மோடி தலைமையிலான பாஜக அரசு முதல் முறை பதவியேற்ற பின்னர் 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ‘சர்வதேச’ யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் யோகா தினத்தைக் கொண்டாட ஆயுஷ் அமைச்சகம் 2015 முதல் 2019 வரை ரூ. 114 கோடியை செலவு செய்துள்ளது.

ஆயுஷ் அமைச்சகம் அளித்துள்ள ஆர்.டி.ஐ. பதில் ஒன்றின்படி 2015-ம் ஆண்டு ரூ. 16.39 கோடியும் 2016-ம் ஆண்டு ரூ. 18.03 கோடியும் 2017-ல் ரூ.36. 80 கோடியும் 2019-ம் ஆண்டில் இதுவரை ரூ. 16.44 கோடியும் ‘யோகா விளம்பரங்களுக்காக’ மோடி அரசு செலவு செய்துள்ளது.

அரசு செலவினத்தில் ரூ. 114 கோடி மிகக் குறைவான தொகையாகத் தெரிந்தாலும் வெற்று விளம்பரத்துக்காக ஒதுக்கப்படும் இந்த நிதி, சில திட்டங்கள், தேசிய ஆணையங்களுக்கு அளிக்கப்படும் நிதியை ஒப்பிடும்போது முக்கியத்துவம் பெறுகிறது. விளம்பரத்தைத் தவிர வேறெதற்கும் தேவையில்லாத ஒன்றுக்கு மக்களின் பணம் வீணாக செலவழிக்கப்படுகிறது.

உதாரணத்துக்கு, மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உன்னத பாரத் அபியான் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் ஐஐடி-யில் பணியாற்றுபவர்களாலும் ஆய்வு மாணவர்களாலும் தோற்றுவிக்கப்பட்டது. ஊரகப் பகுதிகளில் உள்ள பிரச்சினைகளுக்கு சூழலுக்கு உகந்த தொழிற்நுட்பங்களை உருவாக்குதல் குறித்து இந்தத் திட்டம் ஆராயும். கிராமப்புற நகர்புற சமத்துவமின்மையையை குறைப்பதற்காக உருவாக்கப்பட்டது இந்தத் திட்டம். ஆனால் இத்திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது . 2018-ம் ஆண்டு யோகா தினத்துக்கு ரூ. 36.80 கோடி ஒதுக்கப்பட்டது, இந்தத் திட்டத்துக்கு ரூ. 22.40 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது.

படிக்க:
♦ 2 விநாடியில் யோகா – கோ மூத்ர ஷாம்பு – ரூ 20 இலட்ச ரதம் – ஐந்து கோடியில் சங்கிகளின் கண்காட்சி !
♦ யோகாவின் தேசத்தில் ஆரோக்கியத்தின் அருகதை என்ன ?

அதுபோல, பட்டியல் இன, பழங்குடி இன, சஃபாய் கரம்ச்சாரி மற்றும் சீர்மரபின பழங்குடிகள் ஆகிய நான்கு ஆணையங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 2017-ல் ரூ. 25 கோடியாகவும் 2018-ல் ரூ. 33.72 கோடியாக உள்ள நிலையில், யோகா தினத்துக்கு இந்த ஆண்டுகளில் ரூ. 26.42 கோடியும் ரூ. 36. 80 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளது மோடி அரசு.

ஆயுஷ் அமைச்சகம் யோகா தினத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி, வளாகங்களை வாடகைக்கு எடுக்கவும் விளம்பரத்துக்கு செலவிட்டதாக சொல்கிறது. 2018-ல் ஒதுக்கப்பட்ட நிதியை நூறு சதவீதம் செலவழித்துள்ள அமைச்சகம், இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ. 26 கோடியில் இதுவரை ரூ. 16.44 கோடியை செலவழித்துள்ளது.

மோடி அரசு, சர்வதேச சமூகத்தில் யோகாவை இந்தியாவின் மென்மையான ஆற்றலாக முன்னிறுத்தி விற்றுக்கொண்டிருக்கிறது. பழமையான உடல் நலத்தை பேணும் ‘கலை’யாக முன்வைத்து யோகா பல நோய்களை தீர்க்கும் என இந்துத்துவ சக்தி(ங்கி)கள் பரப்பிக்கொண்டிருக்கின்றன. இதற்கு அறிவியல் ரீதியிலான ஆதாரங்கள் இல்லை எனினும் மோடி அரசின் பரப்புதல்களை அங்கீகரித்து ஐநா, ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது.

ஒவ்வொரு ஆண்டும் மோடியும் அவரது சகாக்களும் யோகா தினத்தில் வெற்று விளம்பரங்கள் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அதே சமயத்தில் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்காக அமைக்கப்பட்ட ஆணையங்கள் போதிய நிதி ஒதுக்கப்படாமல் உள்ளன. ஒடுக்கப்பட்டவர்கள் மேம்பட வேண்டுமெனில் யோகா செய்யுங்கள் என ஆயுஷ் அமைச்சகம் சொல்லக்கூடும்.


அனிதா
நன்றி : டெலிகிராப் இந்தியா


இதையும் பாருங்கள்…

யோகா யோகா யோகா ! நாடே ஆகுது ஸ்வாஹா | ம.க.இ.க பாடல் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க