“சசிகலாவை முதல்வராக்க எல்லா ஏற்பாடும் பண்ணிட்டாங்க. அந்த யுனிவர்சிட்டி ஹால்ல எல்லா ஏற்பாடும் நடந்து கொண்டிருக்கு. அப்ப ஓபிஎஸ்ஸ போய் நீங்க எல்லா ஏற்பாடையும் கொஞ்சம் சூப்பர்வைஸ் பண்ணுங்க.. எல்லாம் துப்புறவா இருக்கான்னு பாருங்கன்னு சொன்ன பின்ன அவர் என்கிட்டே வந்தார். ‘சார் இந்த மாதிரில்லாம் சொல்றாங்க.. எனக்கு என்ன பன்றதுன்னே தெரியலை’ன்னார். நான் அவர்ட்ட பேசின முறையை உங்க கிட்டே சொல்ல முடியாது. நான் சொன்னேன் நீங்கெல்லாம் ஆம்பிள்ளையா ஏன் இருக்கீங்க தெரியலேன்னு கேட்டேன். என்ன சார் பண்ணாலாம்ன்னு கேட்டார், நான் சொன்னேன் போய் அந்த சமாதில உக்காருங்க ஏதாவது வழி பிறக்கும்னேன்” – திருச்சியில் நடந்த துக்ளக் விழாவில் குருமூர்த்தி.

இவ்வாறாக தாக்கி தகர்க்கப்பட்டது ஆண்ட பரம்பரை திமிர். “ஆண்ட பரம்பரை” என்று அழைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதே எப்போது கடப்பாரையைத் தூக்கச் சொல்லி அவாளிடம் இருந்து உத்தரவு வந்தாலும் தூக்க வேண்டும். அதைக் கொண்டு கட்டிடத்தை இடிக்கச் சொன்னாலும் சரி, சாக்கடைக்கு அடைப்பு எடுக்கச் சொன்னாலும் சரி, இசுலாமியர் தலித்துகளின் மார்பில் இறக்கச் சொன்னாலும் சரி – கேள்வியே கேட்காமல் அதை செய்ய வேண்டும். ஏன் எதற்கு என்கிற கேள்விகளை கேட்டாலோ அப்படியான கேள்விகளை வாய்மூடி மூளையில் சிந்தித்தாலோ “ஆண்ட பரம்பரை – சத்திரிய” பதவி பறிக்கப்பட்டு விடும் என்பது தான் பார்ப்பனியம்.

ஓபிஎஸ்-ஐ பார்த்து “நீயெல்லாம் ஒரு ஆம்பிள்ளையா” என்று தான் கேட்டதாக குருமூர்த்தி சொன்னது சமூக வலைத்தளங்களில் மின்னல் வேகத்தில் காட்டுத்தீயாக பரவியது. அதற்கு விளக்கமளித்துள்ள குருமூர்த்தி, தனக்கு ஓபிஎஸ்-ன் மேல் தனிப்பட்ட முறையில் நிறைய மரியாதை உண்டென்றும், அந்த சந்தர்பத்தில் அதிமுகவினரெல்லாம் சசிகலா காலில் விழுந்து கொண்டிருந்ததைத் தான் குறிப்பிட்டதாகவும் சொல்லியிருக்கிறார். அதாவது ஓபிஎஸ்-ஐ மட்டும் அல்ல, மொத்த அதிமுகவையும் “நீ எல்லாம் ஒரு ஆம்பிள்ளையா” என தான் கேட்டதாக விளக்கமளித்துள்ளார் குருமூர்த்தி.

படிக்க :
♦ மொத்த 20 IIM-களுக்கும் சேர்த்து வெறும் 11 தலித் பழங்குடியின ஆசிரியர்கள் மட்டுமே !
♦ கொளுத்திப் போட குருமூர்த்தி – குலம் கெடுக்க தமிழருவி !

இந்நிலையில் இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ள திமுக உடன்பிறப்புகள், #ஓபிஎஸ்நீங்கஆம்பளையா எனும் ஹேஷ்டேக் ஒன்றின் கீழ் அவரையும் ஆண்ட பரம்பரைகளையும் கிண்டல் செய்து வருகின்றனர். ஒருவரின் அரசியல் கையாலாகாத்தனத்தையும், அரசியல் ஓட்டாண்டித்தனத்தையும், ஒட்டுண்ணித்தனத்தையும் விமர்சிப்பது வேறு அதையே அவரது பாலியல் ஆற்றலுடன் ஒப்பிட்டு விமர்சிப்பது வேறு. இரண்டாவது வகை ரசக் குறைவானது. மட்டுமின்றி “ஆம்பிள்ளைத்தனம்” கொண்டவர்கள் தான் அரசியலில் சாதிக்கவும் ஆண்ட பரம்பரையாகவும் இருக்க முடியும் என்பதை மறைமுகமாக சுட்டுகின்றது. ஏன் ஆண்ட பரம்பரையில் திருநங்கைகள் இருக்க கூடாதா? எனவே இந்த ரசக் குறைவான விமர்சனங்கள் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியது.

நிற்க.

“நீயெல்லாம் ஒரு ஆம்பிள்ளையா?” என்று குருமூர்த்தி ஓபிஎஸ்-ஐ பார்த்து கேட்ட பின் தான் அவர் “என்ன செய்யலாம் சார்?” என்று வினவியுள்ளார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். இதிலிருந்து ஒருசில விசயங்கள் தெளிவாகின்றது. ஒன்று, ஓபிஎஸ்-க்கு ஆண்டபரம்பரையாக மீசை முறுக்கவும் அரசியலில் பிழைத்துக் கிடக்கவும் ‘ஆம்பிள்ளையாக’ இருக்க வேண்டிய தேவை இல்லை என்கிற தத்துவார்த்த புரிதல் இருந்திருக்க வேண்டும்; அல்லது, செருப்பால் அடித்தாலும் பரவாயில்லை – கருப்பட்டி கிடைத்தால் போதும் என்கிற உன்னத மனநிலைக்கு அவரை புரட்சித் தலைவி அம்மா பக்குவப்படுத்தி இருக்க வேண்டும். அதிமுக என்கிற கட்சியின் நதிமூலம் ரிஷிமூலத்தை அறிந்தவர்களுக்கு இரண்டாவது காரணம் தான் சரியானது என்பதில் சந்தேகம் எழாது.

குருமூர்த்தியின் விளக்கத்தில் மொத்த அதிமுகவையும் ஆண்மையற்றவர்கள் என்று கூறியுள்ளார். முன்பு ஆர்.கே நகர் இடைத்தேர்தல் தோல்வியை அடுத்து கட்சியில் இருந்த டிடிவி ஆதவாளர்களை நீக்க சில மாதங்களை எடுத்துக் கொண்ட போதும் இதே போல் ஓபிஎஸ்-ஐயும் ஈ.பி.எஸ்ஸையும் “ஆண்மையற்றவர்கள்” என குருமூர்த்தி விமர்சித்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்போதும் சரி இப்போதும் சரி அதிமுகவினர் ஒருவித மோன நிலையில் அமர்ந்து விடுகின்றனர்.

குருமூர்த்தியின் விளக்கத்தில் நாம் ஒரு விசயத்தை கவனிக்க வேண்டும். சசிகலாவின் காலில் விழுந்து கிடந்ததால் தான் “நீங்களெல்லாம் ஆம்பிள்ளையா?” எனத் தான் கேட்டதாக விளக்கமளித்துள்ளார். இதே போல் முன்னர் ஜெயாவின் காலில் விழுந்து கிடந்த போது அதிமுகவினரை நோக்கி “நீங்கள் எல்லாம் ஆம்பிள்ளையா?” என அவர் கேட்டதில்லை.

ஏன்?

காலில் விழுவதாக இருந்தாலும் கூட ஒரு பாப்பாத்தியின் காலில் விழுவதுதான் ஆண்ட பரம்பரைகளின் ஆண்மைக்கு அழகு என்பது குருமூர்த்தியாரின் சித்தம். அதே ஒரு சூத்திரச்சியின் காலில் விழுந்த உடன் ஆண்மை போய் விடுவதாக அவர் கருதுகிறார் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.

இவ்வாறாக “அண்டர் த பெல்ட் அட்டாக்கின்” மூலம் ஆண்ட பரம்பரை பெருமை வீழ்த்தப்பட்டிருப்பதில் நமக்கு மகிழ்ச்சியில்லை – ஏனெனில், அது அரசியல் ரீதியில் வீழ்த்தப்பட்டிருக்க வேண்டும். அதே நேரம் வருத்தமும் இல்லை – ஏனெனில், இதெல்லாம் ‘ஆண்ட’ பரம்பரைகளுக்குத் தேவை தான்.

இத்தனைக்கும் சமீபத்தில் அமெரிக்கா சென்ற ஓபிஎஸ் மற்றும் அவரது சிங்கப்பூர் புகழ் மகன் ஓபிஆர் இருவரும் பூம்பூம் மாட்டுக்காரன் வேடம் போட்டு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சில பல விருதுகளைப் பெற்றுத் திரும்பியிருந்தனர். “பண்பின் சிகரம்”, “வீரத் தமிழன்” “மகாத்மா காந்தி மெடாலியன் ஆப் எக்சலன்ஸ்” “தங்கத் தமிழ்மகன்” “ரெய்சிங் ஸ்டார்” என விருதுகளின் வரிசையில் நவம்பர் 14-ம் தேதியை “ஓபிஎஸ் தினமாக” அறிவித்திருந்தது அமெரிக்க வாழ் இந்திய கரகாட்ட கோஷ்டி ஒன்று.

படிக்க :
♦ சாக்கடை தூர்வாரும் பணியில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்காத அரசு !
♦ பன்னீரின் கண்ணீரும் சசிகலாவின் கைக்குட்டையும்

இத்தனை பேரும் புகழும் பெற்ற ஓபிஎஸ்-ஐ பார்த்து குருமூர்த்தி என்கிற பார்ப்பான் “நீ எல்லாம் ஒரு ஆம்பிள்ளையா?” என்று கேட்டதன் மூலம் ஒன்று தெளிவாகின்றது. நடந்து கொண்டிருப்பது பார்ப்பனர்களின் காலம். இதில் பார்ப்பான் வகுத்ததே சட்டம். அதுவே நீதி, அறம் எல்லாம் – என்று பார்ப்பனர்கள் நம்புகின்றனர். பார்ப்பனர்களைப் போலவே அவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்யும் ஓபிஎஸ் ஈபிஎஸ் போன்ற சூத்திரர்களும் நம்புகின்றனர்.

***

டெயில் பீஸ் : தெற்கத்திய ஆண்ட பரம்பரையினரின் பட்டாப்பட்டியை குருமூர்த்தி உறுவிய அதே நேரம் வடக்கத்திய ஆண்ட பரம்பரையின் பட்டாப்பட்டியும் பறிபோன மற்றொரு சுவாரசியமான சம்பவமும் நடந்தது.

சத்தியம் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் சமரசம் என்பவர் அன்புமணி குறித்து இவ்வாறு தெரிவித்தார் : “டயர் நக்கின்னு சொன்ன அன்புமணிய அதே டயருக்கு பின்னாலே ஓடிவர வச்சாரு (எடப்பாடி) இல்லே?”.

எப்படி தெற்கத்திய ஆண்ட பரம்பரைகள் குருமூர்த்தி விசயத்தில் வாலைச் சுருட்டி தொடையிடுக்கில் சொருகிக் கொண்டு பம்மிக் கிடக்கின்றனரோ அதே போல் வடதமிழ்நாட்டு ஷத்திரிய பரம்பரையும் அதிமுகவுக்கு எதிராக வாயைத் திறக்காமல் இதுவரை மவுனம் காத்து வருகின்றனர்.

***

கதையின் நீதி : சத்திரிய பெருமை எல்லாம் ஹெச் ராஜா குறிப்பிடும் ஹைக்கோர்ட்டு தான் என்பதை அவர்களே உணர்ந்துள்ளனர். பொறுக்கித் தின்ன வேண்டும் என்றால் சூடு சொரணை இருக்க கூடாது என்பதிலும் தெளிவாக இருப்பதுதான் ‘ஆண்ட’ சாதி மனநிலை.

– சாக்கியன்