ஜே.என்.யூ வன்முறைக்கு இடதுசாரி மாணவ அமைப்புகளை டில்லி போலீசு குற்றம் சுமத்தியிருக்கும் அதே நேரத்தில் சபர்மதி மாணவ விடுதியில் வன்முறையை திட்டமிட்டு நடத்துவதற்கு ஏ.பி.வி.பி. -க்கு உதவி செய்ததாக முதலாமாண்டு படிக்கும் ஏ.பி.வி.பி தான்னார்வலர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

காவல்துறையோ ஜனவரி 4-ம் தேதி நடந்த இடையூறை மட்டுமே ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியது. மாறாக ஒரு நாள் பின்னதாக முகமூடி அணிந்த பெண்கள் உள்ளிட்ட கும்பல் கையில் லத்தி உள்ளிட்ட அயுதங்களுடன் வந்து வளாகத்தை தீவிரவாத அச்சத்தில் தள்ளியதை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

தொடர்ந்து இந்தியா டுடே தொலைக்காட்சி வெளியிட்ட ‘ஸ்டிங் ஆபரேஷன்’ காணொளியில் ஏ.பி.வி.பி. ஆர்வலர் என்று கூறிய ஒரு மாணவர் ஜனவரி 5 ம் தேதி வன்முறையில் ஈடுபட்டதாக சாட்சியமளித்தார். இதை நிரூபிக்க ஏ.பி.வி.பி.-யின் பேரணி ஒன்றில் அவர் கலந்து கொண்ட புகைப்படத்தை – ஒரு தேசிய செய்தித்தாளில்  இருந்து – அத்தொலைக்காட்சி வெளியிட்டது.

இந்தியா டுடே நிருபர் : “உங்களது கையில் என்ன இருக்கிறது?”

அக்ஷத் அவஸ்தி : “அது ஒரு கட்டை சார். அதை விடுதி பக்கத்திலிருந்த ஒரு கொடி கம்பத்தில் இருந்து எடுத்தேன்”

நிருபர் : யரையாவது நீங்க அடித்தீர்களா?

அவஸ்தி : குறுந்தாடியுடன் ஒருவனைப் பார்த்தேன். பார்க்க காஷ்மீரி போல இருந்தான். அவனை அடித்தப் பிறகு வாயிற்கதவை காலால் உதைத்து தள்ளினேன்.

மேலும் சபர்மதி விடுதி செல்லும் தெருவில் இருந்த வண்டிகளையும் பொருள்களையும் அடித்து உடைத்ததாகவும் கூறினார். “தாக்குதல் நடந்த போது அங்கிருந்த அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் ஓடிவிட்டனர். ஏ.பி.வி.பி இப்படி திரும்பி வந்து தாக்கும் என்று அவர்கள் நினைத்து கூட பார்க்க மாட்டார்கள்” என்றார் அந்த முதலாமாண்டு மாணவர்.

படிக்க :
ஜே.என்.யூ தாக்குதலைக் கண்டிக்கும் உலகளாவிய அறிவுத்துறையினர் !
♦ காஷ்மீர் – பண்டிட் குடும்பத்தை காப்பாற்றிய சுபைதா பேஹம் !

அந்த தாக்குதலின் பின்னணியில் தான் இருந்ததாக அந்த காணொளியில் குறிப்பிட்ட அவர், “அந்த கும்பலை அணி திரட்டியது நான்தான் என்று என்னால் கூற முடியும். அவர்களுக்கு அந்த அளவுக்கு அறிவு கிடையாது. என்ன நடத்தப்பட வேண்டும்; எங்கு நடத்தப்பட வேண்டும் என்று ஒரு காண்காணிப்பாளர் போலவோ அல்லது ஒரு படைத்தலைவர் போலவோ நாம் செயல்பட வேண்டும். அவர்கள் எங்கு செல்ல வேண்டும், எப்படி மறைந்து கொள்ள வேண்டும் என்று முறையாக அவர்கள் செயற்பட வழிகாட்டினேன். நான் எந்த பதவியிலும் இல்லை. இருப்பினும் நான் சொல்வதை காது கொடுத்து கவனமாக கேட்டார்கள்” என்று அவர் கூறினார். அவர்களை அணிதிரட்டியது மட்டுமல்ல அவர்களது கோபத்தை சரியான திசையில் செலுத்த உதவியதாகவும் அவர் கூறினார்.

அக்ஷத் அவஸ்தி மற்றும் ரோஹித்.

ரோஹித் ஷா என்ற மாணவரிடமும் இந்தியா டுடே பேசியது. அவர் தனது தலைக்கவசத்தை அவஸ்திக்கு கொடுத்ததாகக் கூறினார். “நீங்கள் கண்ணாடியை அடித்து நொறுக்கும்போது பாதுகாப்பிற்கு இது அவசியம்” என்று ஷா கூறினார். மேலும் ஏபிவிபி மாணவர்கள் தங்கும் அறைகளை அடையாளம் காட்டி அவர்களை வேறு பக்கம் விலகி செல்ல, செய்ததாக கூறினார்.

“இந்த தாக்குதல் மட்டும் நடக்காமல் இருந்திருந்தால், இடதுசாரிகளுக்கு ஏ.பி.வி.பி. -யின் பலம் தெரியாமலேயே இருந்திருக்கும்” என்ற அவர் மேலும் இதற்கு பெருமையடைவதாகவும் கூறினார்.

திருப்பி தாக்குவதற்கு போலிஸ் ஊக்கமளித்ததாகவும் அவர் கூறினார். “வளாகத்திற்குள் தான் போலிஸ்காரர்கள் இருந்தனர். விடுதியில் ஒரு மாணவன் காயமடைந்தவுடன் நானே போலிசுடன் பேசினேன்.” மணிஷ் என்ற மாணவனை சந்தித்த போலிஸ்காரர் “அவர்களை அடி, அவர்களை அடி” என்று கூறினார்.

தாக்குதல் நடக்கும் போது தெரு விளக்குகள் அணைக்கப்பட்டதன் பின்னனியை அவஸ்தி நிருபரிடம் விளக்கினார்,

நிருபர் : தெரு விளக்குகளை அணைத்தது யார்? உங்க ஆட்களா?

அவஸ்தி : நிர்வாகி… போலிஸ் என்று நான் நினைக்கிறேன்.

நிருபர் : போலீஸ் எதற்கு அதை செய்தார்கள்?

அவஸ்தி : கும்பல் வருவதை யாரும் கவனிக்க, அவர்கள் விரும்பவில்லை.

நிருபர் : போலிஸ் உங்களுக்கு, ஏ.பி.வி.பி. -க்கு உதவியிருக்கிறது?

அவஸ்தி : சார், இது யாரோட போலீஸ்னு நினைக்கிறீங்க ? (நம்ம போலீசு)

அதே போல ஜே.என்.யூ.-வின் முன்னாள் மாணவர் சங்க தலைவரும் AISA உறுப்பினருமான கீதா குமாரிடம் ஜனவரி 4-ம் தேதி சர்வர் அறையை மூடியது தொடர்பாக பேசிய மற்றுமொரு காணொலியையும் இந்தியா டுடே வெளியிட்டது.

படிக்க :
இந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் !
தீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் ! பின்னணி என்ன ?

“எங்களது கோரிக்கைகள் எதுவும் நிறைவேறவில்லை. ஜே.என்.யூ -யின் துணை வேந்தர் இன்னும் எங்களை பார்ர்க்கவில்லை. எனவே நாங்கள சர்வர் அறையை மூடுவதற்கு முடிவு செய்தோம்” என்று அவர் கூறினார்.

“எங்களது துணை வேந்தர் இணையத்திலேயே எல்லா வேலைகளையும் செய்கிறார். இணையத்திலேயே காதல் கடிதம் அனுப்புகிறார், புத்தாண்டு வாழ்த்தையும் அனுப்புகிறார், எச்சரிக்கையையும் அனுப்புகிறார். எனவே அவருக்கான வாய்ப்புகள் அனைத்தையும் கடந்து விட்டார். தேர்வுகள் கிடையாது, எங்களது கோரிக்கைகள் நிறைவேறவில்லை, அவர் எங்களை வந்து பார்க்க கூட இல்லை, எனவே நாங்கள் சர்வர் அறையை மூட முடிவு செய்வதன் மூலம் நிர்வாகத்தை முடக்க முடிவு செய்தோம்” என்று அவர் கூறினார்.

இந்த இரகசிய காணொளி வெளியானது குறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது, தன்னுடைய நடவடிக்கைகளை சரி என்றும் மறைப்பதற்கு தன்னிடம் ஒன்றுமில்லை என்றும் கூறினார் கீதா குமாரி.

“எங்களது கல்விக்கட்டணத்தை துணை வேந்தர் ஆயிரம் மடங்கு உயர்த்தியிருக்கிறார். கல்வியுரிமையை வலியுறுத்தியதற்காக தண்டனை கடிதங்களை அனுப்புகிறார். நான் கூட இது போன்ற ஏரளமான கடிதங்களை பெற்றிருக்கிறேன். எங்களது உரிமைக்காக நாங்கள் போராடுகிறோம். சட்ட ஒத்துழையாமையில் நாங்கள் இருக்கிறோம். இதை தான் நான் கூறினேன். மறைப்பதற்கு ஒன்றுமில்லை” என்று குமாரி தனது செயல்களை நியாயம் என்று கூறி ட்வீட் செய்தார்.

“எங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு காட்டிய எதிர்வினைக்கு ஏ.பி.வி.பி எப்படி வன்முறையில் ஈடுபட முடியும்? எங்களது போராட்டத்தினால் நிர்வாக வேலைகள் முடங்கியது என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். அதற்கு எங்களிடம் வந்து அவர்கள் பேசியிருக்க வேண்டும். யார் இந்த ஏ.பி.வி.பி. -யினர், எதற்கு எங்களை தாக்க வேண்டும்?” என்று அவர் கூறினார்.

இடதுசாரிகள் நேர்மையாக பேசுகையில், வலதுசாரிக் கும்பல் வழக்கம் போல தொடர்புடைய நபர்களைக் கைவிட்டது. ஷா மற்றும் அவஸ்தி இருவருக்கும் ஏ.பி.வி.பி.-க்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஏ.பி.வி.பி. -யின் துணைத்தலைவர் நிதி திரிபாதி கூறியுள்ளார்.

முதலாமாண்டு மாணவர்களுக்கு என்று ஏ.பி.வி.பி.-யில் எந்த பொறுப்பும் கொடுக்கப்படவில்லை என்று பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் அமித் மால்வியாவும் கூறியிருந்தார். ஆனால் இந்தியா டுடே தொலைகாட்சியும் அப்படி எதையும் கூறவில்லை. அந்த காணொளியில் இருந்த மாணவர்களும் அப்படி கூறவில்லை. சபர்மதி விடுதியை சூறையாட ஏ.பி.வி.பி. -யினரை வழிநடத்தியதாக தான் அவஸ்வதி கூறினார்.

காணொளி வெளியான பின்னர் இந்தியா டுடேவின் புலனாய்வையும் சேர்த்து, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி வழக்கை விசாரிக்க இருப்பதாக டெல்லி போலிஸ் கூறியிருக்கிறது. ஆனால், போலீசால் குற்றம் சுமத்தப்பட்ட 9 பேரில் 7 பேர் SFI, AISF, AISA மற்றும் DSF போன்ற இடதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறிய போலீசு துணை ஆணையர் ஜாய் டிர்கி மீதியுள்ள இரு மாணவர்களும் ஏ.பி.வி.பியை சேர்ந்தவர்கள் என்பதை கூறாமல் விட்டுவிட்டார்.

முழுக்க முழுக்க வலதுசாரி கிரிமினல்கள் திட்டமிட்டு நடத்திய ஒரு கொடூரத் தாக்குதலை, இடதுசாரி அமைப்புகள் நடத்தியதாக கதையளப்பதற்கு ஏற்ற வகையில் வழக்கை ஜோடித்து வருகிறது டில்லி போலீசு. பாசிஸ்டுகளின் ஆட்சியில் வேறு எதை எதிர்பார்க்க முடியும் ?


சுகுமார்
நன்றி : தி வயர்

3 மறுமொழிகள்

  1. ABVP வன்முறையை பற்றி எல்லாம் பேசுவதற்கு இடதுசாரி தேச (மக்கள்) விரோதிகளுக்கு தகுதி இல்லை, படிக்க வேண்டிய மாணவர்களிடம் பொய்களையும் வெறுப்பையும் தூண்டி விட்டு ஒருவருக்கு ஒருவர் அடித்து கொள்ள வைத்து, அந்த வன்முறையில் குளிர்காயும் மிக மோசமானவர்கள் இடதுசாரிகள்.

    இந்த மாதிரி ஒருவருக்கு ஒருவர் அடித்துக்கொள்ள பெற்றோர்கள் மாணவர்களை கல்லூரிகளுக்கு அனுப்பவில்லை…

    அனைத்து அரசியல் அமைப்புகள், மாணவர் தேர்தல் என்று அனைத்தையும் கல்லூரிக்குள் தடை செய்ய வேண்டும்… அதையும் தாண்டி அரசியல் அமைப்புகளோடு மாணவர்கள் தொடர்பு வைத்து கொண்டால் அவர்களை கல்லூரிகளை விட்டு விலக்க வேண்டும். கல்லூரி வளாகத்திற்குள் படிப்பு மட்டுமே இருக்க வேண்டும், அரசியல் (அதுவும் இடதுசாரி தேசவிரோத அரசியல்) முற்றிலும் தடை செய்ய வேண்டும். அப்போது தான் மாணவர் சமுதாயம் உருப்பட முடியும் இல்லையென்றால் இடதுசாரிகளின் அயோக்கியத்தனங்களுக்கு மாணவர்களின் வாழ்க்கை பலியாக்கப்படும்.

  2. மாணவர்களே தயவு செய்து கம்யூனிசம் என்ற தீமையிடம் இருந்து விலகி நில்லுங்கள். இந்திய கம்யூனிஸ்ட்கள் நல்லவர்கள் இல்லை அவர்கள் பாக்கிஸ்தான் சீனாவிற்காக நம் நாட்டை நாசம் செய்ய நினைப்பவர்கள், துளியும் நேர்மை மனிதாபிமானம் இல்லாதவர்கள் கம்யூனிஸ்ட்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க