பார்ப்பதற்கு விளையாட்டு வீரரை போல் துடிப்போடு வேலை செய்கிறார், 64 வயதான செல்வராஜ். சொந்த ஊர் திண்டிவனம்.

“20 வயசுலேயே சென்னை வந்துட்டேன். இந்த வேலைக்குப் பிறகுதான் கல்யாணம் கட்டிகிட்டேன். இன்னைக்கும் நாள் முழுக்க சளைக்காமல் உழைப்பேன், சோர்வே அண்டாது. காலையிலிருந்து 5 உறையைத் தனியாளா போட்டேன்னா பாத்துக்குங்க. வயசு பசங்கக்கூட இந்த வேலையை செய்ய முடியாது.

சுறுசுறுப்புடன் இயங்கும் திரு செல்வராஜ்

கூலின்னு பாத்தா 1,500 கிடைக்கும். காலை 7 மணிக்கு வேலைய ஆரம்பிச்சேன்னா சாயங்காலம் 7 ஆயிடும். அதன் பிறகு கை கால் கழுவிட்டு வீட்டுக்குப் போவேன். 8 கிமீ தூரத்தில் இருக்கும் எம்.ஜி.ஆர் நகரில்தான் வீடு. வாடகைதான்.

குனிஞ்சு நிமிறுற வேல. நாள் முழுதும் செய்யும்போது  இடுப்பு நோவும், கால் முட்டியும் ஒடிஞ்சு விடுவதுபோல் வலிக்கும். வீட்டுக்குப் போனா, சுடு தண்ணி வச்சு பொறுக்கக் குளிப்பேன், வலி போயிடும். திரும்பவும் பழைய மாதிரி உடம்பு உழைக்க ரெடியாயிடும். இப்படிதான் எம் பொழப்பு போவுது. வேறெந்த கெட்ட பழக்கமும் எனக்கு இல்ல. குடிப்பது சுத்தமா பிடிக்காது. நல்லா சாப்பிடுவேன். நோய் நொடின்னு டாக்டரிடம் போனதில்ல. கை வைத்தியத்திலேயே சரிபண்ணிக்குவேன்.

சளிக்கு ஆடா தொட இலை, உடம்பு வலிக்கு சுக்கு−மிளகு சூரணம். வயித்து கடுப்பு, வாயுவுக்கு திப்பிலி. இதெல்லாம் நானே ரெடி பண்ணிக்குவேன். இப்பகூட ஸ்டாக் வச்சிருக்கேன். தேவைப்பட்டா ரெண்டு ஸ்பூன், அதான் எனக்கு மாத்திரை.

இப்படி உழைச்சுதான் மூனு பசங்கள படிக்க வச்சேன், கல்யாணமும் செஞ்சி வச்சிட்டேன். அதுல ஒருத்தன் எம்.பி.ஏ படிச்சுட்டு நல்ல வேலையில கொழந்த குட்டியோட இருக்கான். இப்ப நானும் என் பொண்டாட்டியும் தனியாத்தான் இருக்கோம்.

வயசாயும் இப்படி உழைக்கிறியேன்னு நெறைய பேரு பொறாமைபடுற மாதிரி கேப்பாங்க. எனக்கு பெரிய கவலையேதும் இல்ல, அதுவே நான் செஞ்ச பாக்கியமா நெனக்கிறேன். காரணம் என்னன்னா, எந்த வேலய செஞ்சாலும் ரசிச்சு செய்வேன். என் வேலைன்னா அது தனியா தெரியணும், கண்ணாடி மாதிரி இருக்கணும்னு நெனப்பேன். நம்ம வேல நம்ம பேர சொல்லணும். எங்ககிட்ட உறை வாங்குறவுங்க, இந்த பினிஷிங்குல எங்கேயும் கெடக்கிறதில்லன்னு சொல்வாங்க. அதுதான் எனக்குப் பெருமை”  என்றார்.

நெஞ்சை நிமிர்த்தி கூறிய அந்த வார்த்தைகள் உடல் வலிமையால் மட்டுமல்ல, மன வலிமையாலும் தொழில்மீதுள்ள வற்றாத காதலாலும் பிறந்தவை. அதனால்தான் 64 வயது இளைஞனாக இன்னமும் தோற்றமளிக்கிறார்.

***

நாம் ஆவுடையப்பனை சந்திக்கும் போது மாலை 6.30 மணி. மீதமுள்ள சிமெண்ட் கலவையை வீணாக்காமல், நீர்விட்டு கலக்கி சிறிய உறையை (புகைப்போக்கி) தயாரித்துக் கொண்டிருக்கிறார். 60 வயதைக் கடந்த இந்தத் தொழிலாளி தூத்துக்குடி எட்டயபுரத்தைச் சேர்ந்தவர். இளம் வயதிலேயே சென்னைக்கு வந்துவிட்டார். சாதாரண மக்கள் வீட்டுச் சன்னலுக்கு வைக்கக்கூடிய ஜாலி, கிணற்று உரை போன்றவற்றைத் தயாரிப்பதுதான் இவரது வேலை. சிமெண்ட் போன்ற பொருட்களை பாதுகாப்பதற்காக அந்த இடத்திலேயே கட்டப்பட்ட சிறு ஓலைக் கொட்டகைதான் அவர் தங்கியிருக்கும் வீடு.

திரு ஆவுடையப்பன்

“என்ன பெரியவரே… வேலை இன்னும் முடியலையா, ஓவர்டைமா” என்று கேட்டதும்,

“இல்லை இல்லை… நமக்கு ஏது ஓவர் டைமு! வேலையிருந்தா செய்ய வேண்டியதுதானே…!” –என்று தனது தொழில் அனுபவத்தை கூறலானார்.

“30 வருசமா உறை போடுற தொழில் செய்கிறேன். தினமும் காலை அஞ்சு அஞ்சரைக்கு எழுந்திடுவேன். காலைக்கடனை முடிச்சிட்டு, நேரா டீக்கடைதான். அங்க ஒரு டீய போட்டுட்டு,  தவறாமல் பேப்பரும் படிச்சிடுவேன். அங்கிருந்து 6 மணிக்கு திரும்பினா சாயந்திரம் 6 மணி வரைக்கும் இதே வேலைதான்.

காலையிலேருந்து இரண்டு தடவ கட்டங்காப்பி போட்டு குடிச்சேன். அதான் இன்னைக்கு சாப்பாடு. சாயங்காலம் கடையில ஏதாவது சாப்பிடுவேன். வேலை வந்துட்டா வாரத்தில சில நாள் இப்படி சாப்பிடக்கூட நேரம் இருக்காது. வழக்கமா காலையில இட்லி, மதியம் பொட்டலம் சோறு. இதுக்கே தினமும் கொறைஞ்சது 100 ரூபா ஆயிடுது.

வெயில் காலத்துல மட்டும்தான் இந்த வேலை. பொரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை – மழைக்காலம் வந்துட்டா சுத்தமா வேலை இருக்காது. டீக்கே வழியில்லாத உட்கார்ந்திருப்பேன். மொதலாளிங்கதான் ஏதாவது கடன் கொடுப்பாங்க. அத வேலை வரும்போது கழிச்சுக்குவாங்க.

எம் பசங்கள்லாம் கல்யாணம் கட்டிகிணு தனியா போயிட்டாங்க. அவனுங்களும் ஏதோ வேல செஞ்சி காலத்த ஓட்டிகிட்டிருக்காங்க. என்ன மாதிரி கஷ்டப்படுறவங்களுக்கு ஏன் தொந்தரவு கொடுக்கணுமுன்னு தனியா வந்துட்டேன். ஒடம்பு முடியாம ஊருல இருக்குற என் பொண்டாட்டிக்கு அப்பப்ப ஏதாவது பணம் அனுப்புவேன். மத்தபடி ஒண்டிகட்டதான். இந்த வேலதான் என்னோட வாழ்க்கை; இந்த வீடுதான் என்னோட உலகம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க