அன்புள்ள கர்ப்பிணி தாய்மார்களே – பாகம் 2

ர்ப்பம் தரித்த மூன்றாவது மாதம் முடியும் தருவாயில் ஒரு முக்கிய பரிசோதனை செய்வது நல்லது. இந்த பரிசோதனைக்கு “NT scan” என்று பெயர் அதாவது Nuchal translucency scan.

வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் கழுத்துப்பகுதிக்குப் பின் புறம் உள்ள பகுதியில் நிணநீர் சேகரிப்பு அதிகம் இருக்கிறதா, இல்லை சரியாக இருக்கிறதா என்று பரிசோதனை செய்வதே இந்த சோதனையின் நோக்கம். நார்மல் குழந்தைகளுக்கு நிணநீர் ஓட்டம் சரியாக இருக்கும். அதனால் கழுத்துக்கு பின் நீர் சேருவது இருக்காது.

Child-Scnஇதுவே இதயத்தில் பிறவி நோய் இருக்கும் குழந்தைகளுக்கும், மூளை நரம்பியல் நோய் இருக்கும் / மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும் கழுத்துப்பகுதிக்குப்பின் நீர் அதிகமாக சேரும்.

பொதுவாக 12 வாரக்குழந்தைக்கு இந்த Nuchal translucency 3.2 mm -க்குள் இருப்பது குழந்தைக்கு பிறவிக்கோளாறு இல்லை என்பதை உறுதி செய்கிறது. சரி ஒருவேளை Nuchal translucency அதிகமாக இருந்தால் குழந்தைக்கு பிறவிக்கோளாறு கட்டாயம் இருக்கிறது என்று அர்த்தம் ஆகிவிடுமா???

நிச்சயம் ஆகாது. இந்த பரிசோதனை என்பது ஒரு screening testதான். அதாவது சமுதாயத்தில் பரவலாக செய்யப்படும் இந்தப்பரிசோதனையில் பாசிடிவ் என்று வந்தால் நோய் கட்டாயம் இருக்கிறது என்று அர்த்தம் இல்லை.

இந்த ஸ்கேனில் பாசிடிவ் தன்மை வந்தால் நாம் அதற்கடுத்து ட்ரிபிள் ஸ்க்ரீனிங் எனும் ரத்தப்பரிசோதனை செய்ய முடியும். இந்த ரத்தப்பரிசோதனையில்
தாயின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு சோதனை செய்யப்படும் ரத்தத்தில் ஆல்பா ஃபீட்டோ ப்ரோட்டின் (இது சிசு உற்பத்தி செய்யும் ஒரு புரதம்) பீட்டா HCG (இது தொப்புள்கொடியில் இருந்து உருவாகும் ஒரு நொதி) மற்றும் ஈஸ்ட்ரையால் எனும் ஹார்மோன் இந்த மூன்றையும் தாயின் ரத்தத்தில் சோதிப்பதன் மூலம் நம்மால் சிசுவுக்கு இருக்கும் பிறவி நோய்களை கண்டறிய முடியும்.

படிக்க:
அன்புள்ள கர்ப்பிணித் தாய்மார்களே | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 
♦ இந்தியாவின் பழங்கால பிரசவக் கொடுமைகள்

தாயின் ரத்தத்தில் AFP எனும் ஆல்பா ஃபீட்டோ ப்ரோட்டின் அதிகமாக இருந்தால் குழந்தைக்கு நரம்பு – மூளை சம்பந்தப்பட்ட நோய் இருப்பதாக அர்த்தம். AFP குறைவாக இருந்து HCG மிக அதிகமாக இருந்தால் குழந்தைக்கு டவ்ன் சிண்ட்ரோம் போன்ற நோய்கள் இருக்க வாய்ப்பு அதிகமாகிறது.

இத்தோடு சிசுவுக்கு மூக்கு எலும்பு உருவாகாமல் இருந்தால் டவுன் சிண்ட்ரோம் எனும் பிறவிக்குறைபாடு இருக்க வாய்ப்பு அதிகம். கர்ப்ப காலத்தின் இரண்டாவது மூன்று மாதங்களில் குழந்தை வளர்ச்சி அதற்கு பிறவிக்குறைபாடு இருக்கிறதா இல்லையா போன்ற பல விசயங்களை நம்மால் காண இயலும்.

மாதம் ஒருமுறை கட்டாயம் மருத்துவரைச் சந்தித்து ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவுகள், சிறுநீர் சர்க்கரை மற்றும் புரத அளவுகள் பரிசோதித்து வர வேண்டும்.

மூன்றாவது மாத முடிவில் ரணஜன்னி மற்றும் தொண்டை அடைப்பான் வியாதிகளுக்கு எதிரான Td எனும் தடுப்பூசியை ஒவ்வொரு கர்ப்பிணித் தாயும் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். முதல் தடுப்பூசி போடப்பட்ட ஒரு மாதம் கழித்து மற்றொரு Td ( Tetanus Diphtheria) தடுப்பூசி போட வேண்டும்.

இந்த தடுப்பூசி எதற்கு ?

குழந்தை பிறக்கும் போது ஏற்படும் ரனஜண்ணி (Neonatal tetanus) எனும் உயிர் கொல்லி நோயில் இருந்து குழந்தையைக் காக்கும். தொண்டை அடைப்பான் எனும் டிப்தீரியா நோய் வராமல் தாய் மற்றும் பிறக்க இருக்கும் சேயை காக்கும்.

இந்த மூன்று மாதங்களில் செய்ய வேண்டிய மற்றுமொரு முக்கிய வேலை.. குடற்புழு நீக்கம்.

வயிற்றில் இருக்கும் கொக்கிப்புழு, நாடாப்புழு போன்றவை ரத்தத்தை உறிஞ்சி அவை வாழும் தன்மை கொண்டவை. கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறைவது இயற்கை. இந்த புழுக்கள் ரத்த ஹீமோகுளோபின் அளவை இன்னும் அபாய அளவுக்கு குறைக்கும் தன்மை கொண்டவை. ஆகவே மருத்துவர் பரிந்துரையின் பேரில் குடற்புழு நீக்க மாத்திரை உட்கொள்ள வேண்டும்.

ஐந்தாவது மாதம் தாய்க்கு செய்ய வேண்டிய TARGET scan எனும் பிறவிக்குறைபாடு கண்டறிதல் பரிசோதனை பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.

***

ந்தாவது மாதம் 18 வாரம் முதல் 21 வாரம் வரை முக்கியமான ஒரு ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும். இதை Target scan என்று கூறுகிறோம். குழந்தையின் உடலில் ஏதேனும் உடல் சார்ந்த பிறவிக்கு குறைபாடு இருக்கிறதா என்று பார்க்கும் ஸ்கேனாகும்.

 • முகத்தில் மூக்கு எலும்பு உருவாகியிருக்கிறதா?
 • வாய்பிளவு – அன்னப்பிளவு இருக்கிறதா?
 • இதயத்தின் அறைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கிறதா?
 • குடல் பகுதி எப்படி இருக்கிறது?
 • குழந்தையின் கை மற்றும் கால்களின் வளர்ச்சி எப்படி இருக்கிறது?
 • கைகளில் விரல்கள் எத்தனை இருக்கின்றன?

என்பது வரை அத்தனையும் பரிசோதிக்கப்படும். இதன் மூலம் எந்த குறைபாடும் இல்லாத குழந்தை கர்ப்பபையில் வளர்கிறது என்று முடிவுக்கு வரலாம்.

கர்ப்பிணிகளுக்கு இந்த இரண்டாவது மும்மாதத்தின் கடைசியில் இருந்து
இரும்புச்சத்து குறைபாடு ஆரம்பிக்கும். எனவே இரும்புச்சத்துக்கான மாத்திரை நான்காவது மாதத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும்.

target scanஇந்தியாவில் 90 சதவிகிதத்திற்கும் மேல் கர்ப்பிணித் தாய்மார்கள் ரத்த சோகை எனும் அனீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்குக்காரணம் நமது வழக்கப்படி பெண்கள் வீட்டில் கடைசியாக மீதம் இருப்பதை உண்டு வாழ்ந்து வருவர்.

ஊட்டச்சத்து குறைவான உணவான அரசியை அதிகமாக உண்பர். ஊட்டச்சத்து அதிகமாக இருக்கும் முட்டை, மாமிசம் போன்ற உணவுகளை ஆண்களுக்கென; பிள்ளைகளுக்கென ஒதுக்கி வைக்கும் பழக்கம் நமது பெண்களிடையே உண்டு. இந்த வழக்கம் கல்வியறிவால் மெல்ல மெல்ல மாறிவருவது வரவேற்கத்தக்கது.

அசைவம் உண்ணும் கர்ப்பிணி பெண்களுக்கு தினமும் ஒரு முட்டை, வாரம் மூன்று முறையேனும் மாமிசம் உண்ணக் கிடைக்க வேண்டும். சைவம் மட்டும் உண்ணும் பெண்கள் கட்டாயம் புரதம் நிரம்பிய பயறு வகைகள், கடலை வகைகள், பருப்பு போன்றவற்றை அதிகம் உண்ண வேண்டும்.

காய்கறிகள் தினமும் 150 முதல் 200 கிராம் வரை உண்பது நல்லது. இன்றும் பிரசவத்தின் போதும், கர்ப்ப காலத்தின் போதும் தாய் சேய் மரணத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது “இரும்புச்சத்து குறைபாடு” எனும் அனீமியா ஆகும்.

கர்ப்பிணிக்கு முதல் மாதம் எடுக்கப்படும் Hemoglobin 12 g/dl என்ற அளவுக்கு மேல் இருந்தால் நல்லது. 10g/dl என்பது இந்திய சராசரி. இது தான் பெரும்பாலும் அனைத்து பெண்களுக்கும் இருக்கும். ஆகவே இதை நம் பெண்களுக்கு ஓகே என்ற அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

படிக்க:
உலகம் சுற்றும் எடப்பாடி – கருத்துக் கணிப்பு
♦ அசாம் – தேசிய குடிமக்கள் பட்டியல் குறிப்புகள் : முசுலீம்களுக்கு எதிரான சதி !

கர்ப்பமானது முதல் மாதங்கள் ஒன்றன் பின் ஒன்றாகச் செல்ல செல்ல அனீமியா கொஞ்சம் கொஞ்சமாக தலை தூக்கும். ஆகவே கட்டாயம் நான்காவது மாதத்தில் இருந்து இரும்புச்சத்து மாத்திரையை எடுத்துக்கொள்ள அரசு பரிந்துரை செய்கிறது.

இந்த இரும்புச்சத்து மாத்திரைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதற்கொண்டு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

அதற்கடுத்தபடியாக முக்கியமான சத்து “கால்சியம்”

கரு சிசுவாக வளர்ந்து குழந்தையாகும் போது குழந்தையின் எலும்புகள் உருவாக வேண்டும். அந்த எலும்புகள் உருவாகுவதற்கு தேவையான கால்சியம் தாயிடம் இருந்து செல்லும்.

அதாவது தாயின் ரத்தத்தில் இருந்து கால்சியம், சிசுவுக்குச் செல்லும். சிசு அந்த கால்சியத்தை உபயோகித்து தனது எலும்புகளை வளர்த்துக் கொள்ளும். தாயின் ரத்தத்தில் எப்போதும் கால்சியம் சத்து சரியான அளவில் இருக்க வேண்டும்

இதற்கு கால்சியம் சத்து நிரம்பிய எளிய உணவான முட்டைகள் உதவும். நாளொன்றுக்கு கட்டாயம் ஒரு முட்டை அல்லது இரண்டு முட்டைகள் உண்டு வருவது நல்லது. இத்துடன் கால்சியம் சத்துக்கான மாத்திரையையும் உட்கொள்ள அரசு பரிந்துரை செய்கிறது.

pregnancy-nutritionகால்சியம் சத்து குறைபாட்டால் தாய்க்கு கர்ப்ப காலம் முழுவதும் அதிகமான உடல் சோர்வு வலி ஏற்படும். குழந்தை என்பது ஒரு அழகிய ஒட்டுண்ணியாகும். ஒட்டுண்ணி வகை உயிரினங்களை Parasite என்கிறோம். குழந்தையும் தாயிடம் இருந்து சத்துகளையும் ரத்தத்தையும் உறுஞ்சி வாழ்வதாலும் வளர்வதாலும் அதுவும் ஒரு ஒட்டுண்ணி தான்.

இந்த மிகப்பெரும் ஒட்டுண்ணி உடலின் ஒரு பகுதியில் இருந்தாலும் உடல் அதை ஏற்றுக்கொள்கிறது. இதற்காக கர்ப்ப காலத்தில் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாக குறைக்கப்படும். ஆகவே pregnancy is a hypo immune state.
எனவே இந்த காலத்தில் எளிதாக நோய் கிருமி தொற்றுகளுக்கு ஆளாக நேரிடும்.

தாய்மார்கள் தண்ணீர் பருகும் விசயத்தில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். கொதிக்க வைத்து ஆறவைத்த நீரை மட்டுமே பருக வேண்டும். மிகுந்த தேவை தவிர அநாவசியமான நீண்ட தூர பயணங்களை தவிர்க்க வேண்டும். பயணம் செய்தாலும் ரயில் வண்டியை தேர்வு செய்ய வேண்டும்.

பைக் பயணங்களை குண்டும் குழியுமான சாலைகளில் செல்வதை தவிர்த்து விட வேண்டும். கூட்டமான ஜனநெரிசலான இடங்களை தவிர்க்கவும். அங்கே காற்றினால் பரவும் சளி இருமல் போன்ற நோய்கள் பரவ வாய்ப்பு அதிகமாகிறது. காய்ச்சல், சளி, இருமல் வந்தால் சுய மருத்துவம் எடுப்பது தவறு. மேலும் மருந்தகங்களில் சுயமாக மருந்துகள் எடுப்பது மாபெரும் தவறாக அமையும்.

உங்கள் மகப்பேறு மருத்துவரையோ அல்லது குடும்ப மருத்துவரையோ அணுகி மருந்துகள் எடுக்கவும். கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய அபாயகரமான மருந்துகள் உள்ளன. அவற்றை மருத்துவர்கள் மட்டுமே அறிவர்.

ஆகவே கர்ப்பிணிகள் கட்டாயம் மருத்துவரை சந்தித்து மட்டுமே மருந்துகள் உட்கொள்ள வேண்டும். ஐந்தாவது மாதத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வொன்றைப் பற்றி பின்வரும் (அடுத்த) பகுதியில் காண்போம்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

1 மறுமொழி

 1. உங்கள் கருத்துக்கள் மிகவும் தெளிவாக உள்ளது .

  கருவில் இருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை கண்டறிய
  நிறைய கருத்துக்கள் /கட்டுக்கதைகளை சொல்கிறார்கள்.
  அது உண்மையா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க