ர்ப்பிணித்தாயாக இருக்கும் ஒரு சகோதரி, கர்ப்பிணியாக இருக்கும் ஒரு பெண் தன்னை எவ்வாறு பிரசவத்திற்கு தயார் செய்து கொள்ள வேண்டும் என்பது குறித்த கட்டுரை ஒன்று வரையுமாறு கேட்டுக்கொண்டார்.

கர்ப்பிணிகள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில முக்கிய விசயங்களை இந்த கட்டுரையில் விளக்குகிறேன்…

***

ர்ப்பமடைந்தது முதல் பிரசவம் வரை உள்ள இந்த பத்து மாத கால இடைவெளியை ஆரம்பம் முதல் குழந்தை பிறக்கும் வரை காண்போம்.

புதிதாக திருமணம் ஆனவர்கள் குழந்தைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தால், தாயாகப் போகும் பெண் Pre conceptional folic acid எடுக்க வேண்டும். வயிற்றில் கரு உருவாவதற்கு முன்பே எடுக்கப்படும் இந்த மாத்திரை உருவாகும் குழந்தைக்கு மூளை சார்ந்த குறைபாடுகள் ஏற்படாமல் பாதுகாக்கும்

மேலும், குழந்தைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் ஒரு பெண் தனக்கு வரும் சிறு சளி இருமல் காய்ச்சலுக்கு மருத்துவரை அணுகும் போது கட்டாயம் “நாங்கள் குழந்தைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்” என்று மருத்துவரிடம் கூற வேண்டும். கர்ப்பபையில் குழந்தை இருந்தால் சில மருந்துகள் தவிர்க்கப்பட வேண்டும். அதை மருத்துவர் தவிர்க்க இது உதவும்.

pregnancy_testsதிருமணமான பெண் தனது மாதவிடாய் நிற்கும் நாட்களை கட்டாயம் குறித்து வைத்து இருக்க வேண்டும். மருத்துவர் Last menstrual period எப்போது என்று கேட்டால் சட்டென கூற உதவும். மாதவிடாய் தள்ளிப்போனால் கடைசி மாதவிடாய் நிகழ்ந்து நாற்பது நாட்கள் கழியும் போது சிறுநீர் மூலம் கர்ப்பமானதற்கான பரிசோதனையை செய்து பாருங்கள்.

கர்ப்பமாகி இருப்பது யூரின் கார்ட் மூலம் தெரிந்து விட்டாலும், கர்ப்பம் எங்கே நிகழ்ந்திருக்கிறது ? என்பது இன்னும் உறுதி ஆகவில்லை.

அதாவது நிகழும் கர்ப்பங்களில் பெரும்பான்மை கர்ப்பபை எனும் uterus -இல் நிகழும். எனினும் சிறிய அளவு கர்ப்பங்கள், சினைக்குழாய் எனும் fallopian tube இல் நிகழலாம். சிலருக்கு Blighted ovum எனும் கரு சிதைந்த நிலையில் கூட யூரின் கார்ட் டெஸ்ட் பாசிடிவாக வரும்.

ஆகவே வெளியே கர்ப்பமாக இருப்பதை அறிவிக்கும் முன்பு பொறுமை காத்துக்கொள்ளுங்கள். உங்கள் கர்ப்பம் கருப்பையில் தான் நடந்திருக்கிறது என்பதை உறுதி செய்ய ஒரு முக்கிய பரிசோதனை இருக்கிறது ?

அது என்ன?

படிக்க:
கர்ப்ப கால நீரிழிவு நோயை தடுப்பது எப்படி | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
♦ நம் குழந்தைகளுக்கு ஏற்ற நல்ல உணவுமுறை எது ?

***

ர்ப்ப பையில் கரு தங்கிய ஐந்து முதல் ஆறு வாரத்திற்குள் இதயத்துடிப்பு தொடங்கும். தசையால் ஆன இதயம் தன் இசையை தொடங்கி அந்த கரு சிசுவாகி பின் சேயாகி பேதையாகி பின் பெதும்பையாகி மங்கையாகி மடந்தை நிலை கண்டு அரிவை தெரிவைக்கு பின் பேரிளம்பெண்ணாகி இறக்கும் வரை அந்த இசையை இசைத்துக்கொண்டே இருக்கும்.

ஒரு குழந்தை கர்ப்பையில் தான் உருவாகி இருக்கிறது என்பதை அறிய சரியான சோதனை “அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்” மட்டுமே. ஆகவே ஸ்கேன் செய்ய சரியான நேரம் கடைசி மாதவிலக்கான தேதியில் இருந்து ஐம்பது நாட்கள் சென்ற பின் அதாவது ஏழு வாரங்கள் கழித்து எடுத்தால், குழந்தை கர்ப்பபையில் இருப்பதையும், குழந்தைக்கு இதயத்துடிப்பு வந்து விட்டதையும் சேர்த்தே அறியலாம்.

இதை “Early pregnancy scan” என்கிறோம்

இந்த ஸ்கேன் செய்வதன் நோக்கம் மூன்று:

1 . கரு கர்ப்பபையில் இருக்கிறதா என்பதை உறுதி செய்தாயிற்று.
2. இதயத்துடிப்பை கண்டாயிற்று ( சிசு உயிரோடு இருக்கிறது ).
3. பெண் சொல்லும் தேதியும் குழந்தையின் வளர்ச்சியும் ஒத்துப்போகிறதா? முரணாகிறதா? என்பதை சரிபார்க்க உதவுகிறது.

சில நேரங்களில் பீரியட்ஸ் ரெகுலராக வராத பெண்களுக்கு எப்போது குழந்தை ஜனித்தது என்று தெரியாது. அவர்களுக்கு இந்த முதல் ஸ்கேன் உதவும்.

சரி.. இப்போது நீங்கள் ஒரு குழந்தைக்கு தாயாகப்போகிறீர்கள் என்பது உறுதி ஆகிவிட்டது. வாழ்த்துகள் அம்மா…👏

woman holding sonogram over pregnant belly

உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரின் அடிப்படை வாழ்வியில் இயற்கை நியதி இன்னொரு உயிரை நமது சாயலில் நமது மரபணுவை ஏந்தி இவ்வுலகில் விட்டுச்செல்வதே.

“நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்று இன்னொரு உயிர்” தானே.

இனி நீங்கள் எக்ஸ் ரே, சிடி ஸ்கேன் போன்றவை எடுப்பதில் இருந்து தவிர்க்கப்பட வேண்டியவர்கள். மேலும் விமான / ரயில் நிலைய / இன்னும் பாதுகாப்பு கருதி வைக்கப்படும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் அனைத்திலும் இருந்தும் விலகி இருக்க வேண்டும்.

படிக்க:
குழந்தையின்மை சிகிச்சையும் பார்ட்னர்ஷிப்பும் ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
♦ y choromosome* உடன் ஒட்டி வரும் சலுகைகள் – அன்னா

நிச்சயம் தாங்கள் உண்ணும் ஒவ்வொரு மருந்து மாத்திரையையும் மருத்துவர் அறிவுரை இன்றி எடுப்பது தவறு. கரடுமுரடான சாலைகள் , குண்டும் குழியுமான சந்துகளில் இருசக்கர வாகனங்களில் வேகமாக செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.

இதற்கு முன் கர்ப்பங்களில் அபார்சன் ஆனவர்கள் / குழந்தைக்கு முயற்சி செய்து நீண்ட நாட்கள் கழித்து குழந்தை தங்கியவர்கள் உடலுறவை தவிர்ப்பது கூட அறிவுறுத்தப்படும்.

அடுத்து என்ன ?

நேராக மகப்பேறு மருத்துவரை சந்திக்க வேண்டியது தான்.

கர்ப்பத்தின் ஆரம்பத்தில் :

 • பெண்ணின் உயரம்
 • எடை
 • அடிப்படை ரத்தப்பரிசோதனை
 • ரத்த வகை மற்றும் பிரிவு
 • ரத்த சர்க்கரை அளவு
  சிறுநீர் பரிசோதனை
 • எச்.ஐ வி மற்றும் ஹெபாடைடிஸ் வைரஸ்கள் சோதனை

கணவருக்கும் வைரஸ் பரிசோதனை எடுக்கப்படும். உங்களுக்கென பிரத்யேக தாய் சேய் நல அட்டை உருவாக்கப்படும்.

picme-tamil-naduதமிழக அரசு கர்ப்பமாகும் ஒவ்வொரு தாயும் கட்டாயம் கர்ப்பத்தை பதிவு செய்ய ஆணையிட்டிருக்கிறது. ஒவ்வொரு கர்ப்பிணியின் முழுவிபரமும் PICME (pregnancy infant cohort monitoring and evaluation) எனும் மென்பொருள் மூலம் பதிந்து ஒரு பிரத்யேக எண் கொடுக்கப்படுகிறது.

அந்த எண் மூலம் தமிழகத்தின் எந்த மூளை முடுக்கில் நீங்கள் சென்று அட்மிட் ஆனாலும் உங்கள் முழு கர்ப்ப கால விபரங்களையும் எடுக்க முடியும்.

கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களில் ஃபோலிக் அமில மாத்திரை வழங்கப்படும். குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அந்த மாத்திரையை எடுக்க வேண்டும்.

இரண்டாவது மாதத்தின் இறுதியில் ஒரு முக்கிய பிரச்சனையை அனைத்து கர்ப்பிணிகளும் சந்தித்து ஆக வேண்டும்.

ஆம் அதே தான்…

“கர்ப்பகால குமட்டல்/ வாந்தி”

***

90-களின் கடைசி வரை கூட தமிழ் சினிமாவில் இந்த காட்சி தவறாமல் இடம்பெறும்…

ஒரு திருமணமான பெண் திடீரென வாயில் கையை வைத்து மூடிக்கொண்டு வீட்டின் முற்றத்துக்கு ஓடி வாந்தி எடுப்பார். உடனே அடுத்த சீன் வைத்தியர் வந்து நாடி பிடித்துப் பார்த்து பெண்ணின் கணவருக்கு வாழ்த்துகள் சொல்வார்.

திருமணமாகாத பெண் இதே மாதிரி வாந்தி எடுத்தால் அந்த சீனில் அவளது தாய் “என் வயித்துல புளிய கரைக்கிறியேடி.. இது பித்த வாந்தியா.. மசக்கை வாந்தியாடி.. இடிய எறக்கிப்புட்டாளே” என்பது போல மிக மிக முற்போக்குத்தனமான சீன்கள் எல்லாம் இருக்கும் .

அதாவது ஒரு பெண் கர்ப்பிணியாகிவிட்டதை ஒருகாலத்தில் அவள் காலையில் வாந்தி எடுப்பதை வைத்தே தெரிந்து கொண்டனர் நம் முன்னோர்.

படிக்க:
பெண்களைக் காப்பாற்றுவது மரபு வழிப் பிரசவமா ? நவீன மருத்துவமா ?
♦ கேள்வி பதில் : தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன ?

நாம் யூரின் பீட்டா HCG டெஸ்ட் மூலம் எளிதாக கண்டுபிடித்து விடுகிறோம். வைத்தியர் வந்து நாடி பிடித்து பார்ப்பது என்பது கர்ப்பிணிகளுக்கு நாடித்துடிப்பு சிறிது அதிகமாகி இருக்கும். இதை Tachycardia என்போம்.

கர்ப்பிணிகளுக்கு கரு உண்டான ஒன்றரை மாதம் முதல் மூன்று மாதம் வரை
அதிகமான அளவு குமட்டல் வாந்தி வரும். இது பொதுவாக காலை வேளைகளில் தான் அதிகம் இருக்கும். இதை “Morning sickness” என்கிறார்கள்
அதாவது காலை நேரத்தில் வரும் நோவு என்று பொருள்.

Pregnancy-vomitingகுமட்டல் அதிகம் வந்தால் உள்ளே இருப்பது ஆண் குழந்தை, குழந்தைக்கு மண்டையில் முடி அதிகம் இருந்தால் அதிகம் வாந்தி வரும் என்று சில கட்டுக்கதைகள் உலாவந்தாலும்.

உண்மையாக ஏன் இப்படி கர்ப்ப காலத்தில் வாந்தி வருகிறது என்று ஆராய்ச்சி செய்ததில், கர்ப்பிணிகளுக்கு நுகர்தல் திறன் பன்மடங்கு அதிகமாகிறது அதனால் சாதாரண வாசனைகள் கூட மூளையில் உள்ள கீமோரிசப்டார் ட்ரிகர் சோன் எனும் இடத்தை தூண்டி குமட்டல் வாந்தி யை வரவழைக்கிறது.

பொதுவாக இந்த வாந்தி குமட்டல் எல்லாம் ஒரு கட்டுக்குள் இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு இந்த பிரச்சனை எல்லை மீறிப்போகும்.

 • எப்போதும் வாந்தி எடுத்துக்கொண்டே இருப்பார்கள்.
 • உண்பது பருகுவது கூட நோயை உண்டாக்கும்.
 • நீரிழப்பு மிக அதிகமாக ஏற்பட்டு அடிக்கடி மருத்துவமனையை நாடுவார்கள்.

இதை ” Hyper emesis gravidarum” என்கிறோம். கர்ப்ப காலத்தில் வரும் அதீத வாந்தி எடுக்கும் தன்மை.

நான் முன் சொன்ன காலை நோவுக்கு பெரிய சிகிச்சை தேவையில்லை. வாந்தியை தூண்டாமல் செய்ய சில எளிதான விசயங்கள் செய்தால் போதும்

1. காலை சீக்கிரம் விழிப்பது. விழித்தவுடன் சிறிதளவு உணவு உண்பது. காலை நேர குமட்டலை குறைக்கும்.

2. இரவு கடைசி உணவு ரொம்ப காரமாக, மசாலா அதிகம் இருப்பதாக இல்லாமல் இருப்பது நல்லது.

3. இரவு நடுவில் விழித்தால் வாழைப்பழமேனும் எடுப்பது நல்லது. வயிறு முழு பட்டினியாகவும் இருக்கக்கூடாது. முழுதும் நிரம்பியும் விடக்கூடாது.

4. உப்பு சேர்த்த உணவுகளை அதிகம் நா கேட்கும். உப்பு சேர்த்த உணவுகள் வாந்தியை குறைக்கும்.

5. இஞ்சி / எலுமிச்சை கலந்த சாறு குடிக்கலாம்.

6. இந்த காலங்களில் டயட் எடுக்கிறேன் என்றெல்லாம் இருக்கக்கூடாது. இருக்கவும் முடியாது. நா எதை மறுக்க கட்டளையிடுகிறதோ அதை மறுக்க வேண்டும். நா எதை கேட்கிறதோ அதை எடுக்கவும்.

7. அதீத இனிப்பு சுவை / அதீத காரம் வேண்டாம்

இதுபோன்ற வீட்டு மருத்துவங்கள் வேலைசெய்யாமல் போனால் இருக்கவே இருக்கிறது இதற்கென கர்ப்ப காலத்தில் எடுக்க வேண்டிய சிறந்த மருந்து. அதை மருத்துவர் பரிந்துரையில் எடுக்கலாம். (மருத்துவர் பரிந்துரை இன்றி அந்த மருந்தை எடுக்க வாய்ப்புள்ளதால் பெயரை தவிர்த்து விட்டேன்)

விட்டமின் பி6 எனும் பைரிடாக்சின் சத்து அதிகமாகும் போது வாந்தி குமட்டல் குறைகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. விட்டமின் பி காம்ப்ளக்ஸ் குடும்பத்தில் அதுவும் ஒன்று. நம் உடலால் அதை உற்பத்தி செய்ய இயலாது. மீன், மாமிசம், ஈரல், பச்சைக்காய்கறிகள், முட்டைகள் போன்றவற்றில் இந்த விட்டமின் இருக்கிறது.

கட்டுக்கடங்காத வாந்தி குமட்டல் இருந்தால் உடனே மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதி பெற்று ரத்த நாளம் மூலம் திரவம் ஏற்றுதல் சிகிச்சையை பெற வேண்டும்.

மிக அதிக வாந்தி நோய் இருப்பவர்கள் முதல் மூன்று மாதத்திற்கேனும் உணவு தயாரிப்பில் இருந்து விடுப்பு எடுத்துக்கொள்வது நல்லது. உணவு தயாரிக்கும் போது வரும் வாசனைகள் குமட்டலை தூண்டி வாந்தியை அதிகமாக்கும்

மூன்றாவது மாதத்தில் செய்ய வேண்டிய முக்கிய பரிசோதனை ஒன்றைப்பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க