ச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மாணவர்கள் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை உடைந்துவிட்டதாகக் கூறியது போலீசு. அவர்களை வரிசையாக நிற்க வைத்து புகைப்படமும் எடுத்து வெளியிட்டது போலீசு. சட்டவிரோதமாக மாணவர்களின் கையை உடைத்தது மட்டுமல்லாமல், அவர்களைக் காட்டி மற்றவர்களை மிரட்டுகிறார்களாம். அதுமட்டுமல்லாமல், கல்லூரிக்குள் சென்று மிரட்டுவது, பெற்றோர்களை வரவழைத்து மிரட்டுவது என போலீசு அராஜகம் தொடர்கிறது. மாணவர்களிடம்  இனி ”சாப்ட் கார்னர்” அணுகுமுறையை கடைபிடிக்க மாட்டோம்; குற்றவாளிகளைப்போல இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம் என்கிறார் போலீசு உயர் அதிகாரி.போலீசின் இந்த நடவடிக்கைகளை ஆதரித்தும், எதிர்த்தும் பல்வேறு கருத்துக்கள் மக்களிடையே பேசப்படுகின்றன.

இவ்விவகாரம் குறித்து டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம், சமச்சீர் கல்விப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன் என்ன சொல்கிறார்? அவரிடம் நடத்திய நேர்காணலில் இருந்து சில பகுதிகள் :

♦ சமீபத்தில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், நடுரோட்டில் வீச்சரிவாள்களுடன் மோதிக்கொண்ட சம்பவத்தை ஒரு மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக எப்படிப் பார்க்கிறீர்கள்?

◊ ஒரு சில ரூட் மாணவர்கள் எந்த ரூட் பெரிது என்று கெத்து காட்டுவதற்காக வழமையாக ஒவ்வொரு ஆண்டும் இப்படி மோதிக் கொள்கிறார்கள். இப்படி மோதலில் ஈடுபடும் மாணவர்கள் படுகாயம் அடைவதோடு, படிப்பும் எதிர்காலமும்கூட பாதிக்கப்படுகிறது. இவையெல்லாம் ஒரு சில மாணவர்கள் செய்யும் ரவுடித்தனம். மாணவர்கள் இத்தகைய ரவுடித்தனத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எமது பு.மா.இ.மு. அமைப்பு இதை ஏற்கவில்லை. கண்டிக்கிறது. இது மக்களிடையே மாணவர்களைப் பற்றிய தவறான அபிப்ராயத்தை உருவாக்குகிறது. அதுமட்டுமல்ல வெறுப்பையும் தோற்றுவிக்கிறது. அதே சமயம் இத்தகைய தவறான சம்பவத்தில் ஈடுபடும் மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு குற்றவாளிகளாக மாறுகிறார்கள்.

♦ ”பஸ் டே” – ”ரூட் தல” போன்றவை எல்லாம் சீரழிவுக் கலாச்சாரமாக பொதுமக்களிடையே பார்க்கப்படுகிறது அல்லவா? அதை எதிர்க்க வேண்டாமா?

◊ ஒரு சில மாணவர்கள் செய்யும் ரவுடித்தனத்தை இயல்பாக கடந்து செல்லச் சொல்லவில்லை. இத்தகைய ரவுடி கலாச்சாரத்தை மாணவர்களிடம் இருந்து முற்றிலும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஒருசில மாணவர்களுடைய இத்தகைய ரவுடித்தனமான செயல்பாட்டை நாங்கள் ஆதரிக்கவுமில்லை. ஆனால், இதை ஒட்டுமொத்த சென்னை மாணவர்களும் செய்வதாக பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் மற்றும்  அரசும்  சித்தரிப்பதைதான் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

அதேசமயம் மாணவர்கள் ஆண்டுதோறும் கொண்டாடி வரும் பஸ்டே மற்றும் மாணவர்கள் தினந்தோறும் கல்லூரிக்கு வரும் ரூட் ஆகியவற்றையெல்லாம் சீரழிவு  என்று யார் சொன்னது? நான் மாநிலக் கல்லூரியின் முன்னாள் மாணவன். அந்த கல்லூரியில் எம்.ஃபில் வரை ஏறக்குறைய ஏழு ஆண்டுகள் படித்து இருக்கிறேன்.  பஸ் டே, ரூட் போன்றவை எல்லாமே மாணவர்கள் தங்களுடைய ஒற்றுமையின், தங்களுடைய ஜனநாயக உரிமையின் அடையாளமாகத்தான் பார்க்கிறார்கள்.

சமீப ஆண்டுகளாக சகிக்க முடியாத அளவிற்கு பேருந்துகளிலும் இரயில்களிலும் மாணவர்களின் ரவுடித்தனம் மக்கள் முகஞ்சுழிக்கும் வண்ணம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறதே?

◊ ரவுடித்தனம் செய்யும் சில மாணவர்களும் கூட இப்படி நடந்து கொள்வதற்கும் ஒரு சமூக அடிப்படை இருப்பதை முதலில் நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். இன்றைக்கு சினிமா, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் தாக்கம்தான் மாணவரிடம் அதிகமாக இருக்கின்றது என்பதை நீங்கள் மறுக்க முடியுமா? சினிமாவும் தொலைக்காட்சி சீரியல்களில் மாணவர்களுக்கு எதைக் கற்றுக் கொடுக்கிறது? மாணவ சமூகம் மூடித்தனமாக பொறுக்கித்தனமாக இருப்பதுதான் கெத்து என்று மாணவர்களுக்கு பயிற்றுவிக்கிறது.

எத்தனையோ சினிமா படங்கள் ஹீரோ என்றால் இப்படி ரவுடியாக இருக்க வேண்டும் என்று சொல்வதை நீங்கள் பார்க்கவில்லையா? படிக்கட்டில் தொங்கிக் கொண்டு செல்வதையும் பட்டா கத்தியுடன் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொள்வதையும் சினிமாக்கள்தானே மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தது? இது தமிழகத்தின் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் தெரிந்த உண்மை. சினிமா படங்களில் வந்தால் அதை ரசிக்கிறார்கள். அதனுடைய பிரதிபிம்பமாக அதற்கு ஆட்பட்ட மாணவர்கள் பேருந்தில் செய்தால் வெறுக்கிறார்கள். மக்களுடைய இந்த பத்தாம்பசலித்தனமான செயலையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ரவுடித்தனத்தில் ஈடுபட்ட மாணவர்களின் கையை உடைத்த போலீசின் நடவடிக்கையை பெரும்பாலான மக்கள் ”சரிதான்” என்றுதானே கூறுகின்றனர்?

◊ ஒரு சில மாணவர்கள் செய்யும் ரவுடித்தனத்தை நாங்களும் ஏற்கவில்லை. யாரையும் ஏற்க வேண்டும் என்று சொல்லவில்லை. அதேநேரத்தில் இப்படிப்பட்ட ரவுடித்தனத்தில் ஈடுபடுபவர்கள் நிரந்தரமான ரவுடிகளாக மாற வேண்டும் என்று நினைக்கிறோமோ? அல்லது இவர்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்று கருதுகிறோமா? இதைப் புரிந்து கொள்வதில் தான்  வேறுபாடு உள்ளது.

போலீசின் பொறுக்கித்தனம் : கை முறிக்கப்பட்ட கல்லூரி மாணவர்கள்.

பெற்றோர்கள், தமது சொந்த மகன் ஒரு தவறான செயலில் ஈடுபடும் பொழுது கூட அவனை ஆத்திரத்தில் அடிக்கிறார்கள் உதைக்கிறார்கள் வீட்டை விட்டு வெளியே போ என்று அனுப்புகிறார்கள். ஆனால், அதை நிரந்தரமாக அவனை ஒரு எதிரியைப் போல நடத்துவதே இல்லை. இதையெல்லாம் அவர்கள் செய்வதற்கு காரணம் அந்த தவறின் மீது அவருடைய கோபம் ஆத்திரம் மட்டுமல்ல அவனை மாற்றியமைப்பதற்காக, திருத்தி அமைப்பதற்காக அந்த பெற்றோர்கள் எடுக்கின்ற முயற்சி என்ற வகையில் தான் பார்க்கவேண்டும். அப்படித்தான் சமுதாயத்தில் நடக்கிறது. ஆனால், இங்கு மட்டும் கல்லூரியில் ஒரு சில மாணவர்கள் தவறாக வழி நடத்தப்பட்டு இதைப் போன்ற ரவுடித்தனத்தில் ஈடுபடும் பொழுது, அவனை எதிரியைப் போல சித்தரித்து நிரந்தரமாக குற்றவாளியாக மாற்றுவதற்கு போலீசுக்கு அதிகாரத்தை கொடுப்பதை எந்த வகையில் சரி என்று பார்க்க முடியும்?

இந்த அதிகாரத்தை எந்த சட்டம் போலீசுக்கு கொடுத்தது? குற்றம் செய்திருக்கிறார்கள் என்றால், கைது செய்யுங்கள். வழக்கு போடுங்கள். சிறையில் தள்ளுங்கள். நீதிமன்றம் கொண்டு செல்லுங்கள். தீர்ப்பு எழுதுங்கள். ஆனால், அதற்கு முன்னதாகவே பிடித்த பொழுது அடித்து கையை காலை உடைப்பது, சுட்டுக் கொல்வது, என்பது எந்த வகையில் ஜனநாயகம்? இதுதான் சர்வாதிகாரம். இதுதான் போலீசின் ஆட்சி.

கல்லூரிக்கு வருகின்ற அனைத்து மாணவர்களும் ஏதோ ஒரு இலட்சியத்திற்காக அல்லது ஏதோ ஒரு பிழைப்பிற்கு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் படிக்க வருகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் எப்படி ரவுடிகளாக மாறி இருக்கிறார்கள் என்பதையும் நாம் சேர்த்து பார்க்க வேண்டும்.

கல்லூரி வளாகத்திற்குள் அத்துமீறி நுழையும் போலீசு.

ரவுடித்தனம் பொறுக்கித்தனம் கொலை கொள்ளை குடித்தனம் செய்பவர்கள் தான் இந்த சமுதாயத்தில் அரசியல்வாதிகளாக, அமைச்சர்களாக, முதல்வர்களாக, அதிகாரிகளாக, கௌரவமான மனிதர்களாக வலம் வருகிறார்கள். அவர்கள் எல்லாம் விஐபிகள் ஆக பார்க்கப்படுகிறார்கள். நல்லவன் ஒழுக்கமானவன் என்பதெல்லாம் இனி வேலைக்கு ஆகாது. அவர்கள் பிழைக்கத் தெரியாதவர்கள் என்பதைத்தான் இந்த சமூகம் மீண்டும் மீண்டும் கற்றுத்தருகின்றது.

சகிக்க முடியாத குற்றங்களுக்கு எல்லாம் இது தான் தீர்வு என்று சொன்னால், இந்த மாநிலத்தின் முதல்வர் கொடநாடு கொலை குற்றத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறார். இந்த மாநிலத்தில் முன்னாள் டிஜிபி குட்கா ஊழலில் சம்பந்தப்பட்டிருந்தார். இன்னும் பல அமைச்சர்கள் பல்வேறு விதமான ஊழல்களில் சம்பந்தப்பட்டிருக்கின்றனர். அனைத்தும் ஆதாரங்களோடு குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்றன.

அமைச்சர் ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கிறார். இன்னும் எத்தனை அமைச்சர்களை சொல்ல வேண்டும்? இன்றைய துணை முதலமைச்சர் அவர்கள் ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டிருக்கிறார். மாணவர்களின் கை கால்களை உடைத்தது போலவே, இவர்கள் விசயத்திலும் செய்வார்களா?

ஒருகாலத்தில் அண்ணா போன்ற அரசியல் தலைவர்களையும், அறிவுத்துறையினரையும் உருவாக்கிக் கொடுத்த பச்சையப்பன் கல்லூரி இன்று, ”பொறுக்கிகளையும், ரவுடிகளையும்” உருவாக்கிக் கொண்டிருக்கிறதா?

◊ நிச்சயமாக இல்லை.  ”பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்றாலே ரவுடிகள் பொறுக்கிகள்; அந்தக் கல்லூரி இப்படிப்பட்டவர்களை மட்டும்தான் உருவாக்குகிறது” என்ற தோற்றத்தை போலீஸும், பத்திரிகைகளும் அரசும் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடுகின்றது. இன்றளவும் அந்தக் கல்லூரியில் பல மாணவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருகிறார்கள். சென்னை ஐஐடி போன்றவற்றில் நடக்கின்ற இன்டர்காம் பட்டியலில் இன்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நாடகம், பேச்சுப்போட்டி, உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கி வருகிறார்கள். அதே போல் கால்பந்து கபடி கிரிக்கெட் போன்ற விளையாட்டிலும் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிறப்பாக மாநில அளவில் விளையாடி பரிசுகளை வென்று வருகிறார்கள். சமூக அநீதிகளுக்கு எதிராகப் போராடும் போராளிகளை உருவாக்கும் இடமாக இன்றளவும் பச்சையப்பன் கல்லூரி திகழ்ந்து வருகிறது என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்.

ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்புப் போருக்கு எதிராக, டாஸ்மாக் சாராயக்கடைக்கு எதிராக முன்னுதாரணமான போராட்டங்கள் பல நடத்தியவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள். சமீப ஆண்டுகளாக அதுபோன்ற சமூக அவலங்களுக்கு எதிராகவோ, மாணவர்களின் கல்வி உரிமைக்கான போராட்டங்களோ எதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லையே? காரணம் என்ன?

◊ இதையெல்லாம் நீங்கள் முன்னுதாரணமான போராட்டங்களாக குறிப்பிடுகிறீர்கள். ஆனால், இத்தகைய சமூக அவலங்களுக்கு எதிரான போராட்டங்களை மாணவர்கள் முன்னெடுத்த காரணத்தினால்தான் போலீசும் பச்சையப்பன் கல்லூரி நிர்வாகமும் மாணவர்களை பழிவாங்கும் நடவடிக்கையாக பலரை சஸ்பெண்ட் செய்தது. சில மாணவர்களை கல்லூரியை விட்டு நீக்கியே தீருவோம் என்று பிடிவாதமாக நீக்கியது. குறிப்பாக, இத்தகைய போராட்டங்களை முன்னெடுத்த எமது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவரை கல்லூரியை விட்டு  நீக்கியது. இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றோம். ”அந்த மாணவர் எங்கள் கல்லூரியில் இருந்தால் அனைத்து மாணவர்களையும் அரசியல்படுத்தி போராட்டங்களில் ஈடுபடுத்தி விடுவார். இதனால் மாணவர்கள் தவறாக வழி நடத்தப்பட்டு விடுவார்கள். எனவே, இவரை எங்கள் கல்லூரியில் நாங்கள் சேர்த்துக் கொள்ள மாட்டோம்” என்று நேரடியாக நீதிமன்றத்தில் தெரிவித்தார், கல்லூரி முதல்வர். அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு அந்த மாணவரை வேறொரு கல்லூரிக்கு மாற்றி சேர அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தது.

சமூக அநீதிக்கு எதிராகப் போராட முன்வரும் மாணவர்கள் இத்தகைய சம்பவங்களை பார்க்கின்ற போது அவர்கள் எப்படி மேலும் மேலும் இது போன்ற போராட்டங்களில் ஈடுபடுவார்கள்? அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பார்கள்? சமூக அக்கறை உள்ள மாணவர்களை கண்டறிந்து கல்லூரியைவிட்டு வெளியேற்றுவதற்கு என்றே 10-க்கும் மேற்பட்ட உளவு போலீசாரும் கியூ பிராஞ்ச் போலீசாரும் கல்லூரிக்குள் சுற்றி வருகிறார்கள்.  முதல்வருக்கு மாணவர்களை அடையாளம் காட்டி அவர்களை கல்லூரியைவிட்டு அனுப்புகின்ற வேலையை தினமும் செய்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் கல்லூரிக்கு வெளியே பத்துக்கும் மேற்பட்ட போலீசாரை குவித்து வைத்து மாணவர்களை, குற்றவாளிகளைப் போல, முழுக்க சோதித்து கல்லூரிக்கு அனுப்புகிறார்கள். கிரவுண்டில் விளையாடக்கூடாது; ஐந்து ஆறு மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து பேசிக் கொள்ளக் கூடாது; இப்படி பல்வேறு கட்டுப்பாடுகள். மாணவர்களுடைய ஜனநாயகத் தன்மையை, பொது விஷயங்களை கலந்து பேசுவதற்கான வாய்ப்பு ஆகியவற்றை அறவே ஒழித்துக் கட்டுவது போலீசும் கல்லூரி நிர்வாகமும்தான். இவர்கள்தான் மாணவர்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள். இப்படி தவறாக வழி நடத்தப்படுவதால்தான் மாணவர்கள் சமூக விஷயங்களில் தலையிட்டு போராடுவதற்கு பதிலாக சுயநலமாக காரியவாதமாக பிழைப்புவாதமாக சரியாக சொல்லப் போனால் தைரியமில்லாத கோழைகளாக திட்டமிட்டு உருவாக்கப்படுகிறார்கள்.

மாணவர் அமைப்புகள் போராட்டங்களுக்கு ”மாஸ்” காட்டத்தான் மாணவர்களைப் பயன்படுத்திக்கொள்கின்றனவா? மாணவர்களை நெறிப்படுத்தும் பொறுப்பு மாணவர் அமைப்புகளுக்கு இல்லையா?

◊ போராட்டங்களுக்கு மாஸ் காட்ட மாணவர்களை திரட்டி செல்வதால் எங்களுக்கு தனிப்பட்ட முறையில் என்ன இலாபம்? கல்வி உரிமை பறிக்கப்படுகிறது; ஹைட்ரோகார்பன் திட்டத்தால் விவசாயம் அழிக்கப்படுகிறது; இன்னும் பல்வேறு வகையில் இந்த மக்கள் பாதிக்கப்படும்போது, மாணவர்கள் பாதிக்கப்படும் போது அதற்கு எதிராக மாணவர்களை களத்தில் நிறுத்தி போராட வைப்பதுதான் ஒரு மாணவர் அமைப்பின் மிக முக்கியமான கடமையும் பொறுப்பும். இதனூடாகத்தான் கரடுமுரடாக வருகின்ற மாணவர்களை நெறிப்படுத்தி சமூக அக்கறையோடு பொறுப்புடன் ஒழுக்கத்துடன் நடந்து கொள்கின்ற வாய்ப்பை மாணவர்களுக்கு உருவாக்கித் தர முடியும். இதைத்தான் முற்போக்கு மாணவர் அமைப்புகள் செய்து வருகின்றன.

எமது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பச்சையப்பன் கல்லூரியில் செயல்பட்டு வந்த வரையில் மாணவர்களை அவர்களது ஜனநாயக உரிமைகளை மீட்டெடுக்கும் வகையிலும் பல்வேறு சமூக அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களாகவும் பொறுப்புள்ளவர்களாகவும் களத்தில் முன்னிறுத்தி அவர்களை ஹீரோவாகக் காட்டியிருக்கிறோம்.

குற்றவாளிகளைப்போல கல்லூரிக்குள் நுழையும் மாணவர்களை சோதனையிடும் போலீசு.

ஆனால், இப்பொழுது கல்லூரிக்குள் மாணவர் அமைப்புகள் செயல்பட நிர்வாகமும் போலீசும் அனுமதிப்பதே இல்லை. சரியாக சொல்வதென்றால் கல்லூரிகள் கல்லூரிகளாகவே இல்லை. சிறைச்சாலைகளை விட கொடுமையாக இருக்கின்றன. மாணவர்கள் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப் பட்டிருப்பதைபோல் அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடன் மாணவர் அமைப்புகள் கலந்து பேசுவதற்கான வாய்ப்பு அறவே ஒழிக்கப்பட்டது. ஒரு மாணவர் கல்லூரியில் மாணவர் அமைப்பில் இருக்கிறார் என்று தெரிந்தாலே அவர் உடனடியாக கல்லூரியை விட்டு தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுகிறார் அல்லது நிரந்தரமாக நீக்கம் செய்யப்படுகிறார். இது இரண்டாண்டுகளுக்கு முன்பு மாநிலக் கல்லூரியில் படித்த எமது மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கே நடந்தது. மீறி சட்டரீதியாகப் போராடி மீண்டும் கல்லூரியில் சேர்ந்தாலும் அவரை ஒதுக்கி வைப்பது, மற்ற மாணவர்களை அவர்களுடன் சேரவிடாமல் செய்வது என அந்த மாணவர்களை வதைக்கிறது நிர்வாகம். அதனூடாக போலீசுக்கு அதிக அதிகாரத்தை கொடுத்து கல்லூரி வாயிலில் நின்று மாணவர்களை நோட்டீஸ் கொண்டு வருகிறார்களா என்று சோதித்து அறிந்து அவர்களை சிறைப்படுத்துகின்ற வேலையை கல்லூரி நிர்வாகங்கள் செய்கின்றன. இப்படி இருக்கின்றபட்சத்தில் எப்படி மாணவர் அமைப்புகள் கல்லூரி மாணவர்களை ஒழுங்குபடுத்த, நெறிப்படுத்த முடியும்?

போலீஸும் கல்லூரி நிர்வாகமும் அரசும் மாணவர்கள் ஒழுங்கில்லாத நிலையில் இருக்கிறார்கள் அவர்களை ஒழுங்குபடுத்த வேண்டும்; நெறிப்படுத்த வேண்டும் என்றெல்லாம் பேசுகிறார்கள். ஆனால், மாணவர்கள் ஒழுங்குபடுத்தப்பட்டவர்களாக நெறிப்படுத்தப்பட்டவர்களாக இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களுடைய விருப்பமாக உள்ளது. ஏனென்றால், கடந்த ஆண்டுகளில் பல்வேறு சமூகப் பிரச்சினைகளில் மாணவர்கள்தான் முயற்சியோடும் அக்கறையோடும் பொறுப்புணர்வோடும் பொது விசயங்களுக்காக தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஜல்லிக்கட்டு போராட்டம் மாணவர்கள் முன் நின்று நடத்திய போராட்டம். ஹைட்ரோகார்பனுக்கு எதிராக நெடுவாசலில் மக்கள் போராடிய போது அதற்கு எதிராக தமிழகம் முழுவதும் குரல் கொடுத்து போராடியவர்கள் யார் மாணவர்கள்தானே? தற்போது பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக களத்தில் நின்று போராடி அந்த பிரச்சனையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சிறையிலடைக்க காரணமாக இருந்தவர்கள் யார்? மாணவர்கள்தானே? மறுக்க முடியுமா?

டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டதோடு, மாதக்கணக்கில் சிறைவைக்கப்பட்டார்கள்.

இன்னும் சொல்லப் போனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் தான் அதிகப்படியான மாணவர் போராட்டங்கள் நடந்து இருக்கின்றது. இதைக்கண்டு மோடி அரசு அஞ்சுகிறது. இங்குள்ள எடப்பாடி அரசு அஞ்சுகிறது. தமிழகத்தில் மாணவர் போராட்டங்கள் எதுவும் நடைபெறக்கூடாது அப்படி நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால் மாணவர் அமைப்புகள் கல்லூரிக்குள் செயல்படக்கூடாது என்று நினைக்கிறார்கள். அதனால்தான் தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் மாணவர்கள் ஜனநாயக உரிமைகள் இன்றி அடக்கி ஒடுக்கி சிறையில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதனால்தான் மாணவர் அமைப்புகளை தமிழக அரசும் மோடி அரசும் எதிரிகளாக பார்க்கிறது. இந்த மாணவர் அமைப்புகளை முதலில் களை எடுத்து விட்டால் பின்னர் மாணவர்களுடைய சமூகப்பற்றை நாட்டுப்பற்றை அறுத்தெறிந்து போர் முனை மழுங்கச் செய்து அவர்களை சீரழிவில் தள்ளி அந்த அரசை தாங்கள் விரும்புகின்ற படி நடத்தி விடலாம் என்று நினைக்கிறார்கள்.

படிக்க:
நொறுங்கியது டாஸ்மாக் – பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போர் !
NEP 2019 : மனுநீதியின் புதிய பதிப்பு | பேராசிரியர் கருணானந்தன் நேர்காணல்

இந்த நிலைமையை மாற்றி அமைப்பது மாணவர்கள் அமைப்புடைய பொறுப்புகள் கடமைகள் தான். அதை நாங்கள் மறுக்கவில்லை. அதைத்தான் நாங்கள் தினந்தோறும் செய்ய முயற்சித்து வருகிறோம். அர்ப்பணிப்போடு தியாகத்தோடு இந்தப் பணியில் எங்களை ஈடுபடுத்தி இருக்கிறோம். எந்த சுயநலமும் இலாப நோக்கமும் இல்லாமல் பல்வேறு வழக்கு கைது சிறை அனைத்தையும் சந்தித்து இதற்காக மாணவர் மத்தியில் போராடி வருகிறோம்.

இந்த சூழலை மாற்ற வேண்டுமெனில், என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

◊ இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று சொன்னால் மாணவர்களுக்கு ஜனநாயக உரிமைகள் வழங்கப்படவேண்டும். கல்லூரி சூழ்நிலையை மாணவர்கள் படிப்பதற்கான, மாணவர்கள் ஜனநாயகத்தை உணர்வதற்கான சூழலாக மாற்றி அமைக்க வேண்டும். ஆண்டுதோறும், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கலாச்சார நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். அது மட்டுமல்ல மாணவர்களுடன் ஆசிரியர்கள் ஜனநாயகபூர்வமாக கலந்துரையாட வேண்டும். மாணவர்களுடைய பிரச்சனைகளை புரிந்து கொண்டு அவர்களுக்கு தீர்வு சொல்ல வேண்டும். பேராசிரியர்கள் மாணவர்களின் சக நண்பனாக இருக்க வேண்டும். மாணவர் அமைப்புகள் செயல்படுவதை அனுமதிக்க வேண்டும். சமூக விஷயங்களில் மாணவர்கள் தலையிடுவதை ஊக்கப்படுத்தவேண்டும். சமூகத்தை மாற்றி அமைப்பதற்கு மாணவருடைய பங்களிப்பை கோரவேண்டும். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை உருவாக்குவது தான் மாணவர்கள் ரவுடித்தனத்தில் ஈடுபடுவதை தடுத்து ஆக்கப்பூர்வமாக செயல்படவைக்க நிரந்தரவழி.

நேர்காணல் : இளங்கதிர்

2 மறுமொழிகள்

  1. போராட்டத்தில் ஈடுபடுவது மாணவர்களின் வேலையல்ல… படிக்கும் மாணவர்களை போராட்டங்களில் இழுத்து விட்டு அவர்களின் வாழ்க்கையை அழிப்பதில் உங்களை போன்றவர்களின் பங்கு மிக அதிகம், சீமான் போன்ற நேர்மையில்லாத அரசியல்வாதிகளின் பேச்சுக்களை கேட்டு மாணவன் வன்முறையில் இறங்காமல் இருந்தால் தான் அது அதிசியம்.

    சினிமாவை பார்த்து மாணவர்கள் கெட்டுவிட்டார்கள் என்று நீங்கள் சொல்வது பிரச்சனையை திசை திருப்பும் செயல். சினிமாவில் எவ்வுளவோ நல்லதும் காட்டுறார்கள், அதை பார்த்து நீங்கள் திருந்திவிட்டிர்களா ?

    போராட்டம் போராட்டம் என்று தமிழகத்தில் ஒரு கூட்டம் திரிகிறது, அந்த கூட்டத்தை பிடித்து அவர்களை எல்லாம் பாத்ரூமில் வழுக்கி விழவைக்க வேண்டும் அப்போது தான் தமிழகத்தில் அமைதி நிலவும்.

  2. ஐயிருக்கு மட்டும் பாத்ரூமே வராதோ…
    வரும் வரும் ஒரு காலம் வரும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க