பா.ஜ.க. தலைமையில் அமைந்திருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்றத்தின் மக்களவையில் 348 உறுப்பினர்களைக் கொண்டு அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறது. இந்த எண்ணிக்கை மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்குக்குக் கொஞ்சம்தான் குறைவானது.
நாடாளுமன்றத்தின் மேலவையை எடுத்துக்கொண்டால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எண்ணிக்கை 107-ஐத் தொட்டுவிட்டது. அடுத்த ஆண்டில் கணிசமான மேலவை உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் நடைபெறவிருப்பதால், அங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பெரும்பான்மை பலம் கிடைத்துவிடும் சூழல் எழுந்திருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக்காக இருந்து பிரதமராகியிருக்கும் மோடி, தனது இரண்டாவது ஆட்டத்தில், மேற்கண்ட சாதகமான சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு ஆர்.எஸ்.எஸ். -இன் முக்கியமான கோட்பாடுகளையும் திட்டங்களையும் நடைமுறைக்குக் கொண்டுவந்துவிடும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார். அதிலொன்றுதான் ஒரு நாடு ஒரு தேர்தல்.
ஒரே நாடு ஒரே பண்பாடு மட்டுமே ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க.வின் திட்டமல்ல என்பது மோடியின் முதல் தவணை ஆட்சியிலேயே அம்பலமாகிவிட்டது. நாடெங்கும் ஒரே வரி (ஜி.எஸ்.டி.), ஒரே நுழைவுத் தேர்வு (நீட்) ஆகியவை கடந்த ஆட்சியில் அமலுக்கு வந்தன. இந்தத் தவணை ஆட்சியில் ஒரே கல்விக் கொள்கை, கீழமை நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்க நாடெங்கும் ஒரே தேர்வு, ஒரே மோட்டார் வாகனச் சட்டம், ஒரே ரேஷன் கார்டு, ஒரே நதி நீர்த் தீர்ப்பாயம் ஆகியவற்றோடு 2024 -ஆம் ஆண்டிற்குள் ஒரு நாடு ஒரு தேர்தல் என்பதையும் அமலுக்குக் கொண்டுவந்துவிட வேண்டும் எனத் திட்டமிட்டுச் செயலாற்றி வருகிறது, மோடி அரசு.
கார்ப்பரேட் – காவி பாசிசம் என்பது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்று ஒன்றையொன்றைப் பிரித்துப் பார்க்க முடியாது என்பதால், மேற்கண்ட “ஒரே” திட்டங்கள் அனைத்திலும் கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் நலன்களும் ஆர்.எஸ்.எஸ்.-இன் ஏக பாரத இலட்சியமும் இணைந்தே பயணம் செய்கின்றன.
மேலும், மோடி ஆட்சியில் அமலுக்கு வந்துகொண்டிருக்கும் இந்த “ஒரே” திட்டங்கள் அனைத்தும் இந்தியாவில் இதுகாறும் நிலவிவந்த அரைகுறையான கூட்டாட்சி கொள்கையை அரித்துச் செல்லாக்காசாக்கியும் வருகின்றன.
மோடி அரசு 2024-ஆம் ஆண்டிற்குள் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டமோ, இந்தியாவில் கூட்டாட்சி அமலில் இருப்பதாகத் தெரியும் தோற்றத்தைக்கூட ஒழித்துக்கட்டிவிடும் அபாயமிக்கது.
படிக்க:
♦ தமிழகத்தை நாசமாக்காதே ! புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019
♦ மாணவர்கள் கையில் பட்டாக்கத்தி : யார் காரணம் ?
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மைய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்தக்கூடிய ஒரு நாடு ஒரு தேர்தல் முறைக்கு மாறுவதன் மூலம், தேர்தல்களுக்காக அரசு செலவிடும் தொகையைக் கணிசமாகக் குறைக்கலாம்; ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அரசின் கொள்கைகள், திட்டங்களைத் தயக்கமின்றி நடைமுறைப்படுத்தலாம்; அடிக்கடி வரும் தேர்தல்களால் சலிப்படைந்து போகும் மக்கள்திரளை வாக்குச்சாவடிகளை நோக்கி ஈர்க்கலாம் எனத் தேன்தடவிய வாதங்களை ஆளும் பா.ஜ.க.வும், அதிகார வர்க்கமும் அடுக்குகின்றன.
கட்டணக் கொள்ளையைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்பட்ட நீட் தேர்வு கட்டணக் கொள்ளையை ஒழித்துவிட்டதா, சட்டபூர்வமாக்கியிருக்கிறதா? ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை வரி ஏய்ப்பைத் தடுத்திருக்கிறதா, இல்லை மக்களின் மீது வரிச் சுமையை அதிகரித்திருக்கிறதா? அவையெல்லாம் சொல்லிக் கொள்ளப்பட்ட நியாயங்களுக்கு எதிராகச் செயல்பட்டுவரும்போது ஒரு நாடு ஒரு தேர்தல் மட்டும் ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும் வாரிவழங்கிவிடும் என நம்பமுடியுமா?
தற்போது உள்ள தேர்தல் முறையில் பாரிய சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் எனக் கோரிவரும் முதலாளித்துவ அறிவுத்துறையினர் அனைவரும் தேர்தல்களுக்குக் கட்சிகளும் வேட்பாளர்களும் செலவு செய்வதைத் தடை செய்து, அதற்கு மாறாக அரசு நிதி அளிக்க வேண்டும் எனும் மாற்றை முன்வைத்து வருகிறார்கள். ஆனால், மோடி அரசு அச்சீர்திருத்தத்துக்கு நேர்எதிராக அரசின் தேர்தல் செலவுகளைக் குறைக்கும் அபாயகரமான ஆலோசனையை முன்வைக்கிறது.
ஒரு நாடு ஒரு தேர்தல் முறை அமலுக்கு வந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் ஐந்தாண்டுகள் பதவியில் நீடிக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ஏதோவொரு காரணத்தால் அம்மாநில அரசுகள் கலைந்துபோனாலோ, கலைக்கப்பட்டாலோ, மீதமிருக்கும் காலத்திற்கு அம்மாநிலத்தில் அரசுத் தலைவரின் ஆட்சியை அமல்படுத்தும் ஆலோசனை முன்வைக்கப்படுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைக் கலைப்பதற்கு மைய அரசிற்கு அதிகாரம் தரும் 356-ஆவது பிரிவை நீக்க வேண்டும் என நீண்டகாலமாக எழுப்பப்பட்டுவரும் கோரிக்கைக்கு நேர் எதிராக, 356 பிரிவைப் பயன்படுத்தாமலேயே மாநிலங்களில் குடியரசுத் தலைவரின் ஆட்சியை அமலுக்குக் கொண்டுவரும் அதிகாரத்தை மைய அரசிற்கு வழங்குகிறது, ஒரு நாடு ஒரு தேர்தல் முறை.
தற்போதுள்ள தேர்தல் விதிகளின்படி, ஒரு தொகுதி ஏதோவொரு காரணத்தால் காலியானாலும், மாநில அரசு கலைந்துபோனாலும் அல்லது கலைக்கப்பட்டாலும் அத்தொகுதிக்கு அல்லது அம்மாநிலச் சட்டமன்றத்திற்கு காலியான / கலைந்துபோன / கலைக்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும். ஒரு நாடு ஒரு தேர்தல் முறை மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த ஜனநாயக உரிமையை ரத்து செய்கிறது.
இந்திய மக்களின் பெரும்பாலான அரசியல், பொருளாதார உரிமைகள் பறிக்கப்பட்டுவரும் நிலையில், தேர்தல்களில் வாக்களிப்பது மட்டும்தான் மாபெரும் ஜனநாயகக் கடமையாகச் சோடித்துக் காட்டப்படுகிறது. அதனையும் நடைமுறையில் இல்லாமல் செய்வதுதான் ஒரு நாடு ஒரு தேர்தல் முறை.
நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுகள் தோற்று, இடைத் தேர்தல்கள் வராமல் தடுப்பதற்காக, “நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும்போது, மாற்று அரசு அமைப்பதற்கான வழிகளையும் சேர்த்தே முன்வைக்க வேண்டும். இதற்கேற்ப கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும்” என நிதி ஆயோக் அமைப்பு ஆலோசனை கூறியிருக்கிறது. இந்த ஆலோசனை குதிரை பேரத்தைச் சட்டபூர்வமாக்கும் அயோக்கியத்தனம் தவிர வேறில்லை.
இந்தியா சுதந்திரமடைந்த பின் மொழிவாரி மாநிலங்களும் மாநில அரசுகளும் உருவாக்கப்பட்டதை எதிர்த்த ஒரே அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.தான். வலிமையான அனைத்து அதிகாரங்களையும் கொண்ட மைய அரசு, கிராமப்புற பஞ்சாயத்து அமைப்புகள் என்ற இரண்டு அடுக்கு அதிகார அமைப்புகளுக்கு அப்பால் மாநில அரசுகள் தேவையற்றது என ஆர்.எஸ்.எஸ். தீர்மானமே இயற்றியதாகக் கூறப்படுகிறது. மொழிவாரி மாநிலங்கள், மாநில அரசுகள் ஆகியவை இந்தியாவின் பன்முகத் தன்மையை எடுத்துக்காட்டுவதாக இருப்பதாலேயே, மாநில அரசுகளும், மாநிலக் கட்சிகளும் பலம் வாய்ந்தவையாக இருப்பதை ஆர்.எஸ்.எஸ். ஏற்றுக் கொள்வதேயில்லை.
படிக்க:
♦ ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்
♦ ’சுதந்திர’ தேவிகளின் சுடர்கள்தான் ஏவுகணைகளைப் பற்றவைக்கின்றன | படக்கட்டுரை
அரசியல் சாசனச் சட்டப்படி உருவாக்கப்பட்ட மொழிவாரி மாநிலங்களையும் மாநில அரசுகளையும் ஆர்.எஸ்.எஸ்.-ஆல் கூட நினைத்த மாத்திரத்தில் ரத்து செய்துவிட முடியாது. அதற்கு மாறாக, அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க.வை அல்லது தமது கூட்டணியை ஆளுங்கட்சியாக அமரவைப்பதன் மூலம் தனது ஏக பாரதக் கனவை நிறைவேற்றிக் கொள்ளத் திட்டமிடுகிறது, ஆர்.எஸ்.எஸ். நாடாளுமன்றத்திற்கும் மாநிலச் சட்டமன்றங்களுக்கு ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டால், அவ்விரண்டு தேர்தல்களிலும் ஒரே கட்சிக்கு மக்களை வாக்களிக்க வைக்க முடியும் என்பதால் ஒரு நாடு ஒரு தேர்தல் என்ற திட்டத்தை விவாதப் பொருளாக்கியிருக்கிறது.
ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டத்தை 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போதே நிறைவேற்றிவிடத் திட்டமிட்டு இயங்கிய மோடி, அது கைகூடாமல் போகவே, தனது இலக்கை 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தள்ளி வைத்திருக்கிறார். அதுவரையிலும் பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களை என்ன செய்வது? ஒன்று, தமிழக ஃபார்முலா, இல்லையென்றால் கர்நாடகா ஃபார்முலா என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க. வின் திட்டம்.
மோடி இரண்டாவது முறையாக பிரதமர் நாற்காலியில் அமர்ந்தவுடனேயே, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த நான்கு மேலவை உறுப்பினர்களை பா.ஜ.க.வில் இணைத்துக்கொண்டு மேலவையில் தெலுங்கு தேசம் கட்சியைக் காலி செய்தார். அடுத்து கோவாவில் எதிர்க்கட்சியான காங்கிரசைச் சேர்ந்த பத்து சட்டமன்ற உறுப்பினர்களை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டு, அமைச்சர் பதவியும் கொடுத்து, காங்கிரசைக் காலிசெய்தார்.
கர்நாடகாவிலோ காங்கிரசு, ம.ஜ.த. மற்றும் சுயேச்சைகள் அடங்கிய 16 சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவிவிலக வைத்து, அதன் மூலம் காங்கிரசு- ம.ஜ.த. கூட்டணி ஆட்சிக்குப் பெரும்பான்மை இல்லாமல் செய்து, அக்கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்து, அதன் பின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது, பா.ஜ.க.
பதவி விலகல் கடிதம் கொடுத்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி காங்கிரசு, ம.ஜ.த. கட்சிகளின் கொறடா உத்தரவிட முடியாது என இடைக்கால உத்தரவிட்டிருப்பதன் மூலம், பா.ஜ.க.-வின் அதிகார வேட்டைக்கு உச்ச நீதிமன்றமும் ஒத்தூதியிருக்கிறது.
கர்நாடகாவில் பதவி விலகல் கடிதம் கொடுத்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தொழில் அதிபர்கள் எனக் கூறப்படுகிறது. தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்துவிட்ட மேலவை உறுப்பினர்கள் நான்கு பேரின் மீதும் குற்ற வழக்குகள் விசாரணையில் உள்ளன. தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க., பா.ஜ.க.வின் எடுபிடியாக நடந்துகொள்வதன் காரணம் ஊழல் தவிர வேறொன்றுமில்லை.
படிக்க:
♦ NEP 2019 : மனுநீதியின் புதிய பதிப்பு | பேராசிரியர் கருணானந்தன் நேர்காணல்
♦ மாணவர்கள் என்றாலே ரவுடிகள் பொறுக்கிகள்தானா ? | பு.மா.இ.மு. கணேசன் நேர்காணல்
காங்கிரசு கட்சி நாடு தழுவிய நிலையில் மிகவும் பலவீனமடைந்திருக்கும் நிலை; மாநிலக் கட்சிகளின் பிழைப்புவாதம், ஊழல், குடும்ப அரசியல் ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்டிருக்கும் சீரழிவுகள் என்பதெல்லாம் ஒருபுறமிருக்க, தற்சமயம் ஓட்டுக்கட்சிகளின் உள்ளூர் தலைவர்கள் தொடங்கி அனைத்து மட்டத்திலும் இருப்பவர்களும் கட்டப் பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் வியாபாரம் எனப் பலவாறான தொழில்களை நடத்திவரும் தொழில் அதிபர்களாக இருப்பதால், அவர்களை விலை கொடுத்து வாங்குவதோ, அல்லது அவர்களே காற்று வீசும் பக்கம் ஓடுவதோ மிகச் சாதாரணமான நடைமுறை ஆகிவிட்டது. இப்படி ஓட்டுக்கட்சி அரசியல் சீரழிந்து போயிருப்பது ஆர்.எஸ்.எஸ். கூட்டணிக்குத் தனது கார்ப்பரேட் பாசிச திட்டங்களைச் செயல்படுத்துவதற்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.
பிற முதலாளித்துவ கட்சிகளின் ஆதரவோடு இத்தாலியில் ஆட்சியைப் பிடித்த முசோலினி, பின்னர் கூட்டணிக் கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடின்றி அனைத்து முதலாளித்துவக் கட்சிகளையும் அமைப்புகளையும் தடைசெய்துவிட்டு, ஒற்றைக் கட்சி, ஒற்றை ஆட்சியை அந்நாட்டில் ஏற்படுத்திய வரலாற்றை, ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. நாளை இந்தியாவிலும் செயல்படுத்தக் கூடும். இந்து மதவெறி பாசிஸ்டுகள் முன்தள்ளும் ஒரு நாடு ஒரு தேர்தல் என்ற திட்டம் அத்தகைய ஒற்றைக் கட்சி ஒற்றை ஆட்சிக்கான முன் தயாரிப்பாகும்.
மின்னூல்:
₹15.00Add to cart
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்
₹15.00Add to cart |
₹15.00Add to cart |
₹15.00Add to cart |
இந்திய தேசத்திலிருந்து துடைத்து எறியப்பட வேண்டியவர்கள் நவீன காங்கிரஸ் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் போலி மதச்சார்பின்மை பேசும் கூட்டங்கள்.