ர்.எஸ்.எஸ். தொடர்புடைய காவி அமைப்புகள் ஆயுத பயிற்சி அளிப்பதை வெளிப்படையாகவே செய்துவருகின்றன. அதுபோதாதென்று  உத்திர பிரதேசத்தில் இராணுவ பயிற்சி பள்ளியை தொடங்க இருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.  இந்த அமைப்பின் முன்னாள் சர்சங் சலக் ராஜேந்திர சிங் என்கிற ராஜூ பையா என்பவரின் பெயரில் அடுத்த ஆண்டு இராணுவ பள்ளி செயல்படத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கல்வி பிரிவான வித்யா பாரதி, இந்தப் பள்ளியை நடத்தும் என்றும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை கற்பிக்கும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.  வித்யா பாரதி, தற்போது நாடெங்கிலும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளை நடத்துகிறது.

இந்த இராணுவ பள்ளிக்கு முன்னாள் இராணுவ வீரர் சவுதரி ராஜ்பால் சிங் என்பவர் அளித்த 8 ஏக்கர் நிலத்தில் ஆண்களுக்கான உறைவிடப்பள்ளி கட்டுமானப்பணி நடந்துவருகிறது.  இந்தப் பள்ளிக்கும் பாஜகவின் பிராந்திய தலைவர் டிகே. சர்மா தலைமையில் பள்ளி கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ பயிற்சியோடு, பண்புநலன்களை வளர்ப்பது குறித்தும் சொல்லித்தரப்படும் எனவும் தெரிய வந்துள்ளது.

மத்திய அரசே இராணுவ பள்ளிகளை நடத்திக்கொண்டிருக்கும்போது, வலதுசாரி சிந்தனையுள்ள, வன்முறை சம்பவங்களில் தொடர்புடைய ஒரு அமைப்பு இராணுவ பள்ளிகளை நடத்துவதன் தேவை என்ன என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், அரசியல் ஆதாயங்களுக்காக ஆர்.எஸ்.எஸ். இதைச் செய்வதாகவும் இவர்களின் இராணுவ பள்ளியில் மாணவர்களுக்கு கும்பல் வன்முறைகள் குறித்தும் சமூக சமத்துவத்தை எப்படி குலைப்பது என்பதையும்தான் கற்றுத்தருவார்கள் என்கிறார்.

முன்னாள் இராணுவ அதிகாரி அசோக் கே மேத்தா, “மதச்சார்பற்ற, அரசியலற்ற, தொழில் விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட நமது ஆயுதப்படையின் இயல்பை சீர்குலைக்கும் வகையில் ஆர்.எஸ். எஸ். செயல்பாடு உள்ளது” என்கிறார்.

மேலும் அவர்,  “சித்தாந்த அடிப்படையில் ஒற்றை மதத்தைக் கொண்ட அந்த அமைப்பு, மற்ற மதங்களுக்கு எதிரான, தலித்துகள், பெண்களுக்கு எதிரான கண்ணோட்டம் உடையது. இராணுவத்தின் கண்ணோட்டத்துக்கும் இது எதிரானது. இராணுவம் அரசியலற்றது, குறிப்பாக, மதச்சார்பற்றது. எனவே, ஒற்றை மதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல், மதவாத போதனைகளுக்கு அங்கே இடமில்லை” எனவும் விமர்சித்துள்ளார்.

படிக்க:
முஸ்லீம் சப்ளை செய்யக் கூடாது | ஸொமெட்டோ , ஊபர் ஈட்ஸ்-ஐ மிரட்டும் சங்கிகள் !
ஒருநாடு ஒருதேர்தல் : இந்து ராஷ்டிரம் அணிந்துவரும் முகமூடி !

ஆளும் அரசுக்கு சித்தாந்த போதனை அளிக்கும் அமைப்பு, இராணுவ பள்ளியைத் தொடங்குகிறது. அரசுக்கு எதிராக போராடுகிறவர்கள், விமர்சிப்பவர்கள், எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், மத சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மீது திட்டமிட்டு நடத்தப்படும் வன்முறைகள் இயல்பாகிவிட்ட சமூகத்தில், அதை செயல்படுத்திக் கொண்டிருக்கும் அமைப்பு இராணுவ பள்ளியைத் தொடங்குவதன் மூலம் வன்முறையை அமைப்பாக செயல்படுத்தத் திட்டமிடுகிறது.  பொதுச்சமூகம் விழித்துக்கொள்ளாவிட்டால், கடுமையான விளைவுகளை நிச்சயம் சந்திக்க வேண்டியிருக்கும்.


அனிதா
நன்றி : The quint

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க