சென்னை போரூர் – குன்றத்தூர் சாலையை ஒட்டியிருக்கும் சிமெண்ட் ஜாலி தயாரிக்கும் தொழிலகம். கோடை மழையால் வேலை தடைபட்ட கவலையில் இருந்தனர். அத்தொழிலாளிகளிடம் தற்போதைய தொழில் நிலைமையை கேட்டோம்.

“நாங்கள் கிணற்று உறை, ஜாலி தயாரிக்கும் வேலையை மட்டும் நம்பிக்கொண்டிருந்தால் எங்கள் பொழப்பு நாறிவிடும். சிமெண்ட் உறை சம்பந்தமாக எல்லா வேலைகளையும் செய்வோம். புது வீடுகளுக்கு கிணறு தோண்டுவது; பழைய கிணறுகளில் தூர் வாறி அதில் புது உறை இறக்குவது; பில்டர்களிடமிருந்து வரும் ஆர்டர்களை செய்து கொடுப்போம். பழைய கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தப்படுத்துவது, நாள்பட்ட அத்தொட்டிகளில் உப்புநீரால் இற்றுப்போன பழைய உறைகளுக்குப் பதில் புதிய உறைகள் போடுவது என்று கிணறு சம்பந்தமான எல்லா வேலைகளையும் செய்வோம். எல்லாமே எங்கள் கை உழைப்புதான். இதற்கென எந்த இயந்திரமும் கிடையாது. பல சமயங்களில் இவ்வேலை எங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

வெங்கடேசன் – கிணற்றுக்கு உறை போடும் தொழிலாளி.

புது கிணறு தோண்டும்போது 20 அடிக்குக் கீழ் ஆழம் போனால் மணல் சரிந்து விழும். அந்த நேரங்களில் செத்து பிழைப்போம். அப்படி பாதிக்கப்பட்டவர்களும் உண்டு.

கழிவுநீர்த் தொட்டியில் இறங்கி விஷவாயுவுக்கு பலியானவர்கள் பலபேர். ஆனாலும் இத்தொழிலை விட்டால் எங்களுக்கு வேறெதுவும் தெரியாது. எங்களுக்குத் தெரிந்த அனுபவத்தை வைத்து உசாராக ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு வேலைகளை முடிப்போம். அதற்குமேல் ஆண்டவன் விட்ட வழி என்று துணிந்தால்தான் பொழப்பு ஓடும்.

கிணறு உள்ள பகுதி மணல் பூமியாக இருந்தால் 10 அடிக்குக் கீழ் கால் சேறுமாதிரி புதையும். அப்போதே உசாராவோம். உடனே உறைகளை சுற்றி இறக்கி கரைகளை பலப்படுத்திவிடுவோம். அதற்கு மேல் உறைகளுக்கு உள்ளிருந்து மணலை எடுப்போம். அது மிகவும் கஷ்டமான பணி. இருந்தாலும் உயிர் முக்கியமில்லையா. அதிகபட்சம் 40 அடி ஆழம் மேல் போனால் ரிஸ்க்தான். எனவே அதோடு வேலையை முடித்து வெளியே வர முயற்சிப்போம். புறநகர் என்பதால் பெரும்பாலும் அதற்குள் தண்ணீர் கிடைக்கும். 50 அடி கிணற்றில் 5 அடி ஆழம் தண்ணீர் ஊறினால் போதும். வீட்டுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்கும். அதற்கே உறை, கூலி என 60 ஆயிரம் ரூபா செலவாகும்.

வீட்டோட காலி இடத்தின் வசதிக்கு ஏற்ப கிணற்றின் அகலம் 3 அடியிலிருந்து 6 அடி வரை இருக்கும். இதற்கு 7 பேரிலிருந்து 9 பேர் வரை 3 நாள் தொடர்ந்து வேலை செய்வோம். ஒரு கிணறு தோண்டினால் ஒருவருக்கு 3 நாள் கூலியாக குறைந்தது ரூபா 2 ஆயிரத்திலிருந்து 3 ஆயிரம் வரை கிடைக்கும். இப்படி மாதத்திற்கு ஒரு வேலை வருவதே கஷ்டம்.

படிக்க:
உ.பி. யில் இராணுவ பள்ளியைத் தொடங்குகிறது ஆர்எஸ்எஸ் !
♦ கிணற்று உறை தயாரிக்கும் தொழிலாளர்கள் | படக்கட்டுரை

புதுக்கிணறு வேலை இல்லாதபோது கழிவுநீர் சம்ப் தூர்வாருவது, சுத்தம் செய்வது என்று ஏதாவது ஒரு வேலையைத் தேடுவோம். சமயத்தில் மலத்தொட்டி, கழிவுநீர்த் தொட்டி என்று வித்தியாசம் இல்லாமல் கலந்திருக்கும். இந்த வேலையே எப்போதும் உயிருக்கு உலைதான். எனவே முடிந்தவரை எல்லோரும் மிகவும் எச்சரிக்கையாக இருப்போம்.

கழிவுநீர்த் தொட்டியில் விசவாயு இருக்கிறதா என்று பார்க்க, பக்கெட்டில் கற்பூரத்தை கொளுத்தி வைத்து குழியில் இறக்குவோம். நீர்மட்டம் வரை கற்பூரம் அணையாமல் இருந்தால் விஷவாயு இல்லையென தைரியமாக இறங்குவோம். நீர் மட்டத்திற்கு மேல் கற்பூரம் அணைந்துபோனால் ஆபத்து இருக்கிறது என்று தெரியும். அதுக்கும் ஒரு வைத்தியம் செய்வோம். 10, 20 எலுமிச்சை பழங்களை அறுத்து அதன் சாறை தொட்டியில் ஊற்றுவோம். அதில் கேஸ் பொங்கி வெளியேறும். அதற்குமேல் மரக்கிளையை ஒடித்து சம்ப் முழுவதுமாக குத்தி குத்தி கேஸை வெளியேத்துவோம். இப்படி உயிரை பணயம் வைத்தால்தான் ஏதாவது கிடைக்கும்.

சிமெண்ட் கலவைபோடும் குழி.

இந்த வேலை செய்யும் எங்களை வீட்டுக்காரர் பெரும்பாலோர் வீட்டினுள்ளே பொருட்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். வீட்டின் பக்க வழியைத்தான் பயன்படுத்த வேண்டும். அப்படி இடம் இல்லையென்றால் பின்பக்க மதில்சுவரை தாண்டி உள்ளே வரச்சொல்வார்கள். கிணற்றுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் அந்த வழியில்தான் சிரமப்பட்டு எடுத்துச் செல்ல வேண்டும். அய்யர் வீடு என்றால் இன்னும் சுத்தம். அவசரத்திற்கு எந்தப் பொருளையும் அவர்களிடம் கேட்க முடியாது, தப்பித்தவறி கேட்டுவிட்டால் இன்னொருமுறை கூப்பிடமாட்டார்கள். மிகவும் உசாராக இருப்போம்.

விஜயகாந்த் – டாட்டா ஏஸ் ஓட்டுனர்.

இன்னும் சில பணக்காரர்கள் தங்கள் பங்களாக்களில் அழகுக்கு கிணறு தோண்டுகிறார்கள். அது 20 அடி அகலத்திற்கு பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக இருக்கும். ஆனால் தண்ணீர் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. வீட்டில் பெரும் கிணற்றோடு தோட்டம் இருக்கிறது என்று சொல்லிக்கொள்வதில் ஒரு பெருமை. இப்படியே எங்கள் பொழப்பு போகிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க