டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலையில் கடந்த ஜனவரி முதல்வாரத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் மீது வலதுசாரி ஏ.பி.வி.பி கும்பல் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் வலதுசாரிகளுடனான பல்கலைக் கழக நிர்வாகத்தின் கூட்டுக் களவாணித்தனம் தற்போது அம்பலப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 5-ம் தேதி மாலையில் ஜே.என்.யூ வளாகத்திற்குள் நுழைந்த ஏ.பி.வி.பி. குண்டர் படை, கல்லூரி வளாகம், விடுதி உள்ளிட்ட இடங்களில் குறிப்பான மாணவர்களையும்; ஆசிரியர்களையும் தேடித் தேடி அடித்துக் கடுமையாக காயப்படுத்தியது. இதில் ஜே.என்.யூ மாணவர் சங்கத் தலைவர் அய்ஷெ கோஷ் உள்ளிட்டு பல மாணவர்களும் – ஆசிரியர்களும் படுகாயமடைந்தனர்.

இந்தக் கலவர சூழலிலும் அங்கிருந்த போலீசும், பாதுகாப்புப் படையினரும் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்தனர். இந்தக் கலவரங்கள் எல்லாம் முடிந்த பிறகு ஜே.என்.யூ. நிர்வாகமும் அதன் துணை வேந்தரும் சாவகாசமாக இரவு 9 மணியளவில் அறிக்கை வெளியிட்டனர்.

அதில் இடதுசாரி மாணவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்த விரும்பிய மாணவர்களை தடுத்து நிறுத்தியதாகவும், தேர்வு எழுத விரும்பியவர்களுக்கும், அதனைத் தடுக்க விழைந்த இடதுசாரி தரப்பினருக்கும் இடையேயான பிரச்சினைதான், பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த கலவரத்திற்கான காரணம் என்று அறிக்கை விடுத்தனர்.

இந்த அறிக்கைக்கு ஜே.என்.யூ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இது அப்பட்டமான பொய் என்றும் இதனை வலதுசாரிகளை தப்பிக்க வைக்கும் உள்நோக்கத்துடன் நிர்வாகம் செய்துவருவதாகவும் மாணவர்களும் – ஆசிரியர்களும் தெரிவித்தனர்.

படிக்க :
ஜே.என்.யூ தாக்குதலைக் கண்டிக்கும் உலகளாவிய அறிவுத்துறையினர் !
♦ மோடி ஆட்சியில் வருமான வரி ஏய்ப்பு, பண மோசடிக்கு இனி குற்றவிலக்கு !

டெல்லி போலீசைத் தனது பிடியில் வைத்திருக்கும் பாஜக, நிர்வாகத்தின் அறிக்கையைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு போலீசின் மூலம் இக்கட்டுகதையை உண்மை என நிரூபிக்கப் பார்த்தது. ஆனால் இந்தியா டுடே தொலைக்காட்சியைச் சேர்ந்த நிருபர் ஒருவர் எடுத்த ஒரு மறைபுலனாய்வு வீடியோவில் ஏபிவிபி இதில் நேரடியாக ஈடுபட்டது அம்பலமானது.

இதனைத் தொடர்ந்து ஏ.பி.வி.பி-யைத் தப்பவைக்க ஒரு டுபாக்கூர் இந்துத்துவ அமைப்பை இந்த வன்முறைக்கு பொறுப்பேற்றுக் கொள்ளச் செய்தது சங்கபரிவாரம்.

தாக்குதலில் ஈடுபட்ட ஏ.பி.வி.பி. குண்டர்கள்.

இடதுசாரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான் தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி கேமராக்களின் பதிவு இருக்கிறதா என ஜே.என்.யூ. நிர்வாகத்திடம் கேட்கப்பட்ட போது, சிசிடிவி கேமராக்கள் ஏற்கெனவே போராட்டம் செய்த இடதுசாரி மாணவர்களால் நொறுக்கப்பட்டதாகத் தெரிவித்தது நிர்வாகம். கேமராக்களின் பதிவை சேமிக்கும் சர்வர்கள் CIS மையத்தில் இருந்ததாகவும், அந்த மையத்தை அதற்கு முந்தைய நாளே இடதுசாரி மாணவர்கள் தாக்கி நாசம் செய்துவிட்டதாகவும் தெரிவித்தது நிர்வாகம்.

ஜே.என்.யூ.-வின் துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் மமிதாலா இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்துக்குக் கொடுத்த பேட்டியில் “ஜனவரி 5-ம் தேதி நடந்த வன்முறைச் சம்பவங்களின் சி.சி.டி.வி. பதிவுத் தகவல்களை எடுக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம். ஏனெனில் போராடும் மாணவர்கள் சிசிடிவி தகவல் மையத்தை உடைக்க முயற்சித்துள்ளனர். கடந்த ஜனவரி 3, 4-ம் தேதியே அவர்கள் அந்த மையத்தை உடைக்க முயற்சித்தது ஏன்? அவர்கள் சர்வர்களை முடக்க முயற்சித்தது ஏன் ? அதற்குப் பிறகு 5-ம் தேதி இந்த வன்முறைச் சம்பவம் நடந்திருக்கிறது. இது போன்ற ஒரு சம்பவம் நடைபெறும் என அவர்களுக்கு முன் கூட்டியே தெரியுமோ என சந்தேகம் ஏற்படுகிறது” என்று கூறியிருந்தார்.

படிக்க :
ஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு ! | பாகம் – 1
♦ காவிப் புழுதிக்குப் பின்னே நம் மீது வீசப்படும் கொத்துக் குண்டுகள் !

அதாவது, விடுதிக் கட்டணக் குறைப்புக்காக போராடும் மாணவர்கள் 5-ம் தேதி இப்படி ஒரு வன்முறையை (தங்களைத் தாங்களே அடித்துக் கொள்ளும்!?! வன்முறையை) நிகழ்த்துவதற்குத் திட்டமிட்டு, அதற்காகவே 3, 4-ம் தேதிகளில் CIS தகவல் மையத்தில் இருக்கும் சர்வரை அடித்து உடைத்திருக்கின்றனர், என்பதுதான் துணைவேந்தர் சூசகமாகத் தெரிவிக்க வந்த குற்றச்சாட்டு.

இந்நிலையில் சமூகச் செயற்பாட்டாளர் ஒருவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஜே.என்.யூ-வில் நடந்த சம்பவங்கள் குறித்து விவரங்கள் கேட்டுள்ளார். அதற்குக் கொடுக்கப்பட்ட பதில்கள் சங்கிகளின் பொய்களையும்  அவர்களுக்குக் கள்ளக் கூட்டாளியாக செயல்பட்ட, ஜே.என்.யூ நிர்வாகம் மற்றும் அதன் துணைவேந்தரின் பொய்களையும் அம்பலப்படுத்தியுள்ளது.

JNU துணைவேந்தர் ஜெகதீஷ்குமார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி கிடைக்கப்பெற்ற பதிலில், “மின்சார சப்ளையில் ஏற்பட்ட இடையூறு காரணமாக, தகவல் மையம் செயல்படவில்லை.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “கடந்த டிசம்பர் 30, 2019 முதல் ஜனவரி 8, 2020 வரையிலான காலகட்டத்தில் எந்த ஒரு சிசிடிவி கேமராவோ, உயிரிஅடையாளக் கருவிகளோ (Biometric Systems) அங்கு உடைக்கப்படவில்லை.

ஜவகர்லால் நேரு பல்கலையின் மையமான சர்வர், ஜனவரி 3-ம் தேதி மின்சார சப்ளையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நிறுத்தப்பட்டது. மறுநாள்வரை இந்நிலைமை அப்படியே நீடித்தது. ஜனவரி 5-ம் தேதி மதியம் 3 மணி முதல் இரவு 11 மணிவரையிலான அனைத்து சிசிடிவி பதிவுகளும் தொடர்ச்சியாகக் கிடைக்கப்பெறவில்லை.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

படிக்க :
NRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா ? | வாஞ்சிநாதன் உரை
♦ சவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் !

இந்தப் பதில் மூலம், சிசிடிவி கேமராவோ, நபர்களின் வருகையைப் பதிவு செய்யும் உயிரிஅடையாளக் கருவிகளையோ போராட்டக் காரர்கள் உடைக்கவில்லை. சர்வரும் மின்சாரப் பிரச்சினை காரணமாக செயலற்றுப் போனதே ஒழிய, யாரும் அதனைத் தாக்கி உடைக்கவில்லை என்ற உண்மையை ஜே.என்.யூ நிர்வாகம் மற்றும் அதன் துணைவேந்தரின் தலையில் போட்டு உடைத்துள்ளது.

மேலும், ஜனவரி 4-ம் தேதி, மதியம் 1 மணியளவில் தகவல் மைய அலுவலகத்தின் சர்வருக்கு வரும் ஆப்டிக் பைபர் கேபிள்கள் சேதப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.  சிசிடிவி கேமரா பதிவுகள் எதுவும் தகவல் மைய அலுவலகத்தில் உள்ள சர்வரில் பதிவாகாது என்றும் வளாகத்தில் உள்ள தரவு மையத்தில்தான் பதிவாகும் என்றும்  ஆர்.டி.ஐ. பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தகவல், துணைவேந்தர் குறிப்பிட்ட – “சிசிடிவி காட்சிகளை மறைக்க மாணவர்களால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு சிசிடிவி சர்வர் சேதமாக்கப்பட்ட” – சதிக் கோட்பாட்டை பொய்யாக்கியிருப்பதோடு, சிசிடிவி காட்சிகளை வெளிப்படையாக வெளியிடுவதில் நிர்வாகத்திற்குத்தான் பிரச்சினை என்பதையும் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.

அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் தமது காவிப் பிடிக்குள் கொண்டுவருவதற்கேற்ற வகையில் தமக்கு வால்பிடிக்கும் துணைவேந்தர்களை நியமித்து ஆட்டுவிக்க நினைக்கிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல். ஆனால் பல்கலைக்கழகம் என்பது துணைவேந்தர்களுக்குரியது அல்ல; மாணவர்களுக்குரியது என்பதை காவிகளின் செவிட்டில் அறைந்து கூறிவருகிறது ஜே.என்.யூ பல்கலைக்கழகம்.


நந்தன்

நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்.

2 மறுமொழிகள்

  1. மனு நீதிப்படி, சூத்திர சாதியினருக்கு படிப்பதற்கு உரிமை இல்லை. அனால் இந்திய அரசியல் சட்டமோ அனைவருக்கும் கல்வியை உரிமை யாக்குகிறது. இதை ஒழித்துக்கட்ட பர்ப்பன பாசிச கும்பல் செய்யும் சதியின் ஒரு பகுதிதான் ஜேஎன்யு-வை ஒழித்துக் கட்டும் இந்த சதி. நாம் விழி ப் போ டி ரு ந் து போராடவில்லை என்றால் நமக்கு கல்வி மறுக்கப்படும்.

  2. அதனாலதான் சாஸ்திரம் ,சடங்கு , சம்பிரதாயம், வெங்காயம் , விளக்குமாறு இதல்லாம் விட உன் அறிவு பெரிது அத பத்தி சிந்தி ..என்று சொன்னார் பகுத்தறிவு பகலவன் பெரியார்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க