ன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றமானது வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு அரசாணை செல்லாது என்று தீர்ப்பு வழங்கி மதுரை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து உள்ளது.
இத்தீர்ப்பில் உச்சநீதிமன்றமானது வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு வழங்கப்பட்ட விவகாரத்தில் தரவுகளே கிடையாது என்பதால் சட்டம் ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளை, சட்டத்தை ரத்து செய்யும்போது கேட்ட 7 கேள்விகளுக்கு அரசு தரப்பில் முறையான பதில் இல்லை மற்றும் உள்ஒதுக்கீடு ஏன் வழங்கப்பட வேண்டும் என்பதற்கு தரவுகள் இல்லை என்று கூறியது.
இத்தீர்ப்பு வந்தவுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது, “உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. தமிழ்நாடு அரசு நினைத்தால் தெளிவான புள்ளி விவரங்களின் அடிப்படையில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான பரிந்துரை அறிக்கையை தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து பெற்று, புதியதாக சட்டம் இயற்றி வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கலாம்” என்று கூறியுள்ளார்.
ராமதாஸ் கூறுவதைப்போல உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அதிகாரம் மாநில அரசிற்கு உள்ளது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அருந்ததியர் மற்றும் இஸ்லாமியருக்கான உள் ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது.

படிக்க :

7.5 சதவீத இட ஒதுக்கீடு : புண்ணுக்குப் புனுகாகிவிடக் கூடாது || புதிய ஜனநாயகம்

தமிழகப் பல்கலைக் கழகங்களில் பறிபோகும் 69 சதவிகித இடஒதுக்கீடு || CCCE

உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது, புதியதாக சட்டம் இயற்ற வேண்டும் என்பதை பேசும் அவர் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஏன் இச்சட்டமானது அவசர கோலத்தில் நிறைவேற்றப்பட்டது என்பதையும், அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததையும் பேச மறந்துவிட்டார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணியானது தன்னுடைய வெற்றியை தேர்தலில் உறுதிப்படுத்திக் கொள்ள எல்லா வகையான முயற்சியையும் மேற்கொண்டது. அதில், ஒன்றுதான் வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு சட்டம். நீட் மற்றும் ஏழு பேர் விடுதலையில் இழுத்தடிக்கும் ஆளுநர் இதற்கு உடனடியாக ஒப்புதல் வழங்கினார்.
இச்சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றியதன் மூலம் வன்னிய சாதி வெறியை தூண்டிவிட்டு வன்னிய உழைக்கும் மக்களின் ஓட்டுகளை எல்லாம் தன் ஓட்டு வங்கியாக மாற்றிக் கொண்டது. தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றாலும் வன்னிய உழைக்கும் மக்களின் ஓட்டுகள் இக்கூட்டணிக்குதான் சென்றது.
மேற்கூறியதை பேச மறுக்கும் அவர், “வன்னியர்களுக்கு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான 1980-ம் ஆண்டில் தொடங்கிய போராட்டம் இன்று வரை ஓயவில்லை. 1980-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் போராட்டம் நடத்தி, 21 இன்னுயிர்களை பலி கொடுத்துதான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டை வென்றெடுத்தோம். வன்னிய மக்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுக்காமல் ஓய மாட்டேன்” என்று கூறியுள்ளார்.

எல்லா சாதிக் கட்சிகளையும் போல தன்னுடைய சாதிவெறியை தூண்டி விடுவதைதான் ராமதாஸ் தற்போதும் செய்கிறார். அவர் கூற்றிலிருந்து நாம் பார்க்கும்போது 30 ஆண்டு காலம் வன்னியர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை பெற்றுத்தர இடைவிடாமல் போராடுவதைப்போல கூறியுள்ளார். அதைத்தான் நாம் பரீசீலனை செய்து பார்க்க வேண்டி உள்ளது.
1980-ம் ஆண்டு 28 அமைப்புகளை ஒன்றினைத்து வன்னியர் சங்கத்தை ராமதாஸ் நிறுவினார். வன்னியர்களுக்கு 20% சதவீத இட ஒதுக்கீடு கேட்டு 1987-ல் தொடர்ச்சியான போராட்டங்களை வன்னியர் சங்கத்தின் மூலம் முன்னெடுத்தார். 1989-ல் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு 107 சாதிகளை ஒன்றினைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு உருவாக்கப்பட்டு 20% சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
இவ்வெற்றியைப் பயன்படுத்திக் கொண்டு பாமக எனும் தேர்தல் கட்சியை ஆரம்பித்தார். திமுக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சித்த அவர் 2021 தேர்தல் வரை அக்கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்தது, வன்னியர் சங்கத்தை ஆர்ம்பிக்கும்போது சட்டமன்றத்தையோ, நாடாளுமன்றத்தையோ என்னுடைய கால்கள் மிதிக்காது என்று கூறியவர், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அன்புமணியை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆக்கினார். அன்புமணி ராமதாஸை 2016-ல் முதல்வர் வேட்பாளராக நிற்க வைத்தார் என்பது எல்லாம் ஊரறிந்தது.
அன்புமணியை கட்சியில் முன்நிறுத்தும்போது எழுந்த பிரச்சினை மற்றும் சொத்து பிரச்சினையில் காடுவெட்டி குருவை போட்டுத் தள்ளியது என்பது எல்லாம் ஊரறிந்து நாறிப்போனது. இக்காலங்களில் எல்லாம் சாதி வாரியான கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் முன்மொழிந்தாரே தவிர இட ஒதுக்கீடு சம்மந்தமாக வேறு எதுவும் செய்யவில்லை.
இடைப்பட்ட காலங்களில் வன்னிய மக்களிடம் சாதி வெறியை தூண்டிவிட தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் தருமபுரி பகுதிகளில் வன்னிய சாதி பெண்களை காதல் செய்வர்களை குறிவைத்து தாக்கியது போன்ற வேலைகளைதான் பாமக பிரதானமாக செய்தது.
வன்னிய சாதி வெறியை பயன்படுத்தி பாமக கட்சியின் தலைமைப் பொறுப்புகளில் உள்ளவர்கள் தங்களுடைய பணப்பையை நிரப்பிக் கொண்டார்களே ஒழிய வன்னிய சாதியை சேர்ந்த உழைக்கும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

படிக்க :

7.5% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் : ஏழை மாணவர்களுக்கு இது போதுமா ?

திருமண நெருக்கடி | சாதியற்றவர்க்கு இடஒதுக்கீடு | துக்ளக் | கேள்வி – பதில் !

இந்த நிகழ்ச்சிப் போக்கின் தொடர்ச்சியாக மீண்டும் சாதிவெறியை தூண்டிவிட ஆரம்பித்து விட்டனர். பாமக மாநில செயற்குழு கூட்டத்தில் பேசிய பாலு, வன்னிய இடஒதுக்கீடு சம்மந்தமாக தமிழக அரசானது புதிய சட்டம் இயற்ற வேண்டும், இல்லாவிட்டால் தமிழகம் தாங்காத போராட்டத்தை பாமக முன்னெடுக்கும் என்று கூறுவதிலிருந்தே மேற்கூறியதை புரிந்து கொள்ள முடியும்.
இப்படி சாதியவெறியைத் தூண்டி, சாதிக் கலவரத்திற்கு வித்திடும், பாமக பாலு, ராமதாஸ் ஆகிய அறிவு ஜீவிகளுக்கு எடப்பாடி ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டம் என்பது ஒன்றுமில்லாத வெற்றுக் காகிதம் என்பது தெரியாதா? தேர்தல் ஓட்டுக்காக அந்த நாடகத்தில் இணைந்து பங்காற்றி, வன்னியர்களை நம்பவைத்து கழுத்தறுத்த பாமக கும்பல், தற்போது தமது அரசியல் வாழ்வை வளமாக்கிக் கொள்ள ஒரு கலவரத்தை நடத்துவதற்கு, வன்னிய சமூகத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்களை தூண்டி விடுகிறது.
இச்சாதிக் கட்சிகளால் வாழ்க்கை நிலைமை, கல்வி, வேலை மற்றும் பொருளாதாரம் ஆகிய எதிலும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதை உழைக்கும் மக்கள் உணரும் தருணத்தில் ஆதிக்கச்சாதி கட்சிகள் இருந்த தடம் தெரியாமல் துடைத்தெறியப்படும் என்பது உறுதி !
அமீர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க