1993 முதல் 2019-வரையிலான இடைப்பட்ட ஆண்டுகளில் பாதாள சாக்கடைகளை தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருக்கையில் பலியான தொழிலாளர்களில் 50 சதவீதத்தினர் குடும்பங்களுக்கு மட்டுமே தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதிலும் பல குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சத்திற்கும் குறைவாகவே கிடைத்துள்ளதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தி வயர் இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது.

சாக்கடையை தூர் வாரும் போது பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்ற ஒரு தீர்ப்பை 2014-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கியது.

ஆனால் பல்வேறு மாநிலங்களின் தகவல்களின்படி, 1993 முதல் சாக்கடை தூர்வாரும் போது 20 மாநிலங்களில் 814 பேர் இறந்துவிட்டதாகவும் அவற்றில் 455 தொழிலாளார்களின் குடும்பத்தினருக்கு மட்டும் ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் சஃபாய் கரம்சாரிஸ் தேசிய ஆணையம் (National Commission for Safai Karamcharis) RTI கேள்விக்கு அதிகாரபூர்வமாக ஒரு பதிலளித்துள்ளது.

இருப்பினும், சாக்கடை தூர்வாரும் போது ஏற்படும் உயிர்பலிகளின் எண்ணிக்கை இன்னும் முழுமையாக கணக்கிடப்படவில்லை. மேலும் தொடர்ந்து கூடுதல் தகவல்களுக்காக மாநில அரசாங்கங்களை NCSK கேட்கிறது. நாடு முழுவதும் சாக்கடை தூர்வாரும் போது ஏற்படும் உயிர்பலிகளை கண்காணிப்பதும் தொடர்பான தரவுகளை சேகரிப்பதும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் (Ministry of Social Justice and Empowerment) கீழ் செயல்படும் இந்த அமைப்பின் பொறுப்புகளாகும்.

1993 முதல் சாக்கடை தூர்வாரும் போது பலியான அனைத்து தொழிலாளார்களின் குடும்பங்களையும் அடையாளம் கண்டு ரூ. 10 இலட்சம் இழப்பீடு வழங்கவும் சஃபாய் கரம்ச்சாரி அந்தோலன் (Safai Karamchari Andolan) எதிர் இந்திய அரசாங்கம் வழக்கில் மார்ச் 27, 2014 அன்று மைய அரசாங்கத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

பல வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சத்திற்கு பதிலாக ரூ. 5 லட்சம், ரூ. 4 லட்சம் அல்லது ரூ. 2 லட்சம் கூட வழங்கப்பட்டுள்ளது என்று தி வயருக்கு கிடைத்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன. சம்மந்தப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீட்டை ஒப்படைக்கும் பொறுப்பு ஒப்பந்தக்காரர், மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் அல்லது மாநில அரசாங்க அதிகாரிகளிடம் உள்ளது.

படிக்க :
♦ சாக்கடைக் கொலைகள்!
♦ கழிவு நீர் ஊர்தி வேலை நிறுத்தம் : சாக்கடை அள்ற கையின்னு தண்ணி கூட கொடுக்க மாட்டாங்க !

பதிவான பலிகளும் இழப்பிடுகளும் :

சாக்கடையில் மூச்சுத் திணறலால் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் (206) தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளன என்று ஆணையம் வழங்கிய தரவுகள் கூறுகிறது. ஆனால் அவற்றில் 162 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மட்டுமே முழு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இழப்பீடு வழங்குவதில் குறிப்பாக குஜராத்தின் நிலைமை மோசமானதாக இருக்கிறது. இதுவரை 156 பலிகள் அடையாளம் காணப்பட்டு அவற்றில் 30% அதாவது 53 குடும்பங்களுக்கு மட்டுமே 10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தின் நிலைமையும் அவ்வளவு சிறப்பாக இல்லை. மொத்தம் 78 உயிரிழப்புகள் அடையாளம் காணப்பட்டு அவற்றில் 30 விழுக்காடு அதாவது 23 குடும்பங்களுக்கு மட்டுமே முழு இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது,

பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் உச்சநீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க முழு இழப்பீடும் வழங்குமாறு மாநிலங்களுக்கு தொடர்ந்து வலியுறுத்துகிறோம் என்று NCSK அதிகாரி ஒருவர் கூறினார். தொடர்ந்து NCSK-ன் தலைவர் மன்ஹர் ஜாலாவை வயர் தொடர்பு கொண்டதில் அவர் பதிலளிக்கவில்லை.

ஜூலை 2019 வரை, நாட்டின் தலைநகரில் மொத்தம் 49 இறப்புகள் பதிவாகி அவற்றில் 28 குடும்பங்களுக்கு மட்டுமே முழு இழப்பீடும் கிடைத்துள்ளது. ஆனால் டெல்லியில் இதுவரை 64 பேர் பலியாகியிருப்பதாகவும் அதில் 46 பேரின் குடும்பங்களுக்கு மட்டுமே தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றும் 2019 செப்டம்பரில் ஜலா கூறியிருந்தார். .

இழப்பீடு விவரம்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் டெல்லியில் மட்டுமே 38 துப்புரவுத் தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர் என்பதிலிருந்து சாக்கடை தூர்வாரும் போது ஏற்படும் உயிரிழப்புகளை நாம் மதிப்பிட முடியும்.

மற்ற மாநிலங்களைப் பார்த்தால், ஹரியானாவில் 70 பேர் இறந்துள்ளனர். அதில் 51 குடும்பங்களுக்கு மட்டுமே ரூ. 10 லட்சம் கிடைத்துள்ளது. இதற்கிடையில், கர்நாடகாவில், இதுபோன்ற உயிரிழப்புகளின் எண்ணிக்கை 73 ஆகும். இதில் 64 குடும்பங்களுக்கு மட்டுமே முழு இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவின் நிலை மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. சாக்கடை தூர்வாரும் போது இதுவரை மொத்தம் 25 பேர் இறந்துள்ளனர். ஆனால் இதுவரை யாருக்கும் எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை.

மத்திய பிரதேசத்தில் மட்டுமே இதுவரை பதிவாகியுள்ள மொத்தம் ஏழு வழக்குகள் அனைத்திலும் முழு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் பலியான 35 தொழிலாளர்களில் 25 குடும்பங்களுக்கு மட்டுமே ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இராஜஸ்தானில், கையால் மலமள்ளும் 38 தொழிலாளர்கள் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் எட்டு பேரின் குடும்பங்களுக்கு மட்டுமே முழு இழப்பீடும் கிடைத்துள்ளது.

இதேபோல், தெலுங்கானாவில் 4, திரிபுராவில் 2, உத்தரகாண்டில் 6 மற்றும் மேற்கு வங்காளத்தில் 18 என சாக்கடை தூர்வாரும் போது தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். பதிவாகியுள்ளதில் முறையே 2, 0, 1 மற்றும் 13 குடும்பங்களுக்கு மட்டுமே முழு இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த உயிரிழப்புகளுக்கு காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், ஒரு சிறு தொகை இழப்பீடாக வழங்கிய பின்னர் இந்த விடயம் ஒதுக்கித் தள்ளப்படுவதாகவும் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுபோன்ற வழக்குகளை காவல்துறை முறையாக விசாரிக்கவில்லை என்றும் அவர்கள் மேலும் குற்றம் சாட்டுகின்றனர்.

படிக்க :
♦ தலித்துகளின் உயிர்ப் பலி கேட்கும் சுவச்சு பாரத் !
♦ மோடியின் தூய்மை இந்தியாவில் துப்புரவுப் பணியாளர்கள் கொல்லப்பட்டதற்கே கணக்கில்லை !

“தன்னுடைய ஆணை ஏன் பின்பற்றப்படவில்லை என்பதை நீதிமன்றம் அறிந்திருக்க வேண்டும். நீதிமன்றத்திற்கு அது தெரியாதா? நடப்பது சரியல்ல என்று மட்டுமே நீதிமன்றங்கள் கூறுகின்றன… அத்தகைய ஆணையை (கருத்தை) யாரும் பின்பற்ற மாட்டார்கள். நீதிமன்றம் ஒரு காலக்கெடுவை அளிக்க வேண்டும். துப்புரவுத் தொழிலாளர்களின் மரணத்திற்கு காரணமானவர்களில் ஒரு நபர் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்று சஃபாய் கரம்ச்சாரி அந்தோலனின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பெஸ்வாடா வில்சன் தி வயரிடம் கூறினார்.

இந்த வழக்குகளில் சம்மந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை ஏதாவது எடுக்கப்பட்டுள்ளதா என்பது தெரியாது என்பதை மைய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. கையால் மலமள்ளும் தொழிலாளர்களை பணியமர்த்தும் நபர்களின் மீதான வழக்கைப் பற்றியோ அல்லது தண்டனை குறித்தோ எந்த தகவலும் இல்லை என்று மக்களவை உரையாடலின் போது அரசாங்கம் கூறியுள்ளது.

அண்மையில், சாக்கடை தூர்வாரும் போது தொழிலாளர்கள் பலியான போது மைய அரசாங்கத்தை உச்ச நீதிமன்றம் கண்டித்தது. “எந்த நாட்டிலும், நச்சு வாயு குழிக்குள் மக்கள் அனுப்பப்படுவதில்லை. ஒவ்வொரு மாதமும் நான்கு முதல் ஐந்து வரை கையினால் கழிவகற்றும் நபர்கள் தங்கள் உயிரை இழக்கின்றனர்” என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சாக்கடைப் பணிகளின் போது ஏற்படும் பலிகள் பற்றிய தரவுகளை ஒப்பிடுவது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. மாநிலங்கள், செய்தித்தாள்கள் அல்லது பிற மூலங்களால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தரவுகளை NCSK ஒருங்கிணைக்கிறது.

நான்கு செய்தித்தாள்களுக்கு ஆணையம் சந்தா செலுத்தியுள்ளது என்று ஒரு அதிகாரி தெரிவித்தார். அதனடிப்படையில் தகவல்கள் தொகுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவிக்கப்படும். அந்த செய்தித்தாள்களில் தெரிவிக்கப்படாத சாக்கடைப்பணிகள் தொடர்பான மரணங்கள் குறித்து ஆணையம் அறியாமல் உள்ளது.

அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின்படி, 1993 முதல் சாக்கடைகளை தூர் வாரும் போது மொத்தம் 814 துப்புரவுத் தொழிலாளர்கள் இறந்துள்ளனர். இருப்பினும், இந்த எண்ணிக்கை 1,870 என்று சஃபாய் கரம்ச்சாரி அந்தோலன் கூறுகிறது. சாக்கடை பணியின் போது 1,096 பேர் இறந்ததற்கான சான்றுகள் தன்னிடம் இருப்பதாகவும், தொடர்பான அனைத்து தகவல்களையும் அமைச்சகத்திற்கு அளித்துள்ளதாகவும் வில்சன் கூறினார்.

குறைந்தபட்ச அதிகாரங்களே NCSK யிடம் உள்ளன:

விதிகளின்படி கண்காணிப்பது மற்றும் வழிமுறைகளை வழங்குவதற்கான பொறுப்பு மட்டுமே NCSK-க்கு உள்ளது. அதன் வழிமுறைகளை செயல்படுத்தும் அதிகாரம் அதற்கு இல்லை. சம்மந்தப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது என்பது மாவட்ட அளவிலான அதிகாரிகளின் பொறுப்பாக இருக்கிறது.

ஆகஸ்ட் 12, 1994-ல் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக மூன்று ஆண்டுகள் மட்டுமே செயல்படுவதற்கு NCSK அமைக்கப்பட்டது. இருப்பினும், பல முறை சட்ட திருத்தங்கள் மூலம் அதன் கால வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​இது ஒரு சட்டபூர்வமற்ற (பராளுமன்றத்திற்கு பதில் சொல்ல கடமையில்லா) நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

சாக்கடைகளை கையால் தூர் வாருவதை, கையால் மலமள்ளுதல் தடுப்பு சட்டம் 2013 தடை செய்கிறது. தேவைப்பட்டால், 27 விதிகளை பின்பற்றப்பட வேண்டும் – சாக்கடைக்குள் நுழைய ஒரு பொறியியலாளரின் அனுமதியையும், விபத்து ஏற்பட்டால் தொழிலாளியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அருகில் அவசர ஊர்தி இருப்பதையும் இந்த விதிகள் கட்டாயப்படுத்துகின்றன.

சாக்கடையை தூர் வாரும் போது பின்பற்ற வேண்டிய விதிகளில் சிறப்பு உடை, ஆக்ஸிஜன் உருளை, மாஸ்க், முழங்கால் வரை காலுறைகள் மற்றும் பாதுகாப்பு பெல்ட் ஆகியவற்றைப் பயன்படுத்துவதும், அவசரகாலத்தில் ஆம்புலன்ஸிற்கு முதலில் தெரிவிப்பதும் அடங்கும். இருப்பினும், பெரும்பாலான நேரங்களில் அரசாங்கமோ தனியார் நிறுவனங்களோ இந்த விதிகளை பின்பற்றுவதில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.


கட்டுரையாளர் : தீரஜ் மிஸ்ரா
தமிழாக்கம் :
சுகுமார்
நன்றி : தி வயர். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க