பட்டு ஸ்கேன் மூலம் குழந்தையின் நலத்தை சோதித்து ரத்த அழுத்தம் மாத்திரைகள் கொண்டு கட்டுக்குள் வைக்கப்படுகிறது.

இந்தநோயினால் பிரசவமாகும் போது வலிப்பு வந்து பல தாய்மார்களின் இழப்புக்கு காரணமாக இருப்பதால் இத்தகையோருக்கு அவர்களது கர்ப்ப கால முடிவில் சிசேரியன் செய்து குழந்தை எடுக்கப்படுகிறது

4. கர்ப்ப காலத்தில் நீரிழிவு தாய்மார்களுக்கு வருவதை கண்டறிந்து அவர்களுக்கு உணவு முறை மாற்றம் மற்றும் இன்சுலின் சிகிச்சை அளிக்கப்படுகிறது இத்தகையோரின் குழந்தை சாதாரண நிலையை விட அதிகமாக வளரும் தன்மையுடன் இருக்கும் இதை macrosomia என்றோம்.

இத்தகைய குழந்தைகள் பிறக்கையில் 4 முதல் 5 கிலோவுடன் தலை பெரிதாக இருக்கும் ஆகவே இத்தகைய தாய்மார்களும் சிசேரியன் செய்யபடும் வாய்ப்பு அதிகமாகிறது.

5. இரட்டை கர்ப்பம் கொண்ட தாய்மார்களுக்கு சிசேரியன் செய்யப்பட்டு குழந்தைகள் எடுக்கப்படுகின்றன இதனால் குழந்தைகள் இறப்பு குறைகிறது.
தாய்மார் இழப்பும் குறைகிறது.

6. தாய்மார்களுக்கு இதய நோய் இருப்பின் அவர்களால் பிரசவகால வலி மற்றும் ஆற்றல் விரயத்தை தாக்குப்பிடிக்க முடியாது. ஆகவே அவர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிசேரியன் செய்யப்படுகிறது.

இவையனைத்தும் தாய் சேய் உயிரை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிசேரியன் செய்ய காரணங்களாக அமைகின்றன.

அடுத்த பாகத்தில் பிரசவத்தின் போது ஏற்படும் இடற்பாடால் சிசேரியன் செய்ய வேண்டிய நிலை ஏன் ஏற்படுகிறது என்பதை பார்ப்போம்.

(தொடரும்)

நன்றி: ஃபேஸ்புக்கில் Dr.ஃபரூக் அப்துல்லா,MBBS.,MD., சிவகங்கை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க