தருமபுரியில் மீண்டும் அரங்கேறும் ஆதிக்க சாதி தாக்குதல்கள் : சாதி மறுத்து திருமணம் செய்து கொண்டதற்காக பெற்றோரைக் கட்டி வைத்து அடித்த ஆதிக்க சாதி வெறி !

ருமபுரியில், இளவரசன் திவ்யா காதல் திருமணத்தைத் தொடர்ந்து நத்தம் காலனி எரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இளவரசனின் மரணமும் நிகழ்ந்தது. அப்போது இது அநீதி என்று பலராலும்  பரபரப்பாக பேசப்பட்டது. எழுதப்பட்டது. ஆனால் இது போன்ற சம்பவங்கள் இன்று குறைந்திருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லமுடியும்.

சொல்லப்போனால், தமிழகம் சாதி வெறியர்களின் சொர்க்க புரியாக மாறிவருகிறது. சாதி மறுப்பு திருணங்கள் செய்து கொள்வோர் இன்று ஆணவக்கொலை செய்யப்படுகிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் 180-க்கும் மேற்பட்ட ஆணவப்படுகொலைகள் நடந்துள்ளன. சாதிவெறியர்கள், தமிழகத்தை வட மாநிலங்களாக மாற்றி வருகிறார்கள்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகில் உள்ள பிக்கம்பட்டி கிராமத்தில் நாவிதர் சமூகத்தை சேர்ந்த 10 குடும்பங்கள் வசித்துவருகின்றனர். அந்த ஊரில் அந்த  சமூகத்தை சேர்ந்த  காளிதாசின் மகன் அஜித்குமார் (23) ஏரோநாட்டிக்கல் இஞ்சினியரிங்க் படித்துவிட்டு பெங்களூரில் வேலை செய்து வருகிறார். இவர், பிக்கம்பட்டிக்கு அருகில் உள்ள  தாளப்பள்ளம் கிராமத்தில் உள்ள வன்னிய சமூகத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மகள் பிரியாவை(22)  காதலித்து 35 நாட்களுக்கு முன்பு  இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் உயிருக்கு பயந்து வெளிமாநிலம் சென்றுவிட்டனர். பெண்ணின் பெற்றோர் அதியமான் கோட்டை காவல்நிலையத்தில் புகார் தரவே போலிசு அஜித்குமாரின் பெற்றோரை அழைத்து பையனையும், பெண்ணையும் அழைத்துவரும்படி கூறியுள்ளனர்.

பின்னர் விசாரணையில் இருவரும் திருமணம் செய்து கொண்டு தலைமறைவாகியுள்ளனர் என்று போலிசு கூறியதைத் தொடர்ந்து சாதிவெறி தலைக்கேறிய பெண் வீட்டார் உறவினர்களை வைத்து பல இடங்களில் அஜித்குமாரை தேடினர். எங்கும் கிடைக்காத ஆத்திரத்தில் வன்னிய சமூகத்தை சேர்ந்த சில ஆதிக்க சாதி வெறியர்கள் பிக்கம்பட்டியில் உள்ள நாவிதர் சமூகத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் அருகில் உள்ள செக்காரப்பட்டியில் நாவிதர் சமூகத்தினரின் வீடுகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் அச்சமடைந்த அவர்கள் ஊரைவிட்டு வெளியேறி பெங்களூர் சென்று விட்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்நிலையில் கடந்த  24.07.2019 அன்று ஆதிக்க சாதி வெறியர்களான பாஸ்கர், செந்தில், தர்மலிங்கம், பென்னாகரம் முனியப்பன் உள்ளிட்டவர்கள் கும்லாக காரில்   பெங்களூர் சென்று அஜித்குமாரின் தந்தை காளிதாஸ், தாய் வித்யா(40) மற்றும் அஜித் குமாரின் உறவினர்களான காளிதாசின் சகோதரி சின்னக்கா, காளிதாசின் தம்பி ஹரிகரன், இவரது மகன் மஞ்சுநாத், உறவினர்கள் சரஸ்வதி, கிருஷ்ணமூர்த்தி, நாகராணி, செல்வம் ஆகியோரை நைச்சியமாக பேசி; “கூ.கீ. அன்பழகனெல்லாம் (அதிமுக முன்னாள் மாநில நிர்வாகி) ஊரில் இருக்கிறார்கள். அவர்களை வைத்து நாம் ஊரில் பேசித் தீர்த்துக்கொள்ளலாம்..” என்று கூறி காரில் அழைத்துவந்தனர்.

இரவு தாளப்பள்ளத்திற்கு அழைத்து வந்த அவர்கள் நேரடியாக பிரியாவின் வீட்டிற்கு அழைத்து சென்று இரவு முழுதும் அவர்களை நிர்வாணப்படுத்தி தாக்கினர். ஓஸ் பைப், பெல்ட், (பச்ச) தேங்காய் மட்டை போன்றவற்றால் நாக்கூசும் வார்த்தைகளால் திட்டிக்கொண்டே கடுமையாக தாக்கியுள்ளனர். ஊரில் உள்ள ஆண்கள், பெண்கள் என பலரும் கூட்டமாக சேர்ந்து அவரவர் கையில் கிடைத்ததை கொண்டு தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த மாநில துணைச்செயலாளர் தவமணியும் ஈடுபட்டதாகவும்,  அவர் தனது செருப்பு காலால் எட்டி உதைத்ததாகவும், அவருடைய ஆட்கள்தான் இதில் முக்கியமாக ஈடுபட்டார்கள் என்றும் கூறுகிறார்கள் இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள்.

படிக்க:
பூங்கொடி கொலை : வன்னிய மக்களே சிந்திப்பீர் !
♦ மாணவர்கள் கையில் பட்டாக்கத்தி : யார் காரணம் ?

இதில் அஜித்குமாரின் தந்தை காளிதாஸ், தாய் வித்யா(40), காளிதாசின் சகோதரி சின்னக்கா, காளிதாசின் தம்பி ஹரிகரன், இவரது மகன் மஞ்சுநாத், நாகராணி, உறவினர்கள்  சரஸ்வதி, கிருஷ்ணமூர்த்தி, செல்வம் ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டனர். பெண்களை மார்பில் கைவைத்து பாலியல் ரீதியாக கொடுமைபடுத்தியுள்ளனர். சீமண்ணெயை உடலில் ஊற்றி தீப்பந்தம் எடுத்து வந்து பெண்ணையும் பையனையும் எங்கே வைத்திருக்கிறீர்கள், சொல்லுங்கள் இல்லையென்றால் கொளுத்திக் கொன்று விடுவோம் என்று கூறி தாக்கியுள்ளனர்.. அடிதாங்க முடியாமல் தப்பியோடிய செல்வத்திற்கு கீழே விழுந்து எலும்பு முறிந்துவிட்டது.

இரவு 12 மணியிலிருந்து மறுநாள் காலை 8 மணிவரை ஓடிபோனவர்கள் எங்கே இருக்கிறார்கள்  என்று கேட்டு, விடாமல் தொடர்ந்து தாக்கியுள்ளனர். இதில் அஜித்குமாரின் தந்தை காளிதாஸை மறுநாள் காலை 9 மணிக்கு பென்னாகரம் அருகில் உள்ள தாசம்பட்டியில் அவர்களின் உறவினர் ஒருவருடைய வீட்டில் வைத்து நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ளனர். காளிதாசின் பிறப்புறுப்பில் சிகரெட்டால் சுட்டுள்ளனர். மாலை வரை அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

மற்றவர்களை 25.07.2019 அன்று  காலை பத்து மணிக்கு,  தாக்கப்பட்டவர்களை ஒகேனக்கல் ஃபாரஸ்ட் ஆபிசில் வைத்து பூட்டிவிட்டு காவலுக்கு சிலரை வெளியே நிறுத்திவிட்டு சென்றுள்ளனர். இறுதியாக,  மாலை நேரத்தில் காரில் ஏற்றிச்சென்று ஒசூர் பஸ் நிலையத்தில் இறக்கிவிட்டு, போலிசுக்கோ, கவர்மென்ட்டுக்கோ புகார் கூறினால் குழந்தை குட்டிகளையெல்லாம் கொன்றுவிடுவோம், உங்கள் வம்சமே இல்லாமல் செய்துவிடுவோம் என்று மிரட்டி, ரூ 100 பாண்டு பேப்பரில் கையெழுத்து பெற்றுக்கொண்டு  அனுப்பியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள்  நேரடியாக  பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சென்று சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் ஜெயின் மருத்துவமனையிலும் மருத்துவம் பார்க்கின்றனர். இதில் ஏற்கெனவே நோயாளியாக இருந்து மருந்து மாத்திரை சாப்பிட்டுக்கொண்டிருந்த அஜித் குமாரின் தாய் வித்யா(40) தாக்குதலில் படுகாயமடைந்து சுயநினைவு இன்றி உள்ளார்.

சாதி வெறியர்களின் கொலை மிரட்டலைக் கண்டு அச்சம் அடைந்து பாதிக்கப்பட்டவர்கள் இன்றுவரை புகார் ஏதும் தரவில்லை. வாட்ஸ் அப்பில்,  பாதிக்கப்பட்டவர்கள் காயங்களுடன்  உள்ள புகைப்படம் வெளியாகி பரவியதை தொடர்ந்து இக்குற்றச் செயலை இண்டூர், பாப்பாரப்பட்டி, அதியமான் கோட்டை போலிசு விசாரிக்க கிளம்பியுள்ளது.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை கூட இல்லாதொழிக்க திட்டம் போடும் காவி பாசிஸ்டுகள் ஆளும் நாட்டில், “ஆணவப்படுகொலைகள் எனது ஆட்சியில் மட்டும்தான் நடக்கிறதா?” என்று பொறுப்பற்ற முறையில் பேசும் எடப்பாடி ஆட்சிசெய்யும் மாநிலத்தில் சாதிவெறியர்கள் தண்டிக்கப்பட வாய்ப்பே இல்லை.

இச்சாதி வெறி தாக்குதல் இறுதியானதும் அல்ல.  மக்களும், ஜனநாயக சக்திகளும் இந்த அரசு கட்டமைப்புக்கு வெளியே தீர்வை தேடி, ஒன்றிணைந்து போராடுவதை தவிர வேறு வழியும் இல்லை.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம்.
தொடர்புக்கு : 9790138614

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க