சென்னை லயோலா கல்லூரியில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு நடத்திய ‘ஐம்பூதம்’ சுற்றுச்சூழல் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். காலை முதல் மாலை வரையிலான நிகழ்வில் சுமார் 400 பேர் கலந்து கொண்டதும், அனைவரும் இறுதிவரை கலைந்து செல்லாமல் இருந்ததும் ஆச்சரியமாகவே இருந்தது. அனைத்து வகைகளிலும் நமது சுற்றுச்சூழல் கெடுத்துக் குட்டிச்சுவராக்கப்படும் நிலையில் இதுபோன்ற கருத்தரங்குகள் நடத்தப்படுவதும், அதில் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்வதும் நம்பிகை அளிக்கும் அம்சமே. ஆனால் அங்கு என்ன பேசினார்கள் என்பதை மனதில் அசை போட்டால் அச்சமாக இருக்கிறது.
நீர், நிலம், காற்று, நெருப்பு, விசும்பு என்ற ஐம்பூதங்களைப் பற்றி பேசுவதுதான் நிகழ்ச்சி நிரல். காலை தொடங்கி மாலை வரையிலான இந்நிகழ்வில் பலரது பேச்சின் சாரம் என்னவென்று பார்த்தால், எல்லோரும் ஏதோ ஒரு வகையில் அறிவியலை கறாராக நிராகரித்தார்கள். ‘கடந்த 100, 150 ஆண்டு கால அறிவியலின் வருகைக்குப் பிறகுதான் நமது பழமை சீரழிக்கப்பட்டது; அதுகாறும் இருந்து வந்த தமிழ் வாழ்வின் தொன்மை அழிக்கப்பட, அறிவியலின் வளர்ச்சியேக் காரணம்’ என்பதே அன்றைய அமர்வின் சாரமான குரல். அறிவியலை மட்டுமல்ல… சிலர் அறிவையும் நிராகரித்தனர்.
‘அறிவு என்று நாம் குறிப்பிடுவது புலனறிவையே. அது தர்க்கம் செய்யக் கூடியது. புலன்களுக்கு அப்பாற்பட்ட மெய்யறிவே உண்மையானது’ என்றார் நெருப்பு குறித்து உரையாற்றிய செந்தமிழன்.(செந்தமிழன் – பாலை திரைப்பட இயக்குநர். தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சி தலைவர் பெ.மணியரசனின் மகன்)
மற்றவர்கள், ரசாயன உரத்தால் நிகழ்ந்த கேடுகள்; நமது நீர்நிலைகள் எப்படி ஆக்கிரமிக்கப்பட்டன என்பது போன்ற தரவுகளை முன்வைத்து அறிவியலின் வன்முறை குறித்துப் பேசினார்கள். அதில் அறிவியல் பூர்வமான ஒரு ‘தர்க்கம்’ இருந்தது. ஆனால் செந்தமிழனோ அறிவு, அறிவியல், தர்க்கம் அனைத்தையுமே நிராகரிக்கக் கோருகிறார். அதை கொள்கைப் பூர்வமாக நிறுவவும் முயற்சிக்கிறார்.
ஏன் இவற்றை நிராகரிக்க வேண்டும்? ஏனென்றால் அறிவியல் வளர்ச்சி வந்த பிறகுதான் ரசாயன உரம் வந்தது. அறிவியல்தான் அணு உலையைக் கொண்டு வந்தது. அறிவியல்தான் தொழிற்சாலைகளைக் கொண்டுவந்தது. அறிவியல்தான் இந்த பூமியை நாசப்படுத்தியது. மொத்தத்தில் இன்று நாம் எதிர்கொள்ளும் அனைத்து சிக்கல்களுக்கும் மூலாதாரமாக இருப்பது அறிவியலே. ஆகவே அந்த அறிவியலை எதிர்க்க வேண்டும்; அதற்கு அடிப்படையாக இருக்கும் அறிவையும்; அறிவுக்கு அடிப்படையாக இருக்கும் தர்க்கத்தையும் எதிர்க்க வேண்டும். இதுவே அவரது வாதத்தின் சாரம். ஆனால் உண்மை என்ன?
அறிவும், அறிவியலும்தான் மனித குல வளர்ச்சியின் தோற்றுவாய். வெறும் பிண்டமாய் இந்த அண்டத்தில் பிறந்த மனிதன் தன் நெடிய உழைப்பால், அதன் மூலம் பெற்ற பட்டறிவால், அறிவை வளர்த்துக் கொண்டான். கிடைத்த அறிவை கொண்டு நடைமுறையில் ஈடுபட்டு அதை மேலும் மெருகூட்டினான். புதியனவற்றை கண்டடைந்தான். மூளை என்ற பருப்பொருள், புறநிலையோடு வினையாற்றி அவனுடைய அறிவின் சோதனைச் சாலையானது; அறிவியல் பிறந்தது. இன்று மனிதகுலம் எட்டிப் பிடித்திருக்கும் அறிவு முதிர்ச்சியின் ஒவ்வொரு இழையும் மதிப்பிட இயலாத அளவுக்கான மனிதர்களின் கூட்டு உழைப்பால் பின்னப்பட்டுள்ளது.
இன்றைய நமது ஆய்வு மனப்போக்கும், ‘பூமியில் முதல் மழை பெய்தபோது மரங்களே இல்லை’ என்ற அறிவும் நமக்கு வந்துசேர பல கோடி மனிதர்கள் உழைத்துள்ளனர். அவர்களின் உழைப்பின் பலன் அறிவாக சேகரிக்கப்பட்டு, பெரும் அறிவியலாக வளர்ந்து நம்மிடம் வந்து சேர்ந்துள்ளது. இந்த தொடர் ஓட்டத்தின் இறுதிப் படியில் இருந்து விலகி நின்றுகொண்டு, அறிவுத்துறையின் வரலாற்றுப் பங்களிப்பையும், அதன் தொடர்ச்சியையும் மறுதலிப்பது நீதியற்றது. அதாவது நமது இன்றைய சிந்தனைப் புலம் என்பது நாம் பிறந்து நாமே சுயமாக உருவாக்கிக் கொண்டதல்ல. அது இந்த பிரபஞ்ச இயக்கத்தின் நீட்சி. அதனால் அறிவு சொல்வதைக் கேட்காதே, அறிவியல் வேண்டாம் என்ற வாதம் தன்னளவிலேயே முரண்படுவதுடன், அது இப்பூமியின் இயங்கியலுக்கு எதிராகவும் உள்ளது.
இன்றைய குடியிருப்புகள், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, இணையம், மருத்துவம் என்று அறிவியலின் சாதனையில்தான் நமது வாழ்க்கை ஓடுகிறது. இவை பெரும்பான்மை மக்களுக்கு கிடைக்க வேண்டும், அவர்களது நலனைக் கொண்டிருக்க வேண்டும் என்று போராடுவது அறிவியலுக்கு எதிரான போராட்டம் அல்ல.
அதேபோல இவர்கள் தர்க்கத்தை நிராகரிக்கக் கோருகின்றனர். இதுதான் இருப்பதிலேயே அபாயமானது. ‘கேள்வி எல்லாம் கேட்காதே… சொன்னதை நம்பு’ என்கிறார்கள். நம்பிக்கை வரவில்லை என்றால் ‘யோக்கியன் கண்ணுக்கு கடவுள் தெரிவார்’ என்பதைப் போல, ‘உள்ளுணர்ச்சியால் உணருங்கள்’ என்கிறார்கள். இதைத்தான் நித்தியானந்தாவும், ஜக்கி வாசுதேவனும், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரும் சொல்கிறார்கள். ‘புற உலகம் பிரச்னைகளால் சூழ்ந்திருக்கிறது. அவற்றில் இருந்து விடுபட கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்யுங்கள்’ என்று இந்த சாமியார்கள் சொல்வதன் அருஞ்சொற்பொருள்தான் இவர்கள் சொல்வதும். இரு தரப்பும் சொல்வது ‘அறியாமையே இன்பம்’. இன்பம்தான், ஆனால் யாருக்கு? 2ஜி ஊழல் குறித்தோ, வைகுண்டராஜனின் தாதுவளக் கொள்ளை குறித்தோ மக்கள் அறியாமல் இருப்பது ஆளும் வர்க்கத்திற்கு இன்பமான விசயம் அல்லவா?
ஒரு விசயத்தில் லாஜிக்காக சிந்தித்து முடிவு எடுப்பது அல்ல… ‘இங்கே என்ன சொல்லப்படுகிறதோ’ அதன்படியே முடிவு எடுக்க வேண்டுமாம். ஆனால் ‘அங்கே என்ன சொல்ல வேண்டும்’ என்று முடிவு செய்வதே தர்க்கமும், அறிவும்தான். காலம் எல்லாம் பெரியார் இதைத்தான் சொல்லிக்கொண்டிருந்தார். ‘இந்த ராமசாமி சொல்றான்னு கேட்காத… நீயா சொந்தமா சிந்திச்சு முடிவு எடு’ என்றார். கேள்விகளுக்கு அப்பாற்பட்டு மக்களின் ஆழ்மனங்களில் பதிய வைக்கப்பட்டிருந்த பார்ப்பனிய இந்து மத மூட நம்பிக்கைகளை தனது தர்க்க அறிவால் தகர்த்தெறிந்தார். எல்லாவற்றையும் கேள்வி கேட்கச் சொன்னார். அவ்விதமான சிந்தனைப் போக்கை தமிழ் மனதில் ஆழப் பதித்தார். அது தவறு என்கிறார்கள் இவர்கள். எனில் எது சரி? செந்தமிழன் சொல்வது பொருளே இல்லாத உள்ளுணர்ச்சி. பொதுவாக எல்லோரும் கொஞ்சம் பொருளுடன் சொல்வது, பழைய தமிழ் மரபுக்கேத் திரும்பிப் போக வேண்டும் என்பது.
இது சற்று மசமசப்பான; தெளிவில்லாத பகுதி. பழைய தமிழ் மரபு என்றால் என்ன? தமிழ் மரபு என்பதே சாதி மரபாக இருந்துவரும் நிலையில் இவர்கள் முன்மொழியும் தமிழ் மரபு யாருக்கானது? அது தெளிவாக்கப்பட வேண்டும். நமது பழமையில் பற்றிக்கொள்ள வேண்டிய நல்ல அம்சங்கள் இருக்கின்றனதான். அதை மறுப்பதற்கு இல்லை. உலகின் எல்லா இனக்குழுவிற்குமே இப்படியான நற்கூறுகள் உண்டு. அவை அறிவியல் கண்டுபிடிப்புகளாலும், ஜனநாயகத்தின் கூறுகளாலும் ஆனவை. இவற்றைத் தவிர மற்ற கலாச்சாரக் கூறுகள் பொதுவில் வர்க்க ரீதியாகவம், பாலியல் ரீதியாகவும் பல்வேறு அடிமைத்தனங்களை ஒடுக்குமுறைகளை கொண்டவையே. இவற்றை மரபு என்ற பெயரில் தள்ள வேண்டுமே அன்றி கொள்வது கூடாது.
மொத்த உலகமும் காலத்தால் முன்நகர்ந்து வந்துவிட்ட நிலையில்; உற்பத்தி உலகமயமாகிவிட்ட நிலையில்; மூலதனம் எல்லை கடந்துவரும் நிலையில் நாம் மட்டும் பழைய மரபுக்கு எப்படித் திரும்ப முடியும்? நம்மாழ்வார், முன்புபோல மாட்டுவண்டி ஓட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தார். இது எப்படி சாத்தியம்? அது பழமையை நோக்கிய ஏகாந்தமான ஏக்கம், அவ்வளவுதான். அறிவியலும், உலகமயத்தின் உற்பத்தியும் பெரும்பான்மை மக்களுக்கு கிட்டவில்லை, அவர்களின் நலன்களை கணக்கில் கொள்ளவில்லை என்ற நமது புரிதல் ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்தை எதிர்க்கும் அரசியலின் பாற்பட்டதே அன்றி அறவியலை நிராகரிக்கும் முட்டாள்தனம் அல்ல.
‘‘பழமைக்குத் திரும்ப வேண்டும் என்றால் பழமையின் சிறுமைகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு திரும்ப வேண்டும் என்பது இல்லை. அதன் நல்ல அம்சங்களை மீட்டு எடுக்கலாம்’’ என்று இதற்கு சிலர் விளக்கம் சொல்லலாம். ஆனால் அத்தகைய தெளிவான பிரிகோடு இவ்விசயத்தில் இல்லை. அதனால்தான் சூழலியல்; மாற்று மருத்துவம் பேசுவோர் தங்கள் மன விருப்பத்திற்கு ஏற்ப இதற்கு வியாக்கியானம் கொடுக்கிறார்கள். தமிழ் மரபில் இவ்வளவு வீராப்பாய் இருக்கும் செந்தமிழன் தனது பாலை படத்தை கூத்து கலை வடிவத்தில் கொண்டு செல்லாமல் அதிநவீன சினிமா வடிவத்தில் கொண்டு சென்றது ஏன்?
செந்தமிழன் பேசும்போது, ‘‘நமது முன்னோர்கள் வெறுமனே தர்க்க அறிவியல் பேசியவர்கள் அல்ல. அவர்கள் தமக்கு மேலான சக்திகளை வழிபட்டு, வழிபட்டுத்தான் அனைத்தையும் பதிவு செய்தார்கள். அவை எல்லாம் மூட நம்பிக்கை என்று புறந்தள்ளுவது, குறுகிய மனப்போக்கு கொண்ட சுயநலம் என்பது என் வலுவான கருத்து’’ என்று சொன்னார்.
இதை எப்படி புரிந்துகொள்வது? தமிழ் மரபில் மூட நம்பிக்கைகளே இல்லையா? அல்லது ‘நெற்றியில் திருநீர் பூசுவது நீர்கொள்வதைத் தடுக்கும்’, ‘தோப்புக்கரணம் போடுவது உடற்பயிற்சி’, ‘வாசலில் கோலம் போடுவது எறும்புகளுக்கு உணவு’, – என மூட நம்பிக்கைகளுக்கு முற்போக்கு பெயிண்ட் அடித்தால் அவை இல்லை என்றுதான் ஆகிவிடுமா? இல்லை பூனை குறுக்கிட்டால் கெட்ட சகுனம், விதவைகள் எதிர்கொண்டால் காரியங்கள் நிறைவேறாது போன்றவற்றுக்கும் கூட முற்போக்கு பெயிண்ட் அடிக்க முடியாதா?
சிக்கல்கள் அனைத்தும் புறவயமாக இருக்கின்றன. தீர்வுகள் மட்டும் எப்படி அகவயமானதாக இருக்க முடியும்? மீத்தேன் வாயுத் திட்டம் டெல்டா மாவட்டங்களை சூறையாட கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதன் அபாயம் குறித்து மக்களிடம் பிரசாரம் செய்துதான் அணிதிரட்ட முடியுமேத் தவிர அகவயமாக இதற்கு தீர்வு காண்பது எப்படி? கெயில் நிறுவனம் குழாய்களை பதித்துக்கொண்டிருக்கும்போது நாம் உள்ளொளி தரிசனத்தை தேடிக் கொண்டிருந்தால் அது யாருக்கு ஆதாயம்? புற சிக்கல்களை உரத்துப் பேசி, தர்க்கக் காரணிகளைக் கண்டறிந்து, மக்களிடம் அறிவியல் பூர்வமாக விளக்கி பேச வேண்டும். இதை விட்டுவிட்டு ஆழ்மனம், உள்மனம் என்று பேசுவதும் இதை ஒரு கருத்தாக பரப்புவதும் ஆளும் வர்க்கத்திற்கு லாபம் தரக்கூடியது.
அது மட்டும் அல்ல… இத்தகைய வாதங்கள் எளிதில் இந்து மத நம்பிக்கைகளுடன் சென்று இணைந்து கொள்கின்றன. பாரம்பரியம், தமிழ்ப் பண்பாடு, சித்தர் மரபு, தமிழர் மரபு , இந்து மரபு என்பதாக இந்த இணைவு அமைகிறது. இந்தக் கூட்டத்தில் பேசியவர்கள் மட்டுமல்ல… இன்று சித்த மருத்துவம், தொடு சிகிச்சை, அக்குபஞ்சர், யுனானி போன்ற மாற்று மருத்துவ முறைகளை மேற்கொள்ளும் அனேகம் பேர் இக்கருத்தின் சாரத்தை ஏற்றுக்கொள்கின்றனர்.
செந்தமிழன் பேசும்போது இதை வெளிப்படையாகக் குறிப்பிட்டார். சித்த மருத்துவம், மனித உடலை ஐந்து சக்கரங்களாகக் குறிக்கிறது என்ற அவர், ‘‘திருமூலருக்கு 300 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த ஆதிசங்கரர் இதையே வேறுவிதமாக சொன்னார். அவர் தனது சௌந்தர்ய லஹரியில் நிலம், நீர், காற்று, நெருப்பு, விசும்பு ஆகியவற்றுக்கு தனித்தனியாக கடவுள்களை குறிப்பிடுகிறார். கடவுள்களைத் தூக்கிக் குப்பையில் போடுங்கள். ஆனால் அவர் சொன்ன செய்தி சரியானது. அதை நிராகரித்தால் இந்த பிரபஞ்சம் பற்றிய மெய்யறிவையும் நாம் நிராகரிக்கிறோம் என்று பொருள்’’ என்றார்.
இன்றைய அறிவியல் விளக்கிய பிரஞ்ச இயக்கத்தை அன்றே ஆதி சங்கரர் சொன்னார் என்பது ஆர்.எஸ்.எஸ் முதலான மதவாதிகள் அகண்ட பாரதத்தில் பொதிந்து வைத்திருக்கும் பொற்கால நம்பிக்கை. இது இந்து மதத்திற்கு மட்டுமல்ல வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு மத நூல்களை புரட்டி பார்க்கும் ஏனைய மதங்களுக்கும் பொருந்தும். தமிழினவாதம் பேசிய செந்தமிழன் எவ்வளவு இயல்பாக ஆர்.எஸ்.எஸ்-ஆல் வென்றெடுக்கப்பட்டிருக்கிறார் பாருங்கள்!
தமிழ்த் தேசியத்தின் மீது ஒரு படலமாக படிந்துள்ள இந்து மரபு இதுபோன்ற முட்டாள்தன்மாக கருத்துக்களை உவகைமிகு உள்ளுணர்ச்சியுடன் அரவணைத்துக்கொள்கிறது. செந்தமிழன் சீமான் மும்பையில் தாக்கரே பெருமகனாருடன் முழங்கியதும், இன்று வைகோ மோடியுடன் கட்டிப்பிடித்து குலாவுவதும், நெடுமாறன் எங்கு சென்றாலும் அர்ஜுன் சம்பத்தை முதன்மைப்படுத்துவதும், யாழ்ப்பாணத்து வேளாள ஆதிக்கம் ஈழதமிழ் போராட்டத்தில் செல்வாக்கு செலுத்தியதும் வேறு, வேறு அல்ல. இவை அனைத்தும் ஒன்றின் மீது ஒன்று மேற்பொருந்தக் (superimpose) கூடியவை.
இன்று மாற்று மருத்துவம் பல வகைகளில் நன்மைத் தரக்கூடியதாக இருப்பது உண்மை. அனைத்தையும் குணமாக்கவில்லை என்றாலும் எளிய வழிகளில் பல நோய்களை குணப்படுத்துகிறது. நாம் இதை உணர்கிறோம். இதை நிராகரிக்கும் அலோபதியினர் சொல்வது என்ன? ‘இது அறிவியல் பூர்வமானது இல்லை’ என்பதுதான். அதை அறிவியல் பூர்வமாக நேர்வழியில் நின்று தர்க்கப்பூர்வமாக எதிர்கொள்ள வேண்டும். மாறாக அறிவியலையே நிராகரிக்கக் கூடாது. பன்னாட்டு மருந்து நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படும் அலோபதி மருத்துவத்தின் அறிவை நாம் மக்கள் நலன்பால் எதிர்கொள்வதற்கு அறிவியலே ஆயுதம் அன்றி மூடநம்பிக்கை அல்ல.
இன்றைய நவீன அறிவியல் பெரும் முதலாளிகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மக்களை சோதனை எலிகளாக்கி ஈவு இரக்கமின்றி சம்பாதிக்கின்றனர். லாபவெறிக்காக புதிய, புதிய நோய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு தனிநபரும் ஏதோ ஒரு விதத்தில் நோயாளியாக மாற்றப்பட்டுள்ள நிலையில், மருத்துவத்திற்கு செலவழித்து மாளவில்லை. இதனால் மக்கள் அலோபதி மருத்துவ முறையின் மீது நம்பிக்கை இழந்து மாற்று மருத்துவங்களை நோக்கி வருகின்றனர். அப்படி வருபவர்களை, மாற்று மருத்துவத்தின் நேர்மறை அம்சங்களை அறிவியல்பூர்வமாக விளக்கிக்கூறி ஏற்கச் செய்ய வேண்டுமே அன்றி மதவாத நம்பிக்கைகளின் மூலம் அல்ல. சித்த மருத்துவத்தை அரசு கல்லூரிகளில் அறிவியல்பூர்வமாக பயின்று வேலை செய்யும் மருத்துவர்களை விட சேலம் சிவராஜ் வைத்தியர்கள் அதிகம் செல்வாக்குடன் இருக்கின்றனர். இது அறியாமையின் விளைவே அன்றி ஆரோக்கியமான போக்கு அல்ல.
அறிவியல் தப்பு, தர்க்கம் தவிர், உள்ளுணர்வால் உணர் என்று போதிப்பதும், தர்க்க அறிவற்ற கூடுகளாக மாற்றுவதும், இறுதியில் இவை எல்லாம் பார்ப்பனிய இந்து மத மந்தைக்குள் அடைக்க முயற்சிப்பதில்தான் போய்ச்சேருகிறது. பல டசன் கார்ப்பரேட் இந்துமத சாமியார்கள் துவங்கி, தெருக்கோடியில் இருக்கும் சாதாரண சாமியாடிகள் வரை இத்தகைய கேள்விக்கிடமற்ற நம்பிக்கையை வைத்துத்தான் கல்லாவையும் கட்டுகிறார்கள், காலத்தையும் ஓட்டுகிறார்கள்.
‘அறிவியலே தவறு’ என்று இந்த ஓரத்துக்குப் போவதும், ‘எல்லாமே பழமையில் இருக்கிறது’ என்று அந்த ஓரத்துக்குச் செல்வதும் அறிவுக்குப் பொருத்தமற்றது. அறிவியல்தான் இன்று மனிதகுலத்தை ஆள்கிறது; அதுதான் முன்னேற்றத்தை வழிநடத்துகிறது. அதை முதலாளிகள் கைப்பற்றி வைத்துக்கொண்டு தங்கள் லாபவேட்டைக்குப் பயன்படுத்துகின்றனர். அறிவியலையே கேடாக பயன்படுத்துகின்றனர். மரபணு மாற்றப் பயிர்களுக்கு எதிராக தடை விதிப்பதைப் போன்று ஜெய்ராம் ரமேஷ் மூலம் பாவ்லா காட்டியது மத்திய அரசு. ஆனால் கடந்த வாரம், ‘மரபணு மாற்றப் பயிர்களை ஏற்றுக்கொள்ள நாம் பழக வேண்டும். அதுதான் அறிவியல் வளர்ச்சி’ என்று மன்மோகன் பேசுகிறார். இந்த அயோக்கியத்தனத்தை நாம் எதிர்க்க வேண்டும்; போராட வேண்டும்; அறிவியல் பூர்வமாக மக்களிடையே விளக்க வேண்டும்.
முதலாளித்துவத்தை எதிர்ப்பதை விடுத்து திசை தவறி அறிவியலை எதிர்ப்பது என்பது முதலாளிகளுக்குத்தான் நலன் பயக்குமே அன்றி மக்களுக்கு அல்ல. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பல்வேறு முழக்கங்கள் அப்படித்தான் அமைந்திருக்கின்றன. மேலும் இன்றைய சமூக அமைப்பில் இருக்கும் பிரச்சினைகளுக்கு காரணம் அறிவியல், தனிநபர்கள் என்று போனால் நிலவும் அரசியல் அமைப்புத்தான் அதன் மூலகாரணம் என்பதை நாம் திரிப்பதாகிவிடும். “நிலம்” எனும் தலைப்பில் பேசிய அறச்சலூர் செல்வம் இயற்கை விவசாயம் குறித்தும் குறிப்பாக மான்சாண்டோவின் தாக்குதலையெல்லாம் நன்கு அம்பலப்படுத்தியவர்தான். ஆனால் அங்கு சென்னையில் அழிக்கப்பட்ட சதுப்புநிலக்காடுகள் குறித்து பேசும் போது அந்த நிலமாக இருந்த பள்ளிக்கரணை இன்று குப்பை மேடாக இருப்பதற்கு காரணம் அரசு அல்ல, குப்பைகள் போடும் நாம்தான் என்று ஒரே போடாக போட்டார்.
இது உலக வெப்பமயமாதலுக்கு குடிசைகளில் இருக்கம் குண்டு பல்பே காரணம், ஏழைகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைதான் சுற்றுச் சூழலை கெடுக்கிறது எனும் பார்வையோடு தொடர்புடையது. ஏகாதிபத்தியங்கள்தான் இந்த பூவுலகை அழித்தும் வதைத்தும் வருகிறார்கள். அதையும் ஒரு ஏழையின் குண்டு பல்பையம் ஒப்பிட்டு பேசுவது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் அணுகுமுறை. பள்ளிக்கரணை குப்பை மேட்டிற்கு அரசு காரணம் அல்ல என்றால் திருப்பூரின் நொய்யல் நதியை கெடுத்ததில் அமெரிக்காவிற்கு பங்கில்லை, கூடங்குளம் அணுமின்நிலையத்தின் விளைவுகளுக்கு ரசியா பொறுப்பல்ல என்றும் பேசலாம். முதலாளிகளின் அரசுகளையும், ஏகாதிபத்தியங்களையும்தான் சுற்றுச்சூழலுக்கு பொறுப்பேற்க செய்ய வேண்டுமே அன்றி அதை மக்களுக்கு பொறுப்புவாக்குவது தவறு. மக்களிடம் நாம் இயற்கை குறித்த விழிப்புணர்ச்சியை விட அரசியல் விழிப்புணர்ச்சியைத்தான் அதிகம் செய்ய வேண்டியிருக்கிறது.
இன்றைய வாழ்க்கை அறிவியல் தொழில்நுட்ப புரட்சியால் நிறைந்த ஒன்று என்றால் அது அனைத்து மக்களுக்கும் கிட்டவில்லை, கிட்டவேண்டும் என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும். மாறாக எல்லாவற்றையும் துறந்து காடுகளுக்கும், பழமைக்கும் செல்வோம் என்றல்ல. செந்தமிழனாக இருந்து தற்போது செந்தமிழனாந்தாவாக மாறிவரும் பலரும் இதை புரிந்து கொள்ளமாட்டார்கள். மக்களது வாழ்விற்கும் தீர்வுக்கும் பொறுப்பேற்றுக் கொள்ளாத இத்தகைய கற்பனையில் வாழும் சாமியார்களுக்கு உணவும், உண்டியும், பேச வாய்ப்பும் கொடுப்பது மக்களின் அறிவியலே அன்றி உள்ளுணர்வு எனும் ஆன்மீக பெருங்காய டப்பா அல்ல.
– வழுதி
// தமிழ் மரபில் மூட நம்பிக்கைகளே இல்லையா? அல்லது ‘நெற்றியில் திருநீர் பூசுவது நீர்கொள்வதைத் தடுக்கும்’, ‘தோப்புக்கரணம் போடுவது உடற்பயிற்சி’, ‘வாசலில் கோலம் போடுவது எறும்புகளுக்கு உணவு’, – என மூட நம்பிக்கைகளுக்கு முற்போக்கு பெயிண்ட் அடித்தால் அவை இல்லை என்றுதான் ஆகிவிடுமா? //
இந்த மூடநம்பிக்கையினால் தனி மனிதனுக்கு என்ன தீங்கைக் கண்டீர்?
மூடநம்பிக்கையாவே இருப்பினும் அதில் ஒரு நல்ல விஷயத்தை கூறும்போது ஏற்றுக்கொள்வதில் என்ன தடை உங்களுக்கு?
தெளிவான கட்டுரை. வாழ்த்துக்கள்!
பெருங்காயம் யதார்த்தமானது. ஒருவகை மரத்தின் பிசின்.மருத்துவ குணம்கொண்டது.அதன் வாசனை பல காலம் நிலைத்திருக்கும்.ஆன்மீகம் அப்படிப்பட்டதல்ல.அது ஏமாற்று.பித்தலாட்டம்.துர் நாற்றம்.அதன் மீது செண்டு தடவுபவர்கள் தான்,ஜொக்கி,ரவி, நித்தி இத்தியாதிகள்.செந்தமிழனின் கருத்துக்களுக்கு மணியரசனைப் பொறுப்பாக்க முடியாது? வழுதி எழுதியது ஆழமான ஆய்வு.உள்,வெளி உலகம் பற்றிக் குழம்புகிறவர்கள் கூர்ந்து படிக்க வேண்டும்.செந்தமிழனை விட்டுவிடலாம்.பஞ்சபூதங்களையும் அறிவியலையும் பிடித்துக் கொள்ளவேண்டும்.
ஆழமான கட்டுரை. வாழ்துக்கள் .
அப்பனுக்கு தப்பாமல் பிறந்த மகன் என்றே எனக்கு தோன்றுகிறது.
அடடே . . ! நாம நெனச்சதை ‘வலிப்போக்கன்’ எழுதிட்டாரே . . ! 🤔
இருந்தாலும் நாமும் தெரிஞ்சத எழுதிவோம் . . . !
” தந்தை எட்டடி பாஞ்சா . .
தனயன் பதினாறு அடி பாய்றாரு . . “
// காலம் எல்லாம் பெரியார் இதைத்தான் சொல்லிக்கொண்டிருந்தார். ‘இந்த ராமசாமி சொல்றான்னு கேட்காத… நீயா சொந்தமா சிந்திச்சு முடிவு எடு’ என்றார். //
சொந்தமா சிந்திச்சு முடிவு எடுத்ததால் அண்ணாவுக்கும், சம்பத்துக்கும் கிடைத்த வசவுகள் அவர்களுத்தான் தெரியும்..
//இதை எப்படி புரிந்துகொள்வது? தமிழ் மரபில் மூட நம்பிக்கைகளே இல்லையா? அல்லது ‘நெற்றியில் திருநீர் பூசுவது நீர்கொள்வதைத் தடுக்கும்’, ///
அது திருநீர் அல்ல, திருநீறு. தமிழ்நாட்டில் பலரும் இந்தப் பிழையை விடுவதைப் பார்த்திருக்கிறேன். திருநீர் என்றால் Holy Water ஆனால் திருநீறு என்றால் Holy Ashes அதாவது சமக்கிருதத்தில் விபூதி. திருநீற்றைத் தான் நெற்றியில் பூசுவது வழக்கம். திருநீற்றைத் திருநீர் என்று கூறுவது தவறு.
சூழலியம் மற்றும் மாற்று மருத்துவம் குறித்த சிந்தனையை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்ல உதவும் சிறப்பானதொரு கட்டுரை.
///’அறிவியலே தவறு’ என்று இந்த ஓரத்துக்குப் போவதும்,’எல்லாமே பழமையில் இருக்கிறது’என்று அந்த ஓரத்துக்குச் செல்வதும் அறிவுக்குப் பொருத்தமற்றது///
இது இரண்டும் எதிர்,எதிர் முனைகளாக தெரியவில்லையே.
அறிவியல் மட்டுமே சரி என்பது அந்த ஓரமாக இருக்கலாம்
பழமையில் எதுவுமே இல்லை என்பது இந்த ஓரமாக இருக்கலாம்.
வறட்டுதனமான பதிவு….முற்போக்கு என்று சாயம் பூசி கொள்கிறார்கள்…
Arumaiyana padivu. Onnume puriyala. Mudalil ungal karithukkalai padivu seyyum podhu Konjam theilivaga irungal. Oru varai Kurai solli virttal naam anaithum therindavar alla.