சிறு தொழில் நிறுவனங்கள், மத்திய மாநில அலுவலகங்கள், ஐ.டி வளாகங்கள், பல்துறை தொழிற்கல்விக் கூடங்கள் என்று திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கூட்டம், சென்னை கிண்டி தொழிற்பேட்டை.

இங்கு நடைபாதையில் தளர்ந்த வயதில் ஒரு மூதாட்டி, வயது 80-க்கும் நெருக்கம். குழந்தை போன்ற முகம், பார்ப்பவர்களை மனம் குளிரவைக்கும் சிரிப்பு.  தனி ஒரு ஆளாக தள்ளுவண்டி பெட்டிக்கடையை அவர் நிர்வகித்துக்கொண்டிருந்தார். கோலி சோடா, பன்னீர் சோடா, லெமன் சோடா, கடலை உருண்டை, மிட்டாய், பட்டர் பிஸ்கெட், முறுக்கு, ரோஜா பாக்கு, கிரேன் பாக்கு, பிளாக் ஒயிட் என்று சில சிகரெட் பாக்கெட்டுகள், இப்படி அந்த தள்ளுவண்டியில் இருக்கும் மொத்த பொருட்களின் மதிப்பு ரூபாய் 3000-க்கும் குறைவாக இருக்கும். ஆனால் அந்த மூதாட்டி மிகப்பெரும் சங்கிலித்தொடர் அங்காடியை நிர்வகிக்கும் இளம் முதலாளியைப் போல, பொங்கி வழியும் உற்சாகத்தோடு வாடிக்கையாளர்களை அணுகுகிறார்.

நாங்கள் வெயிலுக்கு அவரிடம் கோலி சோடா  வாங்கிக்கொண்டே உங்களைப் பார்த்தால் எங்களுக்குப் பொறாமையாக இருக்கிறது, எப்படி இந்த வயதில் உற்சாகமாக இருக்கிறீரகள் என்றோம்.

அவர் நம்மைப் பார்த்து தம்மை மறந்தபடி சிர்த்தார். வெட்கத்தில் முந்தானையால முகத்தை மூடியபடி திரும்பவும் முகம் நிறைய சிரித்தார். அவரது கடை வாடிக்கையாளர்கள், அம்மா, பாட்டி, ஆயா என்று அவரைப் பல சொந்தங்களில் அழைத்து, சிகரெட் – பாக்கு, கடலை உருண்டை என அடுத்தடுத்து கேட்டுக்கொண்டே இருந்தனர். வந்தவர்களில் பாதிபேர் வட நாட்டு இளைஞர்கள் (ஐ.டி ஊழியர்கள், மாணவர்கள்) அவர்களிடம் இந்தி, உருது, மராட்டி, தெலுங்கு என பல மொழிகளில் அவர்களுக்குத் தேவையான பொருட்களை வரிசையாகக் கொடுத்துக் கொண்டிருந்தார். கூடவே அவர்கள் மொழியிலேயே சரளமாகக் கிண்டலடித்து அவர்களைச் சீண்டிக்கொண்டிருந்தார்.

படிக்க:
♦ சிறப்புப் பொருளாதார மண்டலம் – குப்பையாக ஒதுக்கப்படும் தொழிலாளர்கள்…
♦ RTI – யால் அம்பலமான JNU துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் !

டேய் வந்துட்டீங்களா, ஒரு சிகரெட்ட வாங்கி மூனு பேரு ஊதுவானுங்க, இவனப்பாரு படிக்கச் சொல்லி காலேஜு-க்கு அனுப்புனா, அரியர் வெச்சு சுத்திக்கிட்டிருக்கான், படிப்ப முடிச்சிட்டு போயிட்டான்னு பாத்தா திரும்ப பரிச்சன்னு வந்துருக்கான். இப்பயாவது கட.. கடையா சுத்தாமா ஒழுங்கா படிடா என்று அவனைக் கலாயத்தார்.

பொங்கிவரும் சிரிப்பை அடக்க முயலும் பாட்டி.

நம்மிடம் திரும்பி, இந்த பிளாட்பாரத்துக்கு நான் வந்து 50 வருசம் ஆகுது. இந்த பசங்க தான் எனக்குப் பேராண்டிக. அவுங்க கிட்ட வாயாடுவேன், அவுங்க கோவிச்சுக்க மாட்டாங்க. ஒரு நாள் உடம்பு சரியில்லன்னு வரலன்னாலும், ஏன் ஆயா நேத்து வரலன்னு அக்கறயா விசாரிப்பாங்க என்று உருகினார்.

என்னோட 3 குழந்தைகள தூக்கிக்கினு 31 வயசுல் இந்த பிளாட்பாரத்துக்கு நிர்கதியா வந்தேன். அதுலேருந்து இங்க தான் என் பொழப்பு ஓடுது. ஆண்டவன் புண்ணியத்துல எனக்கு எந்த கொறையுமில்ல. 4 வயசு, 7 வயசு, 11 வயசுன்னு ஒரு ஆம்பள பயன், ரெண்டு பொம்பள பசங்க எல்லாத்தயும் கட்டி கொடுத்தேன். பேரன் பேத்தி எடுத்துட்டேன். ஒடம்பு சரியில்லாம சின்ன வயசுலேயே என் மவன் போயி சேந்துட்டான். அவனுக்குப் பொறந்த ரெண்டு பொட்ட பசங்க மருமகள இப்ப நாந்தான் காப்பாத்துறேன்.

பெரிய பேத்திக்கு 20 வயசு டெய்லர் வேலைக்குப் போகுது. சின்ன பேத்திக்கு 7 வயசு, படிக்கிது. நான் காலைல 9 மணிக்கு கடைக்கு வந்தா சாயங்காலம் 7 மணிக்குத்தான் வீட்டுக்குப் போவேன். பேத்தி இந்தப்பக்கம் வேலைக்குப் போகும்போது என்கூட வந்து இருந்துட்டு சாப்பாடு கொடுத்துட்டு போகும். சில நேரம் மருமக சாப்பாட்ட எடுத்துன்னு வருவா… காலைல 4 இட்லி, மதியானம் சாம்பார் சோறு, நைட்டு சோறு சீரணமாகல அதனால டீ பன்னு சாப்புட்டு காலத்த தள்ளுறேன்.

தனது மகன் நினைவாக வைதிருக்கும் புகைப்படம்.

சைதாப்பேட்ட கொத்தவால்சாவடியில தான் சொந்தமா ஒரு குடிச இருக்குது, அந்த காலத்துல எப்படியோ அத வாங்கிட்டேன். அந்த குடிசய இன்னும் மாத்த முடியல, பொன்னுங்கள கட்டிக்குடுக்குறது, பையனுக்கு வைத்திய செலவு என செலவு மேல செலவு, என் பையன காப்பாத்த முடியல, அதான் எனக்கு தீராத துக்கம் என்று சோகமானார்.

படிக்க:
♦ ஓட ஓட விரட்டியது கிராமம் ! ஓடு… ஓடு… என்று துரத்துகிறது நகரம் !
♦ மோடி ஆட்சியில் வருமான வரி ஏய்ப்பு, பண மோசடிக்கு இனி குற்றவிலக்கு !

அவன் எனக்குப் பையன் கிடையாது, ஃபிரண்டு தான், பெரியவனான பெறகு கூட என் தோள்மேல கைய போட்டுக்கிட்டு தான் என்கூட பேசுவான், குழந்தைகள் வளர்ப்பு, தண்டல் பிரச்சன, குடும்பப் பிரச்சன என எல்லாத்தையும் எங்கிட்ட மனசுவிட்டு பேசுவான். ஆட்டோ ஓட்டி பொழச்சான். அவன காப்பாத்த முடியலயே, அவன் என்கூட இல்லயேங்குறதுதான் என்னோட ஒரே கஷ்டம் இப்ப.

சின்ன வயசுலேயே என்னோட வீட்டுக்காரர நான் பிரிஞ்சிட்டேன். அவருக்கு சாவகாசம் சரியில்ல. மூணு புள்ளங்க இருந்தும் இன்னொருத்தி பின்னால போனாரு, லாரி டிரைவர் வேல, குடிகாரனாகி, அவர் போக்குல போயிட்டாரு. நான் குழந்தைகள காப்பாத்த அவர அறுத்துவிட்டுட்டேன். சுமைய கொறச்சுக்கினு சொந்தக் காலுல வாழத் துணிஞ்சேன். சின்னதா இங்கதான் 50 வருசத்துக்கும் முன்னாடி பிளாட்பாரத்துல அடுப்பு மூட்டி இட்லிகட போட்டேன். அப்போ கடைக்கு வந்த சில மகராசனுக என் நெலமய பாத்துட்டு, சின்ன சின்ன உதவின்னு 100 ரூவா தெரட்டி எங்கையில கொடுத்தாங்க. இத இட்லி கட முதலுக்கு வெச்சுக்கோ அப்படீன்னாங்க.

அத வெச்சு, விறகு அடுப்புலேருந்து ஸ்டவ்வு அடுப்புக்கு மாறுனேன். சில்வர் தட்டு, டம்ளர்னு வாங்கி போட்டு இன்னக்கி ஒரு ஆளா நிக்கிறேன். இப்ப வயசாகி கண்ணுல புரை விழுந்து கண்ணு மங்கிடுச்சு, பேத்திங்க பெரிய ஆளாயிடுச்சுங்க, இனிமே இட்லி நெருப்புல வேக முடியலன்னு இந்த தள்ளு வண்டியில ஒக்காந்துட்டேன். ஒடம்புக்கு முடியலன்னாலும் வீட்டுல ஒக்காரக் கூடாது. நீ செய், நான் செய்-னு சண்ட வரும், அதனால இப்படியே ஓடிக்கினே செத்துடனும். இதுவரைக்கும் எனக்கு பெருசா எந்த நோயும் வரல. முட்டி நோவு, கால் வலி அடிக்கடி வரும், நான் தைலம் தேச்சுப்பேன், முடியலன்னா ஒரு ஊசி போட்டு சரிபண்ணிக்குவேன். அதான் எனக்கு வைத்தியம். வெயில் மழைன்னா கொஞ்சம் ஓரமா ஒதுங்கிக்குவேன், வாரம் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழம லீவு எடுத்துக்குவேன், அன்னக்கி வெறுமனே இங்க உக்காந்துட்டு போவேன், அப்பதான் என் மனசு சந்தோசமாக இருக்கும் என்று நம்மிடம் குழந்தையாக சிரித்தார்.

வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க