மருத்துவர் கண்ணன்

நாம் உணவு தயாரிக்கிறோம் என்றால் அது சீக்கிரம் கெட்டுப் போய்விடும் .. ஏனென்றால் அதில் பாக்டீரியாக்கள் சீக்கிரம் வந்து தோன்றுகின்றன. ஆனால் இப்போது பாக்கெட் உணவை பார்த்தீர்களென்றால் வருடக்கணக்கில் கெட்டுப்போகாமல் அப்படியே உள்ளது.

உதாரணத்திற்கு ஐஸ்கிரீம் வருடக்கணக்கில் அப்படியே உள்ளது. காரணம் அந்த உணவை கெட்டுப்போகாமல் இருக்க சில கலவைகளை சேர்க்கிறார்கள் இவை உடலுக்கு கேன்சர் செல்களை உண்டுபண்ணும் என்று கூறுகிறார்கள் இதற்கு உங்கள் பதில்?

விடை : இதை பற்றி நாம் முன்னரே பேசி உள்ளோம். எண்ணெயில் ஆரம்பித்து இதைக் கூறி உள்ளேன். எண்ணெயில் செய்த பொருள்களை அன்றைக்கே சாப்பிட வேண்டும். எண்ணெயில் செய்த பொருள்களை 3 நாட்கள் வைத்து சாப்பிட்டால் சேஃப் கிடையாது. வீட்டில் வடை சாப்பிடுகிறோம் என்றால் ஒரு நான்கு ஐந்து… வரை உண்ணலாம். ஆனால் வெளியில் சென்று மிக்சர் முறுக்கு போன்ற வகைகளை சாப்பிட வேண்டாம்.

ஐஸ் கிரீமில் transplants உள்ளது. ஒரு உணவு கெட்டுப் போகாமல் இருக்க வேண்டுமென்றால் அதில் உப்பு அதிக அளவில் இருக்க வேண்டும். இல்லையென்றால், transplants அதிக அளவில் இருக்க வேண்டும், அதுவும் இல்லை என்றால் கெட்டுப் போகாமலிருக்க கெமிக்கல்கள் அதிகம் இருக்க வேண்டும். இவை இல்லாமல் உணவானது கெடாமல் இருக்காது. உணவை அன்றைக்கே ஃபிரஷ்ஷாக உண்ணப் பழகிக் கொள்ள வேண்டும்.

ஒரு உணவை மூன்று நான்கு நாட்கள் வைத்து உண்பதை தவிர்க்க வேண்டும். இப்போது, கீரை வாங்குகிறோம் என்றால் அதை அன்றைக்கே உண்ணவேண்டும் பிரிட்ஜில் வைத்து நான்கு அல்லது ஐந்து நாட்கள் கழித்து உண்பதை தவிர்க்க வேண்டும். இப்படி உண்டால் பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது.

அரிசியைப் போலவே மக்களுக்கு எண்ணெயைப் பற்றியும் பயம் உள்ளது. சிலர் நல்லெண்ணெய் சாப்பிட்டால் நல்லது என்கிறார்கள். சிலர் ரீஃபைண்ட் ஆயில் சாப்பிட்டால் நல்லது என்கிறார்கள். சிலர் சன்பிளவர் ஆயில் சாப்பிட்டால் நல்லது என்கிறார்கள் இதில் எந்த வகை எண்ணெய் நல்லது…?

விடை : எண்ணெய், வெண்ணை எல்லாமே பிரஷ்ஷாக அன்றைக்கே உண்ணும்போது நல்லதுதான். இதை நாம் ஏற்கனவே கூறியுள்ளோம். இதில் சிலவற்றில் சாச்சுரேட்டட் ஃபேட் அதிகமாக இருக்கும், இன்னும் சிலவற்றில் அன்சாச்சுரேட்டட் பேட் அதிகமாக இருக்கும்.

நமது உடலுக்கு எல்லாமே தேவை. சாச்சுரேட்டட் ஃபேட், அன்சாச்சுரேட்டட், ஒமேகா 3  என எல்லாமும் தேவை. எண்ணெய்யைப் பொறுத்தவரை இதுதான் நல்ல எண்ணெய் என யாரும் கூற முடியாது. நாம் வழக்கமாக உபயோகிக்கும் எல்லா எண்ணெயும் நல்லதுதான்.

நல்லெண்ணெய் நாம் வழக்கமாக பயன்படுத்துவதில் ஒன்று… இது நல்லதுதான். நாம் உபயோகிக்கும் கடலை எண்ணெயும் நல்ல எண்ணெய்தான். ஆனால், புதிதாக வந்திருக்கிற சன்பிளவர் ஆயிலில்தான் சந்தேகம் உள்ளது. இதில் அன்சாச்சுரேட்டட் பேட் அதிகமாக உள்ளதாக கூறுகிறார்கள். ஒரு காலத்தில் நல்லெண்ணெய் மீது ஏற்படுத்தப்பட்ட பயத்தினால்தான் இந்த சன்பிளவர் ஆயில் பிரபலமானது.

நல்லெண்ணெய், கடலை எண்ணெய் இவற்றை மாற்றி மாற்றி உபயோகித்துக் கொள்ளலாம். நல்லெண்ணெய் தொடர்ந்து உபயோகித்து வந்தாலும் தீங்கு கிடையாது. அவர்கள்.. கூறுவதால் நாம் ஆலிவ் ஆயில் உபயோகிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆலிவ் ஆயிலை பொருத்தவரை அது மெடிட்டேரியன் அந்தப் பகுதியை சேர்ந்த மக்களுக்கு அது நல்லது. அந்தப் பகுதியில் வாழும் மக்கள் அவர்களது பழக்க வழக்கம் உணவு முறை அதற்கு ஏற்றாற்போல் ஆலிவ் ஆயில் அவர்களுக்கு உகந்ததானது.

அப்படி ஆலிவ் ஆயில், நல்ல ஆயில் என்றால் எல்லா இடங்களிலும் அவை முளைத்திருக்க வேண்டும் அல்லவா. நமது பாரம்பரியத்தின்படி நல்லெண்ணெய் நமக்கு நல்லது. கடலெண்ணெய்யும் நல்லது.  சில பேர் டால்டா உபயோகிக்கலாமா என்று கேட்கிறார்கள். இது தவறு. நாம் டிரான்ஸ்ஃபேட் என்று அடிக்கடி கூறுகிறோம். இந்த டால்டா முழுக்க முழுக்க டிரான்ஸ்ஃபேட்டாலானது.

வெளியில் விற்கக்கூடிய பல பொருள்களில் கெடாமல் இருப்பதற்காக டால்டா உபயோகிக்கப்படுகிறது. நாம் முன்னரே கூறியது போல் டால்டாவில் டிரான்ஸ் பேட்  உள்ளது. அதனால் நாம் வெளியில் சென்று ஸ்வீட் சாப்பிட்டோம் என்றால் அதில் டால்டா இருக்கும், ஆனால் வீட்டில் செய்தால் அதில் டால்டா இருக்காது நெய் அல்லது எண்ணெய் இருக்கும் இதுதான் வேறுபாடு. எனவே எண்ணெயைப் பொறுத்தவரை நமது பாரம்பரிய எண்ணெய்களாகிய நல்லெண்ணெய் கடலெண்ணெய் கொஞ்சம் ரீஃப்ண்ட் ஆயிலையும் சேர்த்துக் கொள்ளலாம்.

படிக்க :
♦ சர்க்கரை நோய் – உடல்பருமனை கட்டுப்படுத்துவது சரிவிகித உணவா – பேலியோ உணவா ? மருத்துவர் BRJ கண்ணன்
♦ மனதைக் கலங்கச் செய்த மதிய உணவுப் பிரச்சினை !

எந்த எண்ணெயும் கெடுதல் கிடையாது, எண்ணெய்யை சுழற்சி முறையில் உபயோகித்தல் நல்லது என்று கூறினீர்கள். நன்றி ! என்னிடம் சிகிச்சைக்காக வருபவர்களிடம் எல்டிஎல் கொலஸ்ட்ரால் நார்மலாக உள்ளது. ஆனால்  ட்ரைகிளிசரைட்ஸ் அதிகமாக உள்ளது. ஏன்?

விடை : கேள்வி நான் மீண்டும் ஒருமுறை கூறிவிடுகிறேன். கெட்ட கொலஸ்ட்ரால் இரண்டு உண்டு ஒன்று எல்டிஎல் கொலஸ்ட்ரால் மற்றொன்று ட்ரைகிளிசரைட்ஸ் கொலஸ்ட்ரால். பெரும்பாலான கொலஸ்ட்ரால் சம்பந்தப்பட்ட நோயாளிகளிடம்  ட்ரைகிளிசரைட்ஸ் அதிகளவிலும் எல்டிஎல் கொலஸ்ட்ரால் குறைவாகவும் உள்ளது.

இது ஏன் என்றால்… இந்த ட்ரைகிளிசரைட்ஸை உற்பத்தி செய்வது நமது கல்லீரல். இதை எதிலிருந்து உற்பத்தி செய்கிறது என்றால் மாவுப்பொருள் அதாவது கார்போஹைட்ரேட். இதற்கு விடை மிகவும் எளிதானது. நாம் என்னதான் மருந்து மாத்திரை உட்கொண்டாலும், நம் உணவில் மாவுப்பொருள் அதாவது கார்போஹைட்ரேட்டை குறைத்தால் இதற்கு தனி சிகிச்சை தேவையில்லை.

நாம் முன்னரே கூறியது போல் உணவில் சர்க்கரை சம்பந்தமான கார்போஹைட்ரேட் பொருட்களைக் குறைத்து பேலன்ஸ் டயட்டிற்கு மாறினால் இந்த கொலஸ்ட்ரால் எளிதாக குறையும்.

எல்லா நோய்க்கும் தீர்வு எனக் கூறி சில உணவுப் பொருட்கள்  தற்போது பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் வந்ததுதான் ஆப்பிள் சிட் வினிகர். இது வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் சாப்பிடலாம் கொலஸ்ட்ரால் மிகவும் குறைவு எல்லாவற்றுக்கும் தீர்வு என கூறுகிறார்கள் இதைப்பற்றி தங்களது கருத்து.

விடை : இந்த ஆப்பிள் சிட் வினிகர்  நீங்கள் கூறுவது போல் பிரபலமாகி வருகிறது. இதை உண்டால் கொழுப்பு கரையும் என்றும் கூறுகிறார்கள். கொழுப்பு கரைந்து எங்கு செல்லும் ? வாய் வழியாகவா ? அல்லது மலம் வழியாகவா? எங்கு செல்லும் இது தவறு. இதை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கும் எந்த ஒரு ஆதாரமும் கிடையாது.

சிலர் கூறுவதுபோல் அதையும் இதையும் இரவில் ஊற வைத்து  ஒரு ஸ்பூன் குடித்தால் கொழுப்பு கரையும் என கூறுவதை எவ்வாறு நம்புகிறீர்கள்? இது எவ்வாறு இதயத்தில் அடைப்பட்டிருக்கும் கொழுப்பை கரைக்கும் கரைப்பான்? அது எந்த வழியாக வெளியே தள்ளும்? இந்த முறை ஹெல்த் டிப்ஸ் எல்லாம் நிறைய பேர் கூறுவார்கள். அது உண்மையாக இருந்தால் அது உங்களுக்குத் தானாகவே வந்து சேரும். காரணம் இதை சிலபேர் உபயோகித்தார்கள் அதன் மூலம் பலன் அடைவார்கள் அந்த பலனே உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பார்கள். அவ்வாறு இல்லை என்றால் அதை உபயோகித்து பலன் தரவில்லை என்பது பொருள்.

இதுபோல் தவறான அறிவியல் பூர்வமற்ற தகவல்களை நான் ஊக்கப்படுத்துவதில்லை. இது தவறானது மட்டுமன்றி அவர்களுக்கு தவறான நம்பிக்கையையும் தருகிறது சரியான தீர்வை நோக்கி போகவிடாமல் அவர்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறது. எனவே இது போன்ற விஷயங்களுக்கு நாம் போகாமல் இருப்பது நல்லது.

பொதுவாக 30, 35 வயதை தாண்டியவர்களுக்கான உணவுமுறைகளை நீங்கள் கூறுகிறீர்கள். அதேபோல் சிறுவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்ற நல்ல உணவு முறையைக் கூறினால் நன்றாக இருக்கும்.

விடை : குழந்தைகளுக்கு எந்த உணவை உண்டாலும் செரிக்கும். ஆனால், வயதானவர்களுக்கு அப்படி இல்லை. நீங்கள் பார்த்தீர்கள் என்றால் முப்பது முப்பத்தைந்து வயது உடையவர்களுடைய உணவை விட அதிகமாக 15 வயதுடைய நபர் உண்டு கொண்டிருப்பார். ஆனால் ஒல்லியாகத்தான் இருப்பார்.

பொதுவாக 22 – 23 வயது வரைதான் வளர்ச்சி விகிதம். அதற்குப் பிறகு கிடையாது. ஆனால் நம்மில் பல பேர் 23 வயதில் உண்ட உணவையே தொடர்ந்து 24 வயதை தாண்டியும் உண்டு கொண்டே இருப்பார்கள். அதனால்தான் தொப்பை உடல் பருமன் முதலியன வருகின்றன. திருமணத்திற்கு பிறகு பெண்கள் உடல் பருமன் ஆவதற்கும் இதுதான் காரணம். ஆனால் குழந்தை பிறந்ததால்தான் என்று குழந்தை மீது பழி சுமத்துகிறார்கள்.

Muthaiya Street Angels Kids
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான். உணவுமுறையிலும் கூட.

24 வயதுக்கு பிறகு நமது உடலில் மெட்டபாலிஸம் குறைகிறது. தேவையானது குறைகிறது என்பதுதான் காரணம். 18 – 20 வயது நிரம்பியவர்கள் என்ன உணவு உண்கிறார்களோ அதில் மூன்றில் இரண்டு பங்கு உணவுதான் நாம் உண்ண வேண்டும்.  அவ்வாறு உண்டு வந்தால் நமது உடலானது ஒல்லியாகவும் வலுவாகவும் இருக்கும்.

குழந்தைகளைப் பொறுத்தவரையில் நான் கூறிய உணவுமுறையில் எந்த வகையான மற்றும் தேவையான தொகையை நாம் குறைக்க வேண்டியதில்லை. குறைக்க வேண்டியது தவறான உணவு முறையைத்தான் அதாவது பாக்கெட் உணவுகளைத் தான்.  பேக் செய்யப்பட்ட உணவை மட்டும் தவிர்த்தால் உங்களது குழந்தையின் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும். ஏனென்றால் இயற்கையான உணவில் நல்லது கெட்டது என எதுவும் கிடையாது.

பெரியவர்களுக்கு தான் மூன்று வேளையும் அரிசி உணவுகளை சாப்பிட வேண்டாம் என கூறுகிறோம். ஏனென்றால் குழந்தைகளை பொருத்தவரை அவர்கள் ஓடி ஆடிக் கொண்டே இருப்பார்கள் அவர்களுக்கு செரிமானம் ஆகிவிடும். மேலும் உணவு தேவை படும்போது கேட்டு வாங்கி சாப்பிட்டும் கொள்வார்கள். எனவே குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்கள் குண்டாக இல்லாமல் ஒல்லியாக இருந்தால் அவர்களுக்கு நாம் என்ன உணவு வேண்டுமானாலும் வழங்கலாம். பாக்கெட் செய்யப்பட்ட உணவுகளை தவிர்ப்பதில் மட்டும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அசைவ உணவுகள் எது வேண்டுமானாலும் முட்டை, சிக்கன் உட்பட உண்டு கொள்ளலாம் எனக் கூறினீர்கள். ஆனால் சிக்கன் செயற்கையான முறையில் தயாரிக்கப்படுகிறது, முட்டையும் இயற்கையான முறையில் தயாரிக்கப்படுவது கிடையாது. இதை உண்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதைப் பற்றி கூறுங்கள்?

விடை : நான் கூறிய சரிவிகித உணவைப் பொறுத்தவரை நாம் தொடர்ந்து சிக்கனை சாப்பிடப் போவதில்லை. எனவே, அவ்வாறு தொடர்ந்து அசைவ உணவுகளை உண்பவர்கள்தான் இதில் கவலை கொள்ள வேண்டும். சரிவிகித உணவைப் பொறுத்தவரை நாம் வாரத்திற்கு ஒரு முறை தான் அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ளப் போகிறோம் அதனால் அதில் எந்த பாதிப்பும் இல்லை.

பேலியோ டயட் பற்றி அறிந்திருப்பீர்கள். அவர்கள் முழுக்க முழுக்க அசைவ உணவுகளை மட்டுமே உண்பார்கள். அவர்கள்தான் இதைப்பற்றி கவலை கொள்ள வேண்டும். அந்தப் பேலியோ டயட் உணவு முறை வெற்றி பெறக் காரணம், கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்டதால் அல்ல, மாறாக அவர்கள் மாவு பொருட்களை குறைத்தது தான். எனவே காலை முட்டை, மதியம் போர்க், இரவுக்கு மாட்டுக்கறி என நாள் முழுவதும் அசைவ உணவுகளை உண்டால்தான் நாம் இந்த அசைவ உணவு நல்லதா இல்லையா என்று கவலைப்பட வேண்டியது உள்ளது.

எனவே வாரம் ஒருமுறை அல்லது இருமுறை மட்டும் எடுத்துக்கொள்பவர்கள் இதைப் பற்றி பெரிதும் கவலைப்படத் தேவையில்லை. நான் முன்னமே கூறியதுபோல் இந்த அசைவ உணவுகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ரசாயன பொருட்கள் கலந்து இருப்பது உண்மையா? இல்லையா? என்பதை உறுதியாகக் கூற முடியாது; அதை ஒரு அரசாங்க நிறுவனமோ அல்லது ஒரு பரிசோதனைக் கூடமோ பரிசோதித்துக் கூறினால்தான் நாம் அதிலிருந்து கூற முடியும்.

அதைவிடுத்து யூகத்தின் மூலம் நான் கருத்து கூறுவது சரியாக இருக்காது. ஆனால் ஒன்றை நாம் கூற முடியும். இலை தழைகள் போன்ற மரக்கறி உணவின் மூலம் உருவாகக்கூடிய கொழுப்பும் புரதமும் உடலுக்கு தீங்கானது அல்ல என்பது நிரூபனமான ஒன்றுதான்.  அதனால்தான் நான் பருப்புகளையும் நவதானியங்களையும் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறேன்.

சனிக்கிழமை இரவானால் அசைவ உணவு உண்டு ஆகவேண்டும் … ஞாயிற்றுக்கிழமை காலையா அசைவ உணவு உண்டு ஆகவேண்டும்… அதிலும் குறிப்பாக பொறிக்கப்பட்ட உணவாக இருக்க வேண்டும். சொமேட்டோ, உபர் ஈட்ஸ் போன்றவற்றின் வருகைக்கு பிறகு ஒரு பட்டனை அழுத்தினால் ருசியான உணவு வீடு தேடி வருகிறது. பீட்சா, பர்கர் இப்போது எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டோம். எப்போதாவது என்று நீங்கள் கூறுகிற உணவுகள் இப்போது அடிக்கடி எடுத்துக் கொள்ளும் உணவாக மாறிவிட்டது இதற்கு நேர்மாறான உணவு முறையை நீங்கள் கூறினால் நன்றாக இருக்கும்.

விடை : உதாரணத்திற்கு எங்கள் வீட்டில் அவ்வாறு கிடையாது. வெளியில் சென்று உணவு உண்பது என்றால் அது ஆறு மாதத்திற்கு ஒரு முறைதான். கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் எனது மகன் வெளியில் போய் உண்டு வா. நான் வேலையாக இருக்கிறேன் என்றால் போகமாட்டான். நீங்கள் வழக்கமாக தயாரிக்கும்  உணவு வகையை செய்யுங்கள் நான் உண்கிறேன் என்பான்.

இவையெல்லாம் நாம் எப்படி நிலைமையை கையாள்கிறோம் என்பதைப் பொருத்து தான். குழந்தைகள் முதலில் அழுவார்கள். பின்பு ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் நீங்கள் நிலைமையை கையாளாமல் தவிர்த்து விடுவீர்கள் என்றால் அப்போது தான் பிரச்சினை வருகிறது. உதாரணத்திற்கு உங்களால் ஏதாவது செய்து கொடுக்க முடியும் என்றாலும் அவசரத்திற்காக சொமேட்டோ போன்றவற்றின் மூலம் ஆர்டர் செய்கிறீர்கள் என்றால், நாளை நிலைமை உங்களுக்கு வசமாக இருந்தும், மீண்டும் நேற்று எளிதாக இருந்தது என்று சொல்லி ஆர்டர் பண்ணுவீர்கள். நீங்கள்தான் நிலைமை கையாளாமல் தவிர்த்து விடுகிறீர்கள்.

நிறைய குழந்தைகளுக்கு இவ்வாறு விசயங்கள் (ஆன்லைன் ஆர்டர்) இருக்கிறது என்று தெரிய வருவது நம் மூலமாகத்தான். ஒரு குழந்தை பச்சை உணவை தவிர்த்தது என்றால் நீங்கள் “பச்சை உனக்கு பிடிக்காதா? இந்தா… மஞ்சள்” என்று குழந்தைக்கு பழக்கப்படுத்துகிறீர்கள் என்றால் அடுத்த முறை அந்த குழந்தை பச்சை உணவை விரும்பாது. குழந்தைக்கு நாம் புதிதாக கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது. குழந்தைகள் நம்மை பார்த்துதான் கற்கிறார்கள்.

நாம் நிலைமையை சரியாகக் கையாண்டால் குழந்தைகள் நம்மை பார்த்துக் கற்றுக் கொள்வார்கள். முதலில் கடுமையாக இருப்பினும் பின்பு பழகிக் கொள்வார்கள். என்ன புதிய உணவுகளை கண்டுபிடிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இருப்பனவற்றை உண்டால் போதும்.

உதாரணத்திற்கு நான் எனது நோயாளிகளிடம் “பூசணிக்காய் எப்போது சமைக்கிறீர்கள் ?” என்று கேட்டால் என்னை பார்த்து சிரிப்பார்கள். கொத்தவரங்கா சாப்பிட்டீர்களா என்றால் மீண்டும் என்னைப் பார்த்து, “வாங்குவோம் சார்” என்பார்கள். “புடலங்காய் என்று ஒன்று இருக்கிறது தெரியுமா?” என்றால் தெரியும் என்பார்கள் . இதையெல்லாம் மறந்து விட்டோம் இது என்ன மீண்டும் கொண்டு வந்தால் போதும். சுழற்சி முறையில் 20 – 25 காய்கறிகள் உள்ளன.

படிக்க :
♦ பாஷாணத்தில் புழுத்த புழுக்கள் யார் ?
♦ உடல் பருமன் : வரலாற்றில் பாடம் படிப்போம் ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

இன்று ஒரு காய்கறியை சாப்பிடுகிறோம் என்றால் மீண்டும் இருபது நாள் கழித்துதான் அது நம் உணவுக்கு வர வேண்டும். இவ்வாறு சுழற்சி முறையில் ஒரு நாளைக்கு ஒரு காய்கறி என சமைக்க ஆரம்பித்தோமானால் ருசியாகவும் இருக்கும். நாம் மீண்டும் மீண்டும் செய்யும்போதுதான் ருசியும் கூடும். நாளை ஒருவர் சௌசௌவை வாங்கி சமைக்கப் போகிறார் என்றால், ஐந்து வருடம் கழித்து தான் சௌசௌவை பார்க்கிறார் என்றால் நாளை இது ருசியாக இருக்க வேண்டும் என எண்ணினால் அது முடியுமா? எல்லாவற்றையும் நாம் சுழற்சி முறையில் கொண்டு வந்து விட்டோம் என்றால் நாம் அதை விட்டுப் போக மாட்டோம். இதுதான் இதற்கு பதில்.

நாம் நிறைய விஷயங்களை இங்கு பேசிவிட்டோம். எல்லாவற்றையும் முழுமையாக கூறி விட்டோம் என்று நம்மால் கூற முடியாது. ஆனால், உணவு பற்றிய தவறான சிந்தனைகளை நீக்க வேண்டும் என்பதே குறிக்கோள். மேலும், உணவைப் பற்றிய பயம் வேண்டாம், எல்லாவற்றையும் உண்ணலாம் என்று கூறுகிறோம். நாம் குறிப்பாக கவனிக்கத்தக்கது தேவைக்குக் குறைவாக உள்ள புரதத்தையும், கொழுப்பையும் கூட்டவேண்டும். தேவைக்கு அதிகமாக உள்ள கார்போஹைட்ரேட் மாவுச் சத்தை குறைக்க வேண்டும். இதுதான் இந்த உணவு பற்றிய கேள்வி பதிலினுடைய சுருக்கம்.

ஒரு சிறிய கதையைக் கூறி விடுகிறேன். ஒரு பெரிய யானையை சிறிய கயிற்றில் கட்டி வைத்து இருப்பார் ஒரு பாகன். அவரைப் பார்த்து, “இவ்வளவு பெரிய யானையை, இந்த சிறிய கயிற்றில் கட்டி வைத்து இருக்கிறீர்கள். அந்த யானையால் அதைத் தாண்டி வர முடியவில்லையே  ஏன் ?” என்று கேட்பார்கள்.

அதற்கு அந்தப் பாகன், “ அந்த யானை சிறியதாக இருக்கும்போதே கட்டிய கயிறு அது. அந்த யானை அப்போது முயற்சி செய்து வெளியே வர முடியவில்லை. இன்றும் அது தன்னால் வெளியே வர முடியாது என்று எண்ணியே அங்கு நின்று கொண்டிருக்கிறது.” என்றார்.

அதேபோல் நாம் சிறுவர்கள் இதைக் கொடுத்தால்தான் உண்பார்கள் இந்த வகையான உணவைத்தான் அவர்கள் உண்பார்கள் என எண்ணிக்கொண்டு நாம் அவர்களுக்கு தீங்கான உணவுகளையே பழக்கி வருகிறோம். எனவே அவர்களுக்கு இயற்கையான ஒரு உணவை, நல்ல உணவை கொடுத்தோம் என்றால் அவர்கள் அதற்குப் பழகிக் கொள்வார்கள்.

மருத்துவர் கண்ணன்

நன்றி: மருத்துவர் BRJ கண்ணன்,
இதயத்துறை மருத்துவர், (Senior Interventional Cardiology)
வடமலையான் மருத்துவமனை, மதுரை.


வாங்கிவிட்டீர்களா ?
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்
நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்

1 மறுமொழி

  1. நான் அசைவ உணவுகளை சாப்பிடுவது இல்லை. இங்கே அமெரிக்காவில் ஊபர் டிரைவராக பணியாற்றும் முன்னாள் இராணுவ வீரரின் ஆலோசனைப்படி காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை, தேன் கலந்த தண்ணீர், காலை உணவாக மெடாமுசில் (Metamucil) எனப்படும் பிஸ்கெட், மதியம் இரு கப் சாதம் அல்லது 3 சப்பாத்தி, இரவு சாலட் (வெள்ளரி, காரட், அவகெடோ ஒன்று, குடைமிளகாய 2, பிராகோலி மாதிரி ஏதாவது கீரை வகை என்று உண்டு வருகின்றேன். ஒரு மணி நேரம் நடைபயிற்சி செய்கிறேன். புரதத்திற்காக வறுத்த (உப்பற்ற) பட்டாணி, பருப்பு சேர்த்த சாம்பார் அதிகம் சேர்க்கலாமா ?. புரதம், கொழுப்பு வகைகள், சைவமான எனக்கு கூறுங்களேன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க