ஆர்.எஸ்.எஸ். தமிழக தலைமையும், துக்ளக் குருமூர்த்தி சூப்பர் தலைமையும் இணைந்து,10-வது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சி 2019, ஜனவரி 30 முதல் பிப்ரவரி 4 வரை சென்னையில் நடத்தின. சென்னை தாம்பரம் வேளச்சேரி சாலையில் 20 ஏக்கர் பரப்பளவுள்ள குருநானக் கல்லூரி வளாகத்திற்குள் 400 கடைகளை உள்ளடக்கியது இக்கண்காட்சி. அப்பட்டமான பிற்போக்கு சிந்தனை – பண்பாடுகளை முன்னிறுத்தும் இக்கண்காட்சிக்கு அனைத்து நாளிதழ்களும் போட்டி போட்டுக் கொண்டு செய்தி வரிசையில் இலவச விளம்பரங்களை அளித்தன.

ஜீவராசிகளை பேணுதல், பெற்றோர் பெரியோர் மற்றும் ஆசிரியரை வணங்குதல், பெண்மையை போற்றுதல், சுற்றுச்சூழலை பராமரித்தல், நாட்டுப்பற்று வளர்த்தல், வனம் மற்றும் வன விலங்குகளை பாதுகாத்தல், என்ற தலைப்புகளில் ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தேறின. தலைப்புக்கள் இப்படி இருந்தாலும் ஒவ்வொன்றிலும் இந்துத்துவாவின் மறைமுக பார்ப்பனிய பிற்போக்குத்தனங்கள் அப்பட்டமாக இருந்தன.

மராட்டியம், கேரளா, பஞ்சாப், கர்நாடகா, தெலுங்கானா, குஜராத் மற்றும் தமிழகத்தின் சாதிய அமைப்புகள் அனைத்தும் அங்கு கடை போட்டன. தமிழ்நாட்டில் உள்ள கொங்கு வேளாளர், ராஜ கம்பளத்தார், மறவர், வெள்ளாள முதலியார், கவுண்டர், வன்னியர், இன்னும் தமிழகத்தின் பல சாதி அமைப்புகளும் தங்களுடைய சாதிய பராக்கிரமங்களை பல்வேறு மாடல்களில் கடைவிரித்தன.

(பெரிதாகப் பார்க்க படத்தின் மீது அழுத்தவும் )

இந்நிகழ்ச்சியை காண நாம் சென்றபோது அங்கு கண்டகாட்சி நம்மை திடுக்கிட வைத்தது. நடைபயில ஆரம்பிக்கும் பள்ளி குழந்தைகள் இருந்து பள்ளி இறுதி வகுப்பு படிக்கும் மாணவர்கள் வரை ஏறக்குறைய கூட்டத்தில் பாதிப்பேர் பள்ளி சீருடையில் வந்திருந்தனர். உயர்ஜாதி கல்லூரி மாணவர்கள், இளம் பெண்கள் கேன்டீனில் வாங்கிய டில்லி அப்பளத்தை கடித்துக் கொண்டு சுற்றிக்கொண்டிருந்தனர். வயதான மாமிகளும் கறுப்பு சூத்திரர்களும் ஆன்மீகத்தை தேடி இங்கும் அங்கும் அல்லாடிக் கொண்டிருந்தனர்.

நவராத்திரி பூஜை, ஸ்ரீ கிருஷ்ண சம்ஸ்கார யோகா, பாரதிய சம்ஸ்கார, பரதமுனிவர் நடனம், விநாயகர் அகவல், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், நாம சங்கீர்த்தனம், திருவிளக்கு பூஜை, லலிதா சகஸ்ரநாம பாராயணம், மங்கள தீர்த்தம், கலச யாத்திரை என்று தெருகோடி கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நிரல்கள் மொத்தம் ஆன்மீக மற்றும் சேவை நிகழ்ச்சியாக நடந்து கொண்டிருந்தது. அறிவியல், சுதந்திரம், பண்பாடு, என்று வார்த்தைகளைத்தூவி பல்வேறு பார்ப்பன, ஆதிக்க சாதிய பெருமைகள் ஒலி, ஒளி காட்சியாக ஓடிக்கொண்டிருந்தன.

கார்ப்பரேட் சாமியா ரவிசங்கரின் வாழும் கலை மகாமித்தியங்கள், ஜக்கி வாசுதேவ் ஈஷா  யோகா வகைப்பட்ட சூட்சுமங்கள், மாதா அமிர்தானந்தமயி-யின் சென்டிமெண்ட் கட்டிப்பிடி வைத்தியங்கள், ஆர்.எஸ்.எஸ்.-ன் பழங்குடி அமைப்பான வனவாசி சேவா கேந்திராவின் காட்டுக்குள்ளே இந்துத்துவா…. இந்தப் பெரிய கம்பெனிகளோடு  சென்னை அசோக்நகர் ஆஞ்சநேயர் பக்த சபா, ஸ்ரீ பூர்ண மகா மேரு டிரஸ்ட், பிரணவ ஆசிரமம், இந்து தர்மா வித்யாபீடம், சம்ஸ்கிருத பாரதி, ஸ்ரீ ஓம்காரம் இறை பணி மன்றம், இப்படி பல நூறு ஆர்.எஸ்.எஸ். ஆதரவு சில்லறை அமைப்புகள் தமிழகத்தின் பலமூலைகளிலிருந்து வந்து இந்துத்துவ பார்ப்பனியத்தின் மகிமையை மணம் பரப்பின. கூடவே யோகக்கலையை இரண்டு வினாடியில் கற்றுக் கொள்வது எப்படி? உடலின் அனைத்து உபாதைகளையும் மூச்சுப் பயிற்சியில் தீர்த்துக்கொள்வது எப்படி? என்று பாடம் எடுத்தனர்.

ஞானோதயம் யோகா, உடல் பாதுகாப்பு உயர்தவம், ஆனந்தம், இறைநிலை, முக்தி அடைவது எப்படி? அதற்கு தேவைப்படும் காலம் பணம் எவ்வளவு என்று விளக்கம் கொடுத்தனர். அஸ்வினி யோகி என்ற பெண் தொண்டர், தன் உடலை வளைத்து நிகழ்த்தும் யோகக்கலையை பல்வேறு கோணங்களில் படம் பிடித்து வழவழ தாள்களில் விநியோகித்தனர்.

பழந்திருக்கோயில்களில் திருப்பணி சங்கம், தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பு என்று திடீர் அமைப்பினர் நமது பாரம்பரியமான திருக்கோயில் கோபுரத்தில் காவி கொடியை பறக்கவிட வேண்டும், கிராமப்புறங்களில் கோயில் இல்லாத இடங்களில் திருக்கோயில்களில் கட்டித்தர வேண்டும் அதற்காக அரசாங்கம் நிதி ஒதுக்க வேண்டும், ஒவ்வொருவரும் நம் குலதெய்வ கோயிலை மீட்போம், இந்துக்கள் அனைவரும் ஒன்றாக இருந்து இந்து சாம்ராஜ்யம் படைத்திடுவோம், என்று இவர்கள் தினுசு தினுசாக பயமுறுத்தினர். இந்த இந்து திருக்கோயில் கூட்டமைப்புகள் எந்த அரசியல் சார்ந்தது இல்லை என்று பல கலர்களில் பிரசுரம் வினியோகித்து பேசிப்பார்த்தால் தங்களை அப்பட்டமான அம்பி சங்கிகளாக காட்டிக் கொண்டனர். ஐயரு மரு வெச்சு மாறு வேசத்துல வந்து பேசுறாராம்.

கண்ணன் வழி நடப்போம் காமதேனுவாக பசுக்களை பேணி பராமரிப்போம், ‘அர்ஜென்ட் டு சேவ் கவ்ஸ்’, இலாபகரமாக கோசாலை ஒரு வழிகாட்டி, பஞ்சகவ்விய பொருட்கள் தயாரிப்பு முறைகள், வாஸ்து தோஷம் நீக்கி லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தும் கோமதி சக்கரம், கோமாதா பசுவின் சக்தி இந்த கோமதி சக்கரத்தில் உள்ளதால் புண்ணியம் கிடைக்கும்,அயோத்தியா, மதுரா, ஹரிதுவார், காசி, காஞ்சி, துவாரகை போன்ற ஏழு சாஸ்திரங்களை வணங்கிய பலன் கிடைக்கும் என்று வந்திருக்கும் மக்களை  கவர இன்ஸ்டன்ட் ஆன்மீக பலன்களை அள்ளி விட்டனர். இரண்டே நிமிடத்தில் மாகி நூடில்ஸ் போல, ப்ரூ காஃபி போல இரண்டே மணிநேரத்தில் இந்தக் கண்காட்சியில் சுற்றினால் நமது நனவிலி மனதில் இந்துத்துவம் வேராய் நுழைவது உறுதி.

தயாரிக்க தேவையான பொருட்கள் கோமூத்திரம் 2 லிட்டர், இதே மாதிரி ஷாம்பு தயாரிக்க தேவையான கோமூத்திரம், கோமூத்திரத்தில் உள்ள தாதுப் பொருட்கள், பசு பாதுகாப்பு மற்றும் பசு பொருள் தயாரிப்பு பயிற்சி ஆலோசனை மையம் என்று கண்காட்சியில் மூத்திரத்தை ஏமாந்தவர்களின் தலையில் கட்டினர்.

அடுத்து பியூர் பிரேயர் செய்வது எப்படி? தன்வந்திரி ஹோமம், நவ சண்டி ஹோமம், சுத்த புருஷ ஹோமம் செய்வது எப்படி? என்று தெரிந்துக் கொள்ள ஶ்ரீ யூ ட்யூப் சேனலை இலவசமாக பாருங்கள்! அதில், சபரிமலை உட்பட பல கோயில்களில் ஐதீகங்கள் உடைக்கலாமா? இந்து தெய்வங்கள் அவமானப் படுத்தலாமா? சங்க இலக்கியங்களும் இதிகாசங்களும் திருமுறைகளும் வேதங்களும் சிதைக்கலாமா? இந்து ஆலயங்கள் சூறையாடப்படலாமா? இந்துப் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்யும் மோசடி நடக்கலாமா? ஆசை காட்டி அச்சுறுத்தி ஏமாற்றி அப்பாவி இந்துக்கள் மதம் மாற்றபடலாமா?

நம் தாய்மொழி அழிவதை கண்டுகொள்ளாமல் விட்டு விடலாமா ? இந்து வேறு தமிழ் வேறு என்பது சரியா? விடை காண ஶ்ரீ யூ ட்யூப் டிவி சேனலில் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், என்று போவோரை வழி மறித்தனர்.

அடுத்த கடையில், நவகிரக ஸ்தலங்களைப் பார்க்க விரும்புவோர் கீழே உள்ள எண்ணுக்கு அழைக்கவும் என்றனர். அடுத்தக் கடையில் 10 நாளில் சமஸ்கிருதம் கற்றுக்கொள்வது எப்படி? கட்டணமும் இல்லை! சமஸ்கிருத மொழியில் முன் அனுபவமும் தேவை இல்லை! என்றனர்.

எந்தப் பக்கம் திரும்பினாலும் விடுவதாக இல்லை. சுவாமி விவேகானந்தா ‘ரூரல் டெவலப்மெண்ட் அண்ட் எஜிகேசன். அவைல் டேக்ஸ் எக்ஸம்சன்‘ கடைகள். 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீனிவாச பெருமாள் ஆலய திருப்பணிக்கு கைங்கரியம் கொடுங்கள் 10,000 வழங்குபவர் பெயர் கல்வெட்டில் பொறிக்கப்படும் என்று சொல்லும் கடைகள்.

யாருமே அறியாத சிவரகசியம்! இன்புற வாழ மனிதனுக்கு அறிவு போதாது! இந்த தத்துவமும் அடங்கிய 10 சிடி, சிறப்பு சலுகை ஆயிரம் ரூபாய் இல்லை, வெறும் 400 ரூபாய்! என அழைக்கும் கடைகள். ஸ்ரீ லட்சுமி இயற்கை மூலிகை ஒரு மண்டலம், 48 நாட்கள் அருந்தி வர கிடைக்கும் பயன்கள்! அவற்றை ருசி பார்க்க சாம்பிள் கொடுக்கும் கடைகள்.

அகில உலக இந்து சேவா சேனாவில் இந்து திருக்கோயில் இறைப்பணி, சித்த மருத்துவம், தற்காப்பு, பாரம்பரிய கலைகள், இயற்கை வாழ்வியல், சட்ட விழிப்புணர்வு, மனித உரிமை பெற அனைத்து இந்து சமூகத்தை சார்ந்த ஆர்வலர்கள் மற்றும் இறை பக்தர்கள் அனைவரும் தங்களையும் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும் அகில உலக இந்து சேவா சேனாவில் இணைந்து இறைத்தொண்டு புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம். உடனே அடையாள அட்டை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்! என்று அழைக்கும் கடைகள்.

ஓம் நமோ நாராயணி ஸ்ரீ நாராயணி பீடம். ஸ்ரீ நாராயணி மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்… இப்படிக்கு ஸ்ரீநாராயணி பக்த சபா. என்று அறிவிக்கும் கடைகள். கோயில் இறைவன் கோயில் இறைப்பணி செய்ய கீழ்கண்ட வங்கிகளில் காணிக்கை செலுத்துங்கள். இப்படிக்கு பழந்திருக்கோயில்கள் திருப்பணி சங்கம், சிவாலயங்களில் விளக்கு ஏற்றும் குழு.. என்று முகவரி கொடுக்கும் கடைகள்.

இவ்வளவு நாளும் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலாப்பூர் கைலாச நாதர் கோயில் திருச்சி ஶ்ரீரங்கம் கோயில் குளங்களைச் சுற்றிப் போடப்பட்ட கடைகளை மொத்தமாக வாரி வந்து ஆன்மீக மற்றும் சேவைக்கண்காட்சி என்று நிரப்பி விட்டனர். உண்மையில் அவர்களது நோக்கம் எல்லா சாதிய சங்கங்களுக்கு கடை விரித்துக் கொடுப்பதுதான்! அதன் மூலம் அவர்களைத் தங்கள் அடியாளாக பயன்படுத்துவதுதான்! அதை கறுப்பு சூத்திரர்களிடமிருந்து மறைக்க இந்த கண்கட்டு வித்தை. ஆர்.எஸ்.எஸ். சங்கிகள் தங்களை மறைக்க முகத்தில் மரு ஒட்டியிருந்தாலும் வழக்கம்போல் தங்கள் கொண்டையை மறைக்க மறந்து விட்டார்கள்!

கண்காட்சியை சுற்றி வந்த நாம் நமக்கும் ஒரு கடை வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கண்காட்சி நிர்வாகியிடம் பணிவாக பிட்டுப் போட்டோம். அவர் நீங்கள் எந்த ஊர் என்று விசாரித்து சரி உங்கள் பெயரில் ட்ரஸ்ட் பதிவு பண்ணியிருக்கீறீர்களா? அது இருந்தால் இங்கு நுழையலாம் அப்படி வந்துவிட்டால் கடைக்கு வாடகை கிடையாது. மொத்தமும் இலவசமாக கிடைக்கும். கடையில் வேலைச் செய்யும் இருவருக்கு தினமும் சாப்பாடும் இலவசம். அப்படி இல்லையென்றால் நீங்கள் குறைந்தது ஏதாவது தர்ம காரியங்கள் செய்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு உழவாரப்பணி போல் கோயில் பராமரிக்கும் பணி இப்படி ஏதாவது செய்திருந்து அதற்கு போட்டோ அல்லது ஏதாவது அதற்கு அத்தாட்சி (விளம்பரம் நகல்) இருக்க வேண்டும். அப்படியிருந்தால் நீங்கள் மொத்தமாக வெறும் 5,000 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும். ஆனால், இப்போதே அதற்கான அப்ளிகேஷன் கொடுத்தால்தான் அடுத்த கண்காட்சியில் இடம் கிடைக்கும்.

நாங்களும் உங்களைப்பற்றி முழுமையாக விசாரித்து தான் (உள்ளூர் சங்கிகளின் அத்தாட்சி கடிதம் அவசியம்) முடிவெடுப்போம். ஏனென்றால் போன ஆண்டு கண்காட்சி நடத்துவதற்கு எங்களுக்கு ஆன செலவு வெறும் இரண்டரைகோடி (ரூபாய்) தான் இந்த ஆண்டு செலவு ஐந்து கோடி ஆகி விட்டது! நாங்களும் சமாளிக்க வேண்டும் இல்லையா? எல்லாவற்றுக்கும் ஸ்பான்சர்வாள்தான் செய்கிறாள்.

எதுவும் இங்கு மறைவாக கிடையாது. எல்லாவற்றுக்கும் ப்ளக்ஸ் அடித்து இங்கு வைத்திருக்கிறோம் பாருங்கோ… என்றார். என் போன் நம்பர் இதுதான் மேற்கொண்டு பேசுவோம் என்றார். சரி என்று நாமும் விடைபெற்றோம்!

வெளியில் அந்த பிளக்ஸ் பேனரைத் தேடினோம். உண்மையாகவே இருந்தது. ஆனால், அந்த கணக்கு உண்மையா என்று தெரியாது! அப்படியே அங்கு நிறுத்தியிருந்த பல ரதங்களை பார்த்து பிரமித்தோம். நாம் வீட்டு வாசலில் நாம் செருப்பு விடுவதுபோல் ஒவ்வொரு சாமியாரும் அவர்கள் வந்ததற்கு அடையாளமாக ஒரு ரதத்தை நிறுத்தியிருந்தனர். அதில் அமர்ந்திருந்த அந்த ரத ஓட்டுனரிடம் (டிரைவர்) பேச்சுக் கொடுத்தோம். ஒருவருக்கும் தமிழ் புரியவில்லை. இந்தி, தெலுங்கு என்று பல பாஷைகளில் நம்மை விசாரித்தனர். கடைசியில் தெலுங்குக்காரர் நம்மிடம் மாட்டினார். பேசினோம்.

ஈ வண்டி ஏ மாடல்? ஈ வண்டி அந்தும் பெநத்த மாடல் எய்சர். ஈ வண்டி டப்பு எந்த தேலுசா? 10 லேக்ஸ்! அன்னி ஈ டேகரேசன் 20 லேக்ஸ்! மா ஊரு தெலுங்கானா. ஈ வண்டி ஆ கவமெண்ட் சப்ளை சேசின்னு.. மா க்கூட கவர்மர்ன்ட் ஸ்டாப். என்று பாதி ஆங்கிலத்தில் கலந்து நமக்கு புரிய வைத்தார்.

ஒரு ரதத்திற்கு இருபது இலட்சம் செலவழிக்கும் இந்த காவி பண்ணையார்கள் மக்களிடம் உண்டியலில் காசு வசூலித்து கட்சி நடத்தும் கம்யூனிஸ்களைப் பார்த்து, கிண்டல் செய்வதற்கு ஒரு அடிப்படை நியாயம் இருக்கிறதல்லவா! மெல்ல அங்கிருந்து நடையைக் கட்டினோம்.

வரும் வழியில் பல காட்சிகள் மனதில் ஒடின! கண்காட்சியில் பசு புனிதம் பற்றி விளக்கி காட்சிக்கு வைத்திருந்த பல படங்களில் நாட்டில் வாழும் மொத்த சூத்திரர்களையும் பசு மாதாவின் ரத்தத்தைக் குடிக்கும் அசுரர்கள் போல் காட்சிப்படுத்தியிருந்தனர். அவர்களின் கண்காட்சியின் அஜெண்டா நமக்கு தெளிவாக புரிந்தது. அவர்கள் கொண்டையை வழக்கம் போல் ஆன்மீகம், சேவைக் கண்காட்சி என்ற வார்த்தைகளைக் கொண்டு மறைக்கிறார்கள்.

எடப்பாடியின் ஆட்சியில் எட்டுத் திக்கும் சங்கிகள் வளர்கின்றனர். அடுத்த ஆண்டு இந்த கண்காட்சியை முற்போக்கு அமைப்புகள் அனைவரும் சேர்ந்து மக்களை அணிதிரட்டி மூடுவதற்கு வழி உண்டா என்று பார்க்க வேண்டும். இல்லையேல் சாதா இந்துக்கள் சங்கி இந்துக்களாக மாற்றப்படுவார்கள், எச்சரிக்கை!

வினவு களச் செய்தியாளர்

சந்தா செலுத்துங்கள்

உங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா? வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.

9 மறுமொழிகள்

 1. அடுத்த ஆண்டு இந்த கண்காட்சியை முற்போக்கு அமைப்புகள் அனைவரும் சேர்ந்து மக்களை அணிதிரட்டி மூடுவதற்கு வழி உண்டா என்று பார்க்க வேண்டும். இல்லையேல் சாதா இந்துக்கள் சங்கி இந்துக்களாக மாற்றப்படுவார்கள், எச்சரிக்கை!//
  சிறப்பு 👌
  இந்த பாசிச பார்ப்பனீய RSS பா.ஜ.க. கும்பலை நாட்டைவிட்டே துரத்த வேண்டும் (ஓட்டுப்பெட்டி மூலம் அல்ல)

 2. //அடுத்த ஆண்டு இந்த கண்காட்சியை முற்போக்கு அமைப்புகள் அனைவரும் சேர்ந்து மக்களை அணிதிரட்டி மூடுவதற்கு வழி உண்டா என்று பார்க்க வேண்டும். இல்லையேல் சாதா இந்துக்கள் சங்கி இந்துக்களாக மாற்றப்படுவார்கள், எச்சரிக்கை!//

  ஏன் மூட வேண்டும் … ஜனநாயகம் என்பதை உண்மையாக மதிப்பவர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள்.. அவர்கள் ஆன்மீக கண்காட்சியை நடத்தட்டும்.. பதிலுக்கு நீங்கள்(முற்போக்குகள்) பகுத்தறிவு கண்காட்சியை நடத்துங்கள்.. நீங்கள் ஒரு கண்காட்சி நடத்தி அதில் நீங்கள் மூடத்தனங்களாக நினைக்கும் சாதி மதம் போன்ற அனைத்தையும் மக்களுக்கு புரிய வையுங்கள்… இது தான் உண்மையான ஜனநாயக பண்பாடு ..

  • Sister Rebecca Mary,for the proposed rationalist exhibition ,no govt like TRC’s will send 30 lakhs worth Rath with govt driver .Rationalists cannot spend Rs5 crore also for 4 day event. Even book fair has become ANMEEGA KANKAATCHI. Protesting to close down these exibitions is also a democratic exercise. Every citizen should develop scientific temper as per Indian Constitution.

 3. இதில் தங்கள் பிரச்சனை என்ன? தாங்கள் தான் கெட்டிக்காரர் ஆயிற்றே? ஏன் ஏமாற அங்கு சென்றீர்?

 4. உனக்கு பிடிக்கலனா நீர் அக்கு செல்ல வேண்டாம். மக்கள் ஒன்றும் முட்டாள் அல்ல. கண்காட்சி பக்தி மயமாக நன்றாக இருந்தது.

 5. ஜனநாயகம் பெயரில் காலிகளும் பொறுக்கிகளும் வளர இடம் வேண்டும் என்பது மேற்கண்ட ரெபெக்கா மாமி, பத்ரி மற்றும் சரவணன் போன்றோரின் வாதம்.

 6. அருமை!
  நமது தாய்நாட்டை உன் போன்றவர்கள் தான் வெள்ளைக்காரன் இடமும் பிற நயவஞ்சகர்கள் இடமும் ஒப்படைத்தது.
  இதுபோன்ற எழுத்துக்களால் நம் கலாச்சாரத்தை சீர் கெடுப்பது அல்லாமல் தமிழர்களுக்கும் இழுக்கைத் தேடித் தருகிறாய்.
  உன் போன்றவர்களால்தான் கலாச்சாரத்தையும் கடை விரிக்க தேவையாக இருக்கிறது…

 7. லயோலா கல்லூரியில் கண்காட்சி என்ற பெயரில் நடைபெற்ற ஹிந்து வெறுப்புகள் இல்லையே என்பது தான் உண்மையான வருத்தம் அதற்கு புரட்சி முற்போக்கு என்ற மூலம் பூசி வருத்தப்படுவது போல் நடிக்கிறீர்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க