ன் நியூஸ் தொலைக்காட்சியில் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை ஒட்டி நடத்தப்பட்ட விவாத மேடை நிகழ்ச்சியில் பாமகவின் வழக்கறிஞர் கே. பாலு, “வன்னியர்களுக்கும் தலித்துகளுக்கும் தீண்டாமை என்ற ஒன்றைத் தவிர பொருளாதாரரீதியாக எவ்வித வேறுபாடும் இல்லை.” என்று கூறினார்.
அவர் கூறியது 100% உண்மை. வன்னியர் சாதியைச் சேர்ந்த மக்களில் பெரும்பான்மையிலும் பெரும்பான்மையானோர் மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கிறார்கள்.
கார்ப்பரேட் பாசிச திட்டங்களான 8 வழிச்சாலை முதல் ஹைட்ரோகார்பன், பாரத் மாலா வரை அனைத்து திட்டங்களிலும் பாதிக்கப்படக்கூடிய மக்களாகவும் வன்னியர் சாதியை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்.
நாயக்கர், படையாட்சி, வன்னியர், வன்னிய கவுண்டர், பந்தல் வன்னியர், அரசு வன்னியர் இப்படி பல பிரிவுகளாக இருக்கும் இந்த சாதியை ராமதாஸ் மருத்துவராக இருந்தபோது துவங்கி ராமதாஸ் உள்ளிட்டவர்கள் வன்னியர் சங்கமாக ஒருங்கிணைக்க முயற்சி செய்தனர்.
இந்தச் சாதிகளில் நாயக்கர்கள் படையாட்சிக்கோ, படையாட்சிகள் வன்னிய கவுண்டருக்கோ பெண் கொடுப்பது கிடையாது. ஏனெனில் அதற்குள்ளும் இவர்கள் படிநிலை வைத்திருக்கின்றனர். இந்தத் தீண்டாமையையும் உள்ளடக்கியதுதான் “வன்னியர் ஒற்றுமை”.
000
1987 இட ஒதுக்கீடு போராட்டம், அதைத் தொடர்ந்து பல தேர்தல்களில் மாறி மாறி  அனைத்து கட்சிகளுடனும் கூட்டணி வைத்துக் கொண்டு நாறிப் போன பிறகும் ராமதாஸ் எப்படி வன்னியர் மக்களிடம் செல்வாக்கு மிக்க தலைவராக இருக்கிறார்?
ராமதாஸ் தன்னுடைய அரசியல் செல்வாக்கு சரியும் போதெல்லாம் ஒன்றுமில்லாத பிரச்சனையை கிளப்பி அதன் மூலம் மட்டுமே உயிர் வாழக் கூடிய ஒரு பிராணி.
2002 ஆம் ஆண்டு செல்வாக்கு சரிந்த நேரத்தில், ரஜினி திரைப்படங்களில் சிகரெட் குடிக்கிறார் என்ற மொக்கையான காரணத்தை வைத்துக் கொண்டு, பாபா திரைப்பட பெட்டிகள் திருடப்பட்டன, எரிக்கப்பட்டன, தியேட்டர் அதிபர்கள் கடத்தப்பட்டார்கள். அந்த வேலைகளில் முக்கியமாக ஈடுபட்டது இன்றைய தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும் அன்றைய ராமதாஸின் முக்கிய நம்பிக்கையாக இருந்த வேல்முருகன்.
இப்படிப் பல மொக்கையான காரணங்களை பூதாகரமாக்கித்தான் வன்னியர் சமூகத்தினரின் மீதான தனது செல்வாக்கை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் ராமதாஸ். ஆனால் ஒருபோதும், வன்னியர் சாதி மக்களுடைய பொருளாதார பிரச்சினைகளைப் பற்றி உரக்கப் பேசியது கிடையாது.
தற்போதும் சீண்ட ஆளின்றி செல்வாக்கு சரிந்திருக்கும் நேரத்தில், ஜெய்பீம் படத்தை ஒட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சம்பவங்களைப் பார்க்கும்போது, வன்னியர் மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்து போன ராமதாசுக்கு இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. இதுபோன்ற குறுகிய சாதி ஆதிக்க பிரச்சினையை கிளப்பிவிட்டு தன்னை ஒரு அரசியல் தலைவராக எப்போதும் நிலைநாட்டிக் கொள்ள வேண்டும். அதற்காகத் தான் வன்னியர் சாதி இளைஞர்களை சாதிவெறியூட்டி கலவரங்களில் ஈடுபடுத்துவதும் ராமதாசு கும்பலின் ஒரு வழக்கமாக இருக்கிறது.
000
ன்னியர் சங்கத்தின், பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை என்பது ராமதாசை பாதுகாப்பதுதான். இதைத் தாண்டி வேறு எதுவும் எப்போதும் இருந்ததில்லை .
வன்னியர் சங்கத்தில் இருப்பவர்கள் ஆகட்டும், பாட்டாளி மக்கள் கட்சியில் இருப்பவர்கள் ஆகட்டும் அவர்களை ராமதாஸ் எப்படி வைத்திருக்கிறார் என்பதற்கு சில சான்றுகள்.
தற்பொழுது வன்னியர் சங்கத்தின் தலைவராக இருக்கக் கூடிய அருள்மொழியின் தம்பி இளங்கோவன் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து வெளியே போனபோது இளங்கோவனை மிகவும் ஆபாசமாக வசை பாடி போஸ்டர்கள் ஒட்டினார்கள். ஒரு காலத்தில் ராமதாசுக்கு, புரட்சி சாயம் பூசிய தீரனுக்கு இதைவிட மிக மோசமான நிலைமை இருந்தது. தீரன் மீண்டும் பாமகவிற்கு வந்து வந்துவிட்டார்.
தலித் ஒருவரை எப்போதும் பொதுச் செயலாளராக வைத்திருப்பேன் என்று கூறிய ராமதாஸ், தன்னை எவ்வாறு அவமானப்படுத்தினார் என்பதை கண்ணீர் விட்டு அழுதார் தலித் எழில்மலை.
வீரப்பனை வைத்து நாடகம் எடுத்து, வீரப்பன் பெயரைச் சொல்லி வன்னிய இளைஞர்களை சாதிவெறியேற்றி பெரும்பணம் சம்பாதித்த ராமதாஸ் இடம் சென்று “எனக்கும் என் குடும்பத்திற்கும் பணம் கொடுங்கள்” என்று கேட்ட வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி துரத்தி அடிக்கப்பட்டார் தைலாபுரத்தில் இருந்து.
ராமதாசுக்காக பல கலவரங்களை செய்து புகழ்பெற்ற காடுவெட்டி குரு, மருத்துவம் பார்க்க வழி இல்லாமல் கிடந்ததும் அதற்காக அவர்கள் குடும்பத்தினர் தைலாபுரத்தில் வாசலில் காத்துக் கிடந்ததும், அவர்களையும் துரத்தியடித்தவர் தான் இந்த ராமதாஸ் .
வன்னியர் சாதியை சேர்ந்த ஏழைக் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற வன்னியர்களை வன்னியர் சங்கம் தண்டிக்கவில்லை. ஜெயலலிதாவுக்காக கோவை வேளாண் கல்லூரி மாணவர்கள் 3 பேரை உயிரோடு எரித்த வன்னியர்களை வன்னியர் சங்கம் கண்டிக்கவில்லை.
வன்னியர் சங்கத்திலும் பாட்டாளி மக்கள் கட்சியிலும் கடுமையாக உழைக்கும் யாருக்கும் எப்பொழுதும் எம்எல்ஏ, எம்.பி சீட்டு கிடைப்பதில்லை. மாறாக அவருடைய நெருங்கிய உறவினர்கள் பினாமிகளுக்கே சீட் கொடுக்கப்படுகிறது. இது எல்லாம் வன்னியர் சங்கத்தில் இருக்கும் நபர்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சியில் இருக்கும் நபர்களுக்கும் தெரியாதா?
தெரியும். சாதி என்று வந்து விட்டால் எல்லா அநியாயங்களும் அக்கிரமங்களும் புனிதம் ஆகிவிடும் என்பதற்கு ராமதாசு ஒரு எடுத்துக்காட்டு. பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக செயல்பட்ட நபர்கள் கூட சாதி பாசத்தால் பாமகவிற்கு ஓட்டு போட்டனர், ஓட்டு கேட்டனர்.
ஆர்எஸ்எஸ் எப்படி சித்தாந்த ரீதியாக யாரும் கேள்வி கேட்கக் கூடாது இந்த அடிமைகளை உருவாக்கி வருகிறதோ அதே போல ராமதாஸ் உள்ளிட்ட சாதி வெறியர்கள் சாதி சங்கத்தை அடிமைகளுக்காகவே உருவாக்கி வருகிறார்கள்.
000
ஒதுக்கீடு – உள்ஒதுக்கீடு என்ற ஏமாற்று!
1987 இட ஒதுக்கீடு போராட்டத்தின் விளைவாக, ஏறத்தாழ 108 சாதிகளை ஒருங்கிணைத்து பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் உருவாக்கப்பட்டு
20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய பகுதிகளில் ஏறத்தாழ 15 சதம் வரை அவர்களே அனுபவித்தனர்.
திடீரென்று உள்ஒதுக்கீடு ஒரு பிரச்சினை என்று கூறி ராமதாஸ் ஒரு நாள் கலவரம் செய்து 10.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்றார். இது உருவாக்கும் பொழுது சட்டத்தின் முன் நிற்காது தோற்றுவிடும் என்று ராமதாஸ் உட்பட அனைவருக்கும் தெரியும். தெரிந்தாலும் வன்னியர் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காகவே அதை உருவாக்கினார்.
இந்த உள் ஒதுக்கீடு கோரிக்கையை கூட முதலில் ராமதாஸ் வைக்கவில்லை. சி.என். ராமமூர்த்தி என்பவர் இது தொடர்பாக பல ஆண்டுகள் வழக்கு நடத்தி அதற்கான தீர்ப்பையும் பெற்றார். அதன்படி உள் ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்ற ஒரு நிலை ஏற்படும் பொழுது ராமமூர்த்தி பெயர் வாங்கி விடக்கூடாது என்பதற்காகவே ராமதாஸ் ஒரு நாள் கலவரம் செய்து 10.5 சதவிகிதத்தைப் பெற்றார். அனைத்துத் துறைகளும் தனியார் மயமாகி விட்ட பிறகு ஒதுக்கீடு வைத்து நாக்கு கூட வழிக்க முடியாது என்பதுதான் உண்மை நிலை .
இன்றைக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என ஆனபிறகு அதை வைத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள மற்ற சாதியினர் மீதும் தலித்துகள் மீதும் அவதூறு பரப்புவதையே முக்கிய வேலையாக கொண்டார்.
ஆர்.எஸ்.எஸ்-ம் வன்னியர் சங்கமும் :
சில பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்தே கிராமங்கள்தோறும் உள்ள வன்னியர் சங்க கிளைகள் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டிற்குள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் வன்னியர் சாதியைச் சேர்ந்த மக்கள் பொருளாதாரரீதியாக படிப்படியாக முன்னேறி வருகின்றனர். அவ்வாறு முன்னேறி வரும் பொழுது அவர்கள் இதுவரை தங்கள் பழக்க வழக்கத்தில் இல்லாத பல பார்ப்பனிய சடங்குகளில் மூழ்கிப் போய் கிடக்கின்றார்கள்.
குறிப்பாக, திருமணங்களில் பார்ப்பனர்களை அழைக்கும் வழக்கம் வன்னியர்களுக்கு இல்லை. இப்பொழுது ஏனைய மற்ற சாதிகளைப் போலவே வன்னியர்கள், பார்ப்பனர்களை அழைப்பதை ஒரு முக்கியமான விதி ஆக்கியிருக்கிறார்கள்.
ராமதாஸ் தன்னையும் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் கொள்ளையடிப்பதற்காகவுமே வன்னியர் சங்கத்தை பார்ப்பனியத்திடம் அடகு வைத்திருக்கிறார் .
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழ் பாடும் உரிமைக்காகப் போராடிய ஆறுமுகசாமி பிறப்பால் வன்னியர் சாதியை சேர்ந்தவர். அவருடைய தமிழ் பாடும் உரிமைக்காக போராடி அவரை சிற்றம்பல மேடையில் ஏறி பாட வைத்தது நக்சல்பாரி கம்யூனிஸ்ட் அமைப்புகள் தலைமையிலான கூட்டமைப்புதான். இந்தப் போராட்டத்தில் பாமகவின் பங்கு என்ன? பொதுக்கூட்டத்தில் பங்கு கொண்டதும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதும் என்பதைத் தாண்டி என்ன இருக்கிறது?
தன்னுடைய சாதியை இழிவு படுத்திவிட்டார்கள், கேவலப்படுத்திவிட்டார்கள் என்பதற்காகவும் ராமதாஸ் சொன்னதைக் கேட்கவில்லை என்பதற்காகவும் ராமதாசை எதிர்த்து பேசினார்கள் என்பதற்காக நடத்தப்பட்ட கலவரங்கள் , போராட்டங்களின் தன்மையோடு வன்னியர் சாதியைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்படக்கூடிய நதிநீர் பிரச்சினை, விவசாய பிரச்சனை, அடிப்படைப் பொருளாதார பிரச்சினைக்கு ராமதாஸ் என்ன செய்தார் என்பதை ஒப்பிட்டுப் பாருங்கள் அப்போதுதான் ராமதாஸின் உண்மை முகம் தெரியும்.
படிக்க :
பூங்கொடி கொலை : வன்னிய மக்களே சிந்திப்பீர் !
வன்னியன் நாடாளணும்னா அன்புமணி அமைச்சராகணும் – கார்ட்டூன்
விவசாயம் திட்டமிட்டு அழிக்கப்படுவதால், பெட்ரோல் விலை உயர்வால், சிலிண்டர் விலை உயர்வால், ஜி.எஸ்.டி.-யால் வன்னியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லையா?
அதற்கெல்லாம் வெறுமனே ஒரு அறிக்கையோடு நின்றுவிடும் ராமதாசு, ஜெய்பீம் படத்தை வைத்து ஆடுவதற்கு காரணம் என்ன?
மக்கள் பாதிக்கப்படக்கூடிய அடிப்படை பிரச்சினைகளை எதிர்த்துப் போராடினால் அது ஆளும் வர்க்கத்திற்கு எதிராகப் போய் முடியும். ஆளும்வர்க்கத்தின் ஒரு பிரிவாக மாறிவிட்ட ராமதாசும் அவரது குடும்பமும் இழந்த சொர்க்கத்தை மீட்டு எடுப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
தங்கள் தேவைக்காக வன்னியர் சாதி மக்களை அடகு வைக்கிறார்கள். கொம்பு சீவி விடுகிறார்கள். இது எல்லாம் வன்னியர் சங்கத்தினருக்கு தெரிந்த போதும் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்?
பாமகவுடன்  கூட்டணி வைக்க 500 கோடி வாங்கினார் என்றும், எங்கையா யாரு கூட எப்ப வேணா கூட்டணி வைப்பார் என்றும், பெருமையாக பேசிக் கொண்டு திரிபவர்களைத் தானே ராமதாஸ் உருவாக்கி இருக்கிறார் .
இது சரியோ அதற்காக போராட வேண்டும் இது நியாயமோ அதற்காக உறுதியாக இருக்க வேண்டும் என்பதைத் தாண்டி எவன் நம் ஜாதியோ அவனுக்காக இருக்கவேண்டும் என்ற இழிவான ஒரு பண்பாட்டை உருவாக்கியிருக்கின்றன, சாதி சங்கங்கள். இது ஆதிக்க சாதி சங்கங்களின் மட்டுமல்ல தற்போது தலித் சாதி சங்கங்களிலும் பரவி வருகின்றது. தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் தாங்களும் மன்னர் பரம்பரை ஆதிக்கசாதி பெருமை பேசி அலைந்து கொண்டிருக்கிறார்கள். இது ஒன்றே இந்துத்துவ பார்ப்பனியத்திற்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய வெற்றி.
10.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் ஏற்கெனவே இதுவரை முரண்பாடே ஏற்பட்டிராத சாதிகளுக்குள்ளும் முரண்பாட்டை உருவாக்கி இருக்கிறது ஆர்எஸ்எஸ்.
000
ஜெய்பீம் படத்தில் அக்கினிச்சட்டி காலண்டர் இருக்கின்ற ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு, அடுத்ததாக குருவின் பெயர் உள்ளது என்றும் அதற்குப் பிறகு வன்னியர்கள் இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்ட குறவர் இன மக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டார்கள் என்றும் அதற்கடுத்து வன்னியர்களை மொத்தமாக அவமதித்து விட்டார்கள் என்றும் ஒரு நீண்டகால திட்டத்தோடு வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை அடுத்தடுத்து செயல்பட்டு வருகின்றன .
சேலம் தெற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சியின் எம்எல்ஏவான அருள் என்பவர் சேலம் மாவட்டம் முழுவதும் சூர்யாவுடைய திரைப்படத்தை எந்தத் திரையரங்கும் திரையிடக்கூடாது என்று மிரட்டல் கடிதம் அனுப்புகிறார் .
பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞரான பாலு, ஜெய் பீம் திரைப்படம் திரையிடப்பட்டு இருந்தால் வன்னியர் மக்களின் உணர்வுகள் ‘வேறு’ மாதிரி இருந்திருக்கும் என்று மிரட்டுகிறார்.
ராமதாஸ் கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட காடுவெட்டி குருவின் மகனும் மருமகனும் சூர்யாவுக்கு மிரட்டல் விடுத்துக் கொண்டிருக்கின்றனர். ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ள காடுவெட்டி குருவின் மருமகன் அக்னி கலசத்தை அவமானப்படுத்தி விட்டார்கள், அது வன்னியர்களின் சின்னம் என்று கூறுகிறார்.
இயக்குனர் வ. கௌதமன் வன்னிய குடியே தமிழகத்தில் மிகப்பெரிய குடி. அதை அவமானப்படுத்துகிறார்கள், திராவிடர்கள் திட்டமிட்டு தமிழ் சாதிகளுக்குள் சண்டையை மூட்டி விடுகிறார்கள் என்று புதுக்கரடி விடுகிறார். சீமானோ, அக்னி கலசத்தை திட்டமிட்டு வைத்ததாக கூறுகிறார்.
வன்னியர் சங்கம் ஆரம்பிக்கும் போது இருந்து ஒவ்வொரு வன்னியர்கள் வீட்டிலும் செங்கல், சிமெண்ட், நகையாகவும் பணமாகவும் பெற்ற பல கோடி ரூபாய் வன்னியர் அறக்கட்டளையாக இருந்தது. வன்னியர் அறக்கட்டளையை தற்பொழுது ராமதாஸ் தன்னுடைய பெயருக்கு மாற்றிக் கொண்டு விட்டார். தமிழகத்திலேயே மிகப்பெரிய குடியான வன்னிய குடியை ஏமாற்றிய ராமதாஸ் மீது கவுதமனுக்கு கோபமில்லை .
கௌதமன் எப்பொழுதும் பாதிக்கப்பட்ட வன்னியர்களுக்காக இருந்தாரா ? இல்லை, அவர் அதிகாரவர்க்கத்தின் வன்னியர்களுக்கான நபராகவே இருந்திருக்கிறார்.
சந்தன கடத்தல் வீரப்பன் பற்றி நாடகம் எடுத்த வ. கௌதமன், பாதிக்கப்பட்ட வன்னியர்களுக்கு ராமதாஸ் எதுவும் செய்யாததை பற்றி எதுவும் சொல்லவில்லை. இதுதான் அவர் யோக்கியதை.
சமீப கால வரலாற்றில் சுமார் 30 ஆண்டுகளுக்குள் நடந்த வரலாற்றிலாவது வன்னியர்களுக்கு ராமதாஸ் ஏதாவது உதவி செய்திருக்கிறாரா ? உபத்திரவம் தான் செய்திருக்கிறார். அதற்கான உதாரணங்களையும் இங்கு பார்க்கலாம்.
வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த அதிவிரைவு படை
பழங்குடியின மக்களையும் வன்னியர்களையும் சித்திரவதை செய்து கொண்டிருந்த காலம் அது. பள்ளி கட்டிடங்களிலும் போலீஸ் நிலையங்களிலும் சித்திரவதை செய்வதற்கென்றே தனி இடம் இருந்தது.
அதில் வன்னியர் சாதியை சேர்ந்தவர்களையும் பழங்குடியின மக்களையும் கொண்டுவந்து போலீசை சித்திரவதை செய்வார்கள். ஜன்னல்களில் கையை கட்டி போட்டு தண்ணீரை தட்டில் வைப்பார்கள் நாய்போல நக்கித்தான் குடிக்க வேண்டும்.
அங்கே தங்கியிருந்த அதிரடிப்படைக்கு எதிராக , வன்னியர் சாதி மக்கள் சித்திரவதை செய்யப்படுவதற்கு எதிராக ஒருநாள்கூட வன்னியர் சங்கமும் பாட்டாளி மக்கள் கட்சியோ போராட்டம் நடத்தியதில்லை.
வீரப்பன் படுகொலை செய்யப்பட்டபோது, இன்றைக்கு வீரப்பனுடைய படத்தை பெருமையாக போட்டுக்கொண்டு திரியும் எந்த வன்னியர் சங்கமும் எந்தப் போராட்டமும் நடத்தவில்லை. போலீசின் அடக்குமுறைக்கு எதுவும் பேசாமல் ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்த வேலையைத்தான் வன்னியர் சங்கமும் பாட்டாளி மக்கள் கட்சியும் செய்தது.
தேவாரத்திற்குப் பிறகு அதிரடிப் படைக்கு பொறுப்பு ஏற்று செயல்பட்ட மேட்டூர் பகுதியைச் சேர்ந்த வன்னியரான கோபாலகிருஷ்ணன் என்ற போலீஸ் அதிகாரி வன்னியர் சாதி மக்களையும் பழங்குடியின மக்களையும் செய்த சித்தரவதைகள் கொஞ்சநஞ்சமல்ல. அதனாலேயே வீரப்பன், கோபாலகிருஷ்ணனுக்கு குறிவைத்ததும் கோபாலகிருஷ்ணன் கண்ணிவெடியில் சிக்கி சின்னாபின்னம் ஆனதும் அனைவரும் அறிந்ததே.
திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவரான தோழர் கொளத்தூர் மணி தன்னுடைய பேட்டியில் , “எங்களுடைய ஊரில் இருந்து இரண்டு பேருந்துகள் நிறைய மக்கள் அதிரடிப்படை வன்னியர்களை சித்திரவதை செய்வது தொடர்பாக தைலாபுரத்தில் சென்று முறையிட்டார்கள். அவர்களுக்கு எந்த உதவியும் ராமதாஸ் செய்யவில்லை” என்பதையும் “வன்னியர் என்றாலே அவர்களை கைதுசெய்து அதிரடிப்படை போலீஸார் கடும் சித்திரவதைகள் செய்தனர்” என்பதையும் பதிவு செய்துள்ளார்.
இன்றைக்கு ஒட்டுமொத்த வன்னியர் மக்களின் அத்தாரிட்டி ஆக தன்னைக் கூறிக்கொள்ளும் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸின் யோக்கியதையை தெரிவிப்பதற்காகவே மேற்கண்ட சில சம்பவங்களை கூறவேண்டி உள்ளது.
000
சூர்யா நடமாட முடியாது என்று கூறும் காடுவெட்டி குருவின் மகனும் மருமகனும் வன்னியர் சொத்துக்களான பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை ஏமாற்றிய ராமதாஸ் வீட்டின் முன் நின்று பேசுவதற்காகவாவது வக்கிருக்கிறதா ? இவர்கள் எல்லோரும் சாதியை வைத்து பிழைப்பு நடத்தும் பிராணிகள்.
ராமதாஸ் போல தங்களால் வன்னியர் சாதி மக்களை கொள்ளையடிக்க முடியவில்லையே, அதிகாரத்தை செலுத்த முடியவில்லையே என்பதுதான் இவர்களின் ஏக்கம். அதனால்தான் ராமதாஸுக்கு எதிராக இருந்தாலும் ராமதாஸின் திட்டத்தில் இவர்களெல்லாம் அணிவகுத்து நிற்கிறார்கள்.
படிக்க :
பாமக-வின் ஜெய்பீம் எதிர்ப்பு ‘நாடக ’ அரசியல் !
பா.ம.க வை நிராகரிக்கும் வன்னியர்கள் – கள ஆய்வு !
வன்னியர் அறக்கட்டளை மூலமாக எத்தனை வன்னியர் சாதியை சேர்ந்த ஏழை மாணவர்கள் இலவசமாக படித்து உள்ளார்கள்?
செங்கல்வராய நாயக்கர் என்ற வன்னியர் சாதியைச் சேர்ந்தவர் தன்னுடைய சொத்துக்களை வன்னியர் சாதியை சேர்ந்த ஏழைகளுக்கு எழுதி வைத்துவிட்டு இறந்து போனார். செங்கல்வராய நாயக்கர் ட்ரஸ்டின் சொத்துக்களையும் கைப்பற்றுவதற்கு பாமக முயற்சிசெய்தது, செங்கல்வராய நாயக்கர் டிரஸ்ட்டை ஆய்வு செய்ய வந்த நீதிபதியை கொலை செய்யவும் முயற்சி செய்தது.
அக்னி கலசம் வன்னியர்களின் சின்னமா?
உலகத்தில் எந்த ஒரு ஜாதியும் பிறக்கும்போதே குறிப்பிட்ட சின்னத்தோடு பிறப்பதில்லை. அந்த சாதிக்காக உருவாவதாக, உருவாக்கியதாக சொல்லப்படக்கூடிய கட்சிகள் தங்களுக்கு என்று ஒரு சின்னத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். அந்த சின்னத்தை கேலி பேசினாலே அது ஒட்டுமொத்த ஜாதியும் இழிவுப்படுத்துவதாக பேசுகிறார்கள்.
அக்கினி கலசம் என்பது வன்னியர்களின் சின்னம் அல்ல . அது மாறாக ராமதாசுடைய வன்னியர் சங்க சின்னம் தான் என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் துணைத் தலைவரான திருமால்வளவன் ஒரு ஊடகப் பேட்டியில் தெரிவிக்கிறார். 1980-களில் தொடங்கப்பட்ட ஒரு சங்கத்தின் சின்னம் எப்படி ஒட்டுமொத்த வன்னியர்களின் சின்னமாக இருக்க முடியும்?
ஒவ்வொரு சாதியும் தங்கள் சாதிப் பெருமையைப் பறைசாற்றுவதற்காக பார்ப்பனர்களின் அடிமையாக இருப்பதை நிரூபிப்பதற்காக பல்வேறு புராணங்களையும் கதைகளையும் அவிழ்த்து விடுகிறார்கள். அதன்படி புராணம் கொண்ட ஒரே சாதி வன்னியர் சாதிதான் என்ற பெருமையோடு வன்னியர் பெருமை தொடங்குகிறது.
அசுரர்களை அழிப்பதற்காக சிவபெருமான் தனது நெற்றியில் இருந்த வியர்வையை யாககுண்டத்தில் விட்டு அதிலிருந்து பிறந்தார்கள் வன்னியர்கள் என்ற கட்டுக்கதையை உண்மையாக்க ராமதாசு, கௌதமன் போன்றவர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
அறிவியலுக்கு ஒவ்வாததை புறந்தள்ள வேண்டும் என்பதே மனித சமூகத்தின் முன்னேற்றத்திற்கான முக்கியமான விதியாகும். ஆனால் யாககுண்டத்தில் இருந்து பிறந்தார்கள் என்ற ஒரு அறிவியலுக்குப் புறம்பான ஒன்றை அவர்கள் நம்புகிறார்கள் என்றால் அது அவர்களின் உரிமை. ஆனால் அதைத்தான் எல்லோரும் நம்ப வேண்டும் என்று திணிப்பது எவ்விதத்தில் நியாயம்? டி.என்.ஏ டெஸ்ட் செய்தால் தெளிந்துவிடும் நெருப்பிலிருந்து வந்தார்களா இல்லையா என்று?
திண்டுக்கலில் கிறித்துவ வன்னியர்கள் குறிப்பிடத்தகுந்த அளவு இருக்கிறார்கள். அவர்களும் சிவபெருமானின் நெற்றியிலிருந்து வந்தார்களா என்ன? விவிலியத்தில், உலகத்தை இயேசு உருவாக்கிய கட்டுக்கதைகளை, கிருத்துவர்கள் நம்பிக் கொண்டிருந்தாலும் அதை கேலிக்குள்ளாக்குபவர்கள் மீது வன்மத்தோடு பாய்வதில்லை. ஏனென்றால் உலகம் ஒரு கோள வடிவமானது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டது.
குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்ற சார்லஸ் டார்வினின் கோட்பாடு உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. உடல்நிலை சரியில்லை என்றால் அனைவரும் மருத்துவமனைக்கு தான் சொல்கிறார்கள். கோயிலுக்குத் தூக்கி செல்பவர்களை உலகமே மூட நம்பிக்கையாளர்கள் என்று கேலி பேசிக்கொண்டிருக்கிறது.
இச்சூழலில் நாங்களெல்லாம் யாககுண்டத்தில் இருந்து வந்தவர்கள் என்று வன்னிய சாதிவெறியர்கள் சொல்வதற்கும், நாங்களெல்லாம் சிவபெருமானுடன் கயிலாயத்தில் இருந்து நேரடியாக வந்தோம் என்று தீட்சிதர்கள் சொல்வதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?
நாங்கள் பிறப்பிலேயே சிறந்தவர்கள் , மேன்மையானவர்கள் என்ற மூடநம்பிக்கை தவிர வேறு ஒன்றும் இல்லை. இதன்மூலம் இயல்பிலேயே தங்கள் ஆதிக்கம் நியாயமானதுதான் என்பதை கூறுகிறார்கள்.
000
எதைப்பற்றி யாரும் விமர்சனம் செய்தாலும் எங்கள் இனம், எங்கள் சாதி, எங்கள் மதம் புண்பட்டு விட்டது என்றால் எதைத் தான் பேச முடியும் ? பெருமாள்முருகன் ஒரு கதையை எழுதினார் என்பதற்காக தங்கள் மனம் புண்பட்டதாகச் சொல்லி, கவுண்டர் சாதிவெறியர்கள் மிரட்டி உருட்டி அவரை ஊரைவிட்டே துரத்தினார்கள்.
ஒரு படைப்பைப் பற்றிய விமர்சனம் அரசியல் ரீதியாக இருக்கவேண்டுமே, ஒழிய தங்கள் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குகிறது என்று பேசுவதாக இருந்தால் யாரும் எதையும் உருவாக்க முடியாது படைக்க முடியாது. அப்படிப்பார்த்தால் வ. கௌதமன் எடுத்த சந்தன கடத்தல் வீரப்பன் மற்றும் ஆட்டோ சங்கர் தொடர்பான நாடகங்கள் போலீஸ் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதாகச் சொல்லலாமல்லவா ?
தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கு மேல் வன்னியர் சாதி மக்களின் எண்ணிக்கை இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் ராமதாசுக்கு ஓட்டு போடுவதில்லை. தமிழகத்தின் வட மாவட்டங்களில் கலவரம் செய்வதற்காக ஒரு கும்பலை உருவாக்கியிருக்கிறார். அதன்மூலம் தன்னுடைய அரசியல் செல்வாக்கை நிலைநாட்டுவதற்காக கடந்த 30 ஆண்டுகளாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அதில் குறிப்பிடத்தகுந்த அளவு வெற்றியும் பெற்றுள்ளார். ராமதாஸின் இடத்தைப் பெறுவதற்கு தான் அனைத்து சாதிக் கட்சிகளும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றன.
ஜெய் பீம் திரைப்படம் குறித்து அன்புமணிக்கு பாரதிராஜா கடிதம் எழுதினார். இதுகுறித்து பதில் கடிதம் எழுதியுள்ள அன்புமணி, வில்லனுக்கு பின்புறம் அக்னிசட்டிக்கு பதிலாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அல்லது தீரன் சின்னமலையின் படம் இருந்தால் என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார். தலித் சாதி மட்டுமல்லாமல், ஏனைய பிற ஆதிக்க சாதிகளுடனும் முரண்பாட்டை உருவாக்கி அதன் மூலம் வன்னியர் சாதி மக்களை தன் பிடிக்குள் கொண்டுவர வேண்டும் என்ற முனைப்போடு ராமதாஸ், அன்புமணி கும்பல் தீவிரமாக இறங்கி இருக்கிறது .
10.5 சதவீத சதவிகித உள் ஒதுக்கீடு உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட பிறகு இருந்து மற்ற சாதியினர் உடனான முரண்பாட்டை ராமதாஸ் கும்பல் தொடர்ச்சியாக வளர்த்து வருகிறது.
இதன் மூலம் இழந்த பெருமையை மீட்டுருவாக்கம் செய்ய ராமதாஸ் துடித்துக் கொண்டிருக்கும் பொழுது அதற்கு உதவியாக ஆர்.எஸ்.எஸ் தற்பொழுது களமிறங்கி இருக்கிறது. வட இந்தியாவைப் போல தமிழ்நாட்டில் சாதி மதம் இவற்றிலிருந்து பெரும்பான்மையான மக்கள் ஓட்டு போடுவதில்லை. ஆனால் அதை நோக்கி தமிழ்நாடு பயணித்துக் கொண்டிருக்கிறது.
தமிழகத்திலுள்ள தமிழ் இன உரிமைக்கான போராட்டங்களை ஒழித்துக் கட்டுவதன் மூலமாகத்தான் தமிழ் நாட்டை அடிமைப்படுத்த முடியும் என்பதில் மோடி ஆர்எஸ்எஸ் கும்பல் தெளிவாகவே இருக்கிறது. அதற்கு ஒரு வாய்ப்பாகவே ஜெய்பீம் படப் பிரச்சினையை பயன்படுத்திக் கொண்டுள்ளது.
வட மாவட்டங்களிலும் வன்னியர் சங்கம் அசாதாரணமான வளர்ச்சி பெற்றது எவ்வாறு என்பதற்கான பதிலை காடுவெட்டி குரு கொடுக்கிறார். “வன்னியர் சங்கம் தொடங்கப்படவில்லை என்றால் வன்னியர்கள் பலரும் நக்சலைட் ஆகி இருப்பார்கள் “, என்று கூறியிருக்கிறார்.
வட ஆற்காடு, தர்மபுரி மாவட்டங்களில் பற்றி எழுந்த நக்சல்பாரி இயக்கத்தை ஒழித்துக் கட்டுவதற்காக வன்னியர் சங்கத்தை ஆளும் வர்க்கம் பயன்படுத்திக்கொண்டது, ஊக்குவித்தது. நக்சல்பாரி இயக்கத்தின் தியாகி தோழர் பாலன் தலைமையில் எங்கெல்லாம் இரட்டைக் குவளை முறை அழித்து ஒழிக்கப்பட்டதோ, சாதி வேற்றுமை களையப்பட்டதோ அங்கெல்லாம் வன்னியர் சங்கம் மூலம் மீண்டும் தீண்டாமைக் கொடுமைகள் நிறைவேற்றப்பட்டன, நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
000
இந்தியாவில் சாதியும் வர்க்கமும் பின்னிப்பிணைந்து இருக்கிறது. நாட்டின் உழைக்கும் மக்களை சுரண்டி ஓட்டாண்டியாக்குகின்ற தனியார்மய தாராளமய உலகமயக் கொள்கைகளை எதிர்த்தும் அதற்கு எதிரான போராட்டங்களை வலுப்படுத்த வேண்டியதே இன்றைய நம் முன்னுள்ள கடமை. அதற்குத் தடையாக இருக்கக்கூடிய பார்ப்பனிய இந்து மத வெறியையும் அதற்கு அடிப்படையாக உள்ள சாதி வெறியயும் ஒழித்துக்கட்டுவதும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டிய பணியாகும்.
2024-ம் ஆண்டு காவி கார்ப்பரேட் பாசிச அரசை நிறுவ வேண்டும் என்ற லட்சியத்தோடு செயல்படும் மோடி – ஆர்.எஸ்.எஸ்.-க்கு தமிழகத்தை கூறுபோட்டாக வேண்டும் என்பது லட்சியம்.
மக்களுடைய அடிப்படை பிரச்சனைகளுக்காக அவர்களை வர்க்கமாக அணிதிரட்டி காவி கார்ப்பரேட் பாசிசத்துக்கு எதிராக நிறுத்துவது என்ற பணியை நாம் தீவிரமாக முன்னெடுக்கா விட்டால், பார்ப்பனியத்திற்கு எதிரான தமிழ் இன ஓர்மையை ஒழித்துக்கட்டி சாதி ரீதியாக பல கூறுகளாக தமிழகத்தை பிரித்து வைக்கும் ஆர்எஸ்எஸ் திட்டம் நிறைவேறி விடும் என்பது மட்டும் உண்மை .
வினவு செய்திப் பிரிவு
மருது
மக்கள் அதிகாரம்

2 மறுமொழிகள்

 1. முதலில் வன்னியர்கள் யாராவது இதற்குப் பதில்ச் சொல்லுங்கள்.
  வன்னியர்கள் தங்களை
  “” ஷத்திரியர்கள்”” என அழைத்துக்கொள்கிறார்கள்.
  இந்த ஷத்திரியர் என்ற வகைப்பாடு மனுநீதியின் அடிப்படையில் வருவது.
  அப்படியானால் வன்னியர்கள் இந்து மதத்தின் பிறப்பின் அடிபலபடையிலான மனிதர்களைப் பிரிக்கும் பிரிவினையை ஏற்கிறார்களா? அதாவது வருணாசிரமத் தத்துவங்களை ஏற்கிறார்களா? இதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
  குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சியினர் இதற்குப் பதில்ச் சொல்ல வேண்டும். மேலும் மனுநீதியின்படி வன்னியர்கள் ஷத்திரியர்கள் என்றால் , மற்ற இனங்களான முதலியார்கள் , வெள்ளாளர்கள் , கவுண்டர்கள் , இவர்களெல்லாம் மனுநீதியின்படி என்ன வகைப்பாட்டில் வருகிறார்கள்.?
  பாட்டாளி மக்கள் கட்சியின் சின்னங்களாக கார்ல்மார்க்ஸ் படத்தையும் , பெரியாரின் படத்தையும் பயன்படுத்துகிறார்கள்.
  மனுநீதியின்படியான வகைப்பாட்டை தங்களுக்குச் சூட்டிக்கொண்டு பெருமை கொள்பவர்களுக்கு , கார்ல்மார்க்கஸ் படத்தையும் , பெரியாரின் படத்தையும் பயன் படுத்தத் தகுதி உள்ளதா?
  பதில்ச் சொல்லுங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க