லையாளப் படங்களில் தமிழக அரசியல்வாதிகளை அடிக்கடி கிண்டல் செய்வார்கள். அப்படி கிண்டலடிக்கப்படும் பாத்திரத்தின் கெட்டப்பானது கறைவேட்டி, வெள்ளை சட்டை, கருப்புக் கண்ணாடி சகிதம் இருக்கும். மலையாளக் கரையோரத்து கிண்டல் விசயம் பாலக்காடு கணவாய் வழியாக கோவை, சேலத்தை எட்டியிருக்கும் போலும். எடப்பாடி உடனே கெட்டப்பை மாற்றிவிட்டார்.

தமிழகத்திற்கு புதிய முதலீடுகளைக் கொண்டு வரும் பெயரில் இலண்டன், அமெரிக்காவிற்கு சென்றிருக்கிறார். அங்கே கோட்டு சூட்டு சகிதம் சிரித்தவாறு நடக்கிறார். தொப்பையை கட்டுப்படுத்தும் ‘சூட்’டினால் மூச்சு விட திணறினாலும் ஒய்யாரமாக காட்சி அளிப்பதில் கவனமாக இருக்கிறார். காமரா கோணங்கள் ஆயிரத்தை அத்துப்பிடியாக மனனம் செய்திருக்கும் மோடியின் வழியில் பழனிச்சாமியும் பயணிக்கிறார். இருப்பினும் இலண்டன் விமான நிலையத்திலேயே அவரை எதிர்த்து ஆர்ப்பாட்ட வரவேற்பும் இருந்தது. அதனால் புறவாசல் வழியாக பத்திரமாக வெளியேறினார்.

கிங்ஸ் மருத்துவமனையின் கிளை தமிழகத்தில் துவங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தமாம். அந்தப் புரிந்துணர்வு ஷாட்டில் நம்மவர்கள் (மாநிறத்தவர்) அதிகம் இருக்க வெண் தோல் வேந்தர்களை பூதக்கண்ணாடி வைத்து எண்ண வேண்டியிருக்கிறது. இனி அம்மா சுகவீனம் அடைந்து அப்பல்லோ போனதற்கு பதில் அய்யாக்கள் கிங்ஸ் போவார்கள் என்று மனப்பால் குடிக்காதீர்கள். இது புரிந்துணர்வுதான். தொலைதூரக் கல்வி போல இலண்டனில் இருந்து கொண்டே கிங்ஸ் மருத்துவமனை இணைய வழி மருத்துவம் பார்ப்பது வேண்டுமானால் நடக்கலாம்.

இலண்டனை வென்று விட்ட எடப்பாடி அடுத்து பூலோக சொர்க்கம் அமெரிக்காவிற்குச் சென்றார். ஒவ்வொரு ஷாட்டிலும் புதிய கோட்டு சூட்டுக்கள், ஷூக்கள் அணிந்தாலும் வேட்டி சட்டை போல சுதந்திரமாக அவரால் நடக்க முடியவில்லை என்றாலும் நடந்தார். ஏர் பிடிக்காமலே விவசாயி பட்டம் பெற்றவர் பபல்லோ நகரத்துக்குச் சென்று அங்குள்ள மாட்டுப் பண்ணையை பார்வையிட்டு மாடுகளுக்கு வைக்கோலும் கொடுத்தார். அமெரிக்க மாடு எப்படி வளர்க்கப்படுகிறது, எப்படி சாணி போடுகிறது போன்ற தொழில்நுட்பங்களை கேட்டறிந்தார்.

பிறகு நியூயார்க் பறந்தார். அங்கு முதலீட்டாளர்கள் என்ற பெயரில் அமெரிக்காவில் பெட்டிக்கடை போன்று நடத்தும் சிறு தொழில் முனைவர்கள் 200 பேர்களை சந்தித்தாராம். அவர்களை தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தாராம் எடப்பாடி. ஏற்கெனவே அமெரிக்க நிறுவனங்கள் வெளியே போகக்கூடாது என்று ட்ரம்ப் சிம்ம சொப்பனமாக தாண்டவமாடும் நேரத்தில் இந்த பெட்டிக்கடைகாரர்கள் முதலுக்கே மோசமென்று முடிவெடுப்பார்களா என்ன? இருந்தாலும் தமிழகத்தில் இப்படி ஒரு ஜீவன் கோட்டு சூட்டில் சிரமப்பட்டு கோரிக்கை விடுக்கிறதே என்று அவர்கள் இரங்கியிருக்கலாம். என்ன இருந்தாலும் போடப்படுவது வெறும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்தானே?

படிக்க:
பாசிசத்தின் பிரதிநிதிக்கு கரிசனம் காட்டலாமா ?
♦ காஷ்மீர் குறித்து ரஜினி பேசியது ஏன் ? கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தொழில் துவங்கினால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி கேட்டர் பில்லர், ஃபோர்டு போன்ற நிறுவனங்களின் அதிகாரிகள் மற்ற பெட்டிக்கடைகாரர்களுக்கு வகுப்பு எடுத்தார்களாம். அதில் இந்தியாவின் ஆட்டோமொபைல் நிறுவனம் அதல பாதாளத்தில் வீழ்ந்திருப்பது குறித்தும் சொல்லியிருப்பார்களா தெரியவில்லை. இது போதாது என செய்தி ஒளிபரப்புத் துறை தயாரித்த ஒரு விளம்பரப் படத்தையும் அங்கே திரையிட்டிருக்கிறார்கள். அதில் தமிழகம் பூசி மெழுகி பாலிசாக ஜொலிக்கிறது. இந்த பிரசண்டேசன் பம்மாத்துகளுக்கு அமெரிக்காதான் தலைநகரம். இருட்டு கடைக்கே அல்வாவா?

இறுதியில் ஜீன் மார்ட்டின், அக்குய்ல் சிஸ்டம்ஸ், சீடஸ் பர்மா, நியூரே கெமிக்கல்ஸ், நோவிட்டியம் லாப்ஸ், ஜோஹோ ஹெல்த், எஸ்.டி. எல்.ஜி.என்., சரம்-4, எமர்சன், ஆஸ்பைர் கன்சல்ட்டிங், ரிவேச்சர்-எல்.எல்.சி., ஜில்லியோன் டெக்னாலஜீஸ் உள்ளிட்ட 16 பெட்டிக்கடை நிறுவனங்கள், தமிழ்நாட்டில் ரூ.2,780 கோடி முதலீடு செய்து, தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்களாம்.

இதன்மூலம் தமிழ்நாட்டில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இளைஞர்கள் பயன் பெறுவார்களாம்! இதன்படி ஒரு இளைஞருக்கு ரூ. 13,90,000 முதலீடாம். இலட்சக்கணக்கானோர் வேலையற்று இருக்கும் தமிழகத்தில் காகிதத்தில் உள்ள இந்த பெட்டிக்கடை முதலீடுகள் முதலில் வருமா என்பது தெரியாது. அப்படி வந்தாலும் அது எதையும் மாற்றி விடாது. ஈவண்ட் மேனேஜ்மெண்ட் போல இந்த முதலீடு மேனேஜ்மெண்ட் சுற்றுலாவை வைத்து தேம்ஸ் வென்றான், நியூயார்க் கொன்றான் என்று ரத்தத்தின் ரத்தங்கள் சுவரொட்டி ஒட்டி மீனம்பாக்கம் சுவர்களை விரயமாக்குவதைத் தவிர இந்த இன்பச் சுற்றுலாவால் எந்தப் பயனுமில்லை. ஏற்கெனவே சென்னை வர்த்தக மையத்தில் தலா 100 கோடி ரூபாயில் இரண்டு முறை நடந்த உலக முதலீட்டாளர் மாநாடுகளாலேயே எந்த பலனுமில்லை.

முக்கியமாக எடப்பாடியின் வெளிநாட்டு பயணச் செய்திகளை ஊடகங்கள் எதுவும் சொந்தமாக வெளியிடவில்லை. அவை தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இடம்பெற்றவை. அரசு விளம்பரங்களுக்காக அமெரிக்க விளம்பரங்களை ஊடகங்கள் வெளியிடுகின்றன.

இனி இன்றைய கருத்துக் கணிப்பின் கேள்வி

எடப்பாடியின் வெளிநாட்டு பயணம் ஏன்?

♣ கோட்டு சூட்டு கெட்டப்புக்காக
♣ அரசு செலவில் இன்பச் சுற்றுலா
♣ அன்னிய முதலீட்டை ஈர்க்க
♣ ஓபிஎஸ்ஸை ஓரங்கட்ட
♣ மோடிக்கு போட்டி

(பதில்களில் இரண்டை தெரிவு செய்யலாம்)
***
டிவிட்டரில் வாக்களிக்க :

யூடியூபில் வாக்களிக்க இங்கே அழுத்தவும்

2 மறுமொழிகள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க